லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: