This article is posted already in English:The Oldest and the longest Patriotic song!
உலகின் மிக பழமையான நூல் வேதங்கள். நான்கு வேதங்களில்முதல் வேதமான ருக் வேதத்தில் துதிப் பாடல்களும், யஜூர் வேதத்தில் யாகம் தொடர்பான செய்முறைகளும், சாம வேதத்தில் இசைப் பாடல்களும், அதர்வண வேதத்தில் பயனுள்ள துதிப் பாடல்களும் இருக்கின்றன. இவைகளில் மிகவும் அற்புதமான பாடல் ‘பூமி சூக்தம்’ என்னும் தேசபக்திப் பாடலாகும். இந்தியாவின் இரண்டாவது தேசிய கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய ‘வந்தேமதரம்’ என்னும் பாடல் ஆகும். முஸ்லீம்கள் ‘வந்தேமாதரம்’ சொல்ல மறுத்ததால் ஆங்கிலேயரைப் புகழ்ந்து எழுதிய ‘ஜன கண மண’ தேசிய கீதம் ஆகியது. ஆயினும் ‘வந்தேமாதரம்’ பாடலில் உள்ள அழகு வேறு எதிலும் வராது. இதை பாரதி தனது தெள்ளு தமிழில் இரண்டு வகையாக மொழிபெயர்த்தார். பங்கிம் சந்திரருக்கும் பாரதிக்கும் ஊற்றுணர்ச்சி நல்கிய பாடல் அதர்வ வேதத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ என்பதை இம்மூன்றையும் கற்றவர் எளிதில் உணர்வர்.
“இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை” என்றும் பின்னர் “நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்” என்றும் இரண்டு பாடல்களில் பாரதி ‘வந்தேமாதர’த்தை மொழி பெயர்த்தார்.
அதர்வ வேததின் 12ஆவது காண்டத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ பூமியைக் குறிக்கும் இடங்களில் “ப்ருத்வீ” என்ற சம்ஸ்கிருத சொல்லைப் பயன்படுத்துகிறது. இது பூமியைக் குறிக்கும் சொல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சங்கத் தமிழ் பாடல்களில் உலகம் என்று சொல்லும் போதெல்லாம் அது அவர்கள் அறிந்த நிலப்பரப்பைக் குறிக்க வந்ததேயன்றி இன்று நாம் அறிந்த உலகப் பகுதி முழுவதையும் குறிக்க வந்தது இல்லை என்பதை நாம் அறிவோம். அதே போல பூமி என்று முனிவர்கள் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்து ஆடியதெல்லாம் பாரத பூமியைக் குறித்தே என்பதில் ஐயமில்லை.
முதலில் பூமி சூக்தத்தை மொழிபெயர்த்தோர் பூமி (எர்த்) என்றே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஆனால் நவீன கால மொழிபெயர்ப்பில் அதை தாய் நாடு(மதர்லாண்ட்) என்றே மொழி பெயத்துள்ளனர். நானும் அதுவே சரியென்று நினைக்கிறேன். இந்த அற்புதமான துதியில் 63 பாடல்கள் இருக்கின்றன. உலகிலேயே நீண்ட தேசப்பக்திப் பாடல் இதுதான் என்பது என் கருத்து.
பூமியை தாயே என்று அழைப்பதோடு அதிலுள்ள எல்லா இயற்கை வளங்களையும் முனிவர் பாடுகிறார். சத்தியத்தினாலும் ஒழுக்கத்தினாலும் இந்த உலகம் நிலை பெற்றுள்ளது என்றும் பாடுகிறார். மிக உயர்ந்த கருத்துக்களை இதில் காணமுடிகிறது இந்திரனா, விருத்திரனா என்ற பிரச்சினையில் உலகம் இந்திரனையே தேர்ந்தெடுத்தது என்று சொல்லி நன்மைக்கும் தீமைக்கும் நடந்த போராட்டம் பற்றியும் பாடல் பேசுகிறது. வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் அல்ல , உயர்ந்த சிந்தனை படைத்த நவ நாகரீக மக்கள் என்பதை இக்கவிதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
வேத காலத்தை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. இதை கி.மு.1200க்குக் கீழாக மட்டும் கொண்டு வரமுடியாது என்று மாக்ஸ்முல்லர் காட்டினார். திலகர், ஜாகோபி போன்ற அறிஞர்கள் கி.மு 6000 பழமையானது என்றும் எழுதினர். அதர்வண வேதம் கடைசி கால கட்டத்தில் எழுதப்பட்டதால் கி.மு1000 என்று கொள்வாரும் உண்டு.
இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் எழுதக்கூடத் துவங்கவில்லை. தமிழர்களோ இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் நூலான தொல்காப்பியத்தை எழுதினர். மோசஸ் அப்போதுதான் பத்து கட்டளகளை மட்டும் பேசியிருந்தார். அத்தகைய தொல் பழங்காலத்தில் அதர்வ வேத முனிவர்கள் நாகரீகத்தின் உச்ச கட்டத்துக்குப் போய் பூமியைப் பற்றிப் பாடியதைப் பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது. மனித குலத்துக்கு நன்மை வேண்டியதோடு நில்லாமல் பிராணிகளுக்கும் நலம் வேண்டிப் பாடினர் என்றால் அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பாடலைப் படிக்கையில் இந்தியாவின் தேசீய கீதத்தை மாற்றி அதர்வ வேதப் பாடலின் சுருக்கத்தை வைக்கவேண்டும் என்ற எண்ணமே எல்லோருக்கும் மேலிடும்.
இதோ சில கீற்றுகளை மட்டும் படியுங்கள். முழுப் பாடலையும் மொழி பெயர்த்தால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக மாறிவிடும்:
சத்யம் (உண்மை), தானம், தவம், ஒழுங்கு, யாகம் ஆகியனதான் இந்த பூமியைத் தாங்கி நிற்கிறது.
குணப்படுத்தும் மூலிகைகள் நிறைந்தது இந்த நாடு (பூமி). மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இது. ஆறுகளும், கடலும், தானியப் பயிர்களும் காணப்படும் இந்த நாடு நம்மை வளப்படுத்தட்டும்.
பிராணிகள் பெருகிய இந்த புவி, நமக்கு கால்நடைகளையும் பயிர்களையும் வழங்கட்டும். முன்னோர்கள் உழைத்த இந்த பூமி, அசுரர்களை தேவர்கள் வென்ற இந்த பூமி, பறவைகளும் குதிரை முதலான பிராணிகளும் வாழும் இந்த பூமி நமக்கு ஒளி ஊட்டட்டும்.
இந்த பூமியில் புனித தீ உறைகிறது. நீருக்கடியில் அமிழ்ந்திருந்த இந்தப் புவியை முனிவர்கள் தம் ஆற்றலால் கொணர்ந்தனர். சத்தியத்தினால் கவரப்பட்டுள்ள இந்த பூமி நமக்கு ஒளியையும், பலத்தையும் அளிக்கட்டும்.
கண்களை இமைக்காத தேவர்கள் இதைக் காக்கின்றனர். அவர்கள் நமக்கு இனிமையை பொழியட்டும்.
நீர்வளம் சுரக்கும் இந்தப் புவி, பால் வளம் சுரக்கட்டும்.
அஸ்வினி தேவர்கள் அளந்த பூமி, விஷ்ணு (மூவடியால்) அளந்த பூமி,இந்திரன் தனது எதிரிகளை மாய்த்த பூமி– ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலைச் சுரப்பது போல எங்களுக்கு பால் வளம் சுரக்கட்டும்.
(பூமியைத் தாய் என்றும், ‘பால் நினைந்தூட்டும் கருணைக் கடல் என்றும் முதல் முதலில் எழுதியோர் வேதகால முனிவர்கள் தான். பின்னர் இதை உலகம் முழுதும் சொல்லத் துவங்கியது. தாய்நாடு—motherland— போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் உருவாயின. Gaia கையா போன்ற சொற்கள் கிரேக்க மொழியில் தோன்றின).
ஓ, பூமியே, உனது மலைகளும், காடுகளும், பனி மூடிய சிகரங்களும் என்றும் இனிமை தரட்டும். கருப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற பல வண்ணக் கலவையான இந்த நாடு (பூமி) என்னை யாராலும் வெல்ல முடியாதவனாக ஆக்கட்டும்.என்னைத் தீய எண்ணத்துடன் தீண்ட முடியாதவன் ஆக்கட்டும். எங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுவோரை, வெறுப்போரைத் தோற்கடி.
எல்லா பிராணிகளும் எங்களுக்கு நலம் பயக்கட்டும். தேனினும் இனிய சொற்களை எங்களுக்கு வழங்குவாயாக. தாவரங்களுக்கும் தாயானவளே. எங்கள் பாதங்கள் படும்போதெல்லாம் கருணை காட்டு.
நீ மிகப் பரந்தவள், பெரியவள்,வேகம் மிக்கவள்; இந்திரனால் பாதுகாக்கப்பட்டவள்; எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்; எங்களை யாரும் வெறுக்கவேண்டாம்.
தீயைப் போல அறிவு ஒளிரட்டும்; கூர்மையாகட்டும்.
யாகங்கள் நிறைந்த இந்த நிலம், எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.
இந்தமண்ணின் வாசனை தாவரங்களிலும், தண்ணீரிலும் உளது. அப்சரஸ், கந்தர்வர்கள் ஆகியோரும் இதைப் பகிந்துகொள்வர். அந்த வாசனையால் என்னையும் சுகப்படுத்து.
உன்னை எங்கு தோண்டினாலும் அவை உடனே வளரட்டும் உன் இதயத்தை நாங்கள் சேதப்படுத்தமாட்டோம்.
(அந்தக் காலத்திலேயே புறச் சூழல் பாதுகாப்பு எண்ணம்– environmental awareness–தோன்றிய நாடு இது)
பூமித் தாயே! ஆறு பருவங்களும் உன்னை அலங்கரிக்கட்டும். எங்கள் மீது வற்றாது வளத்தைப் பொழிக.
புனித ரிஷிகள் வளர்த்த, வாழ்த்திய நாடு (பூமி) இது; சப்தரிஷிக்களும் யாகம் செய்த நாடு இது. நாங்கள் வேண்டும் செல்வங்கள் எல்லாவற்றையும் அருளுக.
ஆண்கள் ஆடிப் பாடிக் கூச்சல் போடும் இந்தப் பூமியில் போர் முரசம் ஒலிக்கையில் எதிரிகள் இல்லாத இடமாக ஆகட்டும்.
நகரங்களும், வளம் கொழிக்கும் வயல்களும், உழைக்கும் மனிதர்களும் உலவும் பூமி இது; எல்லா வளங்களும் உந்தன் வயிற்றில் உளது. எல்லா பக்கங்களிலும் எங்கள் மீது கருணையைப் பொழிக.
நான் வெற்றி உடையவன்; உயர்ந்தவன்.எனக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி. எல்லா பக்கங்களிலும் வெற்றி. நான் பேசுவதெல்லாம் இனிமை. நான் பார்ப்பதெல்லாம் எனக்கு அனுகூலமாகின்றன. என்னை வெறுப்பவர்களை நான் வெல்வேன்.
இனிமை, கருணை, சாந்தி, பால், தேன் நிறைந்த பூமித் தாயே! ஆசிகளையும் பாலையும் பொழிவாயாக.
****
பாரதி பாடல்களில் எங்கெங்கெலாம் பாரத பூமி புகழப் படுகிறதோ அங்கெங்கெலாம் அதர்வ வேத செல்வாக்கைக் காணமுடிகிறது. சுருங்கச் சொன்னால் பாரதியே இந்த பூமி சூக்ததைத் தான் பல பாடல்களாக மொழி பெயர்த்தாரோ என்று நான் வியக்கிறேன். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற அவரது வரிகள் அதர்வ வேதத்தில் உள்ளது!
வேதங்களைப் படிப்போருக்கு ஆக்கபூர்வமான சிந்தனை வளரும். ஆயிரம் ‘டேல் கார்னிஜி, அந்தோனி ராபின்ஸ்’ புத்தகங்கள் படித்த பலன்கள் கிடைக்கும். மனச் சோர்வு என்பதே வாழ்வில் வராது. மன நோய்கள் அகலும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும், பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும் ஊற்றுணர்ச்சி கொடுத்து வெற்றியைத் தேடித் தந்தது வேதங்களே; தமயந்திக்கும் சாவித்திரிக்கும் சீதைக்கும் திரவுபதிக்கும் தைரியத்தையும் வெற்றியையும் தேடித் தந்தது வேதங்களே. அவைகளைப் பாதுகாத்துப் பயன்பெறுவது நமது கடமை.
****
இந்த பிளாக்—கில் 600–க்கும் மேலான எனது கட்டுரைகள் உள்ளன. வேத காலம், சிந்து சமவெளி, இந்துமதம் பற்றியும் தமிழர்களின் சிறப்புகள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன். எனது சகோதரர் நாகராஜன் எழுதிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.படித்து மகிழ்க. நல்லோர் பலரையும் அறிமுகப் படுத்துக.
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.