WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,060
Date uploaded in London – – 29 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
14-6-2022 தேதியிட்ட மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை
உலகை நடுங்க வைத்த நாடு!
ச.நாகராஜன்
பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் ஒரு
கேள்வியைக் கேட்டனர் :
“அணுகுண்டினால் பாதிக்கப்படாமல், அணுகுண்டு போடப்படுவதிலிருந்து உலக
நாடுகள் தப்பிக்க வழி ஏதேனும் உண்டா?” என்பதே கேள்வி.
உண்டு என்றார் ஐன்ஸ்டீன். அனைவரும் பரபரப்புடனும் மிகுந்த ஆவலுடனும்,
‘அது என்ன, என்ன?’ என்று கேட்டனர்.
ஐன்ஸ்டீன் கூறினார்: ‘சமாதானம்’!
உலகை ஆட்டிய ஜெர்மனி
உலக வரலாற்றில் மாபெரும் போராகக் கருதப்படும் இரண்டாம் உலக மகா
யுத்தத்திற்கு காரணமான ஜெர்மனி மத்திய ஐரோப்பாவில் 1,37,847 சதுர மைல்
பரப்புடனும் 8.3 கோடி ஜனத்தொகையுடனும் உள்ள ஒரு குட்டி நாடு.
ஆனால் அது உலகையே ஆட்டியது என்னவோ உண்மை தான்!
வடக்கில் டென்மார்க், கிழக்கில் செக் ரிபப்ளிக் மற்றும் போலந்து, தெற்கில்
ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்ஸர்லாந்து, தென்மேற்கில் பிரான்ஸ் மற்றும்
லக்ஸம்பர்க், வடமேற்கில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றை
எல்லை நாடுகளைக் கொண்டது ஜெர்மனி.
வாருங்கள் ஜெர்மனிக்குள் நுழைவோம்.
ஃப்ராங்க்பர்ட் விமானநிலையம்
முதலில் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்தில் இறங்கியவுடன் அதுவே பார்க்க
வேண்டிய இடமாக அமைந்திருப்பது கண்டு வியப்படைவோம்.
ஆம், உலகின் மிக பிரம்மாண்டமான விமான நிலையமான இது ஆறரை கோடி
பயணிகளை வருடத்திற்கு ஈர்க்கும் அதிகப் போக்குவரத்தைக் கொண்ட
நிலையமும் கூட. இங்கு ஓய்வெடுக்க அறைகள் உண்டு. ஸ்பா உண்டு.
குளியலறை வசதி, இலவச சினிமா காட்சி, யோகா அறை என பல வசதிகள்
உண்டு. இங்கிருந்து இயங்கும் புகைவண்டி சேவை அலாதியான ஒன்று.
ஏராளமான கடைகள் உள்ள இந்த விமான நிலையத்தில் ஷாப்பிங் அனுபவமும்
தனி தான்!
ஃப்ராங்க்பர்ட்டிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெர்லின்.
பெர்லின் சுவர்
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பெர்லின் சுவரைப் பார்ப்பது
ஜெர்மனியின் வரலாற்றைப் பார்ப்பது போலாகும். சுமார் நான்கு மணி நேர டூர்
இதற்கென உண்டு. இந்த டூரின் போது சிதிலமடைந்த பெர்லின் சுவரைத்
தொட்டும் பார்க்க அனுமதி உண்டு. சுமார் 140 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த
கான்க்ரீட் சுவர் 12 அடி உயரமுள்ளது. இரு பகுதிகளாக அமைந்த இது 1961இல்
அமைக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்தது.
ஆனால் ஜெர்மானிய மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக
1989-1990இல் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒன்றுபட்ட ஜெர்மனி ஆனது.
ஜெர்மனியின் சமீபத்திய வரலாறு
இரு உலகப் போர்களில் தோல்வியுற்ற ஜெர்மனியின் வரலாற்றில் ஹிட்லரின்
பங்கு தனி இடத்தைப் பெறுகிறது. நாஜி கட்சியின் தலைவராக விளங்கிய
ஹிட்லர் யூதர்களை அறவே வெறுத்தார். சுமார் 65 லட்சம் யூதர்களை அவர்
நச்சு வாயு சேம்பரில் அடைத்தும் இதர வழிகளிலும் கொன்று குவித்தார்.
ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஹிட்லர் மின்னல் வேகத்
தாக்குதலில் போலந்தைப் பிடித்தார். ஆஸ்திரியா, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி,
இத்தாலி, நார்வே, நெதர்லாந்து என சுமார் 25க்கும் மேற்பட்ட நாடுகள்
மீது தாக்குதல் தொடுத்தார். அமெரிக்காவை நேரடியாகப்
போருக்கு அழைத்தார். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகளும்
ரஷியாவும் ஒருங்கிணைந்து அவரை எதிர்த்து போரை ஒரு முடிவுக்குக்
கொண்டு வந்தன. 1945 ஏப்ரல் 30ஆம் தேதி இனி நிச்சயம் தோல்வி தான்
என்பதை உணர்ந்த ஹிட்லர் தன் காதலியான இவா பிரானுடன் தற்கொலை
செய்து கொண்டார். சயனைடு மாத்திரையை விழுங்கியதோடு துப்பாக்கியால்
சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் சடலங்களை
உடனேயே எரிக்குமாறும் முன்னமேயே ஆணையிட்டிருந்தார்.
இதையெல்லாம் 96 வயது வரை வாழ்ந்த அவரது மெய்காப்பாளாரான மி
ஷ் மிகத் தெளிவுபட பின்னால் எடுத்துரைத்தார்.
லட்சோபலட்சம் பேரைக் கொன்று குவித்த ஹிட்லர் ‘அறம் வெல்லும் பாவம்
தோற்கும்’ என்ற முதுமொழிக்கிணங்க தற்கொலை செய்து கொண்டு இறக்கவே
ரஷியாவும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நேச நாடுகளும்
ஜெர்மனியைப் பிரித்தன. பெர்லின் சுவர் எழுப்பப்பட்டு, அது கிழக்கு
ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்தது.
1968இல் எழுந்த மாணவர் கிளர்ச்சி நாஜி கொள்கைகளை வன்மையாகக்
கண்டித்தது. 1989இல் சுவர் ஒருவழியாக இடிக்கப்பட ஜெர்மனி ஒருங்கிணைந்தது.
இந்த வரலாறை எல்லாம் பெர்லின் சுவரைச் சுற்றிக் காட்டும் வழிகாட்டிகள்
மூலம் அறியலாம்.
ஒரு சுவையான செய்தி, ஹிந்து நாகரிகம் பயன்படுத்தும் ஸ்வஸ்திகா
சின்னத்தை வலப்புறச் சுழற்சிக்குப் பதிலாக எதிர்புற சுழற்சியாக மாற்றியதோடு
அதை 45 டிகிரி சாய்த்து வேறு வைத்து ஹிட்லர் பயன்படுத்தினார் என்பதும்,
அது தைவீக ஸ்வஸ்திகாவிற்கு எதிரான அசுர ஸ்வஸ்திகாவாக கருதப்படும்
ஒன்று என்பதும் முதலில் வெற்றி தருவது போல அது காட்டினாலும் இறுதியில்
தோல்வியைத் தந்தது, அறம் வென்றது என்றும் அறநெறியாளர்களும் குறியீடு
வல்லுநர்களும் கூறுகின்றனர்.
ஹிட்லரின் கடைசி நாட்களைச் சித்தரிக்கும் 2004ஆம் ஆண்டு வெளிவந்த
படமான டவுன்ஃபால் மற்றும் 2018இல் வெளியான ‘தி ஆபரேஷன் ஃபைனல்’
படமும் பார்க்கத் தகுந்தவை. இரண்டாம் உலகப் போரைப் பற்றி இன்னும்
நூற்றுக் கணக்கில் திரைப்படங்கள் உண்டு!
லட்சக்கணக்கான யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி நச்சுவாயு
சேம்பரில் கொலை செய்த அடால்ப் எய்ச்மேன் போர் முடிந்த பிறகு
அர்ஜெண்டினாவிற்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாட் லட்சக்கணக்கான யூதர்களை
‘விரைவாக நச்சு வாயு சேம்பருக்குக் கொண்டு சென்று நச்சு வாயு
செலுத்திக் கொன்ற’ அவனைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சியை எடுத்தது.
அமெரிக்கா அவனைப் பிடித்த போதிலும் சிறையிலிருந்து தப்பிய எய்ச்மேன்
அர்ஜெண்டினாவில் மெர்சிடென்ஸ் பென்ஸ் தொழிற்சாலையில் ஒரு சாதாரண
போர்மெனாகப் பணி புரிந்து வாழ ஆரம்பித்தான். எய்ச்மேனின் சகோதரரான
ஆட்டோ என்பவர் அச்சு அசலாக எய்ச்மேன் போலவே இருப்பார். ஆகவே தான்
மொஸாட் தங்கள் கண்காணிப்பில் உள்ளது நிஜமான எய்ச்மேன் தானா
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இறுதியாக
1960ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அவனை மடக்கிப் பிடித்த மொஸாட் அவன் கண்களைக் கட்டி காரில் தூக்கிப் போட்டது. பின்னர் இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. ஜெருசலத்தில் உள்ள
பெரிய ஆடிட்டோரியத்தில் விசாரணை ஆரம்பித்தது. உலக மீடியாக்கள் எல்லாம்
அங்கு வரவழைக்கப்பட்டன. 15 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு 56 நாட்கள்
தொடர்ந்தது. 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியில் அவனுக்கு
மரணதண்டனை விதிக்கப்பட்டு 1962, ஜூன் முதல் தேதியன்று அவன்
தூக்கிலிடப்பட்டான்.
அவனை எப்படி இஸ்ரேல் அரசு பிடித்தது என்பதைச் சித்தரிக்கும் படம் தான்
ஆபரேஷன் ஃபைனல்!
உலகப்போர் மெமோரியல்
உலகப் போர் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தரும் உலகப் போர்
காட்சியகம் பெர்லினில் பார்க்கத் தகுந்த ஒன்று.
இனி மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று ஏற்பட்டால் அதற்குப் பின்னால்,
மக்கள் கற்கால மனிதர்கள் போல கையினாலும் கல்லினாலும் தான்
சண்டையிட நேரிடும் என்று பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியதை
நினைவில் கொண்டு இந்த உலகப்போர் மெமொரியலிலிருந்து அனைவரும்
செல்வது வழக்கம்.
உலகப் போர் சம்பந்தமானா இடங்கள் தவிர சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட
ஏராளமான பார்க்கத் தகுந்த மற்ற இடங்கள் ஜெர்மனியில் உள்ளன.
மாடர்ன் ஜெர்மனி என்று சொல்லப்படும் இன்றைய ஜெர்மனி தனது போர்க்கால
வரலாற்றை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து நவீன முறையில் அனைத்து
தொழில்நுட்பங்களையும் உள்வாங்கி முன்னேற ஆரம்பித்தது. ஏராளமான
புது கட்டிடங்கள் உருவாக ஆரம்பித்தன.
இன்றைய ஜெர்மனியில் உள்ளவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பெர்லினிலேயே டெஹ்லம் காட்சியகம், ஈஜிப்ஷியன் காட்சியம், நியூ நேஷனல்
காலரி உள்ளிட்ட பல காட்சியகங்கள் உண்டு.
டைர்பார்க்
பசுமையான 520 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள டைர்பார்க் பூங்கா அனைத்து
பயணிகளையும் பெர்லினில் கவரும் ஒன்று.
டைர்பார்க் மிருகக்காட்சிசாலையில் துருவக் கரடிகள் உள்ளிட்ட 650 வகையான மி
ருகங்கள் உண்டு. ஐரோப்பாவின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை இது.
இங்கு 8000 மிருகங்கள் உள்ளன.
திரைப்பட விழா
உலகின் கவனத்தை ஈர்க்கும் மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில்
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா அனைவரையும் கவரும் முக்கியமான
ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடக்கும் இதில் பதிவு
செய்யப்பட்ட சுமார் 400 திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.
பெர்லினில் உள்ள ஹை டெக் மியூஸியம், ஜெர்மனியில் திரைப்பட மற்றும்
தொலைக்காட்சித் தயாரிப்பு பற்றிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் ஒன்று.
ஜெர்மனி நகரங்கள்
ஜெர்மனியை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்து விட எண்ணம் கொண்டவர்கள்
மூனிச், ஹெய்டல்பெர்க், நேச நாடுகளின் விமானத் தாக்குதலுக்கு அதிகம்
உள்ளான ட்ரெஸ்டன், ஹாம்பர்க், கொலோன் உள்ளிட்ட ஏராளமான
இடங்களுக்குச் சென்று மகிழலாம்.
ஹெய்டல்பெர்க் ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று.
பழைமையான நகரமும் கூட. இங்குள்ள அரண்மனை மற்றும் மலையால்
சூழப்பட்டுள்ள நெக்கர் நதி உள்ளிட்டவை ரம்யமான இயற்கைக் காட்சிகளை
அளிப்பதால் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கின்றன. ஏராளமான
கவிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியுள்ள நகரம் இது.
ஹாம்பர்க் நகரம் ஜெர்மனியில் பெர்லினுக்கு அடுத்த பெரிய நகரம். சுமார்
2500 பாலங்கள் இங்கு உள்ளன. இவற்றில் எட்டு பாலங்கள் மிகப் பெரியவை.
புகழ் பெற்ற பல்கலைக் கழகம், 40 தியேட்டர்கள், 60 அருங்காட்சியகங்கள்
ஆகியவை உள்ள இந்த நகரம் இசைக் கலைஞர்களுக்குப் பிரியமான
ஒரு நகரமாகும்.
ஜெர்மனியின் சிறப்புகள்
ஜெர்மனியை பீர் நாடு என்று செல்லமாகச் சொல்வது உண்டு. இங்கு 5500
பிராண்டு பீர்கள் உள்ளன. மூனிச்சில் பீருக்கான திருவிழாவே நடக்கிறது.
இங்கு ஜெர்மானியர் கட்டைவிரலை நீட்டினால் ஒரு பீர் தாருங்கள் என்று
அர்த்தம். ஆள் காட்டி விரலைக் காட்டினால் இரண்டு பீர் தாருங்கள் என்று
அர்த்தம். அப்படி ஒரு பீர் மோகம் இங்கு உண்டு.
கால்பந்து விளையாட்டு மோகம் கொண்ட நாடு என்பதோடு நான்கு முறை
இது கால்பந்திற்கான உலகக் கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது.
நாடெங்கும் மொத்தமாக எண்ணிப் பார்த்தால் இங்கு 2100 அரண்மனைகள்
உள்ளன!
உலகெங்கிலுமிருந்து மாணவர்களை ஈர்க்கும் தரமான பல்கலைக் கழகங்கள்
மொத்தம் 380 இங்கு உள்ளன. இவை 17000 பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளன.
இத்துடன் உலகின் ஆகச் சிறந்த தரமான கார்களைத் தயாரிப்பதிலும் ஜெர்மனி
குறிப்பிடத் தகுந்த இடத்தை வகிக்கிறது.
ஆக ஜெர்மனியைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால் உடனே நினைவுக்கு வரும்
சொற்கள், பீர், கால்பந்து, அரண்மனைகள், பாலங்கள், உலகப் போர், கார்கள்,
இலவசக் கல்வி, கலைஞர்கள், காட்சியகங்கள் ….. என இப்படி சொல்லிக்
கொண்டே போகலாம்!
****
Tags- ஜெர்மனி, ஹாம்பர்க், பெர்லின்
–subham–