மாதவியின் 11 வகை நடனங்கள்

பழந்தமிழ் நாட்டில் இந்துமதக் கதைகள்

Picture shows famous danseuse Jyotsna Jaganathan

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்

குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்

பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்

கொட்டியிவை காண்பதினோர் கூத்து

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” —என்று பாரதியாரால் பாராட்டப்பட்ட சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் சிறந்தது. கண்ணகி-கோவலனின் கதையைக் கூறும் இந்தக் காவியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. தமிழ் மக்களின் கலைக் களஞ்சியம் இந் நூல். இதில் நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் முதலிய எல்லாக் கலைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இந்த காவியத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.

இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.

இந்த அற்புதமான காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகள். 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. “நன்மை வந்தெய்துக !! தீதெலாம் நலிக” என்ற வெற்றிச் செய்தியை தமிழர்கள் பறை சாற்றியது தெரிகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள். அவைகளைக் காண்போம்:

picture shows Japanese woman performing Bharatanatyam

எண்ணும் எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்

பண் நின்ற கூத்து பதினொன்றும்— மண்ணின் மேல்

போக்கினாள்; பூம்புகார்ப் பொன் தொடி மாதவி, தன்

வாக்கினால் ஆடு அரங்கின் வந்து

1.அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

2.கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆடம் கொடுகொட்டி.

3.குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்

4.குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆடம் குடம் என்னும் வகை ஆகும்

5.பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

6.மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

7. துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆடம் துடி

8.கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்

9.பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

10.மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது

11. பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இவைகளில் முதல் ஆறும் நின்று ஆடும் ஆட்டங்கள். ஏனைய ஐந்தும் வீழ்ந்தாடுபவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள், நாட்டிய மேடை எப்படி இருக்க வேண்டும், எப்படி அலங்கரிக்கப் படவேண்டும் என்ற அரிய தகவல்களையும் தருகிறார்.

காவியத்தில் வேறு மூன்று இடங்களில் வேடுவர் ஆடிய ஆட்டங்கள், ஆய்ச்சியர் என்னும் இடையர்கள் ஆடிய ஆட்டம், மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவையர் ஆடிய ஆட்டம் என்பனவற்றையும் விளக்குகிறார். சிலப்பதிகார காவியத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் படித்து ஜீரணிக்க பாமர மக்களால் முடியாது. அத்துறையில் வல்ல அறிஞர் பெருமக்கள் வாழ் நாள் முழுதும் ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம் அது என்றால் மிகையாகாது.

சில நாத்திகர்கள் பழந்தமிழர்கள் பற்றிப் பரப்பிவரும் தவறான கண்ணோட்டத்தை சங்க இலக்கியத்தில் வரும் நூற்றுக் கணக்கான இந்துமதக் கதைகளும் சிலப்பதிகாரமும் தவிடு பொடியாக்கிவிட்டன.

 

Picture shows another famous danseuse Charulatha Jayaraman

**************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: