கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6 (Post No.4458)

Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-34

 

 

Post No. 4458

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இதற்கு முந்தைய ஐந்து பகுதிகளைப் படித்துவிட்டு இதையும் படிப்பது பொருள் விளங்க உதவும்.

எனது விமர்சனத்தை இறுதியில் கொடுத்துள்ளேன்.

 

ஸ்லோகம் 71: தேவர்களுக்கு ஒரு யுகம் என்பது 12,000 தேவ வருடங்கள்; அதாவது நாலு யுகங்கள்.

 

72.தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மனின் ஒரு நாள். இதே போல இரவும் ஆயிரம் யுகம்.

 

73.பிரம்மனுடைய பகல் புண்ணிய காலம்; இரவு சொப்பன காலம். ஆயிரம் யுகங்களுப் பின்னர் பிரம்மனின் ஆயுள் முடிகிறது.

74.பிரம்மா விழித்துக்கொண்டவுடன் பூர், புவ, சுவர் லோகங்களை மீண்டும் படைக்கிறார். ஏனெனில் தினப் பிரளயத்தில் அழிவது இந்த மூன்று உலகங்கள் மட்டும்தான். இதுவே சத், அசத் (நல்லது, கெட்டது).

75.பிரம்மாவின் மனதில் தோன்றிய ஆசை முதலில் ஆகாயத்தைப் படைக்கிறது; அதன் குணம் சப்தம் (ஒலி)

76.அந்த ஆகாயத்திலிருந்து நறுமணம் நிரம்பியதும், தூய்மையுமானதும், வலிமை நிரம்பியதாகவும் காற்று உண்டாகிறது. இதன் குணம் ஸ்பரிசம்; அதாவது தொடும் உணர்ச்சி.

 

  1. அந்த வாயு என்னும் காற்றிலிருந்து ஒளிமிகுந்த தேயு, அதாவது தீ உண்டாகிறது. அதன் குணம் உருவம் (ரூப). அது இருளைப் போக்கும்

 

78.தேயு எனப்படும் தீயிலிருந்து அப்பு எனப்படும் தண்ணீர் உண்டாகிறது. அதன் குணம் ருசி (சுவை). அதிலிருந்து பிருதுவி என்பப்படும் பூமி தோன்றுகிறது; அதன் குணம் (இயல்பு) வாசனை (கந்தம்).

இதுதான் தினப் பிரளயம் என்பது; அதாவது பிரம்மாவின் ஒரு நாள்

 

  1. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு தேவ யுகம் என்று சொல்லப்பட்டதல்லவா? அது போல 71 முறை நடந்தால் ஒரு மனுவின் அதிகாரம் முடிந்ததாகிவிடும்; அதைத்தான் மன்வந்தரம் என்கிறோம்.

 

80.இவ்வாறு அளவற்றதான மன்வந்தரங்களின் சிருஷ்டியும் சம்ஹாரமும் (படைப்பும் அழிப்பும்) பரம்பொருளின் விளையாட்டு போல நிகழ்கிறது’

 

  1. (முதல் யுகமான) கிருத யுகத்தில் தருமமும் சத்தியமும் நான்கு கால்களுடன் நிற்பதால் மனிதர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது.

82.மற்ற யுகங்களில் களவு, பொய், வஞ்சகம் ஆகியவற்றால், அறவழியில்லாத வகையில் சம்பாதிக்கப்பட்ட பொருள், கல்வி அறிவால், தர்மம் என்பது ஒவ்வொரு காலாக (பகுதியாகக் ) குறைகிறது.

 

83.கிருத யுகத்தில் மனிதனின் ஆயுள் 400 வருஷம். நோய் நொடிகள், துன்பம் இராது. அவர்கள நினைத்தது நடக்கும்; கிடைக்கும்; தவ வலிமையால் ஆயுளை அதிகரிக்கவும் இயலும்.இதற்கு அடுத்தடுத்த யுகங்களில் வயது நூறு நூறாகக் குறைந்து கொண்டே வரும்

 

84.மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், நினைத்ததை முடிக்கும் வல்லமையும், பிராமணர்களின் சாபங்களும் அனுக்கிரகங்களும் யுகத்திற்கேற்றவாறு பலன் தரும்

  1. .கிருத யுகத்தின் தர்மம் வேறாகவும் திரேதா யுகத்தின் தர்மம் வேறாகவும் துவாபர யுகத்தின் தர்மம் வேறாகவும் கலி யுகத்தின் தர்மம் வேறாகவும், யுகத்திற்குத் தக்கவாறு குறைவாக வரும்.

 

86.கிருத யுகத்துக்குத் தவமும், திரேதா யுகத்துக்கு ஆத்ம ஞானமும், துவாபர யுகத்துக்கு யக்ஞம் எனப்படும் வேள்வியும், கலியுகத்துக்கு தானம் எனப்படும் கொடுத்து உதவுதலும் முக்கிய தர்மமாக இருக்கும்

 

87.அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக,  தனது முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றிலிருந்து முறையே பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர வருணத்தாரைப் படைத்து அவரவர்களுக்கு உரிய தொழில்களை தனித் தனியாக வகுத்தார்.

 

88.பிராமணர்களுக்கு ஆறு தொழில்களைக் கொடுத்தார்; வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்

 

89.க்ஷத்ரியர்களுக்கு வேதம் ஓதுதல், குடிமக்களைக் காத்தல், தானம் கொடுத்தல், வேள்விகள் இயற்றல் முதலிய கருமங்களைக் கொடுத்தார். அத்தோடு பாட்டு, கூத்து, பெண்கள் ஆகியவற்றில் ஈடுபடவும் தடை போட்டார் (கேட்பதற்கோ காண்பதற்கோ, ஆதரவு தருவதற்கோ தடை இலை. தானே அந்தத் தொழிகளில் ஈடுபடுவதற்கே தடை)

 

90.வஸ்யர்களுக்குப் பசுவைக் காத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பூமியிலுண்டான இரத்தினம், நெல் தானியங்களில் வியாபாரம் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

 

 

  1. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்யும் தொழிலை ஏற்படுத்தினார்.

xxxx

 

எனது கருத்து

 

மனு நீதி நூலைக் குறை கூறுவோர் அதிலுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்பதானால்தான் அதைக் குறை கூற  முடியும். மனு தன்னுடைய நீதி த்ருஷத் வதி– சரஸ்வதி நதி தீரத்துக்கு இடைப்பட்ட நீதிகள் என்று சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? அதாவது வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்குவது இதுதான்

 

மனு, கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மக்களின் வயது என்றும் ஒவ்வொரு யுகத்திலும் 100 வயது வீதம் குறைந்து கொண்டே வரும் என்றும் சொல்கிறார். மற்ற விஷயங்களில் மனுவின் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வோர் இது பற்றி இயம்புவது யாதோ?

 

குறை கூறுவோரை ஒதுக்கிவிட்டு நாம் இதை (400 ஆண்டுகள் மக்களின் வயது) ஆராயப் புகுந்தால், இதுவரை அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் சண்டை சச்சரவு, நோய் நொடியில்லாத அமைதியான வாழ்க்கை வாழ்வோர் 120 முதல் 150 ஆண்டுவரை வாழ்ந்ததற்கு சான்று உண்டு.

 

மனு தர்மமோ, பகவத் கீதையோ வர்ண ஆஸ்ரமம் பற்றிப் பேசும்போது அது தொழில் முறைப் பகுப்பு என்றே சொல்கின்றன. ஆயினும்  புரோகிதர் மகன் புரோகிதனாகவும் மன்னர் மகன் மன்னனாகவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஐயர் மகன், ஐயராக இருப்பது தப்பு என்று சொல்லுவோர்,  உ லகம் முழுதும் மன்னன் மகன் மன்னனாக — பரம்பரைத் தொழிலாக — இருந்ததை ஏன் குறை கூறுவதே இல்லை. அது சரி என்றால் புரோகிதர் மகன் புரோகிதனாக இருந்ததைப் பற்றிக் கவலைப் படவோ ஆதங்கப்படவோ உரிமை இல்லை.

 

 

இப்போது அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகவும், சினிமா நடிகர் மகன் சினிமா நடிகராகவும் இருப்பதை ஏன் குறை கூறுவதில்லை; ஒவ்வொரு து றையிலும் இப்படிப் பார்க்கிறோம். ஆகவே, அந்தக் காலத்தில் இப்படி இருந்ததில் என்ன வியப்பு? என்ன குறை?

 

யாரும் யாரையும் முன்னேற விட முடியாமல் தடுத்தால் தவறு. அப்படி ஒரு சான்றும் இல்லாமல் பிராமணர்களும் கூட மன்னனாகவும், மன்னர்களும் கூட பிராமணனாகவும் மாறியதை புராண, இதிஹாசங்களில் படிக்கிறோம்.

 

பெரும்பாலும் குலத்தொழில் முறைதான் இருந்தது. தமிழ் மன்னரின் மகன்தான் தமிழ் மன்னரானான். பாமரன் ஆகவில்லை! இதில் ஏன் குறை காண்பது இல்லை?

பிராமணர்- சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள் மட்டுமே இருப்பதாக திராவிட அரசியல்வாதிகள் கிளப்பியதும் பொய்; ஆரியர்- திராவிடர் என்ற இரண்டே இனங்கள்தான் உண்டு என்று வெளிநாட்டினர் பரப்பியதும் பொய்; பிறப்பு மட்டுமே ஜாதியை நிர்மாணிக்கும் என்பதும் தவறு என்பதை புராண, இதிஹாசங்களைப் படிப்போருக்கு நன்கு விளங்கும்.

நான் ஐந்தாம் பகுதியில் சொன்னது போலவே வெவ்வேறு காலக் கணக்கீடு உள்ள பல வெளி உலகங்கள் இருப்பதும் மேற்கூறிய ஸ்லோகங்கள் மூலம் தெரிகிறது.

யுகங்களைப் பற்றிய மநுவின் வர்ணனை மிகவும் அழகானது. கிருதயுகத்தை ஒரு பசுமாடாக கற்பனை செய்தால் அதற்கு 4 கால்கள்; அடுத்தது த்ரேதா யுகம் அதற்கு மூன்றே கால்கள்; அடுத்தது த்வாபர யுகம் அதற்கு இரண்டே கால்கள்; அடுத்தது கலியுகம்; அதற்கு ஒரே கால்; நாம் வாழும் காலம்!

 

யுகங்கள் இறங்கு வரிசையில் பெயர் இடப்பட்டதும் இந்த பசு அல்லது ஒரு டேபிள் (Table or Chair) என்ற கற்பனையில்தான் போலும்! த்ரே=3, த்வா=2; பின்னர் கலியுகம்.

 

நான்கு வருணத்தாரும் உண்டான விதம் ரிக் வேதத்தில் புருஷ சூக்த துதியில் (10-90) வருகிறது. அருமையான கற்பனை; பிராமணன் வாயினால் பிழைப்பதால் (வேதம் ஓதி) முகத்திலிருந்து வந்தான் என்றும் போர்வீரன் தோள் பலத்தால் பிழைப்பதால் தோளிலிருந்து க்ஷத்ரியன் வந்தான் என்றும் உழுதும் வியாபாரம் செய்தும் பிழைப்பதால் வைஸ்யன் தொடையில் இருந்து வந்தான் என்றும் உடல் உழைப்பால் பிழைப்பதால் சூத்திரன் காலில் இருந்து வந்தான் என்றும் சொல்லும்; இந்த உடலில் எந்த உறுப்பு இல்லாவிடிலும் அது மனிதன் இல்லை. அது போல சமுதாயத்தில் இந்த நான்கு உறுப்புகள் இல்லாவிடில் அது சமுதாயம் இல்லை. இன்றும் கூட இந்த நான்கு தொழில்கள்தான் உலகின் மிகப்பெரிய தொழில்கள்: கல்வி; படைகள், வணிகம், உடலுழைப்பு வேலைகள்.

2600-க்கும் மேலான பாடல்கள் அடங்கிய மனுநீதியில் இப்போதுதான் 91 ஸ்லோகங்களை முடித்துள்ளோம்.

 

தொடரும்—————-

 

Leave a comment

3 Comments

  1. உலகின் எல்லா பழைய நாகரீகங்களிலும் ஆதி நாட்களில் மனிதனின் ஆயுள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவே குறிப்பிடப்படுகின்றன. இதை பாபிலோனியா, கிரேக்க, ரோமானிய. சீன நாட்டு பண்டைய (புராண) நூல்களில் காணலாம். சுமேரியாவின் அரச வம்சாவளிப் பட்டியலில் மன்னர்களின் வயது இவ்வாறே குறிக்கப்பட்டிருக்கிறது.

    இதை பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் தெளிவாகக் காணலாம். ஆதாம்-ஏவாளை அமரத்தன்மை வாய்ந்தவர்களாகவே கடவுள் படைத்தார். அவர்கள் கடவுள் கட்டளையை மீறியதால்தான் உலகில் மரணம் சம்பவித்தது என்பது அவர்கள் கொள்கை. [ Wages of sin is death.]

    பைபிளின் Genesis புத்தகப்படி, அவர்களின் முதல் பத்து குல மூதாதையர்களின் [ Patriarchs] வயது கீழ்வருமாறு:
    1 Adam 930 Genesis 5:4
    2 Seth 912 Genesis 5:8
    3 Enosh 905 Genesis 5:11
    4 Cainan 910 Genesis 5:14
    5 Mahalalel 895 Genesis 5:17
    6 Jared 962 Genesis 5:20
    7 Enoch 365 (translated) Genesis 5:23
    8 Methuselah 969 Genesis 5:27
    9 Lamech 777 Genesis 5:31
    10 Noah 950 Genesis 9.29

    நோவா காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, மனிதர்களின் ஆயுள் குறைந்துகொண்டே வந்தது. நோவாவுக்குப் பின்வந்த 10 மூதாதையர்களின் வயது கீழ்வருமாறு:

    11 Shem 600 Genesis 11:10–11
    12 Arphaxad 438 Genesis 11:12–13
    13 Shelah 433 Genesis 11:14–15
    14 Eber 464 Genesis 11:16–17
    15 Peleg 239 Genesis 11:18–19
    16 Reu 239 Genesis 11:20–21
    17 Serug 230 Genesis 11:22–23
    18 Nahor 148 Genesis 11:24–25
    19 Terah 205 Genesis 11:32
    20 Abraham 175 Genesis 25:7

    மோஸஸுக்கு வயது 120. அவர் காலத்திலேயே மனிதன் சராசரி வயது 70 என்று சொல்கிறார்:
    “The days of our lives are seventy years; and if by reason of strength they are eighty years, yet their boast is only labor and sorrow; for it is soon cut off, and we fly away” (Psalm 90:10).

    இப்படி உலகில் உள்ள மதப்புத்தகங்களை நுணுகி ஆராய்ந்துபார்த்தால் , நமது சாஸ்திரங்களின் உண்மை விளங்கும். வெள்ளைக்காரர்களுக்கு இது ஒத்துவராது- விருப்பு வெறுப்பின்றி ஆராயமாட்டார்கள்.
    பைபிளில் பல விஷயங்களைச் சேர்த்து குட்டை குழப்பியிருக்கிறார்கள். நமது விஷயம் அப்படியில்லை. வேதம், உபனிஷதம், ஸ்ம்ருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள், காவ்யங்கள் – என்று ஒவ்வொரு பிரிவும் ஒரு தனி விஷயத்தை விளக்குகிறது! மநு நீதி போன்ற தர்ம சாஸ்திரங்கள் இந்த விஷயங்களை சுருக்கித், தொகுத்துத் தருகின்றன.

  2. kps710

     /  December 4, 2017

    4TH OF DEC.,2017.

    THANKS A LOT FOR DETAILED INFORMATION.

    2017-12-04 18:05 GMT+05:30 Tamil and Vedas :

    > Tamil and Vedas posted: ” Written by London Swaminathan Date: 4
    > DECEMBER 2017 Time uploaded in London- 12-34 Post No. 4458 Pictures
    > shown here are taken from various sources such as Facebook friends, Books,
    > Google and newspapers; thanks. &”
    >

  3. Venugopal Krishnamoorthi

     /  December 5, 2017

    Lot of details….Arputham….Vazhka Valamudan.

Leave a comment