ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2 (Post No.3493)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-58 AM

 

Post No.3493

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 17

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

14) பௌராணிகர்கள் – சி.சுப்பிரமணிய பாரதி (1909) புதுச்சேரியிலிருந்து வெளியான இந்தியாவில் வெளியான உபதலையங்கம் இது. 25-8-1909 தேதியிட்டது

 

15) விநோதச் செய்திகள் – சக்தி தாஸன் (பாரதியார்)

  கதாரத்னாகரம் மாதப் பத்திரிகை சென்னை, தொகுதி 3, பகுதி 5   1920, அக்டோபர் பக்கம் 209-214

 

16) ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரின் உபதேசங்கள் – சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்

சுதேசமித்திரன் 25-4-1916

இந்தக் கட்டுரையை ‘காலஞ்சென்ற ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறார் பாரதியார்.

பின்னர் அவர் உள்ளத்தில் இருந்த ‘மூல தர்மங்கள்’ ஆறினை விளக்குகிறார்.

 

17) ஞாபகச் சின்னம் சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்.

சுதேசமித்திரன் 25-4-1916 இதழில் பாரதியார் சுப்பிரமணிய ஐயரின் நினைவைப் போற்றும் வகையில் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார்.

 

18) சென்னைச் சிம்மம் – சி.சுப்பிரமணிய பாரதி – இந்தியா 27-4-1907 இதழ்

இதில் பாரதியார் கேட்கும் கேள்வி இது: சென்னைச் சிம்மம் கனம் ஜி;சுப்பிரமணிய அய்யரவர்கள் மாத்திரம் உழைக்க மற்றவர்கள் தூங்குவது என்ன தேசபக்தி!

 

19) ஒரு வகையில் பரம  குரு

வ.ரா நடத்திய காந்தி என்ற பத்திரிகையில் 25-11-1933 தேதியிட்ட இதழில் 618-619 ஆம் பக்கங்களில் வெளியான கட்டுரை இது.

கட்டுரையின் ஆரம்ப பகுதியை இங்கே பார்க்கலாம்:

1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ‘சுதேசமித்திரன்’  பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். கஜானாவைப் பார்த்துப் பெற்று விட்டதாக எண்ண வேண்டாம். சம்பளம் ரொம்பக் குறைவு. வேலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

  “பாரதி, நீ அருமையான தமிழ் எழுதுகிறாய்.  உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீ காளிதாஸன் தான். ஆனால் நான் போஜராஜனில்லையே. உனக்குத் தகுந்த சன்மானம் செய்ய, என்னிடம் பணமில்லையே’ என்று சுப்பிரமணிய அய்யர் பாரதியாரிடம் சொல்லுவாராம்.

   நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குகிறதில் அய்யர் (சுப்பிரமணிய அய்யர்) ரொம்ப ‘கொம்பன்’ என்றாலும், பத்திரிகைத் தொழிலில் எனக்குப் பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தது அவர் தான். அவரை ‘நான், ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்’ என்பார் பாரதியார்.

 

20) சுய ஆட்சி – ஒரு யோசனை  – பாரதியார் புதுச்சேரி அதலம் வைகாசி 7 என்ற தேதியிட்டு சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் – சுதேசமித்திரன் நள வைகாசி 12ஆம் தேதி பிரசுரிக்கப்பட்டது. 25-5-1916

 

21) மது என்ற கவிதை நித்திய தீரர் என்ற நமது நேயர் இயற்றியது

நித்தியதீரர் என்ற புனைபெயரில் பாரதியார் இக்கவிதைகளை எழுதியிருக்கக் கூடும் என்ற குறிப்பு காணப்படுகிறது.

கவிதையின் முதல் வரி : “பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று”

ஞான பாநு பத்திரிகையில் 1913 ஆகஸ்ட் மாதம் வெளியானது பக்கம் 112-114

 

22) பாரத நாட்டின் நவீன உணர்ச்சி – சி.சுப்பிரமணிய பாரதி (1909) இந்தியா, புதுச்சேரி , உப தலையங்கம் 21-9-1909

இந்தக் கட்டுரையில் அரவிந்தரைப் பற்றி  பாரதியார் குறிப்பிடுகிறார்.

நவசக்தியை யடக்க ஒருவராலும் முடியாது ஏனென்றால் அது கடவுளின் திவ்ய ரூபத்தின் ஓர் அம்சம். தெய்வம் மனுஷ ரூபேண என்றபடி அந்த அம்சம் ஒவ்வொரு பாரத புத்திரனின் மனதிலும் தேஜோமயமாய் விளங்குகிறது. இதைப் பெரும்பாலோர் உணரவில்லை.

சமீபத்தில் இதை உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் என்னும் தேசபக்தர் அநியாயமாய் ஒரு வருஷ காலம் சிறைப்படுத்தப் பட்டிருந்தார் பிறகு குற்றவாளியல்லவென்று விடுதலை அடைந்தார்.வெளி வந்ததும் தான் தமது தேசத்திற்குத் தொண்டு பூண்டு முன்னிலும் பலமாய் மாதுரு ஸேவை செய்து வருகிறார்.”

 

23) சூரத் காங்கிரஸ் – (1907)

இந்தக் கட்டுரை ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதியது.

24) How are we to acquire Swaraj?  நாம் எப்படி ஸ்வராஜ்யத்தை அடைகிறது?   சி.சுப்பிரமணிய பாரதி (1907) இந்தியா வாரப் பத்திரிகையில் 27-4-1907 தேதியிட்ட இதழில் வெளி வந்த நீண்ட கட்டுரை

 திரு செட்டியார் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கட்டுரைகளை மூலப் பத்திரிகைகளைப் பார்த்துக் கண்டுபிடித்து குமரிமலரில் வெளியிட்டிருப்பார் என்பதை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது.

இன்னும் பல கட்டுரைகளை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவற்றை அடுத்துப் பார்ப்போம்

                     ******      தொடரும்