வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1

Picture shows Libra (Tula Rasi) constellations

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விசாகம் ஒரு அபூர்வமான அதிசய நட்சத்திரம்! எல்லை இல்லாத அதன் பெருமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!

 

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1

ச.நாகராஜன்

விசாகம் என்றால் புதிய பிரிவு

 

மனித குலத்திற்கே முக்கியமான நட்சத்திரமாகத் திகழும் விசாக நட்சத்திரம் பல அதிசயங்களையும் அபூர்வ உண்மைகளையும் நம்மை அறியச் செய்து பரவசமூட்டும் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது.இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம். விசாகம் என்ற சொல்லை வி+ சாகம் என்று இரண்டாகப் பிரித்துப் பொருளைக் கொள்ள வேண்டும். ‘வி’ என்றால் புதிய அல்லது வேறு என்று பொருள் ஆகும். ‘சாகம்’ என்றால் பிரிவு அல்லது கிளை என்று பொருள் ஆகும். ஆக விசாகம் என்றால் புதிய பிரிவு என்று பொருள்.

 

வானத்தை நம் முன்னோர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி வான கோளத்தில் தென் கோளப் பகுதி வட கோளப் பகுதி  என இரண்டு கோளப் பகுதிகள் உள்ளன.வடக்கு மண்டலம் அல்லது கோளத்தைப் பிரிக்கும் நட்சத்திரமாக விசாகம் அமைகிறது. அதாவது புதிய பிரிவின் ஆரம்ப நட்சத்திரம் அது! இந்த ஆரம்பத்தைப் பிரிக்கும் ராசியாக துலா ராசி அமைகிறது.மேஷம், ரிஷபம், மிதுனம்,

கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளும் ஒரு பகுதியாக இருக்க துலாத்திலிருந்து அடுத்த மண்டலம் ஆரம்பிக்கிறது!

 

 

இன்னொரு முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாக நட்சத்திரம் வட்ட வடிவமாக தராசு போல உள்ள ஒரு நட்சத்திரம் என்பது இன்னொரு வியப்பூட்டும் சுவையான செய்தி!

 

ஆக வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பது விசாகம். இரவும் பகலையும் சமமாகப் பிரிப்பதும் விசாகம். கோடை காலம் குளிர்காலம் என பருவத்தை இரண்டாகப் பிரிப்பதும் விசாகம். இத்தனை விஷயங்களை சமன் செய்யும் இது இருக்கும் ராசி துலா ராசி என்பது பொருத்தம் தானே! நம் முன்னோர்களின் அறிவியல், ஆன்மீக, வானவியல், ஜோதிட அறிவை எண்ணி வியந்து வியந்து பிரமிக்கலாம்!

தென் மண்டலத்தை உருவாக்கிய விஸ்வாமித்திரர் 

பொய்யே உரைக்காத வால்மீகி முனிவர் ராமாயணத்தில் பால காண்டத்தில் 60ம் ஸர்க்கத்தில் விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காகப்  படைத்த தென் மண்டலத்தைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார். வானில் சென்ற திரிசங்குவை இந்திரன் தடுக்க அவன் ‘த்ராஹி த்ராஹி’ (காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்) என்று விஸ்வாமித்திரரிடம் அபயம் கேட்டுக் கீழே விழ விஸ்வாமித்ரர் திஷ்ட திஷ்ட (இரு இரு) என்று சொல்லி அவனை நிறுத்தி ஒரு புதிய மண்டலத்தையே ச்ருஷ்டிக்கிறார்.

 

ச்ருஜன் தக்ஷ¢ண மார்கஸ்தான் சப்தரிஷீன் அபரான் புன: I                         நக்ஷத்ர வம்சபரம்பரம் அச்ருஜத் க்ரோத மூர்ச்சித: II (பால காண்டம் 60ம் ஸர்க்கம்,ஸ்லோகம் 20)

“பிராஜாபதியைப் போலவே விஸ்வாமித்ரர் தெற்கில் சப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். அதே போல தெற்கில் வடக்கில் இருப்பது போல நட்சத்திரங்களையும் உருவாக்கினார்.”

 

வானத்தில் தேவ பாகத்திலும் அசுர பாகத்திலும் உள்ள நட்சத்திரங்களை ஒப்பு நோக்கினால் நாம் வியப்பை அடைவோம். வடக்கே உள்ள (சௌம்ய) துருவ நட்சத்திரம் போல தெற்கே யம துருவம் உள்ளது. மயில் வடிவம் போல உள்ள சப்தரிஷி மண்டலம் வட பாகத்தில் இருக்கும் போது மயூர மண்டலம் என்ற சப்தரிஷி மண்டலம் தெற்கே உள்ளது. மான் தலை உள்ள ஓரியன் வடக்கில் உள்ள போது அதே மான் தலை போல உள்ள நட்சத்திரம் உடைய மகரம் தென் மண்டலத்தில் உள்ளது.ஆருத்ரா வடக்கில் இருப்பது போல விசாகம் தெற்கில் உள்ளது. வடக்கின் ரோஹிணி போல தெற்கில் ஜேஷ்டா (கேட்டை) உள்ளது. வடக்கில் உள்ளஅஸ்வினி இரட்டையர் போல இரட்டையரான விசித்ரதுவை தெற்கில் காணலாம்.

 

ஆக இப்படி மிக முக்கியமான பிரிவைச் சுட்டிக் காட்டும் ஒரு நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது!

 

-விசாக நட்சத்திர அதிசயம் தொடரும்