அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………