ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 2 (Post.8817)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8817

Date uploaded in London – – 16 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கரந்துறைத் திருப்புகழ் பாடல்கள் மூன்றில் முதலாவது பாடலான ‘கருப்பு விலில் என்பது பற்றி கட்டுரை எண் 8277இல் (வெளியான தேதி 3-7-2020) பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது இரண்டாவது பாடலான ‘ககனமு எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை!

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 2

ச.நாகராஜன்

ஒரு திருப்புகழில் இன்னொரு திருப்புகழ் பாடல் இருப்பதானது கரந்துறை திருப்புகழ் பாடல் எனப்படுகிறது. இப்படி அமைந்துள்ள பாடல்கள் மொத்தம் மூன்று.

முதலாவது பாடல் ‘கருப்பு விலில் எனத் துவங்கும். இது பழநியில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.

இரண்டாவது பாடல் ‘ககனமு எனத் துவங்கும்.இது வள்ளிமலையில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.

மூன்றாவது பாடல் ‘தத்தித் தத்தி எனத் துவங்கும். இது காஞ்சிபுரத்தில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.

இங்கு ‘ககனமு எனத் துவங்கும் பாடலைப் பார்ப்போம்.

ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை

     கள்ளப் புலாற்கி …… ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு

     கள்வைத்த தோற்பை …… சுமவாதே

யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்

     உள்ளக்க ணோக்கு …… மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி

     லுள்ளத்தை நோக்க …… அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்

     வெள்ளைப்பி ராட்டி …… இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக

     வெள்ளத்தை யேற்ற …… பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன

   வள்ளிக்கு லாத்தி     கிரிவாழும்

வனசரர் மரபினின் வருமொரு மரகத

  வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

இதன் பொருள் : ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும்,கிருமிகள் உள்ளதுமான வீடு,

நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த

மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி,

யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை,

எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக,

ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற,
வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய
உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.


வெள்ளை நிறத்தவளான சரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும்,

ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது

கஸ்தூரியின் வாசம் வீசும்,
நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும் ஆயிரம்
முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே,

மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள
தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும்
வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள
வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.
(மேற்கண்ட தமிழ் பதவுரையைத் தருபவர் : ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள்)


இந்தப் பாடலில் வரும் கடைசி அடியை மட்டும் ஒன்று சேர்த்துத் தொகுத்தால் அது ஒரு தனி திருப்புகழ் பாடலாக மலர்கிறது!

கள்ளப் புலாற்கி ருமிவீடு – கள் வைத்த தோற்பை           சுமவாதே

உள்ளக் கணோக்கு மறிவூறி – உள்ளத்தை நோக்க         அருள்வாயே

வெள்ளைப் பிராட்டி யிறை காணா – வெள்ளத்தை யேற்ற  பதி வாழ்வே

வள்ளிக் குலாத்தி கிரி வாழும் – வள்ளிக்கு வாய்த்த         பெருமாளே!

இந்த கரந்துறை திருப்புகழின் பொருள் இது:

மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.
வெள்ளை நிறத்தவளான சரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும், கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே, வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும் வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.

திருப்புகழுக்குள் ஒரு திருப்புகழ்!

அடுத்து இப்படி அமைந்துள்ள இன்னும் ஒரு திருப்புகழை அடுத்த கட்டுரையில்  பார்ப்போம்.

tags – திருப்புகழ்,இரு பாடல்கள்

category – Tamil devotional literature 

***

மயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840)

Written by London Swaminathan 

 

 

Date: 22 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-23

 

Post No. 4840

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நாங்கள் மதுராந்தகம், வடலூர்திருக்கோவிலூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு இடங்களைக் காண திட்டம் இட்டோம்; அது நிறைவேறியது; அத்தோடு போனஸாக மேலும் சில இடங்கள் கிடைத்தன (March 7 to 11, 2018)

சில நண்பர்களின் ஆலோசனைப்படி சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டோம்; எல்லா இடங்களிலும் இறையருள் கிடைக்கப் பெற்றோம்.

 

உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’

 

அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது; ‘கார்கள் கோவிலின் வாசல் வரை செல்லும். பல படிகள் ஏறி சந்நிதியை அடையலாம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருந்தது.

 

மயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.

 

மயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.

மயிலம் கோவில் சுவரில் நல்ல ஓவியங்கள் (தற்காலத், தவை) இருந்தன. ஆனால் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லததால் எடுக்கவில்லை. ஒரு அழகிய சிலயை மட்டும் படம் எடுத்தேன்.

 

இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்

மயிலம் வரலாறு, பொம்மபுர ஆதீன வீர சைவ மடத்தின் வரலாறு ,இங்கு இருந்த பாலசித்தர் வரலாறு, பரம்பரையாக வந்த ஆதீனகர்த்தர் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விஷயங்கள் விக்கி பீடியாவில் உள்ளது .

 

இங்கு முருகன், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் காட்சி தருகிறார். வெளியில் ஒரு கடையில் தேனும்- தினை மாவும் கிடைக்கும் என்று எழுதி இருந்தது பழங்காலக் கதைகளை நினைவுபடுத்தியது. ஒரே பகற் பொழுதில் பல கோவில்களைக்  குறிவைத்ததால் ஆழ்ந்து ஆராய முடியவில்லை.

 

திருப்புகழ் பாடல் 546 ( மயிலம் ) 

தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா …… தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ …… எனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா …… விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னு஡டே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா …… லழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா …… ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா …… யிடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் …… வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானு஡ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் …… குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் …… பெருமாளே.

(Thiruppugaz from tamilvu)

 

 

–SUBHAM–

திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

  1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
  2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
  3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
  4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

  1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
  2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

  1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
  2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
  3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
  4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
  5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

  1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

  1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

  1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

  1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

  1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

  1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

  1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
  2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
  3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
  4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****

அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

கலாப மயில் பெருமை!

mayil kuttam

Article No 1945

Written by S NAGARAJAN

Date: 21st  June 2015

Uploaded in London at 6-19 am

By ச.நாகராஜன்

அருணகிரிநாதர் அருளிய நூல்கள்

முருகனின் அனைத்துப் பெருமைகளும் சொல்லில் அடங்கா. ஆனால் அருணகிரிநாதர் அந்தப் பெருமைகளில் பெரும்பாலானவற்றைத் தன் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களில் பாடி வைத்துள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ சுமார் 1311 பாடல்கள் மட்டுமே!

திருப்புகழுடன் அருணகிரிநாதர் அருளியுள்ள இதர நூல்களாவன:-

கந்தர் அந்தாதி    (நூறு செய்யுள்கள்)

கந்தர் அலங்காரம் (நூறு பாடல்கள்)

கந்தர் அநுபூதி    (51 செய்யுள்கள்)

திருவகுப்பு (மொத்தம் 18 வகுப்புகள்)

வேல் விருத்தம்

மயில் விருத்தம்

சேவல் விருத்தம்

திரு எழு கூற்றிருக்கை

 

சிவத்தின் சாமி, நாம் புரியும் பிழை பொறுக்கும் சாமி

முருகனை அவர் விவரிக்கும் அழகை உணர இரு பாடல்களை மட்டும் இங்கு காண்போம்.

புவிக்குள் பாதமதை நினைபவர்க்கு எனத் தொடங்கும் திருப்புகழில் இறுதிப் பகுதி இது:-

சிவத்தின் சாமி, மயில்மிசை நடிக்கும் சாமி, எமதுளெ

சிறக்கும் சாமி, சொருபமி   தொளிகாணச்

செழிக்கும் சாமி, பிறவியை ஒழிக்கும் சாமி, பவமழை

தெறிக்கும் சாமி முனிவர்க ளிடமேவுந்

தவத்தின் சாமி, புரிபிழை பொறுக்கும் சாமி, குடிநிலை

தரிக்கும் சாமி, அசுரர்கள்     பொடியாகச்

சதைக்கும் சாமி, எமை பணி விதிக்கும் சாமி, சரவண

தகப்பன் சாமி என வரு                 பெருமாளே!

எப்படி? இனிய தமிழ். எளிய தமிழ். அரிய கருத்துக்கள்.

புரிபிழை பொறுத்து நம்மைக் காக்கும் முருகப் பிரானின் அருமைகளை சில வார்த்தைகளில் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதர்.

murugan by akila k

வரோதயன்

மயில் விருத்தத்தில் பத்தாவது பாடலில் முருகப் பெருமானின் திருநாமங்கள் அருமையாக தொகுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.

நிராசத – ராஜஸ குணம் இல்லாதவர்

விராசத – ராஜஸ குணத்திற்கு மாறுபட்ட சத்வ குணம் உடையவர்

வரோதயன் – வர உதயன் – வரங்களுக்கு உறைவிடமானவர்

பராபரம் – மிக மேலான பரம் பொருள்

நிராகுலன் – நிர் ஆகுலன் – துன்பம் இல்லாதவர்

நிராமயன் – நிர் ஆமயன்  (ஆமயம் என்றால் நோய்) நோய் இல்லாதவர்

பிரான் – பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் ( உயிர்களை விட்டு ஒரு போதும் பிரியாதவர்)

நிலாதெழுதலாலலறமிலானெறி யிலான் —

அறமிலான், நெறியிலான் நிலாது எழுதலால் என மாற்றிப் பார்த்தால் வரும் அர்த்தம் – அறமில்லாதவர்களும் நெறியில்லாதவர்களும் முருகன் திருவடியில் நில்லாது விலகி விடுகிறார்கள்.

ஆக முருகனைத் தொழுவதற்கே ஒரு அடிப்படைத் தகுதி தேவையாக இருப்பதைக் காணலாம். முருக பக்தர்கள் அறநெறி தவறாது வாழ்பவர்கள், புண்ணியசாலிகள் என்பதை அறியலாம்.

நெறி நிலாவிய உலாச இதயன் – நன்னெறிகள் தம்மிடம் விளங்க மகிழ்வுடன் கூடிய உள்ளத்தைக் கொண்டவர்.

இப்படி அரும் பெயர்களைச் சுட்டிக் காட்டும் பாடல் இது தான்:-

நிராசத விராசத வரோதய பராபர

நிராகுல நிராமய பிரான்

இலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி

நிலாவிய உலாசவி தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்

குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசர மெலாமினி துலாவிய

குலாவிய கலாப மயிலாம்

புராரிகுமரா குருபரா வெனும் வரோதய

புராதன முராரி மருகன்

புலோசமசை சலாமிடு பலாசன வலாரிபுக

லாகுமயிலாயுதன் நெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல

சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்

ஷடாநநன் நடாவு மயிலே

அற்புதமான இந்தப் பாடலில் மயிலின் பெருமை தெரிகிறது.

mayil 1

“திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடைய குமரனே! குருமூர்த்தியே என்று புகழ்ந்த, வரங்களுக்கு இருப்பிடமானவனும், பழையோனும் ஆகிய திருமாலின் திருமருமகன், கிளி போன்ற இந்திராணி, வணங்குகின்ற இந்திரனுக்கு புகலிடமாகிய வேலாயுதக் கடவுள், நீண்ட, பூமியில் உள்ள, வேடர்கள், குலத்துக்கு சூரியனைப் போல மாப்பிள்ளையாய் வந்த அழகராம் வல்லமையைச் சாதித்தவன், விளையாட்டாகப் போர் புரிகின்றவர், கிரவுஞ்ச மலைக்குப் பகையாக இருப்பவர், தொந்தரவு தந்த அசுரனாகிய சூரனை (சூர்மாவை), வெட்டித் தள்ள கோடாரி போல இருந்தவர், மகிழ்ச்சியுற்று விளங்குகின்ற ஆறு திருமுகங்களை உடையவர், நடத்துகின்ற மயில் தான்  இராஜஸ குணம் இல்லாதவர், சத்வ குணத்தை உடையவர், வரங்களுக்கு இருப்பிடமானவர், மேலான பரம்பொருள், வருத்தம் இல்லாதவர், நோயற்றவர், உயிர்களை விட்டுப் பிரியாதவர், அறமில்லாதவனும் நெறியில்லாதவனும் தம்மிடத்தில் சாராது, விளங்குவதால், நன்னெறியில் விளங்குகின்ற, மகிழ்ச்சியுடன் கூடிய, உள்ளத்தை உடையவர், குராமரத்தில் நிறைந்து கலந்து வெளித் தோன்றும் பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழியில்) அமர்ந்து, ஒளி பொருந்திய குரா  மரங்களின் நிழல் மிகுந்துள்ள தணிகை என்கின்ற சிறந்த மலை முதலாக அசைவன, அசையாதனவாகிய எல்லாவற்றிலும் இனிது உலாவிய களித்த தோகை மயில் ஆகும்.”

இதுவே கிருபானந்தவாரியார் தரும் செய்யுளின் பொழிப்புரை. ஆறுமுகன் நடத்தும் மயில் உலகெலாம் உலாவி உவக்கும் பெருமையை உடையது.

சலாம் என்ற வார்த்தை பிரயோகமும் இந்த செய்யுளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

முருகனின் அழகை மயில் விருத்தம் மூலமாக அறியும் போது மனம் மிக மகிழ்கிறோம்.

இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்   படியுங்கள்:–

 

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதிஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

((படங்கள் முக நூல் நண்பர்களனுப்பியவை;நன்றி உரித்தாகுக:சுவாமி))

***************

சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!

muruga beautiful most

Post No 1941;

Date: 19  June 2015

Written  by ச.நாகராஜன்

Uploaded from London at காலை 8-41

 

இதே பிளாக்—கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டிவெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும்பேஷண்ட்அருணகிரிநாதரும் வெளியிட்ட தேதி ஜனவரி 15, 2013

தனிமையில் இனிமைஅருணகிரிநாதர்வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் வெளியிட்ட தேதி ஜனவரி 22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதி ஜனவரி 21, 2013

சலாம் முருகா! சலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!!வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

Xxx xxx

 

சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!

By ச.நாகராஜன்

சகல கலை முழுதும் வல்ல பெருமாள்

சகல கலைகளிலும் வல்லவர் யார்?

முருகனே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அருணகிரிநாதர்.

அளகநிரை குலையவிழி என்று தொடங்கும் பாடலில்,

தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ                             

சகலகலை முழுதும் வல பெருமாளே

என்று கூறுகிறார்.

 

 

பார்வதியின் தீர்ப்பு

அல்லசலடைந்த என்று தொடங்கும் பாடலில்,

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த                                        

கல்விகரை கண்ட                                  புலவோனே                  

கள்ளொழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று                                     

கல்லலற வொன்றை                                யருள்வோனே

என்ற அற்புதமான சொற்களால் ஒரு ரகசிய வரலாற்றை அவர் விவரிக்கிறார்.

கல்அசலம் என்றால் இமயமலை என்று பொருள். கல்லசல மங்கை இமயமலை மங்கையான பார்வதியைக் குறிக்கும்.

பார்வதி தேவியின் எல்லை மட்டும் எட்டின கல்வி விஷயம் பற்றிய சுவையான வரலாறு உண்டு.

murugan near B angauru

ஒரு முறை சகல கலைகளிலும் வல்லவர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதலில் அனைவரும் ஔவை பிராட்டியே அனைத்தும் அறிந்தவர் என்று தீர்மானித்து அவரை அணுகி வித்யா தாம்பூலத்தை அளித்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.

 

ஐந்திர வியாகரணம் இயற்றிய இந்திரனைப் போய்ப் பாருங்கள். அவனிடம் இதை அளியுங்கள் என்றார் அவர்.

 

இந்திரனோ அகத்தியரே இதை வாங்குவதற்குத் தகுதியானவர் என்றான்.

 

அகத்தியரோ சகலகலைகளிலும் வல்ல சரஸ்வதி தேவி அல்லவா இதைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவள். அங்கு செல்லுங்கள் என்றார்.

சரஸ்வதி தேவியோ, அன்னை பார்வதி தேவி இருக்க இதை நான் வாங்குவது முறையல்ல. நான் கற்றது கைம்மண் அளவே என்றாள்.

அனைவரும் அன்னை பார்வதியை அணுகி விஷயத்தைக் கூறினர்.

 

அன்னையோ புன்முறுவல் பூத்து இதை வாங்கும் தகுதி படைத்தவன் என் செல்வன் குமரனே என்று அருளினார். பார்வதியின் இந்தத் தீர்ப்பால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அனைவரும் முருகப் பெருமானிடம் சென்று தாம்பூலத்தை அளிக்க அவன் புன்சிரிப்புடன், “இந்த வரிசையை யாம் ஏற்றுக் கொள்கிறோம்என்று அருளினார்.

 

சகலகலா வல்லவன் யார் என்பது இப்போது நன்கு நிரூபணமானது.

கல்லசல மங்கைஇமவான் மகளான பார்வதி

எல்லையில்வரைக்கும்

விரிந்தமேலே சென்ற பெரும் விவாதத்தில்

கல்வி கரை கண்ட புலவோன்அனைத்துக் கலைகளிலும் வல்ல புலவோன் என்ற தகுதி பெற்ற ஒரே ஒருவன் முருகனே என்பது உலகினரால் அறியப்பட்டது!

இந்த அற்புதமான சுவையான சரிதத்தையே அருணகிரிநாதர் அழகுற திருப்புகழ் பாடலில் சுருக்கமாகத் தந்து விட்டார்.

 

வள்ளிபடர்கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே என்று முடியும் இந்தத் திருப்புகழை அருணகிரிநாதர் வள்ளிமலை சென்ற போது அருளியிருக்கிறார்.

சகலகலா வல்லவனான குமரனைக் கும்பிடுவோம். அனைத்திலும் வல்லவனாகி ஆனந்த வாழ்க்கை பெறுவோம்!

படங்கள்:— முக நூல் நண்பர்களனுப்பிய படங்கள்; நன்றி

**************

முருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!

murugan, fb

Post No 1937; Date: 17th June 2015

Compiled by S NAGARAJAN

Uploaded from London at 6-14 am

By ச.நாகராஜன்

திருப்புகழின் பலன்

“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு”

ஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.

அரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.

முருகனே சம்பந்தர்

அவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.

சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.

அருணகிரிநாதர், இதை.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி திருநீறிடவே

புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்

புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்

கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்

பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே

என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)

பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!

nalavar with siva

சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை

கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்

திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ

திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ

திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா

திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே

என்று பாடுகிறார்.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.

முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.

முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!

****************

“சலாம் முருகா”! “சலாம் முருகா”!! அருணகிரிநாதரின் தனி வழி !!

welcome

ஆய்வுக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1129; தேதி:– 25 ஜூன் 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

கடவுளுக்கு என்ன மொழி தெரியும்?

நாம், அவருக்கு வேதம் முழங்கும் சம்ஸ்கிருதம் மட்டுமே தெரியும்,
தேவாரம், திவ்யப் பிரபந்தம் முழங்கும் தமிழ் மட்டுமே தெரியும்,
பைபிள் முழங்கும் எபிரேயம் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும்,
குரான் முழங்கும் அராபியம் மட்டுமே தெரியும்,
சமண நூல் முழங்கும் ப்ராக்ருதம் மட்டுமே தெரியும்,
தம்ம பதம் முழங்கும் பாலி மொழி மட்டுமே தெரியும்,
ஜெண்ட் அவஸ்தா முழங்கும் பாரசீகம் மட்டுமே தெரியும்
ஆதிக்கிரந்தம் முழங்கும் பஞ்சாபி மொழி மட்டுமே தெரியும்———-
என்று நினைத்தால், அது நமது அறியாமைக்கு ஆயிரம் ‘வாட் பல்ப்’ போட்டு வெட்ட வெளிச்சமாக்கியதற்குச் சமம் ஆகும்.
அப்படியானால் அவருக்குத் தெரிந்த மொழி என்ன?

akshara
கடவுளுக்கு இரண்டே மொழிகள்தான் தெரியும்; அவற்றின் பெயர் அன்பு, உண்மை = பிரேமையும் சத்தியமும்தான் என்று சாது சந்யாசிகள் பல்லாயிரம் பாடல் பாடி முழங்குகின்றனர்.

இதை நமக்கு நிதர்சனமாகக் காட்டுபவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆவார். அவர் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகள் மூலம் இறைவனை வழிபட்டு நமக்கு வழிகாட்டி உள்ளார். மொழிகள் மூலம் சண்டை வேண்டாம். அதிலும் குறிப்பாக “கோவில்களில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனையா? சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனையா?”—என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

இதோ அவரது திருப்புகழே அதற்குச் சான்று:
“சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே” — என்றும்

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மகர் சபாசென – என்றும்

பாடுகிறார். முகமதிய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததால் ஹிந்துஸ்தானி மொழியில் புழங்கிய சபாஷ், சலாம் முதலிய பல ஹிந்துஸ்தானிச் சொற்கள் அவர்தம் பாடல்களில் பரிமளிக்கின்றன.
om

நடிக்கும் பிரான் மருகா ! கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே — (கந்தர் அலங்காரம் பாடல் 51)
விருதா (பயனற்ற) என்ற சொல் “ அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை” என்ற வரியிலும் ஜே என்ற சொல்லை “நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய, சுரர்களேத்திடு வேலா ஜேஜெய” — என்ற திருப்புகழ் வரியிலும் காணலாம்.

குமரபரகுரு சுவாமிகளும் கூட மீனாட்சிப் பிள்ளைதமிழில்
“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” — என்றும் பாடுகிறார்.

நாம் அன்றாடம் புழங்கும் ஹிந்துஸ்தானி சொற்கள்:
அசல், அந்தஸ்து, அபின், அல்வா, இஸ்திரி, உஷார், குமாஸ்தா, ஜமக்காளம், ஜல்தி, சோதா, தபால், தர்பார், பஞ்சாயத்து,பங்களா, சபாஷ் – இன்னும் பற்பல.

hello

உலகில் எவரும் பிறமொழிக் கலப்பிலாமல் வாழமுடியாது; பேசவும் முடியாது. ஆனால் அது எல்லை மீறிப் போகாதவாறு பாதுகாத்து, மொழியின் தூய்மையைப் போற்றுவதில் தவறில்லை.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-1

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.

 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே! (அவ்வையார்)

அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

 

இனிமை தருமொரு தனிமையை மறைகளி

னிறுதி யறுதியி டவரிய பெறுதியை

இருமை யொருமையில் பெருமையை  வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)

 

இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்

அணுகொனா வகை நீடுமிராசிய

பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்

 

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.

மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.

வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:

 

வாசித்துக் காணொ ணாதது

பூசித்துக் கூடொ ணாதது

வாய் விட்டுப் பேசொ ணாதது

மாசர்க்குத் தோணொ ணாதது

நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது

என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.

பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

 

பேசா அநுபூதி

அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.:

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்,

பேசா அநுபூதி பிறந்ததுவே

 

கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி.

ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கீதையில்

கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)

யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:

ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:

பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.

நாமும் தனிமையில் இனிமை காணும் பக்குவம் பெறுவோம்.

contact london swaminathan at swami_48@yahoo.com