
Written by S Nagarajan
Post No.7541
Date uploaded in London – – 6 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
விபூதி எனப்படும் திருநீறு சைவர்கள் தரிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.
“ஒரு நாளாவது ஒருவன் பஸ்மத்தைத் தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணியபலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக : என்னவெனில் அவ்ன் மகாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போய்விடும். இது சத்தியம்! சத்தியம்!! சந்தேகமில்லை”
என்று இப்படி நாராயணர், நாரதரிடம் கூறிய் ஆச்சரியகரமான உரை தேவி பாகவதத்தில் இடம் பெறுகிறது.
தேவி பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தத்தில் 11ஆம் அத்தியாயம் மூவகை பஸ்மம் பற்றி விளக்குகிறது.
12,13,14 ஆகிய அத்தியாயங்கள் பஸ்ம மகிமையை மிக விரிவாக விளக்குகின்றன.
15ஆம் அத்தியாயம் பஸ்மம் தரிக்கும் முறைகள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.
ஸ்கந்தபுராணமோ சூத சம்ஹிதையில் யக்ஞ வைபவ காண்டத்தில் (29ஆம் அத்தியாயம்) திருநீற்றின் மகிமை பற்றிக் கூறுகிறது.
அதை இங்கு சுருக்கமாகக் காண்போம்:
மஹாபஸ்மம், பஸ்மம் என்று விபூதி இரு வகைப் படுகிறது.
பாவங்களை எல்லாம் நாசம் பண்ணுவதால் அதற்குப் பஸ்மம் என்று பெயர்.
ஞானத்தைக் கொடுத்து மஹாபாவங்களை எல்லாம் நாசப்படுத்துவதால் சிவபெருமானே மஹாபஸ்மம் எனப்படுவார்.
அந்த மஹாபஸ்ம சொருபத்தை அடைந்தவர்களுக்கு தவம் முதலியவற்றினால் யாதொரு பயனும் இல்லை.
மஹாபஸ்ம சொரூபம் விளங்கப் பெற்றவன் சிவனே ஆவான்.

மஹா பஸ்ம ஞானம் அடைவதையே பெரும் பயன் என்று வேதம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
சிரௌதம், ஸ்மார்த்தம், லௌகிகம் என்று பஸ்மம் மூன்று வகைப்படும்.
இதில் சிரௌதம், ஸ்மார்த்தம் ஆகிய இரண்டும் அந்தணர்களுக்கே உரியன.
லௌகிகம் மற்ற எல்லோருக்கும் ஆகும்.
ஜாபாலோபநிஷத் மந்திரங்களினால் உத்தூளனம் செய்து கொண்டு, பஞ்சபிரம மந்திரங்களால் நீர் விட்டுக் குழைத்துத் திரிபுண்டரம் தரித்துக் கொள்ள வேண்டும்.
மேதாவி முதலிய மந்திரங்களால் பிரம்மச்சாரி அணிய வேண்டும்.
சந்யாசி பிரணவ மந்திரத்தால் (ஓம்) அணிவது தகுதி.
மந்திரங்களுக்கு அதிகாரமில்லாதவன் மந்திரம் இல்லாமலேயே தரித்தல் வேண்டும்.
விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரித்தல் ஞானாங்கமாகும் என்று வேதங்கள் சொல்லும்.
பாசுபத விரதத்தை அனுஷ்டிப்பவன் மெய்ஞானத்தை அடைந்தவனாவான் என கைவல்ய உபநிடதம் கூறுகிறது.
முக்தியை விரும்புவபவர்கள் விபூதியை எப்போதும் தரிக்க வேண்டும்.
உயிரைக் காப்பாற்றல், சுபம், ஸ்நானம், தானம், தவம், யாகம் எல்லாம் திருநீறு என்று வேதங்கள் கூறுகின்றன.
திருமால், பிரமன்,இந்திரன், தேவர்கள்,இலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, அரம்பையர்கள், யட்சர், கந்தர்வர், ராக்ஷஸர், அசுரர், முனிவர்கள் ஆகிய இவர்களில் விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரியாதவர் யார்?
திருநீறு அணியாதவர்க்கு ஞானமில்லை.
அவர்கள் கோடி ஜன்மம் எடுத்தாலும் சம்ஸார பந்தம் ஒழியார்; பாவிகள் ஆவார்! நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.
வர்ணாசிரம தர்மம் தரும் பலனையும் அவர்கள் அடைய மாட்டார்கள். அவர்கள் செய்யும் புண்ணியமும் பாவமாகும்.
பல ஜன்மங்களிலும் பாவம் செய்தவர்களுக்கு விபூதியில் வெறுப்பு உண்டாகும்.

விபூதியை விரும்பாதவர்கள் அனைவரும் மஹாபாவிகள் என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.
திருநீற்றின் மகிமையை ஒருவராலும் சொல்ல முடியாது.
இப்படி ஸ்காந்த புராணம் அழுத்தமான வார்த்தைகளால் விபூதி அணிவதன் அவசியத்தையும் அதன் மகிமையையும் விளக்குகிறது.
அடுத்து தேவி பாகவம் கூறும் மகிமைகளைச் சற்றுப் பார்ப்போம்.
- தொடரும்
****