ஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)

Markandeya Painting by Raja Ravivarma from Wikipedia

 

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-21

 

 

Post No. 4522

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

 

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

 

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும்  — 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப்  பாடவைத்த கதை!

 

 

ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி)  சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

 

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

பாரதி பாடல்

 

 

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

 

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

 

வசையொ  ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

 

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

 

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே — அதாவது சுயநலம் இல்லாமல் — வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் – என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

 

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்– எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

–SUBHAM-

 

 

Leave a comment

1 Comment

  1. இதைப் படித்ததும் Ben Jonsonனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

    It is not growing like a tree
    In bulk doth make Man better be;
    Or standing long an oak, three hundred year,
    To fall a log at last, dry, bald, and sere:
    A lily of a day
    Is fairer far in May,
    Although it fall and die that night—
    It was the plant and flower of light.
    In small proportions we just beauties see;
    And in short measures life may perfect be.

Leave a comment