DATE – 11 FEBRUARY 2018
Time uploaded in London- 6-16 am
Written by S NAGARAJAN
Post No. 4726
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஆறாவது உரை
- கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழியும் அபாயம்! ச.நாகராஜன்
உலகில் உள்ள கடல் மட்டம் உயராமல் இருப்பதற்கான காரணம் அண்டார்டிகாவில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளே. இந்த பிரம்மாண்டமான ஐஸ்பாறைகள் உருகாமல் இருப்பதாலேயே கடல் மட்டம் ஒருஅளவுக்குள் கட்டுப்பட்டு இருக்கிறது. கடலோர நகரங்கள் கடல்நீர் மட்டம் உயர்ந்து நீரில் மூழ்காமல் இருக்க இந்த அற்புதமான் ஐஸ்பாறைகளே காரணம்!
இன்று விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் லார்ஸன் சி என்ற இடத்தில் ஏற்படும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளின் நிலையைக் கூர்ந்து கவனித்துவருகின்றனர். லார்ஸன் சி என்பதுஸ்காட்லாந்தை விட பரப்பளவில் சிறியது. அங்குள்ள பிரம்மாண்டமான பனிப் படலத்தில் ஒரு விரிசல் சிறிதாக ஏற்பட்டது.
இன்று அது 70 மைல் நீள விரிசலாக ஆகியதோடு 300 அடி அகலமாக ஆகி விட்டது.
இது பெரிதானால் மிக பிரம்மாண்டமான விளைவு ஏற்படும். முதலில் 2015இல் 20 மைல் நீளமே இருந்த விரிசல் 2016இல் இன்னும் 15 மைல் அதிகமானது.
இப்போதோ பிரம்மாண்டமான பிளவாக 70 மைல் நீளத்திற்கு விரிந்து விட்டது. இதனால் நீர் மட்டம் உயரும். அண்டார்டிகாவில் இப்படி ஒருபெரிய பரப்பு பிளந்து நீர் நீர் உருக ஆரம்பித்தால் உலகிற்கே வந்து விடும் அபாயம்!
மிக மோசமான நிலையில் 7 மீட்டர் அளவு கடலில் நீர் மட்டஅளவு உயரும். ஒரு மீட்டர் உயர்ந்தாலேயே ஏராளமான நாடுகளில் கடல் ஓர நகரங்கள் மூழ்கி விடும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை யாரும் மறந்திருக்க முடியாது.
பத்து நாடுகள் முற்றிலுமாகவோ அல்லது அவற்றின் பல முக்கியப் பகுதிகளோ அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள்அஞ்சுகின்றனர்.
இந்தப் பத்து நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வீடியோ வாயிலாக அனைவரும் பார்க்கும்படி கூறி விளக்குகின்றனர்.
பத்து நாடுகளின் பட்டியல் 1) சீனா 2) வியட்நாம் 3) இந்தியா 4) இந்தோனேஷியா 5) பங்களாதேஷ் 6) ஜப்பான் 7) அமெரிக்கா 8) எகிபது 9)பிரேஜில் 10) நெதர்லாந்து
அருமையான பல கடற்கரை நகரங்கள் அழியும் அபாயத்தைச் சுட்டிக் காட்டும் வீடியோ ஒரு ஆறுதலான செய்தியையும் தருகிறது. இன்னும் நிலைமை மோசமாகவில்லை. உடனடியாக மேலேசொல்லப்பட்ட நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு புகையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து பூமி வெப்பமயமாதலைத் தடுத்தால் ஐஸ் படலம் உருகாமல் பனிப்பாறையாகவே நிலைத்திருக்க வாய்ப்பு உண்டு, விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
அழிவதும் நீடித்து வாழ்வதும் நமது கையில் என்று முடிகிறது வீடியோ.
மக்கள் விழித்தெழ வேண்டும்; தங்களால் இயன்ற வழியில் எல்லாம் பூமியின் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் அனைத்து மாசையும் தடுக்க வேண்டும். இது ஒன்றே அழிவைத் தடுக்க வழி!
***