பிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவனும் வால்டேரும் (Post No.4620)

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  11-09 am

 

 

 

Post No. 4620

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

எல்லா உயிர்களும் பிறவியில் சமமாகவே இருக்கின்றன; வேற்றுமை என்பதே இல்லை; குழந்தையும் தெய்வமும் ஒன்று. பின்னர் எப்படி ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லுகிறோம்? அவரவர் செய்கையினால் இந்த வேறுபாடு தோன்றுகிறது. இதை வான் புகழ் வள்ளுவனும், பிரெஞ்சு தத்துவ அறிஞர் வால்டேரும், பகவத் கீதையின் கண்ண பிரானும், கம்பனும் அமெரிக்க  அரசியல் சாசனத்தில் ஜெப்பெர்சனும் சொல்லுகின்றனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப் பேச்சு வசன ங்களில் இதையும் சேர்த்துக் கொண்டனர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் குறள் 972

 

பொருள்

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

கி.வா. ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் கம்பனும் இதையே சொல்லுவதை எடுத்துக் காட்டுகிறார்:

 

இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

–வாலி வதைப் படலம் 115)

 

பகவத் கீதையில் கண்ணபிரானும் (4-13) சொல்கிறார்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் –4-13

பொருள்

 

என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறை உண்டாக்கப்பட்டது; அதை நான் உருவாக்கினாலும், என்னை மாறுபாடில்லாதவன் என்பதை அறிந்துகொள்.

 

இதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பெரிய தத்துவ அறிஞருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையிலும் இது ஜாதி அடிப்படையிலான பிரிவினை அல்ல, குணங்களின் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே என்று காட்டியுள்ளார்.

 

 

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதைப் பேருரையில் இதை இன்னும் நன்கு விளக்குகிறார்:–

 

“குண பேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ குணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன்; சத்வ குணமும் சிறிது ரஜோ குணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோ குணம் பெரும்பகுதியும் சிறிது சத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைஸ்யன். தமோ குணம் பெரிதும், சிறிது ரஜோ குணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன்.

 

சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோ குணம் சிவப்பானது. தமோ குணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை; க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்து இருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகள் அல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆனால் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்ரியர் இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணர் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது”.

அருமையான விளக்கம்!

xxxx

பிரான்ஸ் நாட்டின் அறிஞர் வால்டேர், “மனிதர்கள் அனைவரும் சமம் ஆனவர்களே; குணங்களினால்தான் வேறுபடுகிறார்கள்” – என்றார்.

 

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

xxx

 

அமெரிக்க அரசியல் சட்டத்தில் தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதிய வாசகங்களில் எல்லோரும் படைப்பில் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் – என்று எழுதினார். பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரூஸோவும் இதை மொழிந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பிற்காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. சுதந்திரம்- சமத்துவம் – சஹோதரத்துவம் – என்ற கோஷம்/ கொள்கை விண்ணைப் பிளந்தது.

 

“All men are created equal”

 

 

xxx

 

முகமே மனத்தின் கண்ணாடி! வள்ளுவனும் சிஸரோவும்

 

ஒருவனுடைய முக பாவங்களை வைத்து அவன் மனக் கருத்தை அறிய முடியும். இதை வள்ளுவன் சொற்களில் வடித்தான். பரதமுனி என்ற முனிவர் நாட்டியக் கலையில் இதைப் புகுத்தி முக பாவங்களிலேயே நவரஸங்களையும் காட்டும் அரிய பரத நாட்டியக் கலையை உலகிற்கு அளித்தார்; வள்ளுவன் சொன்ன கருத்துக்களை ஷேக்ஸ்பியர், ரோமானிய அறிஞரான சிஸரோ போன்ற பலரிடத்தில் காண்கையில் பெரியோர்களின் சிந்தனைப் போக்கு ஒரே மாதிரிதான் என்ற கருத்து உறுதிப் படுகிறது.

 

வள்ளுவன் சொன்னான்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – 706

 

பொருள்

ஒருவனுடை உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல உள்ளக் கருத்துக்களை முகமானது பிரதிபலிக்கும்.

இந்த உரை பெரும்பாலான நூல்களில் காணப்படும்; அது சரியன்று.

 

பளிங்கு என்பது ஸ்படிகம்; ஆங்கிலத்தில் கிறிஸ்டல் CRYSTAL   என்று சொல்லுவர். அதன் தன்மை என்னவென்றால் பக்கத்திலுள்ள பொருட்களின் நிறத்தை அப்படியே அது எடுத்துக் கொள்ளும்– சிவப்பு நிற பொருளின் அருகே வைத்தால் அதுவும் அப்படியே சிவப்பாகிவிடும். இப்படி ஒருவன் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஏற்ப முகத்தின் பாவமோ நிறமோ மாறும். இதுவே சரியான உரை.

 

கி. வா ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் கருத்தை எடுத்து காட்டி அதற்குச் சமமான பாடல்களையும் பிற பாடல்களையும் காட்டி இருக்கிறார். அது பளிங்கு என்பது CRYSTAL ஸ்படிகம் என்பதை உறுதிப் படுத்தும்

 

ஈர்ந்த நுண்பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்

பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்

ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது

 

பம்பைப் படலம், கம்ப ராமாயணம்

 

முகம் காட்டும் உணர்வு பற்றி அகம், புறத்தில் உள்ளது.

முன்னம் காட்டி முகத்தின் உரையா- அகம்; 5-19

 

முன்னம் முகத்தின் உணர்ந்தவர் —  புறம் 3; 250

 

இது தவிர நான்மணிக்கடிகை, பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் வரும் மேற்கோள்களையும் கி. வா.ஜ. வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும்.

 

ஷேக்ஸ்பியரும் இக்கருத்தை ஹாம்லெட் நாடகத்தில் சொல்லுவார்.

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

xxx

 

 

ஆத்மாவின் சித்திரமே முகத்தின் தோற்றம் – என்று ரோமானிய அறிஞர் சிஸரோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்.

 

மனத்தின் கண்ணாடி முகம்; கண்கள் குறிப்பை உணர்த்தும் அவயம்  என்றும் சிஸரோ சொன்னார்.

 

 

“The countenance is the portrait of the soul”- Cicero

 

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”- Cicero

 

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தமிழ்ப் பழமொழியும் பல மொழிகளில் உள்ளது.

 

‘Face is the index of the Mind’-  English proverb

 

 

 

 

ஒன்றே போல் சிந்திப்பர் சான்றோர் (Great Men Think Alike)- என்பது உலக வழக்கு!!

 

TAGS: — சிஸரோ, வால்டேர், பளிங்கு முகம், மனம் பிறப்பொக்கும், எல்லா உயிரும், வள்ளுவன்

 

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: