தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்! (Post No.3357)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 November 2016

 

Time uploaded in London:13-57

 

Post No.3357

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

 

கடல்.

அதைப் பார்த்து வியக்காத மனிதர் உண்டா, என்ன?

அதைப் பாடாத கவிஞர் உண்டா என்ன?

ஒவ்வொரு கவிஞரும் கடலை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும் விதமே சுவையானது.

 

 

திருவள்ளுவர், வால்மீகி, கம்பன், திருத்தக்க தேவர், சிறுவெண்தேரையார், பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நம் நாட்டுக் கவிஞர்களும் மேலை நாட்டுக் கவிஞர்களும் கடலை பல்வேறு பார்வைகளில் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

அனைத்துமே அருமை தான்!

இரு பாடல்களை இங்கு பார்ப்போம்.

சிறுவெண்தேரையார் என்ற சங்க காலப் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் 362ஆம் பாடலாக மலர்கிறது.

 

 

ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சான் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

 

    பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். பலி பெற்ற முரசுகள் போர்க்களப் பாசறையில் முழங்குகின்றன. விஜய வெண்கொடியை ஏந்தி பெரும் செயலைச் செய்யும் வீரர்கள் நாடெங்கும் பரந்துள்ளனர். அவர்களைப் பார்க்கவே கூற்றுவன் போல உள்ளது.

 

 

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத (மெடீரியலிஸம் குறித்த) ஒன்று. மருளும் தீர்ந்தது. மயக்கமும் ஒழிந்தது.

தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப

 

 

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அவன் வளம் கொழிக்கும் நிலங்களைக் கொடுத்தான். சோறு கொடுத்தான். விலையே மதிக்க முடியாத நல் பரிசுகளை அளித்தான். வெள்ளை எலும்புகள் சிதறிக் கிடக்க, வன் வாய் உள்ள காக்கை மற்றும் ஆந்தைகள் ஆகியவை இருக்கும் பகலிலும் நிரம்பியுள்ள காட்டில் உள்ள அவனது வீடு பேச்சுச் சத்தம் நிறைந்த சுற்றத்தாரால் நிரம்பி உள்ளது. ஆகவே இடம் சிறிது தான் இருக்கிறது என்று பயந்து அங்கிருந்து தன் உடலுடன் கிளம்பி பெரும் வீரர்கள் உள்ள நாட்டை நோக்கிச் சண்டையிட அவன் விரும்பிக் கிளம்புகிறான்.

 

   இந்தப் பாடலில் கடலை உவமையாகச் சொல்ல வருகிறார் கவிஞர். தலைவன் கையினால் நீர் சொரிந்து தானம் வழங்க அந்த நீர் கடல் எனப் பெருகிற்றாம்!

 

கடலைத் தானத்தால் கொடுத்த நீர் பெருக்கிற்கு சங்கப் புலவர் இப்படி ஒப்பிட்டார் என்றால் இன்னொரு புலவர் துக்கத்தால் பெருகிய நீருக்கு கடலை ஒப்பிடுகிறார்.

 

இரு வேறு பார்வைகள்; ஆனால் கடல் ஒன்று தான்!

 

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக் சிந்தாமணியில் வரும் பாடலைப் பார்ப்போம். பதுமையார் இலம்பகத்தில் அழகியான பதுமைக்கு அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது:

 

“பிரிந்தவர்க்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடுகடல் வெள்ளம் ஆற்றா

முரிந்த நல் பிறவி மேனாள் முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்து அழுவதற்குப் பாவாய் அடியிட்டவாறு கண்டாய்!

                          (சீவக சிந்தாமணி பாடல் எண் 1391)

 

 

பேதுற்று – வருத்தமடைந்து

தொடுகடல் – தோண்டப்பட்ட கடல்

ஆற்றா – அள்விடமுடியாது

முரிந்த –  கெட்ட

 

பாடலின் பொருள் :

 

பிரிந்து சென்ற கணவர்களை நினைத்து வருந்தி அழுதவர்கள் விட்ட கண்ணீரைக் கணக்கெடுத்துப் பார்த்தால் விண்ணைத் தொடவிருந்த கடல் நீரும் அதற்கு உவமை சொல்லப் பொருந்தாது. இழைமணி அணிந்தவளே! இன்னும் கேட்பாய்! முற்பிறவியில் அப்படி நாம் அழுது சிந்திய கண்ணீர்ரே, இப்பிறவியில் நாம் அப்படி வருந்தி அழுவதற்கு அடிக்கல் இட்டது போல அமைகிறது என்பதை அறிவாயாக!

 

   ஒவ்வொரு பிறவியிலும் பிரிந்த கணவனை எண்ணி அழுத கண்ணீர் வெள்ளம் கடலை விடப் பெரியது எனச் சொல்லி திருத்தக்க தேவர் கடல் நீரை கண்ணீர் வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார்.

 

   அத்தனை பிறவிகள்! அத்தனை கணவர்கள்! அத்தனை பிரிவுகள்! அத்தனை ஆற்ற ஓண்ணா அழுகை ஓலம்!

 

    கடலைக் கண்டவுடன் பிறவிகளின் எண்ண முடியாத் தொடர்ச்சியும் அதில் பிரிவின் வேதனையும் அதனால் விளைந்த கண்ணீரும் கவிஞருக்கு நினைவில் வருகிறது; கவிதை மலர்கிறது.

 

பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவரும்.

பிற ஆழி நீந்தல் அரிது என்ற அவர் யாருக்குப் பிற ஆழி நீந்த முடியாத ஒன்று என்பதையும் விளக்கமுறச் சொல்கிறார்.

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தாருக்கு அல்லால் — பிற ஆழி நீந்தல் அரிது.

 

 

அற ஆழி என்பதை தர்ம சக்கரம் என்று விளக்குகிறார் பரிமேலழகர்.

தர்ம சக்கரம் ஏந்திய அறமுடைய இறைவனின் அடி சேர்ந்தவர்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் முடியாது..

 

கடலை மட்டும் எடுத்துக் கொண்டு உலக இலக்கியங்களை அலச ஆரம்பித்தால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான சுவையான பாடல்கள் உள்ளன.

********

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: