Written by S NAGARAJAN
Date: 13 January 2017
Time uploaded in London:- 5-12 am
Post No.3539
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 19
இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 9,13,15,18 ஆம் பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..
பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5
by ச.நாகராஜன்
பரிபாடலில் ஒன்பதாம் பாடல்
பரிபாடலின் ஒன்பதாம் பாடல் 85 அடிகளைக் கொண்டுள்ளது. குன்றம்பூதனார் என்ற புலவர் பாடிய இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் இசை அமைத்துள்ளார். குன்றம்பூதனார் முருகனைப் பற்றி இரு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் சுவை பயப்பவை. வள்ளிக்கும் தேவசேனைக்கும் நடந்த மோதலை சுவைபட இவர் விவரிக்கும் பாங்கு ப்டித்தால் இன்பத்தைத் தரும்.
நான்மறை விரித்துநல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் (வரிகள் 12,13)
என்ற வரிகளில் நான்மறையை ஓதி அதை விளக்கும் நாவன்மை படைத்த புலவர்க்ளே, கேளுங்கள் என்று புலவர் அழைத்து காமத்தின் காதல் காமம் சிறந்தது என்றும் அதிலும் சிறந்தது காதலர் இருவரும் மனமொத்து விரும்பும் புணர்ச்சி என்றும் விளக்குகிறார். பிறகு முருகன், வள்ளி, தேவசேனை கதை விளக்கப்படுகிறது.
பரிபாடலில் பதிமூன்றாம் பாடல்
பரிபாடலின் பதிமூன்றாம் பாடல் 64 அடிகளைக் கொண்டுள்ளது. நல்லெழுதியார் என்ற புலவர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். இதற்கு இசை அமைத்தவர் யர்ர் என்று தெரியவில்லை.
திருமாலைப் பலவாறாகப் புகழும் அருமையான பாடல் இது.
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை
ஏவல் இன் முது மொழி கூறும் (வரி 40)
சேவல் ஓங்கு உய்ர் கொடிச் செல்வ நல் புகழவை கார் ம்லர்ப் பூவை கடலை இருளமணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் அவை நான்கு உறழும் அருள் செறல் வயின் மொழி (வரி 45)
என்ற வரிகளில் முதுமொழி என்றும் வாய்மொழி என்றும் வேதம் கூறப்படுகிறது.
மேற்கூறிய வரிகளில் பாம்புக்குப் பகைவனான விரிந்த சிறகுகளைக் கொண்ட கருடனைக் கொடியெனக் கொண்ட (படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட) கடவுள் (கோடாச் செல்வனை) ஏவல் இன்றி தானாகவே முதுமொழியான வேதத்தை ஓதும் (ஏவல் இன் முதுமொழி கூறும்) ஓங்கு உயர் கொடியான கருடக் கொடியினை உடைய கடவுள் (சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ) என்ற பொருளை பெறலாம்
பின்னர் திருமாலை வர்ணிக்கும் வரிகளில் வலம்புரி வாய்மொழி என மறுபடியும் முதுமொழி என வேதம் கூறப்படுகிறது. அடுத்து (56ஆம் வரியில்) ‘வேள்வி’ என்ற வார்த்தையால் மறுபடியும் சடங்குகள் குறிப்பிடப்படுகிறது.
பரிபாடலில் பதினைந்தாம் பாடல்
பரிபாடலின் பதினைந்தாம் பாடல் 66 அடிகளைக் கொண்டுள்ளது இளம் பெரு வழுதியார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். அழகர்கோவில் என்று இன்று அழைக்கப்படும் மாலிருஞ்சோலை குன்றம் பற்றிப் பாடல் புகழ்கிறது. திருமாலின் பெருமையை ஓங்கி உயர்த்திச் சொல்கிறது.
.நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை இருங்குன்றத்து அடி உறை இயைக என பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே (வரிகள் 63 முதல் 66)
என்று பாடல் இப்படி முடியும் போது.சிறப்பான பலன்களைத் தரும் சீரான அழகிய வேதம் என்ற பொருளில் (நலம் பூரீஇ அம் சீர் நாம வாய் மொழி) என வேதம் புகழப்படுகிறது திருமாலையும் பலதேவனையும் தொழுது பாடல் முடிகிறது.
பரிபாடலில் பதினெட்டாம் பாடல்
பரிபாடலின் பதினெட்டாம் பாடல் 56 அடிகளைக் கொண்டுள்ளது குன்றம்பூதனார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இப்பாடலில், இமயம் நிகர் குன்றமான (நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து) திருப்பரங்குன்றத்தையும் அதில் உறையும் முருகனையும் வாயார மனதாரப் புகழ்ந்து போற்றித் துதிக்கிறார் புலவர்.
இதில்
“சுருதியும் பூவும் சுடரும் கூடி” (வரி 52)
என்று பாடி, வேதம், மலர்கள், சுடர் ஆகியவையுடன் கூடிய முருகனை சுற்றமொடு பிரியாது திருப்பரங்குன்றத்தில் இருந்துவரும் வரத்தை வேண்டி பாடலை முடிக்கிறார் மாபெரும் முருக பக்தரான குன்றம்பூதனார்.
இப்படி தொட்ட இடம் தோறும் பக்தி மணம் கமழும் பரிபாடல் தமிழுக்குச் சூட்டப்பட்ட மணியாரம். சங்க காலத்தில் அந்தணரும் வேதமும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததற்கு பரிபாடலின் பாடல்கள் ஒரு சிறந்த சான்று என்பதில் ஐயமில்லை!
அடுத்து ‘பரிபாடல் திரட்டு’ நூலுக்குள் நுழைவோமா?
-தொடரும்.
You must be logged in to post a comment.