அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்

Written by ச.நாகராஜன்

Appar Thevaram Dance at Natyanjali by Uma B.Ramesh

மொழிக்கு அணியாய்த் திகழ்வன பழமொழிகள்

ஒரு மொழிக்கு அணியாய்த் திகழ்வது பழமொழிகள்.செம்மொழியான தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான பழமொழிகள் உள்ளன.

மைடரின் விளக்கம்

அமெரிக்காவில் உல்ப்கேங் மைடர் என்ற அறிஞர் ப்ராவெர்பியம் (Proverbium – journal)என்ற பத்திரிக்கையையே நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. பழமொழிகளின் இன்றியமையாமை மற்றும் சிறப்பு குறித்து இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

பழமொழி பற்றி அவர், A proverb is a short, generally known sentence of the folk which contains wisdom, truth, morals, and traditional views in a metaphorical, fixed and memorizable form and which is handed down from generation to generation” என்று கூறுகிறார். இதன் பொருள் : ஒரு பழமொழியானது, மக்கள் அனைவரும் அறிந்த ஒரு சிறிய வாக்கியம். அதில் உலக ஞானம், நீதி, அறநெறி, பாரம்பரியப் பார்வைகள் உருவகமாகவும், சிறிய உறுதியான வாக்கியங்களாகவும், சுலபமாக நினைவில் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இவை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும்” என்கிறார்.

வாழ்க்கையின் எந்த நிலைக்கும் ஏற்ற பழமொழி தமிழில் உண்டு

தமிழ்ப் பழமொழிகளைக் காக்கும் பணியை சாமான்ய மக்களும். புலவர்களும் தொடர்ந்து செய்து வந்ததால் இன்றளவும் அவை உயிருடன் இருந்து வருகின்றன. ஒரு பழமொழியைக் கூறாத எந்த ஒரு பெண்மணியையும் தமிழகத்தில் பார்க்கவே முடியாது. வாழ்க்கையின் எந்த ஒரு நிலையையும் பழமொழி தமிழில் உள்ளது என்று உறுதி கூறலாம்.

அற்புத புருஷர் அப்பரின் இணையிலா தேவாரம்

தமிழகத்தின் சரித்திரத்திலும் தமிழின் சரித்திரத்திலும் பக்தி இலக்கியத்திலும் இடம் பெறும் மாபெரும் அற்புத புருஷர் அப்பர்! திருநாவுக்கரசர் என அனைவராலும் போற்றப்படும் அவரது
தேவாரம் தேனிலும் இனியது. திகட்டாதது. தமிழின் இனிமையைச் செவ்வனே காண்பிப்பது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பதிகங்களை அவர் பாடியுள்ள போதிலும் இன்று நமக்கு அவரது பதிகங்களீல் கிடைத்திருப்பவை சிலவே.

சுந்தரர், “இணைகொள் ஏழெழுநூறு இரும்பனுவல் .
என்று பாடி இருப்பதால் அப்பர் சுமார் 4900 பதிகங்களை அதாவது சுமார் 49000 பாடல்களை இயற்றியுள்ளது தெரிய வருகிறது. இன்று நம்மிடம் இருப்பதோ 313 பதிகங்கள் அதாவது சுமார் 3068 பாடல்கள் தாம்!
பன்னிரு திருமுறைகளில் அப்பரின் தேவாரப் பாடல்கள் நான்காம்,ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறையாக அமைகின்றன.
இவற்றில் நூற்றுக்கணக்கான பழமொழிகளை அப்பர் எடுத்துக் கூறி அரும் பெரும் விஷயங்களைச் சுருங்க்க் கூறி விளங்க வைக்கிறார்.
அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

திருவாரூர் பழமொழிப் பதிகம்

அப்பரின் தனிச் சிறப்பு என்னவெனில் அவர் திருவாரூர்ப் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும் கடைசி அடியில் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடி இருப்பது தான்.

மெய்யெலாம் வெண் நீறு என்று ஆரம்பிக்கும் இந்தப் பதிகம் திருவாரூர்ப் பழமொழிப் பதிகம் என்ற சிறப்புப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

1) கையினால் தொழாது ஒழிந்து
கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே
2) முன்பு இருக்கும் விதி இன்றி
முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறே
3) அருகு இருக்கும் விதி இன்றி அறம்
இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே
4) பண்டு எலாம் அறியாதே பனி நீரால்
பாவை செயப் பாவித்தேனே
5) என் ஆகத்து இருத்தாதே ஏதன்
போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே
6) எப்போதும் நினையாதே இருட்டு
அறையில் மலடு கறந்து எய்த்தவாறே
7) விதி இன்றி மதிஇலியேன் விளக்கு
இருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே
8) பாவியேன் அறியாதே பாழ்ஊரில்
பயிக்கம் புக்கு எய்த்தவாறே
9) தட்டானைச் சாராதே தவம் இருக்க
அவம் செய்து தருக்கினேனே
10) கறுத்தானைக் கருதாதே கரும்பு இருக்க
இரும்பு கடித்து எய்த்தவாறே

என்ன அருமையான பாடல்கள்! அற்புதமான கருத்துக்களைப் பொதித்து பழமொழியையும் ஈற்றடியில் வைத்து அமைந்திருக்கும் இது போன்ற பாடல்கள் உலக இலக்கியத்தில் இவை மட்டுமே என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!

இருட்டு அறையில் மலட்டு மாட்டைக் கறத்தல் போல என்ற பழமொழி ஒன்றை உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டால், அதில் தான் suggestion என்று ஆங்கிலத்திலும் த்வனி என்று சம்ஸ்கிருதத்திலும், உள்ளுறை உவமம் என்று தமிழிலும் கூறப்படும் ஏராளமான கருத்துக்களை விளக்கும் அற்புதப் பாங்கை எவ்வளவு அழகிய முறையில் பார்க்க முடிகிறது!!

மேலும் பற்பல பழமொழிகள்.

இவை தவிர அப்பர் தேவாரத்தில் உள்ள மேலும் சில பழமொழிகள் பின் வருமாறு :

1)அறு கயிறூசல் போல
2)ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடுதல் போல
3) இருதலைக் கொள்ளியின் இடையகப்பட்ட எறும்பு போல
4) இன்றுளார் நாளை இல்லை
5) உலை நீரில் திளைத்து விளையாடிய ஆமை போலத் தெளிவிலாதேன்
6) உழுத கால் வழியே உழுவான்
7) உற்றலால் கயவர் தேறார்
8) ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூடர்கள்
9) கழியிடைத் தோணி போன்றேன்
10) காம்பிலா முழை போல (முழை – அகப்பை)
11) கூவலாமை குரைகடலாமையைக் கூவலோடொக்குமோ கடல் என்றல் போல்
12) கையில் உள்ள நெல்லிக்கனி போல
13) கொத்தைக்கு மூங்கர் வழி காட்டல் போல (கொத்தை- குருடர்; மூங்கர் – ஊமையர்)
14) தழலை நீர் மடிக் கொள்ளன்மின்
15) நரி வால் கவ்வச் சென்று நற்றசை இழந்தது ஒத்தது
16) நூலும் வேண்டுமோ நுண்ணுணர்வோகட்கே
17) பாம்பின் வாய்த் தேரை போல
18) பாழுக்கே நீர் இறைத்தது
19) பாழூரிற் பயிக்கப் புக்கெய்த்தவாறே (பயிக்கம் – பைக்ஷம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த பிக்ஷை – பிச்சை)
20) மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம்
21) மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரம் எய்தி
22)மோத்தையைக் கண்ட காக்கை போல (மோத்தை- பிணம்)
23) விளக்கத்திற் கோழி போன்றேன்
ஒவ்வொரு பழமொழி வாயிலாகவும் ஒரு பெரும் கருத்தை முன் வைக்கும் அப்பரின் பதிகம் உள்ளிட்ட இலக்கியம் போல இன்னொரு இலக்கியம் இன்று வரை தமிழில் இல்லை! இந்தப் பழமொழிகள் வரும் பாடல்களை உற்றுப் பயில்வோர் அடையும் பயனுக்கு எல்லை இல்லை!

அதனால் தான் போலும், ‘திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை’ என்ற நூலை எழுதி அவரைப் போற்றிய நம்பி ஆண்டார் நம்பி,

“வாய்மைக் கவிதையிற் பல
உபரியாகப் பொருள் பரப்பிய
அலகில் ஞானக் கடலிடைப்படும்
அமிர்த யோக சிவ ஒளிப்புக
அடியரேமுக்கருளினைச் செயும்
அரைய தேவத் திருவடிக்களே”
என்று போற்றிப் பரவுகிறார்.

அப்பரின் தேவாரத்தை வீடு தோறும் கொண்டு செல்வோம்; நாடு தோறும் முழங்குவோம். வாழ்க தேவாரம்! வளர்க தெய்வத் தமிழ்!!

This is written by my brother S Nagarajan
****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: