“நாம் மேல்நாட்டு வித்வான்களுடன் வாதம் செய்ய முடியாது”- பகுதி-3, அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்
Post No 936 Date 27th March 2014.
புத்தகத்தின் பெயர்: மகா மேரு யாத்திரை, ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரியினால் யாத்திரை செய்து எழுதப்பட்டது, ஜனவரி 1936.
புத்தகத்தில் பின் அட்டையில் உள்ள விஷயம்: “ இச் சிறு புத்தகத்தின் விலை தனம் அரியநாயகிபுரம் ஹிந்து எலிமெண்டரி பள்ளிக்கூட பண்டுக்குச் சேருகிறபடியினால் புஸ்தகம் வேண்டுபவர்கள் மேற்படி பள்ளிக்கூட கரஸ்பாண்டெண்டினிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். விலை அணா எட்டு. அரியநாயகிபுரம், பேட்டை போஸ்ட், திருநெல்வேலி ஜில்லா.
முதல் இரண்டு பகுதிகளில் பல சுவையான விஷயங்களைக் கண்டோம். இதோ மூன்றாவது பகுதி:—
நாம் ரோமாபுரியில் இறங்கியவுடன் ஹோட்டல் தலைவருக்கு என் ஆகார நியமங்கள் குறித்தும், பிராதஃகாலத்தில் சீதஜல ஸ்நானத்தைக் குறித்தும், நோடீஸ் கொடுத்தேன்; தினந்தோறும் புதிய பச்சைக் காய்கறி, பழம், பால் முதலானவைகளைப் புசிப்பதைப் பார்த்த அந்த தேசத்தாருக்கு இது புதிதான அனுபவமானதினால் என்னிடத்தில் ஒரு அபூர்வமான தெய்வபக்தி உண்டாயிற்று; ஆகையினால் நான் தங்கியிருந்த இடத்தை ஒரு வாரத்திற்குப் பிறகு விட்டு வரும்பொழுது எஜமானன் முதல் வேலைக்கரர்கள் வரைக்கும் எல்லாரும் அந்த தேச வழக்கப்படி மண்டி போட்டு நமஸ்காரம் செய்து தமது தலையைத் தொட்டு அனுக்கிரகஞ் செய்யச் சொன்னார்கள். எஜமானன் முதலானவர்கள் என் ஞாபகார்த்தமாக ஏதாவது கொடுக்கச் சொன்னார்கள். நான் அவர்கள் எந்த மதத்தினர் என்பதைக் கேட்டு உடனே அவர்களுடைய வாழ்க்கையுடன் ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் செய்து, அதற்குரிய பொருளை இங்கிலீஷில் மொழிபெயர்த்து ஒவ்வொரு ஓலையில் என் பெயருடன் எழுத்தாணியினால் எழுதி மஞ்சளைத் தடவி அனுக்கிரகித்துக் கொடுப்பேன். அதை அவர்கள் தங்கள் தங்கள் பூஜை சாமான்களுடன் சேர்த்து வித்துக்கொள்ளுவார்கள். இவர்களிற் சிலரும் கலாசாலை மாணவர் சிலரும் தங்கள் பக்தியைக் காண்பிக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்புப் பாட்டைப் பாடி வாழ்த்துவதுமுண்டு.
கேட்கிறவர்களுக்கு இப்பெரியோர் கீழ்நாட்டிற் றோன்றிய ஒரு ஆசாரியர். குளிர்ந்த ஜலத்தில் காலை நாலு மணிக்கே ஸ்நானம் செய்கிறவர். பால், பழங்களினால் ஜீவிக்கிறவர். என்று புகழ்ந்து கூறுவார்கள். இதைக் கேட்கும் ரயில் பிரயாணிகளிற் சிலர், நானிருக்கிற இடத்தைவிட்டு, கௌரவத்தைக் காட்ட வேறு வண்டிக்குப் போய்விடுகிற வழக்கமும் உண்டு. இவ்விதம் நான் திரும்பி பம்பாய் வருகிற வரையில், கப்பல்களிலும், ரயில்களிலும், ஆகாய விமானத்திலும் நடந்தது. எல்லாம் ஈசன் செயல்.
*****
ஸ்விஸர்லாண்டு தேசமானது யூரோப் மாகாணத்தில் மத்திய பூமி என்று சொல்லலாம். ஸம்ஸ்கிருத புஸ்தகசாலையும் பண்டித்ர்களு மில்லாத ஸ்விஸர்லாண்டிற்கு நான் போன நோகம், “ஆச்சர்யமான பூப்பிரதேசங்கள் எல்லாம் என் அம்சம் என்று ஸூதஸம்ஹிதையிலும் எந்த எந்த இடங்களில் அதிகாரமும் பலமும் செல்வமும், முயற்சி முதலானவைகளு மிருக்கின்றனவோ அவைகளை என் அம்சமாகத் தெரிந்துகொள் என்று பகவத் கீதையிலும் கூறியுள்ளதை நினைத்தே. என்னிடத்தில் பல வருஷம் வேதாந்தம் படித்த சீடரும், ஸமீப காலத்தில் ஸ்வர்கயாத்திரை செய்தவர்களுமான கனம் கொச்சி மஹாராஜா அவர்கள் பார்யையுமான , ராணி அவர்கள் பர்த்தா வியோகத்தினால், துக்கத்துடன் ஸ்விஸர்லாண்டில் லூஸேன் நகரத்தில் வசித்துவருவதைப் பார்த்து முடித அளவு அவர்களுக்கு ஆருதல் சொல்லவிரும்பியும் அவ்விடம் போக நேர்ந்தது.
பாரீஸ் நகரத்தில் ஸம்ஸ்கிருத பாஷை
அங்கிருந்து பாரீஸ் நகரம் 200 மைல் இருக்கலாம். இந்த நகர் வித்யாசாலையில் நீண்டநாளாக ஸம்ஸ்கிருத பாஷை வளர்ந்து, வேத சாஸ்திரங்கள் பல அச்சிடப்பட்டு 100 வருஷகாலமாக வித்வான்கள் பலருக்கு இருப்பிடமாகும். இப்பொழுது அவ்வித்யாசாலை ஸம்ஸ்கிருதப் பேராசிரியர் கனம் ஸில்வான் லெவி (Sylvain Levy) என்ற பெயர்பெற்ற வயதான கிருகஸ்தர் ஒருவர். நம் பூர்வீக ரிஷிகளை யொப்ப அவர் விளங்கி வருகிறார். அந்த வித்யாசாலை மாணவர்களுக்காக நான் உபந்நியாஸஞ் செய்ய நேர்ந்தது. அப்போது வேத ஸ்வரங்களைப் பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்தது . அதை உடனே கிராபோனில் ரிகார்ட் செய்ய விரும்பினர். அப்படிச் செய்ய உடன்பட்டேன். உடனே அந்நாட்டு வழக்கப்படி தக்ஷிணை கொடுக்க விரும்பினார்கள். உணவுக்குச் சிறிது வகையிருந்தால் கல்வியை விற்கக் கூடாதென்று நம் ஆபஸ்தம்பர் கூறியபடி நான் நீண்ட காலமாக கல்வியை விற்று வாழ்வதை நிறுத்திவிட்டேன். கிராமபோன் ரிகார்டிற்காகக் கிடைத்த ரூபாயை அந்நகரத்தில் ஏதேனும் தருமத்திற்கு உபயோகித்துக்கொள்ளக் கொடுத்துவிட்டேன். ஐரோப்பா கண்டத்திலிருக்கிற வித்யாசாலைகளில் உபந்நியாசஞ் செய்வதற்கு முன்னமேயே, டிக்கட் வைக்கக் கூடாதென்றும், எனக்கு விருந்து முதலானவை செய்யக்கூடாதென்றும் கேட்டுக்கொள்வது என் வழக்கம். எல்லாப் பாடச்சலைப் புலவர்களும் அப்படியே நடத்திவந்தார்கள். இது நம் தேசத்தினிடம் மேற்கு திசையாருக்கு மிக்க கௌரவத்தை உண்டாக்கியது.
பிறகுசெல்வத்திலும் அரசாங்கச் சிறப்பிலும் முதன்மையான லண்டன் நகரம் போய்ச் சேர்ந்தேன். நான் போனவுடனவ்விடத்தில் வாரப் பத்திரிகை யொன்றில் காலை நாலு மணிக்கே நான் தண்ணீரில் ஸ்நானம் செய்வதையும், என் ஆகார நியமத்தையும் நாள்தோறும் என் வேலைக்காக வண்டியில்லாமல் நடந்துபோவதையும் குறித்து கட்டுரை யொன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்த பலர் என்னை பார்க்க வந்தார்கள்.
என் தலையில் ஒரு பட்டுத் தலைப் பாகையும் கழுத்தில் ஒரு சால்வையும் அணிந்திருப்பதைப் பார்த்து ரஸ்தாவிலும் ஆபீஸுகளிலு முள்ளவர் கௌரவத்துடன் நடத்தலாயினர். ரயில் வண்டியிற் செலும்பொழுது ஒரு வெண்கலக் கூஜாவும் என்னிடம் இருக்கும்.
லண்டனில் வித்வான்களுக்கு எல்லா இடங்களிலும் அதிக சிறப்பு உண்டு. பிரிட்டிஷ் மியூசியம் லைப்ரேரியில் நம் தேசத்து புஸ்தகசாலைகளில் இல்லாத அபூர்வ கிரந்தங்கள் பல சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. அப்படியே இந்தியா ஆபீஸ் புஸ்தகசாலையிலும், இந்தியர் ஏட்டுப் பிரதிகளைக் கவனியாதிருந்த காலத்தில் மேனாட்டார் இந்தியாவிற்குவந்து கிராமம் கிராமமாகச் சுற்றிச் சுமார் 50 வருஷத்துக்குள் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் லைபிரிகளை ஸ்தாபித்து ஸம்ஸ்கிருத மொழியைத் தம் முயற்சியாலே படித்து ருக்வேதம் முதல் காவ்யம் வரையில் அம்மொழி நூல்களைப் பிழையில்லாமல் பதிப்பித்தும் அவரவர் தேஷ பாஷையில் மொழிபெயர்த்தும் அவ்வந்நாட்டுப் பத்திரிகைகளில் வைதிக விஷய விசாரஞ் செய்து மிருக்கிறார்கள்.
இந்தியாவின் பூர்வீக நாகரீகத்திற்கும், சரித்திரத்திற்கும், உலகத்தில் உயர்ந்த கௌரவம் உண்டாகச் செய்திருப்பதை யாரும் அறிவார்கள். இந்தக் கௌரவம் வேறு எந்த ஜனஸமூகத்திற்கும் இல்லை. ஆனால் இப்பொழுது நம் இந்தியர்கள் சாஸ்திரம் காவ்யம் இவைகளை மிகுதியாகப் படிக்கிறார்களே ஒழிய வேதார்த்தங்களையும் ச்ரௌதார்த்தங்களையும் படிப்பதில்லை. அதனால் நாம் மேல்நாட்டு வித்வான்களுடன் வாதம் செய்ய முடியாது இதைக் குறித்து நம் தேச வித்வான்கள் மூலமாகவும் பத்திரிக்கைகள் மூலமாகவும் நீங்கள் அறிந்திருக்கலாம். தெ இந்தியர்கள் மேனாட்டு வித்வான்களுக்கு உச்சாரண சுத்தமில்லை என்று சொல்லுவது வழ்க்கம்; நீங்கள் வங்காளம் முதலான தேசங்களுக்குப் போய் அவர்களுடம் ஸம்ஸ்கிருதம் பேசினால் அவர்கள் உச்சாரணம் ஆங்கிலேயருச்சரிப்பதைச் சிறப்பாக்கிவிடும் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் சில ஆஸ்ரீஅமங்களில் யோகம், தியானம் முதலானவர்களைப் பயின்றவர்கள் பிறருக்குப் பயிற்சி செய்விக்கிறார்கள். அவ்விடங்களுக்கு நானும் போயிருந்தேன். நான் மொழிபெயர்த்து வெளியிட்ட லலிதா சஹஸ்ரநாம முதலானவைகளைப் படித்திருந்ததினால் அவ்விஷயமான ஆராய்ச்சிகளை என்னுடன் பலர் பல இடங்களில் நடத்தினர்.
“காடலாகஸ் காடலாகோரம்
நான் லண்டன் போன நோக்கம் இந்தியா ஆபீஸ் உத்தியோகஸ்தரைப் பார்க்கவே. “காடலாகஸ் காடலாகோரம்” Catalogus catalogorum என்ற ஜாபிதா ஒரு ஜர்மன் வித்வானால் தொகுக்கப்பட்டிருந்தது. அது மூலமாகப் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வேலைகள் செய்யப்படுகின்றன. திருஷ்டாந்தமாக ஸாயணாச்சார்யர் வேத பாஷ்யகர்த்தா என்ற பெயரை எடுத்தால்அதன் கீழ் அவர் எந்தக் காலத்திலிருந்தார், எந்தஎந்தப் புஸ்தகங்களை எழுதினார் என்று ஆதாரத்துடன் அவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு அரிய பெயரை எடுத்து “பகவா வாசஸ்பதி: பாஷியகாரர் என்பதைப் பார்த்தால் உடனே அவர் அதர்வவேதத்திற்குப் பாஷ்யம் செய்த வரலாறு முதலியன அதில் குறிக்கப்பட்டிருக்கும். ஏட்டுப் பிரதிகளை ஆராய்கிறவர்களுக்குஇந்தப் புஸ்தகம் ஒரு சிறந்த கருவியாகும்.
இந்த “காடலாகஸ் காடலாகோரம்: எழுதினவர் ஜர்மன் தேச மகாவித்வான். இவர் பெயர் ஆபி ச் ரட்டு என்று வழங்கும். இவர் 1903ம் வருஷம் வரை கிடைத்த ஏட்டுப் பிரதிகளுக்கு முறையான ஜாபிதா எழுதினவர். 1904ம் வருஷம் முதல் இதுவரை (30 வருஷ காலமாக) இந்தியாவில் பல இடங்களில் ஏட்டுப் பிரதிகள் பல கிராமங்களில் கிடைத்து உள்ளன. அவை அங்அங்கேயுள்ள புஸ்தகசாலைகளில் சேமித்துவைக்கப்பட்ட்டிருக்கின்றன. அவைகளில் ஆபி ச் ரட் காடலாகில் வராத பல நூல்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றைச் சோதித்து வெளியிட வேண்டுவது அவசியம். இதைச் செய்ய நம் இந்தியா கவர்மெண்டாரால் இயலவில்லை; ஏனென்றால் இந்த ஸம்ஸ்கிருத ஏட்டுப் பிரதிகள் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என்ற மூன்று தேசங்களிலுள்ள பொதுப் புஸ்தகசாலைகளிலும் ஒவ்வொருவருக்கே யுரிய புஸ்தகசாலைகளிலும் அடங்கியுள்ளன; அப்புஸ்தகசாலைக்குரியார் உதவி வேண்டும் அவர்கள் உதவியைப் பெற லண்டனிலிருக்கிற இந்தியா மந்திரியாலேயே முடியும். அம்மந்திரியை ஸந்தித்து “காடலாகஸ் காடலாகோரம்” பூர்த்தி செய்யவேண்டிய அவசியத்தைத் தெரிவித்துக்கொள்வதுதான் என் யாத்திரையின் முக்கிய கருத்து. இரண்டு தினங்கள் இந்தியா மந்திரியுடன் சாம்பாஷித்தேன். அவர் இந்திய அரசாங்கத்தாருக்கு எழுதி என்னையும் டில்லியில்போய் கல்வி இலாகா அதிபதியையும் ஸெகிரிடெரியையும் நேரிற்பார்க்கும்படி அந்த ஆபீஸர் சொன்னார். அதன் பலனே இப்பொழுது சென்னை ஸர்வ கலாசாலையார் அக்காரியத்தை மேற்கொண்டிருப்பதாக அறிகிறேன். (மகாமேரு யாத்திரை, பக்கம் 44)
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.