பாவத்தின் தந்தை யார்? (Post No.7938)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7938

Date uploaded in London – – – 8 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாவத்தின் தந்தை யார்?

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் அறிவாளியான ஒரு அரசனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

பாவத்தின் தந்தை யார்? பாவத்திற்கு ஆதி காரணமாக அமைவது எது?

யோசித்து யோசித்துப் பார்த்தான். விடை தெரியவில்லை.

மறுநாள் அரசவைக்கு வந்தவுடன் முதலில் அவன் கேட்ட கேள்வி இது தான்  : “பாவத்தின் தந்தை யார்?”

அரசவையில் மந்திரி, ராஜகுரு, வித்வான்கள் உள்ளிட்ட அனைவரும்  யோசித்துப் பார்த்தார்கள். சரியான விடையைச் சொல்ல முடியவில்லை.

மன்னனுக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.

கற்றறிந்த தலைமை வித்வானாக இருந்த பிராமணரை அவன் பார்த்தான்.

“பிராமணரே! ஒரு வாரம் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். சரியான விடையைச் சொல்லும். இல்லையேல் அதற்கான தகுந்த தண்டனையும் உண்டு.”

ஏழை பிராமணர் நடுங்கி விட்டார்.

இதற்கு எப்படிப் பதிலைக் கண்டுபிடிப்பது?

வீட்டிற்குச் சென்ற அவர் இரவு முழுவதும் படித்தார். யோசித்தார். ஊஹூம். திருப்திகரமான விடை வரவில்லை.

அடுத்த நாள் வழக்கம் போல நதிக்கரைக்குக் குளிக்கச் சென்றார்.

கரையோரம் இருந்த தாசி ஒருத்தி அவரைப் பார்த்தாள். என்றும் தேஜஸுடன் விளங்கும் அவர் முகம் வாடி இருந்தது.

அவரை அணுகிய அவள், “ஐயனே! ஒருநாளும் இல்லாதபடி இப்படி உங்கள் முகம் வாடி இருக்கிறதே? என்ன காரணம்?” என்று கேட்டாள்.

அவர் விஷயத்தைச் சொன்னார்.

“பூ! இவ்வளவு தானா? இதுவும் ஒரு கேள்வியா?  இதற்கு எனக்கு விடை தெரியுமே” என்றாள் அவள்.

திடுக்கிட்டார் பிராமணர்.

“சொல்லு, சொல்லு, விடை என்ன?” ஆவலுடன் கேட்டார்.

“சொல்கிறேன். ஆனால் என் வீட்டு வாயிலுக்கு வர வேண்டும்.”

அந்தணர் தயங்கினார். தாசி வீட்டு வாசலுக்குப் போகலாமா?

“சரி, வாயில் வரை தானே! வருகிறேன்” -அந்தணர் தாசியுடன் அவள் வீட்டு வாயிலுக்குச் சென்றார்.

தாசி: “வந்தது வந்தீர்கள். உள்ளே வாருங்கள். தக்ஷிணையாக நூறு ரூபாய் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். உடனே விடையையும் சொல்கிறேன்.”

அந்தணர் வாயைப் பிளந்தார். நூறு ரூபாயை விட அவருக்கு மனமில்லை. தாசியின் வீட்டிற்குள் நுழைந்தார்.

நூறு ரூபாயைக் கையில் எடுத்த தாசி அந்தணரைப் பார்த்து, “இதோ நூறு ரூபாய்! ஆனால் என் படுக்கை அறைக்குள் வந்து படுக்கையின் மீது உட்காருங்கள். இருநூறாகத் தருகிறேன்” என்றாள்.

இருநூறா?

படுக்கை அறையினுள் நுழைந்த அந்தணர் படுக்கையின் மீது உட்கார்ந்தார்.

தாசி : “வந்து அமர்ந்து விட்டீர்கள். அருமையாக சமைத்து இருக்கிறேன். மாமிச உணவு தான். கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தங்க நெக்லஸையும் தருகிறேன்.”

அந்தணர் யோசித்தார். தங்க நெக்லஸ். கை நிறைய பணம்.

என்ன பிராயசித்தம் செய்யலாம் என்று யோசித்த அவர் உடனே அவளது கோரிக்கைக்கு இசைந்தார்.

வேசி சமையலறையிலிருந்து மாமிசத்தை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.

அதை வாங்கிய பிராமணர் அதில் ஒரு துண்டை எடுத்துத் தான் வாயில் போட வாயைத் திறந்தார்.

வேசி பளீரென்று அதைத் தட்டி விட்டு, பிராமணரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தாள்.

“இது கூடவா தெரியவில்லை. பாவத்தின் தந்தை ஆசை, பேராசை. போ! ராஜாவிடம் சொல்லு போ!” என்றாள்.

பேராசை!

பிராமணர் கண்களில் நீர் துளித்தது.

மெதுவாக வெளியே சென்றார் – வேசியை வணங்கி விட்டு.

அடுத்த நாள் ராஜாவின் கேள்விக்கு பதில் சொல்லி விட முடியும் என்பதால் அவர் முகத்தில் பழைய தேஜஸ் ஜொலித்தது; அத்துடன் புதிதாக பெறுதற்கரிய ஞானமும் பெற்றதால் ஞான தேஜஸும் சேர்ந்தது!

****

Leave a comment

Leave a comment