தமிழர்களின் பழக்க வழக்கங்கள்! (Post No.5315)

Written by S Nagarajan

Date: 13 August 2018

 

Time uploaded in London – 7-55 AM  (British Summer Time)

 

Post No. 5315

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க இலக்கியத்தில் காணப்படும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள்!

 

ச.நாகராஜன்

 

பழம் பெரும் இலக்கியமாக இலங்கும் சங்க இலக்கியம் தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகிறது.

 

இவற்றை பகுத்தறிவு நோக்கோடு பார்க்கக்கூடாது; அறிவியல் உரைகல்லில் உரைக்கக் கூடாது.

இவை தமிழர்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்; அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கியது.

சில அரிய வழக்குகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

 

குடவோலை எடுத்துப் பிரமாணம் செய்தல்

 

நுளைச்சியர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்குப் பரவுக்கடன் கொடுத்தல்

 

பார்ப்பார் தூது செல்லுதல்

 

மகளிர் சுவரில் கோடிட்டு நாள் எண்ணுதல்

 

மகளிர் பல்லி சகுனம் கேட்டல்

 

பிறை தொழுதல்

 

வேங்கை மலர் கொய்ய புலி புலி என்று கூவல்

 

சிறுமியர் அலவனாட்டுதல்

 

கிளி கடிதல்

 

 

வண்டலயர்தல்

 

சிற்றில் இழைத்துச் சிறு சோறடுதல்

 

ஓரையாடுதல்

 

மன்னர் கடகுக்காரரை அழைத்துப் படை காணுதல்

 

வீரர் போருக்குப் புறப்படுமுன் நடுகல்லைப் பூசித்தல்

 

நல்ல நிமித்தம் பார்த்தல்

 

வேளாப்பார்ப்பான் சங்கறுத்தல்

 

கொங்கர் மணியரை ஆர்த்து மறுகின் ஆடுதல்

 

மணமகளைப் புதல்வர் பெற்ற மகளிர் நால்வர் குளிப்பாட்டல்

 

இடையர் இடபத்தின் கழுத்தில் மூங்கில் குழாயில் உணவடைத்துக் கட்டி நிரை மேய்த்துச் செல்லல்

 

இறந்த வீரனுக்குரிய நடுகல் இடத்து அவன் பிடித்த வேல் முதலிய கருவிகளை ஊன்றியும் சார்த்தியும் வைத்தல்

உமணர் கழுதை மேல் உப்புப் பொதியை ஏற்றிச் செல்லல்

 

மேற்கண்டவை பாடல்களில் காணப்படும் செய்திகள்.

தமிழர் தம் பழம் இலக்கியங்களில் இப்படி அரிய செய்திகள் ஏராளம்  காணப்படுகின்றன.

 

மங்கையர் நெற்றியில் திலகம் இடும் பழக்கம் தொன்று தொட்டு பாரத நாடெங்கும் நிலவி வரும் பழக்கம்.

 

தமிழ் மங்கையரும் இதற்கு விலக்கல்ல. ஹிந்து மதத்தின் சிறப்புக்களில் இது ஒன்று. அடையாளங்களிலும் இது முக்கியமான ஒன்று.

 

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக அமையும் திருமுருகாற்றுப்படையில் வரும் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ்  திருநுதல் (திருமுருகாற்றுப்படை வரி 24)

 

நுதல் என்றால் நெற்றி. அது தேங்கமழ் திரு நுதல் ஆவது எப்போது? திலகம் இடும் போது!

 

நற்றிணையில் வரும் பாடல் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் (நற்றிணை 62 -6)

திருமுருகாற்றுப்படையில் காணப்படும் அதே வரி தான் இது.

 

கம்பன் சீதையை வர்ணிக்கும் போது வனிதையர் திலகம் என்கிறான். ஆக திலகம் என்பதை சிறப்புப் பட்டமாகப் பயன்படுத்த வழி கண்டவன் கம்பன்.

 

பின்னால் நமது நாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; நடிகையர் திலகம் சாவித்திரி என்று பல திலகங்களைக் காண முடிகிறது.

 

திலகம் திருநுதலின் அலங்காரம்; மங்கலப் பொருள்; அழகையும் சிறப்பையும், மங்கலத்தையும் கூட்டுவது.

ஆகவே அதை சிறந்தவர்களின் பட்டப் பெயரில் இடம் பெறச் செய்து விட்டோம்!

 

கணவன் உடனுறைந்து இருக்கும் காலத்தில் மட்டுமே மகளிர் பூச்சூட்டுவர் சங்க காலத்தில். அவன் வெளியிடம் சென்றாலோ பூவைச் சூட்ட மாட்டார்.

 

ஐங்குறுநூறு தரும் வரி இது:

போதவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (ஐங்குறுநூறு  496-5)

நற்றிணையில் வரும் வரிகள் இவை:

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்

சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய (நற்றிணை 42:8,9)

 

 

இதுமட்டுமன்றி மகளிர் காதில் பூவும் தளிரும் செருகிக் கொள்வர்.

இதை விளக்கும் பாடல் வரிகள் வருமாறு:-

 

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்  (திருமுருகாற்றுப்படை வரி 31)

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை வரி 207)

 

திருமணத்தின்போது மணமகன் மணமகள் கூந்தலில் மலர் சூட்டுவது வழக்கம். இதை ஐங்குறுநூறு கூறுகிறது.

நன்மனை வதுவை அயர இவள்

பின்னிருள் கூந்தல் மலர் அளிந்தோயே (ஐங்குறுநூறு 294 – 4,5)

 

கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள்.

 

இது பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

 

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் எம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே (புறம் 25; 12-14)

 

கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய (புறம் 261: 17-18)

 

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வரை (புறம் 280:1)

 

புலி புலி என்று கூவி அச்சுறுத்தினால் வேங்கை மரம் தாழும் என தமிழ் மகளிர் நம்பினர். அப்படிக் கூவி அது தாழும் போது மலர்களைக் கொய்வது அவர்கள் வழக்கம்.

 

இதை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன:

ஏறாது இட்ட ஏமம் பூசல் (குறுந்தொகை 241:5)

 

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்

புலிபுலி என்னும் பூசல் தோன்ற (அகநானூறு 48:6-7)

 

பொன்னேர் புதுமலர்  வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின் ….

… ஆகொள் வயப்புலி ஆகும் அஃதென  (அகநானூறு 52:3-6)

கருங்கால் ஏங்கை இருஞ்சினைப் பொங்கர்

நறும்பூக் கொய்யும் பூசல்  (மதுரைக்காஞ்சி 296-297)

 

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் ( மலைபடுகடாம் 305-306)

 

இப்படி நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களை விளக்கும் ஏராளமான பாடல்களை சங்க இலக்கியம் தருகிறது.

படித்தால் சங்க கால  வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்!

***

 

 

 

 

Leave a comment

Leave a comment