அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)

Written by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-07 am

 

Post No.3415

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு மகன், அவனது தந்தையின் நல்ல குணங்களை பின்பற்றவேண்டும். மகன் என்பவன், தந்தையின் மறு அச்சு என்று சம்ஸ்கிருத  நூல்கள், கூறுகின்றன. பிரம்மாவுக்கு எப்படி அத்ரி மகரிஷி நல்ல புத்திரனாக இருந்தாரோ, சந்திரன் எப்படி அத்ரிக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ , புதன் எப்படி சந்திரனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ, புரூருவசு மன்னன் எப்படி புதனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ அப்படி ஆயுஸ் என்ற புதல்வன் அவன் தந்தைக்கேற்ற மகனாகப் பிறந்தான்.

பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூருவஸ் – என்று அழகாக ஐந்து தலைமுறைகளை அடுக்குகிறான் காளிதாசன்.

அமர முனி: இவ அத்ரி:ப்ரம்மண: அத்ரே: இவ இந்து:புத: இவ சசினாம்சோ: போதனஸ்ய ஏவ தேவ: பவ : பிது:அனுஸ்த்ரூப: த்வம்

குணை: லோக காந்தை: அதிசயினி சமாப்தா வம்சஏவாசிஷஸ்தே

–விக்ரமோர்வசீயம் 5-21

ரகுவம்சம்

 

ரகு வம்சத்திலும் மகன்கள் பற்றிய அழகிய பாடல்கள் வருகின்றன:-

அத நயன சமுத்தம் ஜ்யோத்ரத்ரேரிவ த்யௌ:

சுரசரிதிவ தேஜோ வன்னிநிஷ்டயூதமைசம்

நரபதி குல மூர்த்யை கர்பமாதத்த ராக்ஞோ

குருபிரபிநிவிஷ்டம் லோகபாலானுபாவ:

–ரகுவம்சம் 2-75

 

பொருள்:

பிறகு ஆகாசம், அத்ரி மகரிஷியின் கண்களிலிருந்து எழுந்த ஒளியாகிய சந்திரனை தரித்தது போலும், கங்கா நதி அக்னி தேவனால் கொடுக்கப்பட்ட பரமசிவனுடைய தேஜசாகிய சுப்ரமண்யனை (தரித்தது) போலும், அரசியான சுதக்ஷிணை ராஜகுலத் தின் க்ஷேமத்தின் பொருட்டு அதிகமான லோகபாலகர்ளின் அம்சங்களினால் பிரவேசிக்கப்பட்ட கர்ப்பத்தைத் தரித்தாள்.

 

லோகபாலகர்களின் அம்சம்: இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எண்மர். இவர்களுடைய சக்தி அரசனிடம் பிரவேசிப்பதாக மனு கூறுகிறார். தமிழ் இலக்கியமும் மன்னர்களை இந்திரன் என்றும், அக்கினி என்றும், வாயு என்றும், எதிரிகளுக்கு எமன் என்றும் புகழ்கின்றன.

 

அத்ரியின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை திக் தேவதைகள் தாங்கவே அது சந்திரனாக மாஇறியது.

 

பரமசிவனுடைய கண்களிலிருந்து விழுந்த ஆறு தீபொறிகளை கங்கை தாங்கவே அது சுப்பிரமணியனாக உருவாகியது என்பது புராணச் செய்திகள்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும் மகன் தந்தைக்குள்ள உறவைப் பற்றி பேசுகிறார்:

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (குறள் 70)

 

அதாவது ஒரு மகன் அவனுடைய தந்தைக்கு எப்படி நன்றி செலுத்துவது? இப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்னென்ன நோன்புகளைக் கடைப்பிடித்தானோ?

 

ஒரு இந்துவானவன் நல்ல பிள்ளை கிடைக்க கடவுளை வேண்டுவான். மகன், வாழ்நாள் முடியும்வரை தந்தைக்கு சாப்பாடு போட வேண்டும், கை கால் பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் வள்ளூவன் சொல்லவில்லை. அவன் தந்தையை விட அறிவாளியாகவும், தந்தையைப் போல குணவானாகவும் இருப்பதே பெரிய கைம்மாறு! இதனால்தான் காளிதாசனும் பிரம்மா முதல் ஐந்து தலைமுறைகளைப் புகழ்ந்து அப்படிக் குணவானாக இருந்தான் அந்தப் பிள்ளை என்கிறான்.

 

ஏனைய இடங்களில் வள்ளுவன் கூறும் கருத்துகளும் சிறப்புடைத்து. பெற்றபோது இருந்த இன்பத்தைவிட, ‘உன் மகன் அறிஞன்’ என்று சொல்லும்போது தாயார் கூடுதலாக மகிழ்வாளாம் (குறள் 69). ஒரு தந்தையினுடைய கடமை, பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து அவனை வகுப்பில் முதல் மாணவனாகக் கொண்டுவரவேண்டும் என்றும் வள்ளுவன் வலியுறுத்துவான்.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் (குறள் 67)

ஒரு மகனுக்கு தந்தை செய்யக்கூடிய நன்மை யாதெனில் கற்றோர் உள்ள சபையில் தன் மகன் அறிவாளி என்று புகழப்படும் அளவுக்குக் கல்வியை அளிப்பதாகும்.

 

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

 

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

 

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

 

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

 

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: