அதிசயத் தமிழ் முனிவர் / புலவர் வால்மீகி

சங்க இலக்கியத்தில் பல புரியாத புதிர்கள் உண்டு. உ.வே.சாமிநாத அய்யராலும் விடை காண முடியாத புதிர்களுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. சங்க இலக்கியத்தில் இந்து மதக் கடவுள் பெயர் இல்லாத நூலெதுவும் இல்லை. சங்க இலக்கியத்தில் சம்ஸ்கிருத சொல் இல்லாத நூல் எதுவும் இல்லை. சங்க இலக்கியப் புலவர்களுக்கு சிந்து சமவெளி என்பது தெரியாது, சிந்து நதி தெரியாது. ஆனால் கங்கையையும் இமயமலையையும் புனித நதி, மலை என்று போற்றிப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவன் இரண்டு முறை கங்கை நதிக்குச் சென்றான். ஒரு முறை கண்ணகி சிலைக்கு அபிஷேகம் செய்யவும் அதற்கு முன் அவனுடைய அம்மா சொர்ணாவை புனித நீராட்டவும் சென்றான்.

 

சங்க இலக்கியத்தில் திராவிட என்ற சொல்லே கிடையாது. ஆரிய என்ற சொல் உயர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனத்தைச் சுட்டும் எந்த ‘விஷ’மும் ‘விஷம’மும் கிடையாது. ஆனால் நாட்டைப் பிரித்தாள வந்தோரும் மதத்தைப் பரப்பி நாட்டைச் சீர்குலைக்க சதி செய்தோரும் பரப்பிய ‘’ஆரிய திராவிட’’ வாதத்தால் பல உண்மைகள் மறைக்கப்பட்டன. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் முடியாது. முழுச் சூரியனை மேகங்கள் மறைக்கவும் இயலாது.

 

சங்க இலக்கியத்தில் மூன்றில் ஒரு பங்கு பாடல்களை இயற்றியோர் கபிலர், பரணர் போன்ற எண்ணற்ற பிராமணப் புலவர்கள் என்பதை முன்னரே எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையில் ‘’நோ பிராமின்ஸ், நோ டமில்ஸ்’’ ‘’NO BRAHMINS, NO TAMIL’’=இல் காணவும்.

 

தமிழ் கலாசாரம் வேறு, வடக்கத்திய கலாசாரம் வேறு என்று பிரசாரம் செய்தவர்களுக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவருக்கே உரித்தான எளிய நடையில் ,அன்பான மொழியில், அழகான தமிழில் பதில் கூறியுள்ளார்: தமிழில் உள்ள மிகப்பழைய சொற்களான வேள்வி, அந்தணர், மறை போன்ற சொற்கள்– இவை எல்லாம் நீண்ட காலமாக இந்த மண்ணிலேயே நிலைத்து நின்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யமுனை நதிக்கு தொழுனை என்ற பெயர் இருப்பது, தமிழ் மன்னர்கள் ராஜ சூயம், அஸ்வமேதம், சோமயாகம் செய்தது ஆகியனவும் குறிப்பிடத் தக்கது.

 

(காளிதாசனும் சங்கத் தமிழ் இலக்கியமும் என்ற பொருளில் நான் எழுதிய ஆறு ஏழு கட்டுரைகளிலும் வாகனங்கள் பற்றி எழுதிய பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் சிந்து சமவெளி பற்றிய எனது பல கட்டுரைகளிலும் இவைகளைச் சுட்டிக் கட்டியுள்ளேன்).

 

இந்திய கலசாரம் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக ஒன்றே. வான் புகழ் வள்ளுவன், முதல் குறளிலேயே அகரம், உலகம், ஆதி, பகவன் என்று பல சம்ஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துவதையும் அதிகாரத்துக்கு அதிகாரம் சம்ஸ்கிருத சொற்களை விடாமல் பயன்படுத்துவதையும் ‘’வள்ளுவன் ஒரு சம்ஸ்ருத அறிஞன்’’ என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.

தமிழ் மன்னர்கள் மூன்று பேரும் 2000 ஆண்டுகளாக இடைவிடாமல் சண்டை போட்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இதற்காக இவர்களை வேறு வேறு இனம் என்று யாரும் சொல்லவில்லையே!! குறிஞ்சி முதலான ஐவகை நிலங்களுக்கும் வெவ்வேறு ஜாதி, கடவுள் பெயரைச் சொல்லி இருக்கிறோம், இதனால் வெவ்வேறு இனம் ஆகிவிட முடியாதே. கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி பெட்டி வெல்லம், அல்வா, மதுரை மல்லிகை போல நாடு முழுதும் ஒரு சில இடங்களில் ஒரு சில சிறப்புகள் இருக்கும். ரிக்வேதத்தில் போர் இருந்தால் அதெல்லாம் இனச் சண்டை, தமிழ் இலக்கியத்தில் போர் இருந்தால் அதெல்லாம் உள்வீட்டுச் சண்டை என்றெல்லாம் எழுதி நம் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார்கள் ‘’அறிஞர்கள்’’!

 

நான் வாழும் பிரிட்டன் ஆந்திர பிரதேசம் அளவுடையதே. அங்கும் ஐரீஷ், ஸ்காட்டிஷ், வெல்ஷ், இங்கிலீஷ் என்று நாலு கலாசாரங்கள் இருக்கின்றன. இவர்களில் திராவிட, ஆரிய வாதத்தை யாரும் புகுத்தவில்லையே. மேம்போக்கான வேறுபாடுகள் உலகில் இல்லாத இடம் இல்லை. இல்லவே இல்லை!!!

 

சங்கப் புலவர் பெயர்களில் பலருடைய பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள்: தாமோதரன், கேசவன், விஷ்ணு தாசன் (விண்ணந்தாயன்), உத்தரா, ஆருத்ரா, ருத்ரன், கௌசிகன், ஆத்ரேயன், பிரம்மா, சங்க வருணன், காமாக்ஷி (காமக்கண்ணி), மஹாதேவன் (மாதேவன்), தேவன் ,ஸாஸ்தா (சாத்தன்), மஹா சித்ரன் (பெருஞ்சித்திரனார்), மஹாபத்மன் (பெரும்பதுமனார்), கபிலர், பரணர், பூதப்பண்டியன், மஹா தேவி (பெருந்தேவி), பிரம்ம தத் (யாழ் பிரமதத்தன்)— இப்படி ஏராளமான பெயர்கள் உள்ளன. அத்தனையும் கொடுக்க இடம்போதா. எனது முந்தைய கட்டுரைகளைக் காண்க.

 

பிராமணர் கோத்ரங்களான கௌசிக, ஆத்ரேய, கவுண்டின்ய, காவ்ய (காப்பியனார், தொல் காப்பியனார்) ஆகியனவும் இருக்கின்றன. கோபாலன் (கோவலன்), மாதவி, மஹா (தண்ட) நாயகன் (மாநாய்க்கன்), மஹா சாஸ்தா (மாசாத்தன்), பராசரன், தட்சிணாமுர்த்தி ஆகிய பெயர்களை சிலப்பதிகாரதில் பார்க்கிறோம். மணிமேகலையில் முழுக்க முழுக்க சம்ஸ்கிருத பெயர்களே.

 

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்:

 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London):

 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 

ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 

பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

படங்கள் வெவ்வேறு பிளாக்குகளில் இருந்து எடுக்கப்பட்டன.நன்றி.

Leave a comment

1 Comment

  1. DeadEternally

     /  May 18, 2022

    தமிழ் மன்னர்களும் அசுவமேத யாகமா? வாயில்லா ஜீவன்யா அந்த குதிரை… அதை விடுங்களேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: