ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் (Post No.3477)

Written by S NAGARAJAN

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:- 4-55 am

 

Post No.3477

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாரதி இயல்

 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள்

 

ச.நாகராஜன்

 

 

ஏ.கே. செட்டியார்

 

திரு ஏ.கே. செட்டியார் உலகம் சுற்றிய தமிழர். நேதாஜியைப் பற்றிய அழகிய திரைப்படம் (டாகுமெண்டரி) தயாரித்தவர். சிறந்த தமிழ் ஆர்வலர்.பழமையைப் போற்றுபவர். பாதுகாப்பவர்.

 

 

நட்புக்கு முதலிடம் தருபவர்.

 

குமரி மலர் என்ற மாதப் பத்திரிகையை சென்னையைத் தலமையிடமாகக் கொண்டு நடத்தி வந்தார்.

பத்திரிகை பக்க அளவில் சிறிது என்றாலும் உள்ளிருக்கும் விஷயங்கள் மிக கனமானவை. தேடித் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டவை. இதரர்களால் சுலபமாக அணுக முடியாத அற்புத விஷயங்களைக் கொண்டவை.

சிறந்த குணநலன்களைக் கொண்ட இவர் முகம் எப்போதும் புன் முறுவல் பூத்தபடியே இருக்கும்.

 

 

எனது தந்தையார் (மதுரைப் பதிப்பு – தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம்) அவர்களின் நெருங்கிய நண்பர். குமரி மலரின் சந்தா தொகை மிக அற்பமான ஒரு தொகை. அதை வசூல் செய்வதற்காக, தன்னுடைய சொந்தப் பணத்தில் பெரிய தொகையைச் செலவழித்துக் கொண்டு, நேரில் வருவார். நண்பர்களைப் பார்க்க இது ஒரு வாய்ப்பு என்று கருதியே வீடு வீடாகச் செல்வார்.

 

மதுரையில் எங்கள் வீட்டில் இவர் வரும் போது சுடச்சுட இட்லியில் தேன் விட்டுச் சாப்பிடுவார். இவரது உயரிய டேஸ்டே தனி!

 

பின்னர் டிவிஎஸ் ஸ்தாபகர் திரு சுந்தரம் ஐயங்காரின் மகனான திரு ராஜம் அவர்களின் மகன் திரு ஆர். ராமச்சந்திரன் அவர்களை (மதுரை ஆர்.ஆர்) சென்று பார்ப்பார். இப்படி அனைத்து நண்பர்களைப் பார்ப்பதுடன் பழைய கால பத்திரிகைகளைத் தேடும் பணியும் கூடவே நடக்கும். மதுரை பிரம்மஞான சபையில் அபூர்வமான இதழ்கள் கிடைக்கும். எனது ஆசிரியரும் பாரதியின் அணுக்க பக்தருமான திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள் இப்படிப்பட்ட அரிய விஷயங்களைத் தரும் பத்திரிகைகளை இனம் காண்பிப்பார்.

 

ஆக, இப்படி ஊர் ஊராகச் சென்று பழைய இதழ்களைத் தேடி அதில் வியக்கத்தக்க செய்திகளை இனம் கண்டு எடுத்து தொகுத்து குமரி மலரில் பிரசுரிப்பார்.

 

குமரி மலரின் பழைய இதழ்கள் ஒரு பொக்கிஷம். பாரதி அன்பர்களுக்கோ அது ஒரு அபூர்வமான வர பிரசாதம்.

ஏராளமான பாரதியார் கட்டுரைகளையும், பாரதியார் பற்றி பல நண்பர்கள், பாரதியாரோடு பழகியவர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் பழைய இதழ்களில் காணலாம்.

 

 

இவற்றில் சில புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டதுண்டு.

தமிழ்நாடு என்ற ஏ.கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள் அடங்கிய நூலில் பாரதியார் சுதேசமித்திரன் 1919 ஜனவரி மாத இதழில் எழுதிய பாபநாசம் என்ற கட்டுரையை அவர் வெளியிட்டார். அதை பாரதி ஆர்வலர் திரு ரா.அ.பத்மநாபன் தான் தொகுத்த பாரதி புதையல் – மூன்றாம் தொகுதியில் வெளியிட்டுள்ளார்.

 

 

ஏ.கே. செட்டியார் குமரி மலர் நவம்பர் 1971 இதழில் பாரதியார் சக்திதாஸன் என்ற பெயரில் எழுதிய விநோதச் செய்திகள் என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதையும் பாரதி புதையல் மூன்றாம் தொகுதியில் பார்க்கலாம்.

பாரதியார் பற்றியும் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் பற்றியும் வெளியாகியுள்ள அனைத்து குமரி மலர் கட்டுரைகளையும் தொகுத்தால் அதுவே ஒரு சிறந்த புத்தகமாக அமையும்.

 

 

சில குமரி மலர் கட்டுரைகளை மட்டும் இங்கு காணலாம்:

  • அர்ச்சுனன் புலம்பல் என்ற பாரதியார் கவிதை – பரலி சு.நெல்லையப்பர் தினமணி சுடர் 10-9-1967 இதழில் வெளியிட்டது – (செப்டம்பர் 1973 குமரி மலர் இதழ்)
  • பாரதியாரும் தமிழும் – இளசை மணியன் வெளியிட்ட பாரதி தரிசனம் என்ற நூலி வெளியான கட்டுரை (ஜ்னவரி 1975 இதழ்)
  • மது பானம் – சி.சுப்பிரமணிய பாரதி (1909)
  • இராமதாஸ் ஸ்வாமிகள் கோட்டை – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • மௌனத்தின் வலிமை – பாரதியாரின் சக்ரவர்த்தினி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. பாரதியாரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்ற அனுமானம் தெரிவிக்கப்படுகிறது.
  • பட்டினத்துப் பிள்ளையின் சரித்திரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1906)
  • திருவல்லிக்கேணியில்ப் பொதுக்கூட்டம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • இறவாமை – சி.சுப்பிரமணிய பாரதி
  • பாரதியாரின் இந்தியா – இந்தியா இதழில் வெளியான 7 கட்டுரைகள்
  • பாரதியாரின் கர்மயோகி – கர்மயோகி இதழில் வெளியான 3 கட்டுரைகள்
  • பாரதியார் நூல்கள் மதிப்புரை – சுவதேச கீதங்கள் (1907) பாரதியாரின் கவிதைத் தொகுப்பிற்கு மதுரையிலிருந்து வெளியான் செந்தமிழ் பத்திரிகை தந்த மதிப்புரை

 

மதிப்புரையில் ஒரு வரி:-

“இயற்கையில் இனிய கவிகள் பாட வல்ல பாரதியார் தம் சக்தியை இத்தகைய புது வழியில் திருப்பி உபயோகப்படுத்தியிருப்பது நம்மவர்க்கு ஒரு நல்ல வழியைக் கற்பிக்கின்றது.”

 

 

  • பாஞ்சாலி சபதம் (1913) நூலுக்கு ஞானபாநு மாதப் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.சுப்ரமணிய சிவா தந்துள்ள மதிப்புரை

மதிப்புரையில் ஒரு வரி:-

பாஷாபிமானிகளும் தேசாபிமானிகளும் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது. விலை அணா எட்டு. தபாற் செலவு வேறு. வேண்டியவர்கள் நமது ஆபீசுக்கேனும் அல்லது பிரஹ்ம ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதியவர்கள், புதுச்சேரி யென்ற விலாசத்திற்கேனும் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

          சென்னை நவம்பர் 1913

 

 

  • புதுச்சேரி பற்றிய கவிதை – பாரதியார் வாழ்ந்த ஊர் பற்றிய வெண்பா (எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை)

பாரதி வாழ்ந்த ஊர்; பண்பார்ந்த செந்தமிழின்

சீரதிகம் பெற்றுச் சிறந்த ஊர் – கார்கடலின்                        ஓசை முழங்கும் ஊர்; ஒய்யாரமான ஊர்,                         வாசம் வளர்ப் புதுவை நகர்

 

 

  குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகளின் தலைப்புகளை அடுத்து காண்போம்

****