திருமோகூர் - ஆலயம் அறிவோம் (Post No.10,312)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,312

Date uploaded in London – –   8 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 7-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருமோகூர்

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்

நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனி வாய்

காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

    ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழும் ‘தாள தாமரைத் தட வயல் சூழ்’ திருமோகூர் திருத்தலம் ஆகும்.இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டார் தூரத்தில் உள்ளது.

மூலவர் திரு நாமம் : காளமேகப் பெருமாள்

உற்சவர் : திருமோகூர் ஆப்தன் என்று அழைக்கப்படுகிறார்.

தாயார் : மோகனவல்லி

ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். 

 பெருமாள் சந்நிதிக்குத் தெற்கே தாயார் சந்நிதி உள்ளது. தாயார் எந்தக் காலத்திலும் கோவில் படியைத் தாண்டியதில்லை. ஆகவே இவர் படி தாண்டாப் பத்தினி என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறார். 

ஸ்தல விருக்ஷம் : வில்வம்   தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்                                 

பகவான் மோகினி அவதாரம் எடுத்ததால் இந்த ஊர் திருமோனவூர் என்ற பெயரைப் பெற்றது. காலப் போக்கில் மருவி திருமோகூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது.    

                                        இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது அமிர்தம் வெளியாகவே அதைப் பெற அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி விரட்டவே தேவர்கள் அமுதம் பெற்று மகிழ்ந்தனர். அவர் மோகினி வடிவம் கொண்டு அருள் பாலித்த இந்தத் தலத்திலேயே அவர் அர்ச்சாவதாரமாகக் காட்சி அளிக்குமாறு தேவர்கள் வேண்ட, அப்படியே அவர் இங்கு எழுந்தருளியுள்ளார்.

பிரம்மாண்ட புராணம் பிரம்ம தேவன் இங்கு தவம் இயற்றியதைக் கூறுகிறது.

மத்ஸ்ய புராணம் புகழும் தலம் இது. இத்தலம் பற்றி இன்னொரு வரலாறும் உண்டு. துவாபர யுகத்தில் புலஸ்திய மஹரிஷி தனக்குப் புத்திரன் வேண்டி இங்கு தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி தரிசனம் தந்த காளமேகப் பெருமாள் அவருக்கு விஸ்ருவர் என்ற மகன் பிறக்க வரம் தந்தார். அவர் வேண்டுதலுக்கு இணங்க இங்கேயே மோகினியாகக் காட்சியளித்தார். இன்றும் காட்சி தருகிறார்.

இங்கு கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பீஜாக்ஷரத்துடன் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். முன்புறம் சக்கரதாழ்வாராகவும் பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி அளிக்கும் சக்கரத்தாழ்வார் 48 தேவதைகள் சுற்றிலும் இருக்க, 6 வட்டங்களுக்குள் 154 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க, 16 திருக்கரங்களில் 16 படைக்கலங்கள் ஏந்தி 3 கண்களுடன் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். அவரது திருமுடி தீயென ஜொலிக்கிறது. 

கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரம்மாண்டமான திருக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இரு பிரகாரங்கள் உள்ளன. கோவிலின் இடப்புறத்தில் மிகப்பெரிய திருபாற்கடல் தீர்த்தம் உள்ளது. இந்தத் திருக்குளத்தில் அமுதம் கடையும் போது அதன் ஒரு துளி இதில் விழுந்ததால் அது இப்பெயரைப் பெற்றது. அதன் எதிரே பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் உள்ளது. இன்றும் இயற்கைச் சூழல் மாறாமல் தாள தாமரைத் தடமணி வயல் சூழ் திருமோகூராகவே இத்தலம் இருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்கில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் இவர் பிரார்த்தனா சயனத்தில் காட்சி அளிப்பது ஒரு சிறப்பாகும். காளமேகப் பெருமாள் சந்நிதிக்கு வடக்குப் பகுதியில் ஆண்டாள் சந்நிதி உள்ளது. ஆஞ்சநேயர், நவநீதகிருஷ்ணன் சந்நிதிகளும் பிரகாரத்தில் தெற்கே வடக்குப் பார்த்து தரிசனம் தருகின்றனர்.

நம்மாழ்வார் பல தலங்களுக்கும் சென்று மங்களாசாஸனம் செய்துள்ள போதிலும் இங்குள்ள காளமேகப் பெருமாளே அவருக்கு மோக்ஷம் அடைய வழிகாட்டி அருளினார் என்பது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும். இங்கு, ஒரே கல்லினால் ஆன பல அருமையான சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், சிவகங்கை மருது பாண்டியர் உள்ளிட்ட ஏராளமான மன்னர்கள் இக்கோவிலில் பல திருப்பணிகளைச் செய்து வந்துள்ளனர்.

நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர். இந்தத் தலம் பற்றி சங்க இலக்கியப் பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, அண்மைக்காலம் வரை ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன      

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காளமேகப்பெருமாளும் மோகனவல்லித் தாயாரும் சக்கரத்தாழ்வாரும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.              

நம்மாழ்வாரின் அருள் வாக்கு

 இது:                                                                           

 துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின்

உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திருமோகூர்

பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த

தயரதன் பெற்ற மரகதமணித் தடத்தினையே

நன்றி, வணக்கம்!                                   

tags–திருமோகூர் ,ஆலயம் அறிவோம்,

ஆலயம் அறிவோம்! வைஷ்ணவ தேவி திருத்தலம்! (Post No.9981)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9981

Date uploaded in London – –   16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 15-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

வைஷ்ணவ தேவி திருத்தலம்!

சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததாரிஹா |

விஷ்ணுரூபாதவா தேவீ  வைஷ்ணவீ  தேன கீயதே ||

விஷ்ணுவைப் போல சங்க, சக்ர, கதைகளைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே எதிரிகளை சம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ – விஷ்ணுவைச் சேர்ந்தவள் – என்ற பெயர் அம்பிகைக்கு ஏற்பட்டிருக்கிறது!

 ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சக்தி தலங்களுள் தலையாய ஒன்றான வைஷ்ணவ தேவி திருத்தலமாகும். இந்தத் தலமானது திரிகூட மலையில் 5200 அடி உயரத்தில் கட்ரா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு நகரிலிருந்து 42 கிலோமீட்டரில் உள்ளது இது. சுமார் 14 கிலோமீட்டர் மலையில் நடைப்பயணமாக இயற்கைச் சூழலில் சென்று ஆலயத்தை அடையலாம். மலை மீது நடக்க முடியாதவர்கள் குதிரையை அமர்த்திக் கொண்டு செல்லலாம்.திரிகூட மலையைப் பற்றி ரிக்வேதம் கூறுவதால் இது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்த தலம் என்பதை அறியலாம்.

மலையின் உச்சியில் உள்ள குகைக் கோவிலில் முப்பெரும் தேவிகளான லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகியோர் குடி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். குகை 30 மீட்டர் நீளத்தையும் ஒன்றரை மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. குகையின் முடிவில் மூன்று பாறைகள் ஸ்வயம்புவாகத் தோன்றி சூலத்தின் மூன்று முனைகள் போல அமைந்துள்ளன. இப்பாறைகளே தேவியரின் அருவ வடிவம்; இவையே மாதா ராணியாக வழிபடப்பட்டு வருகிறது.

வைஷ்ணவி கோவிலைப் பற்றிய புராதன வரலாறு உண்டு. திரேதா யுகத்தில் பேய்களின் கொடுங்கோன்மை உச்சகட்டத்தை அடைந்த சமயம் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒளிப்பிழம்பான வைஷ்ணவி தேவியை திரிகூட உச்சி மலையில் உருவாக்கினர். பூமியை வாட்டிய அனைத்துப் பேய்களையும் வைஷ்ணவி தேவி மாய்த்தார். பின்னர் அவர் பூமியில் இருக்கத் திருவுளம் கொண்டு பாரதத்தின் தென்பாகத்தில் வாழ்ந்த ரத்னாகர் சாகர் – சம்ரிதி தேவி ஆகிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரத்னாகர் அவருக்கு வைஷ்ணவி என்ற திருநாமத்தைச் சூட்டினார். ஒன்பது வயதில் அவர் ராமரை வழிபடலானார். அவர் முன் தோன்றிய ராமர் இந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதனாக இருக்கும் தான், அடுத்து வரும் கல்கி அவதாரத்தில் அவரை மணப்பதாகக் கூறி அருளினார்.

வைஷ்ணவி தேவி ராமரின் வெற்றிக்காக திரிகூட மலையில் உள்ள குகையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் தவம் மேற்கொண்டார். ராமர் வெற்றி பெற்றார். அதை நினைவு கூரும் வண்ணம்  இந்த நாட்களில் ராமாயணம் படிக்கும் வழக்கம் இன்றும் நீடிக்கிறது. அவர் திரிகுடா என அழைக்கப் படலானார்.                                         

இன்னொரு வரலாறும் உண்டு. கட்ராவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்சாலி என்ற கிராமத்தில்  ஸ்ரீதரர் என்றொரு பக்தர் வசித்து வந்தார். அவர் முன் வைஷ்ணவி தேவி மிக்க அழகு வாய்ந்த பெண்ணாகத் தோன்றினார். அவர்  ஸ்ரீதரிடம் பக்தர்களுக்கு விருந்து படைக்கும் பண்டாரா என்ற ஒரு விருந்தை அளிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்கிய  ஸ்ரீதர் அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். ‘பைரவ் நாத்’ என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் அவர் விருந்திற்கு அழைத்தார். பைரவ்நாத் ஸ்ரீதரிடம் விருந்து நன்றாக நடக்குமா என்று கேட்க ஸ்ரீதர் மிகுந்த கவலையுற்றார். ஆனால் அந்தப் பெண் மீண்டும் தோன்றி விருந்து அழகுற நடக்கும் என்றாள். அப்படியே பண்டாரா சிறப்பாக நடந்தது. வியப்புற்ற பைரவ்நாத் இதற்குக் காரணமாக அமைந்த அந்தப் பெண்ணைத் தேடி திரிகூட மலைகளில் ஒன்பது மாதம் அலைந்தார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் அங்கிருந்து செல்லும் முன்பாக ஒரு அம்பை பூமியில் நோக்கிச் செலுத்தினாள். அங்கு பூமியிலிருந்து ஒரு நீரூற்று பீறிட்டுப் பொங்கியது. அது ஆறாகப் பெருகியது. அதுவே பாணகங்கை ஆறாகும். அதில் குளிப்போர் பாவங்கள் அனைத்தும் போகும்; தேவியின் திருவருளும் கூடும்.

பாணகங்கை ஆற்றின் கரையோரம் தேவியின் திருவடித் தடங்களை இன்றும் யாரும் காணலாம். ஆகவே இந்த ஆற்றின் கரைகளை சரண் பாதுகா என மக்கள் அழைக்கின்றனர்.

பின்னர் வைஷ்ணவி தேவி அத்கவரி என்ற இடத்தில் கர்ப்ஜூன் என்ற குகையில் இருந்து பல மாதங்கள் தவம் புரிந்தார். பைரவர் ஒருவாறாக தேவியைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ய முயன்ற போது தேவியானவள் உக்கிரமான காளி ரூபம் எடுத்து பைரவரது தலையைத் துண்டித்தார். தேவி இப்படி காளியாக உருமாறியது தர்பார் என்ற இடத்திலுள்ள குகையின் வாயிலின் அருகே நடந்தது. தேவி பைரவரின் தலையைத் துண்டிக்கவே அந்த தலை விழுந்த இடம் பைரவ் காடி என்று அழைக்கப்படுகிறது. இது புனிதமான அந்தக் குகையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனது மரணத் தறுவாயில் பைரவர், தேவியிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு கூறவே, அன்னையும் அவருக்கு முக்தி அளித்தார்.

தன்னை தரிசிக்க அங்கு வரும் அனைவரும் தனது தரிசினத்திற்குப் பின்னர் பைரவரின் கோவிலுக்கும் சென்று தரிசித்தாலேயே யாத்திரை பூரணமாகும் என்னும் வரத்தையும் அளித்தார். தேவி தன்னை மூன்று சூல வடிவு கொண்ட பாறைகளாக மாற்றிக் கொண்டு அங்கேயே நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். தேவியைத் தேடி வந்த ஸ்ரீதர் இறுதியில் குகையை அடைந்தார். தேவியின் திரிசூலத்தைக் கண்டு அதை பல்வேறு வழிகளில் வழிபட ஆரம்பித்தார். மனம் குளிர்ந்த தேவி அவருக்குத் தரிசனம் தந்தார். அவரை ஆசீர்வதித்ததோடு தன்னை தரிசிக்க வரும் லக்ஷக்கணக்கான பக்தர்களையும் இன்றும் அவர் அருள் பாலித்துக் காத்து வருகிறார்.

மக்கள் லக்ஷக்கணக்கில் தரிசனத்திற்காக வருவதால் முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களே செல்லலாம் என்ற கட்டுப்பாடு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. வைஷ்ணவி தேவி பற்றி தொலைக்காட்சித் தொடர்களும் பல திரைப்படங்களும் வெளி வந்துள்ளன. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வைஷ்ணவி தேவிஅனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  லலிதா சஹஸ்ரநாமத்தில் 892வது நாமமாக அமைவது இது: ஓம் வைஷ்ணவீ  நமஹா, ஓம்!

நன்றி வணக்கம்!

**

Tags — ஆலயம் அறிவோம், வைஷ்ணவ தேவி,  திருத்தலம், கோவில் 

ஆலயம் அறிவோம்- திருக்கருகாவூர் தலம் (Post No.9817)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9817

Date uploaded in London – –   5 JULY   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 4-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு

அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்

கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்

அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

திரு ஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும். இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை தலவிருட்சம் முல்லைக் கொடி

தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.

இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி,

திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும்  ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில்  ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் தரிசித்து விட முடிகிறது.

மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று. நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு  முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது. 

உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.

இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.

மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன.   ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது.  நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம் அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருக்கருகாவூர் முல்லைவனேஸ்வரரும், கர்பரக்ஷாம்பிகையும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.        அப்பர் பெருமானின் அருள் வாக்கு இது :                                                              மூலனாம் மூர்த்தனாம் முன்னேதானாம் மூவாத மேனி  முக்கண்ணினானாம்

சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க்கு ஓர் ஜோதி தானாம்

மாலனாம் மங்கை ஓர் பங்கன் ஆகும் மன்று ஆடியாம், வானோர் தங்கட்கு எல்லாம்

காலனாம் காலனைக் காய்ந்தான் ஆகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே!

நன்றி வணக்கம்!       

***

tags- திருக்கருகாவூர், ஆலயம் அறிவோம்

ஆலயம் அறிவோம் – திருநாகேச்சரம் (Post No.9757)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9757

Date uploaded in London – – 21 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 20-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

காளமேகம் நிறக் காலனொடு, அந்தகன் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன, நினைவு உறின்,

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்,

கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம், குறிக்கொண்மினே

திருஞானசம்பந்தர் திரு நாமம் போற்றி! 

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரக ஸ்தலங்களுள் ராகு ஸ்தலமாக அமையும் திருநாகேச்சரம் தலமாகும். இது கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள நாகநாத ஸ்வாமி திருக் கோவிலில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் தனிக் கோயில் கொண்டு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.ராகு பகவானுக்கு ராகு கால வேளைகளில்  இங்கு அபிஷேகம் செய்வது சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும். தினமும் பத்து முதல் 500 அபிஷேகம் வரை நடைபெறுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர்.

ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது அவர் திருமேனியில் வழிந்தோடும் வெண்மை நிறப் பால் நீல நிறமாக மாறுகிறது. பாதத்தை அடையும் போது பால் மீண்டும் தூய வெண்மை நிறமாக மாறித் தரையில் ஓடுவது அதிசயமான காணக் கண் கொள்ளாக் காட்சியாகும். இங்கு நாகராஜனான ராகு பகவான் சிவபிரானை பூஜை செய்து வழிபட்டதால் இந்தத் தலம் திரு நாகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவானைத் தரிசிக்கலாம். யோகத்திற்கு அதிபதியான யோககாரகனான ராகு பகவான் சிறந்த சிவபக்தர். சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களில் ஒன்றை விட ஒன்று பலம் மிக்கது. இந்த கிரகங்கள் அனைத்தையும் விட ராகுவும் கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கூற்றாகும். ஆகவே ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து காலம் காலமாக வழி படுகின்றனர்.

ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது காப்பரிசி எனப்படும் வெல்லமும் அரிசியும் கலந்து நிவேதனம் செய்து விட்டு அதை சந்நிதியில் வைத்துப் பூட்டி விட்டுச் செல்வது வழக்கம். மறுநாள் வந்து பார்க்கும் போது அந்த அரிசி இருக்காது. அதை நாகம் வந்து தின்று விடும் என்பார்கள். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடந்த ஒரு அதிசய நிகழ்ச்சி இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்தது. அன்று அர்ச்சகர் பூஜை செய்ய காலை 6 மணிக்கு வந்த போது விக்ரஹத்தின் திருமேனியில் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்புச் சட்டை ஒன்று மாலை போலத் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தி பரவி, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ராகு பகவானை தரிசித்தனர். பாம்புச் சட்டையின் வால் பகுதி ராகு பகவானின் இடப்புறமும் தலைப்பகுதி வலப்பக்கம் உள்ள அம்மனின் மேலும் இருந்தது. நாகம் அணிவித்த இந்த மாலையானது பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.  தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க ராகுவானவர் ஒரு சிவராத்திரியில் நான்கு காலங்களில் முதல் காலத்தில் வில்வ வனமான குடந்தை கீழ்க்கோட்டத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரரையும் இரண்டாம் காலத்தில் சண்பக வனமான திரு நாகேஸ்வரத்தில் ஸ்ரீ நாகநாதரையும் மூன்றாம் காலத்தில் வன்னி வனமான திருப்பாம்புரத்திலும் நான்காம் காலத்தில் புன்னை வனமான நாகை காரோணத்திலும்  வழிபட்டு மறு நாள் உஷத் காலத்தில்  திருநாகேஸ்வரம் அடைந்து சாபவிமோசனம் அடைந்தார் என்பது ஐதீகம். ராகு பகவான் தன்னை இந்தத் திருத்தலத்திலேயே இருக்கச் செய்ய வேண்டுமென்று ஸ்ரீ நாகநாதரை வேண்ட, அதற்கு அவர் அருளி, ‘இங்கு உனது விஷம் யாரையும் தீண்டக் கூடாது’ என்று சொல்ல அப்படியே செய்வதாக ராகு வாக்களித்தார். ஆகவே இந்தத் தலத்தில் யாரையும் நாகம் தீண்டுவதில்லை.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் நான்கு கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும், மட விளாகமும், தேரோடும் நான்கு வீதிகளும் கொண்டுள்ளது. கோயில் கிழக்கு மேற்காக 800 அடி நீளமும் தெற்கு வடக்காக 680 அடி நீளமும் கொண்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே  விநாயகர், நந்தி தேவர் உள்ளனர். இடப்பக்கம் சூரிய புஷ்கரணியும் வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் புஷ்கரணி அருகே விநாயகர் சன்னிதியும் உள்ளன. அலங்கார மண்டபத்தில் நவக்கிரக சன்னிதியும், மூலவர் கருவறையை அடுத்துள்ள முதல் பிரகாரத்தின் மேல் புறம் விநாயகர், சந்திர சேகரர், முருகன், பஞ்ச லிங்கம், லக்ஷ்மி, பள்ளியறை முதலிய சன்னிதிகளும் உள்ளன. வடபுறம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னிதியும், நடராஜர் சன்னிதியும் உள்ளன. சேக்கிழார் பெருமான் இங்கு தங்கி சிவனடி பெற்றுள்ளார். அவரது திருவுருவமும், அவரது தாயார் திருவுருவமும் அவரது சகோதரர் பாலறாவாயர் திருவுருவமும் இங்கு உள்ளன. சேக்கிழார் சன்னதிக்கு வலப்பக்கம் அமைந்துள்ள அதிகார நந்தி விக்ரஹம் காண வேண்டிய அரிய விக்ரஹமாகும். இந்தக் கோவில் சோமஸ்கந்தர் அமைப்பைக் கொண்டது.

இந்தத் தலத்தில் அமைந்துள்ள கிரி குஜாம்பிகை சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவக் கோலத்தில் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். இரு பக்கங்களிலும் கலை மகளும் திருமகளும் காட்சி அளிக்கின்றனர். தேவி சாமரத்துடன் கூடிய லக்ஷ்மியாலும் சரஸ்வதியாலும் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் பணிவிடை செய்யப்படுகிறாள்.  இந்தத் தலத்திற்கு உரிய ஸ்தல விருக்ஷம் செண்பக மரம். இங்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், யம தீர்த்தம், பிரம தீர்த்தம், அக்கினி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் ஆகிய 12 தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாகநாதரும் கிரி குஜாம்பிகையும், ராகு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நாவுக்கரசரின் நல் வாக்கு இது :   

வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண்

சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்

குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்                                                   

சிட்டர் போல் திரு நாகேச்சரவரே!           

 tag- ஆலயம் அறிவோம், திருநாகேச்சரம்

ஆலயம் அறிவோம் – திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர்(Post No.9730)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9730

Date uploaded in London – – 14 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF YOU DONT SEE THE PICTURES HERE, PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

கெடும் இடராய வெல்லாம் கேசவா என்ன,

நாளும் கொடு வினைசெய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்,

விடமுடைய அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடைய வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே

நம்மாழ்வார் நாமம் வாழி!

 ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவனந்தபுரம் தலமாகும். இது கேரள மாநிலத்தின் தலை நகரமாகும். இங்கு மஹாவிஷ்ணு, ஐந்து தலை நாகத்தின்மேல் அனந்த சயன கோலத்தில் இருந்து அருள் பாலித்து வருகிறார். பெருமளின் திருநாமம் அனந்த பத்மநாபர். அனந்த எனில் என்றுமுள கடவுள். பத்ம என்றால் தாமரை. நாபி என்றாள் தொப்புள் என்று பொருள். தாயார் ஸ்ரீ ஹரிலக்ஷ்மி; தீர்த்தம் மத்ஸ்ய, பத்மா, வராஹ தீர்த்தம். விமானம் ஹேமகூட விமானம்.  விஷ்ணுவின் நாபியிலிருந்து பூக்கும் தாமரையின் மீது பிரம்மா அமர்ந்திருக்கும் காட்சியை இங்கு காணலாம்.

இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் அனந்தபத்மநாபர் சயன கோலத்தில் இருந்தாலும் அவரது நின்ற கோலம், இருந்த கோலம், சயன கோலம் ஆகிய மூன்று நிலைகளையும் மூன்று வாயில்கள் வழியே பார்ப்பது பிரமிப்பைத் தரும் தரிசனமாக அமைகிறது. மிகப் பழைய புராண வரலாற்றைக் கொண்ட, இந்த திவ்ய க்ஷேத்திரம் பரசுராமரின் ஏழு க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும். இங்கு ஏராளமான முனிவர்கள் தவமியற்றி உள்ளனர். திவாகர முனிவர் தனக்குக் கிடைத்த பழுக்காத மாங்காயையும் தேங்காயையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். அதை நினைவு கூரும் வண்ணம் பத்மநாபருக்கு தங்கத்தால் ஆன ஒரு தேங்காய் சிரட்டையில் மாங்காய் ஊறுகாய் வைத்து படைக்கப்படுவது மரபாகி இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1750 ஆண்டில் திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜமார்த்தாண்ட வர்மா தனது ராஜ்யம், செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தானப் பட்டயம் கொடுத்து தன் உடைவாளையும் இறைவன் முன் வைத்து பத்மநாப தாஸர் ஆனார். பெருமாளிடம் தரப்பட்ட செங்கோலை வைத்து மன்னர்கள் அரசாள ஆரம்பித்தனர். இந்தக் கோவில் உலகின் தலையாய செல்வச் செழிப்புள்ள கோவில்களுள் தலைமை இடம் பெறும் கோவிலாகும். இங்குள்ள மூலவர் தங்கத்தால் ஆனவர். முகலாயர் படை எடுப்பின் போது ஆலயத்தைக் காப்பாற்ற யாருமே அறிய முடியாத, கடு சர்க்கரா என்ற விசேஷமான முறையினால் ஆன ஒரு வெளிப்பூச்சு விக்ரஹத்தின் மீது பூசப்பட, உள்ளிருக்கும் தங்கம் தெரியாமல் இந்தப் பூச்சு மறைத்தது.  இந்த விக்ரஹம் 12008 சாலகிராமங்களால் ஆனது என்று கூறப்படுகிறது.

கோவிலில் ஆறு ரகசிய அறைகள் பல காலமாகத் திறக்கப்படாமல் இருந்தன. 2011ஆம் ஆண்டில் இந்த அறைகளில் சில திறக்கப்பட்டன. தங்கம், வைர ஆபரணங்கள் கணக்கற்ற அளவில் இங்கு ஜொலி ஜொலித்தன. தங்கக் குடம், தங்க எழுத்தாணி, இரண்டு அடி நீளமுள்ள தங்கத்தினால் ஆன ஹாரம் என எண்ணற்ற ஆபரணங்கள் வெளிப்படவே உலகமே பிரமிப்படைந்தது. அறைகள் யாராலும் திறக்கப்படக் கூடாது என்பதாலும் இவற்றை நாகங்கள் பாதுகாத்து வருகின்றன என்று சொல்லப்படுவதாலும் பக்தர்கள் இதைத் திறந்து பார்ப்பதை விரும்பவில்லை என்ற நிலையில் ஆறு அறைகளைத் தவிர மேலும் இரு அறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கோவிலில் இருக்கும் செல்வ வளத்தின் மிக மிகக் குறைந்த பட்ச மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என மதிக்கப்படுகிறது.

கோவிலின் கர்பக்ருஹம் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஒன்றாகும். 100 அடி உயரத்துடன் ஏழு வரிசைகள் கொண்ட கோபுரத்தைக் கொண்ட இந்தக் கோவிலில் சம்பிரதாயமான விதி முறைகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆண்கள் வேஷ்டி அணிந்து மேலாடை எதுவுமின்றியும் பெண்கள் நவீன ஆடைகளின்றி பாரம்பரிய முறைப்படி புடவை உடுத்தி உள்ளே சென்று வழிபட வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோவிலைச் சுற்றி நான்கு புறமும் உள்ள பிரகாரமும், அதில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள 366 தூண்களும், ஒவ்வொரு தூணுக்கும் ஒரு விளக்கேந்திய பாவை அமைக்கப்பட்டிருப்பதும் காணக் கண் கொள்ளாக் காட்சிகளாகும். கோவிலில் உள்ள மண்டபத்தில் சப்த ஸ்வரங்களை எழுப்பும் இசைத் தூண்களும் உள்ளன.

கோவிலின் தென்புற பிரகாரத்தில் யோக நரசிம்மரும், சந்நிதிக்கு முன்னால் ஹனுமாரும் சந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணரும் தெய்வீகக் காட்சி அளிக்கின்றனர். இங்கு ஹனுமானின் மீது சாத்தப்படும் வெண்ணெய் வெயில் காலமானாலும் கூட எத்தனை நாட்களானாலும் கூட உருகுவதில்லை என்பது ஒரு பெரிய அதிசயமாகும். லக்ஷ்மி வராகர் கோவில் மற்றும் ஸ்ரீநிவாஸர் கோவில் தெற்குப் பக்கத்தில் உள்ளன. ஆலயத்தில் உள்ள அழகிய சிற்பங்கள் காலத்தை வெல்லும் கருவூலமாகும்.

சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று கூறிச் சிறப்பிக்கிறது. சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படை எடுத்துச் செல்லும் முன்னர் அனந்தபத்மநாபர் அணிந்த மாலையை வாங்கிச் சூடிக் கொண்டு சென்றான் என்பது சிலப்பதிகாரம் தரும் செய்தி.

கோவிலில் ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி விழா குறிப்பிடத் தகுந்த ஒன்றாக விளங்குகிறது. இதையொட்டி சுவாதி இசை விழாவும் நடை பெறும். அடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் லக்ஷ தீபத் திருவிழாவில் ஒரு லக்ஷம் விளக்குகள் இங்கு ஏற்றப்படுவது உலகில் வேறெங்கும் காண முடியாத ஒரு அற்புதக் காட்சியைத் தரும் திருவிழாவாக அமைகிறது. இந்தத் தலத்தில் பெருமாளை தரிசித்து நம்மாழ்வார் மங்களாசாஸனப் பாசுரங்கள் அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அனந்த பத்மநாபர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி

எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பறுக்கும், அப்பால்

திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்ந்தபுரத்து

அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்!                     

நன்றி வணக்கம்!                

     tags- ஆலயம் அறிவோம், திருவனந்தபுரம், அனந்த பத்மநாபர்,                                   

ஆலயம் அறிவோம் – சம்பந்தர் அவதரித்த சீர்காழி(Post.9637)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9637

Date uploaded in London – – 23 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 23-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண்மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலமான பிரமபுரம் ஆகும். சீகாழி என்று இன்று அறியப்படும் தலம் இதுவே. தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மாயவரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தலத்திற்கு ஏராளமான பெயர்களும் அதையொட்டிய புராண வரலாறுகளும் உண்டு. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்

அம்பிகையின் திருநாமம் : பெரியநாயகி, திருநிலை நாயகி

தல விருக்ஷம் : பவளமல்லி எனப்படும் பாரிஜாதம்

தீர்த்தங்கள்: எல்லையற்ற மஹிமை கொண்ட 22 தீர்த்தங்கள் உண்டு. பிரமதீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், ராகு தீர்த்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.,

பிரம்மா, திருமால், சிபி  மஹராஜன், காளி, பராசர முனிவர், குரு, ராகு உள்ளிட்ட ஏராளமானோர் வழிபட்ட தலம் இது.

சீ என்றால் சீர் என்று பொருள்,காழி என்றால் உறுதி என பொருள்.

சிவபாத ஹ்ருதயர், பகவதி அம்மையாருக்குப் புதல்வராக இங்கு தான்  திருஞானசம்பந்தர் அவதரித்தார்.வைகாசி மூலம் அவரது குருபூஜை தினமாகும். இங்குள்ள கோவிலில் உள்ள பிரமதீர்த்தத்தில் தான், சிவபிரான் அம்பிகையிடம் கூற, அம்பிகை ஞானப்பாலைப் பொற்கிண்ணத்தில் தர ஞான சம்பந்தர் அதை அருந்தி தோடுடைய செவியன் என்று சிவபிரான், அம்பிகை தரிசனத்தைக் குறித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். 16 வயது வரை வாழ்ந்த அவர் உலக நன்மைக்காக பல்லாயிரக்கணக்கான பதிகங்களைப் பாடி அருளினார். நமக்கு இன்று கிடைத்திருப்பவை 385 பதிகங்களே. அவர் பிறந்த இல்லம் இங்கு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. காஞ்சி சங்கரமடத்தால் சிறப்புற நிர்வகிக்கப்படும் இந்த இல்லம் தேவாரப் பாடசாலையாக இப்போது இலங்குகிறது.

ஊழிக்காலத்தில் பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்கிய அளவில், மீண்டும் உலகைப் படைக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிரணவத்தைத் தோணியாக்கி உமாதேவியுடன் அதில் ஏறி வருகையில் இத்தலத்தை அடைந்தார். அப்போது அது பிரளய நீரில் மிதந்து நின்றது. இதுவே மூலாதார க்ஷேத்ரம் என நிர்ணயித்த பெருமான் இங்கு நிலையாக எழுந்தருளினார். ஆகவே இது தோணிபுரம் என்ற பெயரைப் பெற்றது. பிரமன் இங்கு சிவபிரானை வழிபட்டதால் இது பிரமபுரம் என்ற பெயரைப் பெற்றது. இறைவன் இங்கு மூங்கில் வடிவில் தோன்றியதால் வேணுபுரம் என்ற பெயரைப் பெற்றது.

சூரபன்மனுக்குப் பயந்த தேவர்கள் அனைவரும் இந்தத் தலத்தில் தஞ்சம் அடையப் புகுந்தனர். அதனால் இது புகலி என்ற பெயரைப் பெற்றது. குருபகவான வழிபட்ட தலமாதலால் இது வெங்குரு என்ற பெயரைப் பெற்றது. சிரசு அதாவது தலை கூறாக உள்ள ராகு பகவான் இங்கு பூஜித்ததால் இது சிரபுரம் என்ற பெயரைப் பெற்றது. புறா வடிவத்தில் வந்த அக்னி பகவான் சிபி சக்ரவர்த்திக்கு அருள் பாலித்த தலம் இதுவே. ஆகவே இது புறவம் என்ற பெயரைப் பெற்றது.

பூமியைப் பிளந்து சென்று இரண்யாக்ஷனை வதம் செய்த வராஹமூர்த்தியாக அவதரித்த திருமால் வழிபட்ட தலம் இது என்பதால் பூந்தராய் என்ற பெயரைப் பெற்றது. சண்பை என்று அழைக்கப்படும் கோரைப்புல்லால் தன் குலத்தோர் அழிந்ததால் ஏற்பட்ட பழி தீர கண்ணனாக அவதரித்த திருமால் வழிபட்ட இடம் என்பதால் இது சண்பை என்ற பெயரைப் பெற்றது. சிதம்பரத்தில் காளி தேவி நடராஜரோடு வாதாடிய குற்றம் நீங்க இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இது சீ காளி என்ற பெயரைப் பெற்றது. இதுவே மருவி சீகாழி ஆயிற்று என்று சொல்வர்.

மச்சகந்தியை மணம் செய்து கொண்ட குற்றத்தால் கொச்சைச் சொல்லுக்கு உள்ளான அவலம் நீங்க. பராசரர் இங்கு வழிபட்டதால் இது கொச்சைவயம் என்ற பெயரைப் பெற்றது. மலத்தொகுதி நீங்குமாறு ரோமச முனிவர் வழிபட்ட தலம் ஆதலால் இது கழுமலம் என்ற பெயரைப் பெற்றது. ஹிரண்யாக்ஷனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலை சுவாமி சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமிக்கு ஸ்ரீசட்டைநாதர் என்ற திருநாமம் உண்டு.இப்படி இன்னும் பல பெயர்களும் புராணவரலாறுகளும் உண்டு.

இந்த ஆலயம் நகரத்தில் நடுவில் நான்கு  கோபுரங்களும் சுற்று மதில்களும் கொண்டதாக விளங்குகிறது. கோவினுள்ளே ஸ்ரீ பிரமபுரீஸ்வரருக்கும், திருநிலைநாயகிக்கும், திருஞான சம்பந்தருக்கும் தனித் தனி ஆலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.சுவாமி கோவில் மஹா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெற்கு உட்பிரகாரத்தில் முத்து சட்டைநாதரும் அங்குள்ள திருமாளிகை பத்தியில் 63 நாயன்மார்களும் மூலவராக உள்ளனர். இந்த பத்தியில் ஒரு பலி பீடம் உள்ளது. அங்கிருந்து மேலே பார்த்தால் சட்டைநாதர் சந்நிதி தெரியும். மேலைப் பிரகாரத்திலும் வடக்குப் பிரகாரத்திலும் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.

இந்த ஆலயம் திருக்கயிலாய பரம்பரை தர்மபுர ஆதீனத்தால் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சீகாழியின் வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமல ஆறும் தெற்கே உப்பனாறும் அழகுறப் பாய்கின்றன. இது காவிரியின் வடகரைத் தலமாகும். இங்கு திருஞானசம்பந்தர் 67 பதிகங்கள், அப்பர் 3, சுந்தரர் 1 பதிகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். இன்னும் மாணிக்கவாசகர், சேக்கிழார், பட்டினத்தார்,ஒட்டக்கூத்தர், அருணாசலக்கவிராயர் உள்ளிட்டோர் இங்கு இறைவனைப்  பாடிப் பரவியுள்ளனர்.

ஊழிகாலத்திலிருந்து இன்றைய நாள் வரை லக்ஷோப லக்ஷம் மக்களுக்கு அருள்பாலித்து வரும் பீடுடைய பிரமபுரீஸ்வரரும் திருநிலைநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத் தத்துவனை,

கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,

முன் அடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவை வல்லார்,

பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே!

நன்றி, வணக்கம்!  

***

tags– ஆலயம் அறிவோம்  , சீர்காழி, சம்பந்தர் ,

ஆலயம் அறிவோம்! பண்டரிபுரம் ஆலயம் (Post No.9586)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9586

Date uploaded in London – – 10 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 9-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஜெய் ஜெய் விட்டலா ஜெயஹரி விட்டலா

பாண்டுரங்க விட்டலா பண்டரிநாதா விட்டலா

ஜெய் ஜெய் விட்டலா ஜெயஹரி விட்டலா

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

வாயிலில் இருக்க, மஹா கண்பதி, சரஸ்வதி தேவி ஆகியோரை இங்கு தரிசனம் செய்யலாம். 16 தூண்கள் கொண்ட சோலா கம்பா என்ற மண்டபத்தில் கூரையில் 

ஜெய் ஜெய் விட்டலா ஜெயஹரி விட்டலா  அனாதரக்ஷக விட்டலா ஆபத்பாந்தவ விட்டலா

ஜெய் ஜெய் விட்டலா ஜெயஹரி விட்டலா 

நன்றி, வணக்கம்!

***

tags –  ஆலயம் அறிவோம், பண்டரிபுரம் , 

சோமநாத்: ஆலயம் அறிவோம்!(Post No.9431)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9431

Date uploaded in London – –28 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஸித சோபித லிங்கம் |

ஜந்மஜ துக்க விநாசக லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ||

ஜெய் சோம்நாத்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் முதலாவதாக அமையும் சோமநாத் ஆகும்.

 பிரபாச பட்டினம் என்று பெயரைப் பெற்றுள்ள இந்தத் தலம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஒன்று.  இது அகமதாபத்திலிருந்து 415 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று! தக்ஷ பிரஜாபதிக்கு இருபத்தேழு பெண்கள் பிறந்தனர். அவர்களை அவன் சந்திரனுக்கு மண முடித்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் மேல் மட்டும் அளவற்ற ஆசை வைத்து இதர  அனைவரையும் கவனிக்கவில்லை. இதனால் மனம் வருந்திய அவர்கள் அனைவரும், தன் தந்தையிடம் முறையிடவே அவர் கோபம் கொண்டு, சந்திரனை நோக்கி, “நீ உருக்குலைந்து அழியக் கடவது” என சாபம் இட்டார். மனம் வருந்திய சந்திரன், சாப விமோசனம் கேட்கவே, தக்ஷன் ‘சிவனை நோக்கித் துதி செய்’ என்றான். பிரபாச பட்டினத்தின் கடற்கரையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திரன் பூஜை செய்து சிவனை வழிபட்டு வந்தான். மனம் மகிழ்ந்த சிவ பிரான் அவன் முன் தோன்றி அவன் குறையைக் கேட்டு, “பதினைந்து நாட்கள் நீ தேய்ந்து அடுத்த 15 நாட்களில் முற்றிலுமாக நீ வளர்வாயாக” என வரம் தந்தார். சந்திரனுடைய இன்னொரு பெயர் சோமன். அவன் வழி பட்ட தலம் என்பதால் சோமநாத் அல்லது சோமநாத புரம் என்று இத்தலம் பெயரைக் கொண்டது.

அரபிக் கடலின் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய பாறையில் அழகுற அமைந்துள்ள இந்த சோமநாதர் ஆலயம் பூர்வத்தில் தங்கத்தால் ஆன கோவிலாகும். ஸ்கந்த புராணத்தில் சோமநாதர் கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கு அடியில் இருப்பதாகக் கூறுகிறது. ரிக் வேதம், சிவ புராணம், பாகவதம் உள்ளிட்ட நூல்களிலும் இது குறிப்பிடப்படுவதால் இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் என்பது பெறப்படுகிறது.

“ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வ பாபாத் ப்ரமுச்யதே என்ற அருள் வாக்கியம் சோம லிங்கத்தை தரிசிக்கும் ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார் எனக் கூறி அருள்கிறது.

இந்த ஆலய மணியின் சங்கிலி மட்டும் இருநூறு மடங்கு எடை கொண்ட தங்கத்தால் ஆனது. கோவிலின் கூரையை 56 சட்டங்களைக் கொண்ட தூண்கள் தாங்கி இருந்தன. ஏராளமான தங்க வெள்ளி ஆபரணங்களும் நவரத்தின மணிகளையும் கொண்ட இதன் செல்வச் செழிப்பு சொல்வதற்கு இயலாத ஒன்று. இதைக் கேள்விப்பட்ட கொள்ளைக்காரன் கஜினி முகம்மது 17  முறை படையெடுத்து வந்தான். இறுதியில் கோவிலை அழித்தான். கோவில் மீண்டும் அழகுறக் கட்டப்பட்டது. இப்படியாக இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி, ஜாபர்கான் உள்ளிட்ட முரட்டு வெறியர்களால் ஆறு முறை அழிக்கப்பட்ட போதும் பல்வேறு அரசர்களால் இது மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது.

இறுதியில் ஏழாம் முறையாக சர்தார் வல்லப பாய் படேலும் கே.எம். முன்ஷி அவர்களும் இணைந்து இதை மீண்டும் எழுப்ப கடும் முயற்சி செய்தனர். இதன் விளைவாக 1951 மே மாதம் 8ஆம் தேதி அஸ்திவாரக் கல் நாட்டப்பட்டு மீண்டும் சோமநாதர் ஆலயம் அழகுறக் கட்டப்பட்டது. முரடர்கள் பல முறை அழிக்க முயற்சி செய்தாலும் தர்மம் மீண்டும் எழுச்சி உறுவது போல சோமநாத்தின் எழுச்சி தர்மத்தின் எழுச்சியாகவே கருதப்படுகிறது.

 தினந்தோறும் சூரியனின் கதிர்கள் மாலையில் மறைய ஆரம்பித்தவுடன் ஆலயத்தின் மணி ஒலி எழுப்பப்பட்டு ஆரத்தி காண்பிப்பது இங்குள்ள மரபாகும். இந்த ஆலயத்தின் தென்புற வாயிலின் எதிரே  கடலை ஒட்டி உள்ள மதில் சுவரில் ஒரு சிறு கோபுரம் உள்ளது. அதில் உள்ள ஒரு அம்புக் குறி கடலைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆலயத்திலிருந்து தென் துருவம் வரை நிலமே கிடையாது. சோமநாதரின் தெய்வீகத் திரு ஒளி தென் துருவம் வரை பரவுவதாக ஐதீகம். கோவில் கோபுரத்தில் 1400க்கும் மேற்பட்ட கலசங்கள் உள்ளன.

சோமநாத ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக அமைகிறது. இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடமாகும்.

சோமநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பல்கா தீர்த்தம் அமைந்துள்ளது. கண்ணனின் கணுக்காலில் வேடன் அம்பு எய்திய இடம் இது தான். கண்ணன் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு ஆலமரத்தின் நிழலில் தன் சரீரத்தைத் துறந்தார். அந்த இடம் தேகோத் ஸர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஹிரண்யா, கபிலா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமும் இங்கு அருகில் உள்ளது. இந்த திரிவேணிக் கரையில் உள்ள கீதா மந்திர் குறிப்பிடத்தகுந்த ஒரு கோவிலாகும். காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் சோமநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

 நன்றி, வணக்கம்!

tags- சோமநாத், ஆலயம் அறிவோம், ஜோதிர் லிங்கம்

வைத்தீஸ்வரன் கோவில்- ஆலயம் அறிவோம்! (Post No.9209)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9209

Date uploaded in London – –31 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 31-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“செடியாய உடல் தீர்ப்பான் தீ வினைக்கு ஓர் மருந்தாவான்

பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு  இல்லையாம் மறுபிறப்பே”

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 

வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூர்  ஆகும். இது சென்னையிலிருந்து 246 கிலோமீட்டர் தூரத்திலும் மாயவரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

இத்தலம் கிருத யுகத்தில் கதம்ப வனம் என்றும் திரேதா யுகத்தில் வில்வ வனம் என்றும் துவாபர யுகத்தில் வகுள வனம் என்றும்  கலியுகத்தில் நிம்ப வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் யுகம் கடந்த பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இது என்பதை அறியலாம். இங்குள்ள வைத்யநாதர் ஸ்வயம்பு லிங்கமாகத் தோன்றி அருள் பாலிக்கிறார். அம்மன் பெயர் தையல் நாயகி. திருப்புள்ளிருக்கு வேளூர் என்று இது அழைக்கப்படுவதன் காரணம் முன்பு புள் எனப்படும் ஜடாயுவும் இருக்கு எனப்படும் ரிக் வேதமும் வேள் எனப்படும் முருகப்பிரானும் ஊர் எனப்படும் சூரியனும்  இங்கு சிவனை பூஜித்ததால் இது அப்படி அழைக்கப்படுகிறது.

ஜடாயு பூஜித்ததால் ஜடாயு புரி என்றும் ரிக் வேதம் பூஜித்ததால் வேதபுரி என்றும் கந்தன் பூஜித்ததால் கந்தபுரி என்றும் சூரியன் பூஜித்ததால் சூரியபுரி என்றும் அங்காரகன் பூஜித்ததால் அங்காரகபுரி என்றும்  அம்பிகை பூஜித்ததால் அம்பிகாபுரி என்றும் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது.வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி மேற்கு பார்த்து அருள் பாலிக்க வாலாம்பிகா எனப்படும் தையல்நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் தலம் இது.

கீழ் புறமும் மேல் புறமும் இராஜகோபுரங்கள் அமைந்திருக்க, பின்பக்கம் கட்டை கோபுரம் உள்ளது. ஆலயத்தின் கீழ் திசையில் வீ ரபத்திரரும், மேல் திசையில் வைரவரும், தென் திசையில் கற்பக விநாயகரும் வடதிசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.

இங்குள்ள முருகப்பெருமானின் நாமம் ஸ்ரீ செல்வமுத்துக்குமரர். குமரகுருபரருக்கு ‘பொன் பூத்த குடுமி’ என்று அடி எடுத்துக் கொடுத்த பிரான் இவர். முருகன் சூரனின் மார்பைப் பிளக்க வேல் வாங்கியது இந்தத் தலத்தில் தான்.

இராமர் ஜடாயுவைத் தகனம் செய்த இடம் இது தான். ஜடாயு குண்டம் என்ற குண்டத்தை இங்கு காணலாம்.

நவகிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அதிசயத் தலமும் இதுவே.

முன்னொரு காலத்தில் செவ்வாய் சரும நோயால் பீடிக்கப்பட்டு வருந்த இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் 45 நாட்கள் நீராடி வைத்யநாதரை வழிபட அவர் நோய் தீர்ந்தது.

ஆகவே இந்த சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் விசேஷமான தீர்த்தமாக ஆகி அனைவரின் நோயையும் இன்றளவும் குணப்படுத்துகிறது. இங்கு செவ்வாய் கிரகத்திற்குத் தனி சந்நிதி உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட இங்கு அங்காரகனை வழிபடுதல் மரபு. குளத்தைச் சுற்றி எட்டு திக்குகளிலும் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.ஒருமுறை சதானந்த முனிவர் என்பவர் இங்கு நீராடித் தவம் செய்து வரும்போது பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர் மீது பாய்ந்து அவர் தவத்தைக் கலைத்தது. முனிவர் வெகுண்டு இனி இந்த தீர்த்தத்தில் எந்தக் காலமும் தவளையும் பாம்பும் இல்லாமல் போகட்டும் என்று சாபமிட, இன்று வரை இந்தக் குளத்தில் தவளையும் பாம்பும் இருப்பதில்லை!

 இந்தத் தலத்தின் பெருமையில் முக்கியமானது, இங்குள்ள இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு தையல்நாயகி அம்மன் தைல பாத்திரம், சஞ்சீவி, வில்வமரத்து அடிமண் ஆகியவற்றை எடுத்து வர,  சிவபிரான் தானே வைத்தியராகி அடியார்களுக்கு நோய் தீர்க்க அருள் செய்யப் பெற்ற அரும் செயலாகும்.

இந்தக் குளத்தில் நோய் தீர பக்தர்கள் வெல்லத்தைக் கரைப்பது மரபு. உப்பையும் மிளகையும் கலந்து பக்தர்கள் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டி ஒன்றில் கொட்டி பிரார்த்தனை செய்கின்றனர். தங்கள் தங்களின் நோயைத் தீர்க்க வைத்யநாதரிடமிருந்து சிறிய திருச்சாந்துருண்டையைப் பெற்று சித்தாமிர்த தீர்த்தத்துடன் அதை உண்ண தீராத நோய்களும் தீர்கின்றன.

மேற்குத் திசை கோபுர வாயிலாகச் சென்றால் வெள்ளியாலும் தங்கத்தாலும் உள்ள இரு துவஜ ஸ்தம்பங்களைக் காணலாம்.

பிரம்மாண்டமான பிரகாரங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. உட்பிரகாரத்தில்  சுவாமி சந்நிதிக்கு மேற்புறம் ஸ்ரீ செல்வ முத்துகுமாரசாமி உற்சவர், வள்ளி, தெய்வானையோடும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். துர்க்கை, தன்வந்திரி உள்ளிட்ட ஏராளமான விக்ரஹங்களை இங்கு தரிசித்து வழிபடலாம். அற்புதமான சிற்பங்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்தில் உள்ளன.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் அருளியுள்ள தலம் இது. இங்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் 14. வடுகநாத தேசிகர், குமர குருபரர், சிவஞான தேசிகர், சிதம்பரநாத முனிவர், வடலூர் வள்ளலார், படிக்காசுத் தம்பிரான், காளமேகப் புலவர் உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு இறைவனைத் துதித்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் வாலாம்பிகா சமேத வைத்யநாதஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம்.

அப்பரின் அருள் வாக்கு:-

குற்றமில்லியைக் கோலச் சிலையினால், செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை

புற்று அரவணைப் புள்ளிருக்கு வேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே!

நன்றி வணக்கம்.

tags — வைத்தீஸ்வரன் கோவில், ஆலயம் அறிவோம்

குருவாயூர்- ஆலயம் அறிவோம்! (Post No.9183)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9183

Date uploaded in London – –24 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

மதுராபுரி சதனா மிருதுவதனா இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!

இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 

குரு பகவானும் வாயு பகவானும் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்த அபூர்வ தலமான குருவாயூர் ஆகும். பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் எர்ணாகுளத்திலிருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும் கோழிக்கோடிலிருந்து 111 கிலோமீட்டர் தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலவிலும் உள்ளது.

இந்த அதிசயமான தலம் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. மஹாபாரத யுத்தம் முடிவுக்கு வந்தது. தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி விட்ட கிருஷ்ணர் உத்தவரை அழைத்து எனது அவதாரம் முடிந்து விட்டது. இதோ இங்கு துவாரகையில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விக்ரஹத்தை தேவகுருவான பிரஹஸ்பதியிடம் தந்து புண்ணியமான பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்” என்று கூறினார்.  காலப்போக்கில்  யாதவ வம்சம் விப்பிர சாபத்தினால் ஒரு முடிவுக்கு வர, உத்தவர், குரு பகவானிடம், கிருஷ்ணர் இட்ட கட்டளையைக் கூறினார். அதை சிரமேற்கொண்ட குரு பகவான் த்வாரகைக்கு வர, அது கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. குரு பகவானுக்கு அலை மோதும் கடலில் விக்ரஹத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அவர் வாயு பகவானை வேண்டி ஸமுத்திரத்தை சாந்தமடையச் செய்தார். வாயு பகவானின் துணையோடு விக்ரஹத்தைக் கண்டு பிடித்து அதை ஸ்தாபிக்க புண்ய தேசம் தேடி வந்தார். இறைவனின் நாடான கேரளத்தின் மேற்கு எல்லையில் ஒரு தடாகத்தைக் காண அதில் சிவபிரான் க்ரீடை புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு குருவும் வாயுவும் அவரை வணங்க, உங்கள் வருகை ஏன் என்று எனக்குத் தெரியும். அம்பிகாபுரம் என்ற இந்த இடம் எனக்கு மிகவும் விருப்பமான இடம். இங்கே அந்த விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யுங்கள்” என்று கூறி அருளினார்.

குருவும் வாயுவும் அவ்வண்ணமே அங்கே குருவாயூரப்பன் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தனர். குரு பகவானும் வாயு பகவானும் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த அந்தத் தலம் குருவாயூர் என்று பெயர் பெற்று பிரஸித்தமானது.

குருவாயூரப்பன் இங்கு கிழக்கு முகமாக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஆகவே கிழக்கே நடை பிரதானமாகும். அதைத் தாண்டினால் ஒரு நடைப்புரை. அதை யானைப்பந்தல் என்றும் சொல்வார்கள். மூலஸ்தானத்திலிருந்து கிழக்குப் புறமாக வந்தால் இதை அடையலாம். உள்ளேயிருந்து வெளி வரும் போது பெரிய பலிபீடத்தைக் காணலாம். இது குருவிற்கும் வாயுவிற்கும் அதிஷ்டானமென்று சொல்லப்படுகிறது. நடைப்புரையின் மேலப் புறங்களில் வர்ணப்படங்கள் உள்ளன. இதன் தென்கிழக்கு மூலையில் கூத்தம்பலம் உள்ளது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் உள்ளன. தெற்கே விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ள அறை உள்ளது.

ஆதி சங்கரர் ஒரு முறை இங்கு ஆகாய மார்க்கமாக வர அங்கு ஏகாதசி பண்டிகை விமரிசையாக நடந்து கொண்டிருக்க, இது என்ன வீண் கேளிக்கை என்று அவர் நினைத்தார். அப்போது அவர் மேனி தளர்ந்து குருவாயூரப்பன் சந்நிதியின் முன் விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்து பார்க்கையில் அங்கு இருக்கும் அனைத்தும் விஷ்ணுமயமாய் இருப்பதைக் கண்டு வியப்புற்றார் அப்போது ஆகாயத்திலிருந்து தேவர்கள்  மலர்மாரி பொழிந்தனர். இப்படி மலர்மழை பொழிந்த இடத்தையும் நிகழ்ச்சியையும் நினைவூட்டும் வண்ணம் இந்தப் பந்தலின் மேற்புரையில் ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மேள தாளங்களுடன் பகவான் இங்கு வரும் சமயங்களில், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வண்ணம், பகவான் இங்கு சற்று நிறுத்தப்படுவார்! அப்போது மேளதாளங்கள் நிறுத்தப்படும்.

தனது அனுபவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்த ஆதி சங்கரர் சில நாட்கள் குருவாயூரிலேயே வசித்தார். குருவாயூரப்பனை பஜனம் செய்து பூஜாகிரமங்களில் சில விசேஷ முறைகளை நியமித்தார்;

அதன்படியே அவை இன்றும் நடைபெற்று வருகின்றன.

கர்பகிருஹத்திற்கு நான்கு பக்கங்களிலும் உள்ள கட்டிடங்களுக்கு நாலம்பலம் என்று பெயர். நாலம்பலத்தின் தெற்கு மூலயில் பகவானுக்கு உரிய நைவேத்திய பதார்த்தங்கள் பாகம் செய்யப்படும். இங்கு தினமும் கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது. இங்கு அக்ஷய திரிதியை, ஜென்மாஷ்டமி, கார்த்திகை முதல் நாள் முதல் நாற்பது நாட்கள் கொண்ட  மண்டல காலம், கார்த்திகை மாதம் சுக்கில ஏகாதசியான குருவாயூர் ஏகாதசி, சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுக்கனி  தரிசனம் உள்ளிட்ட பல உற்சவ தினங்கள் இன்றும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

இந்தத் தலத்தில் தான் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாராயண பட்டர் அவர்களால் நாராயணீயம் என்னும் தெய்வீக நூல் இயற்றப்பட்டது. குருவாயூரப்பனை வழிபட்டு தன் வியாதியை போக்கிக் கொண்ட அவர் 1036 ஸ்லோகங்களில் குருவாயூரப்பன் முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் பாடி நாராயணீயத்தை முடித்தார் என்கிறது வரலாறு.. நரசிம்மாவதாரம் பற்றி அவர் பாடிய போது அதை விவரிக்க முடியாது திகைத்த நாராயண பட்டரின் முன் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து நரசிங்கம் கண் முன்னே தோன்றி அங்கும் இங்கும் நடமாடியது. அதைக் கண்டு அப்படியே பாடினார் பட்டர். இப்படி நாராயணீயத்தில் வரும் பல லீலைகள் பற்றிய பல அற்புதங்கள் உண்டு. ஒவ்வொரு சுலோகமாகப் பார்க்கும் போது, பட்டர் விக்ரஹத்தை நோக்கி, “நீ இப்படிச் செய்தாயாமே’ என்று கேள்வி கேட்பது போல இருக்கும். ஆமாம், அப்படித் தான் செய்தேன் என்று பிம்பம் அங்கீகரித்துத் தலை அசைத்ததாம்.  எல்லையற்ற மஹிமை கொண்டது இந்தத் தலம். அனுபவத்தாலேயே இதை உணரலாம். இங்கு பக்தர்கள் இன்று வரை அடைந்து வரும் உண்மை அனுபவங்கள் மிகவும் ஆச்சரியகரமானவை. எந்த நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கும் தலம் இது. காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் குருவாயூரப்பன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். ஹே! கலியுக வரதா! குருவாயூரப்பா,நின் பாதமே சரணம்! நன்றி வணக்கம்!

tags– குருவாயூர், ஆலயம் அறிவோம்,