Ganges is everywhere in Sri Lanka!
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014
This is already published in English.
மஹாவம்சத்தில் உள்ள பல வரலாற்று உண்மைகளையும் அதிசயங்களையும் 1995 முதல் ஆராய்ச்சி செய்துவந்தேன். சில நாட்களுக்கு முன் இந்தத் தொடரைத் துவங்கினேன். மஹாவம்ச ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பில் இது 6-ஆவது கட்டுரை.
சில மாதங்களுக்கு முன் சேரன் செங்குட்டுவனுக்கு காடு வாழ் குறவர், குறத்தியர் சமர்ப்பித்த பரிசுப் பொருட்களின் பட்டியலை சிலப்பதிகாரத்தில் இருந்து எழுதினேன். மறைந்து கிடக்கும் சில அரிய விஷயங்களை வெளிக் கொணர்வதற்காக பலரும் பாராட்டி எழுதினர். இதோ அசோகனின் ஆருயிர்த் தோழனும், இலங்கையின் புகழ்மிகு மாமன்னனுமான தேவனாம் பிரிய திஸ்ஸன் அனுப்பிய சில பரிசுப் பொருட்கள்:-
(( ஆதாரம் : மஹாவம்சம் அத்தியாயம் 11 ))
Gift list from Devanampriya
மூன்று அரிய ரத்தினங்கள்
அதிசய (ரத்தின) மூங்கில் தண்டுகள்
வலம்புரிச் சங்கு
எட்டுவித முத்துகள்
எட்டுவித முத்துக்கள் என்ன என்பதை மஹாவம்ச அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் சில நாட்களுக்கு முன் எழுதி விட்டேன். 99 சகோதர்களைக் கொலை செய்ததற்காக “சண்டாள அசோகன்” என்று அழைக்கப்பட்ட அசோகன் புத்த தர்மத்தைத் தழுவி நல்லவன் ஆனபின் “தர்ம அசோகன்” என்று அழைக்கப்பட்டதாக மஹாவம்சம் இயம்பும்.
தேவானாம் ப்ரியன் (தெய்வங்களுக்குப் பிரியமானவன்) என்ற அடை மொழியை இலங்கை, இந்திய மன்னர் இருவரும் வைத்துக்கொண்டனர். இந்தியாவில் அசோகன் கல்வெட்டுகளில் பெரும்பாலும் தேவானாம் ப்ரியன் என்ற பட்டப் பெயரே இருக்கிறது.
இலங்கையில் இருந்து வந்த அரிய ரத்தினங்களையும் ரத்தின மூங்கில் தண்டுகளையும் பார்த்த அசோகன் அசந்தே போய்விட்டான். இப்படிப்பட்ட அரிய பொருட்களை நான் கண்டதே இல்லையே என்று விமர்சிக்கிறான். உடனே இலங்கையின் மாமன்னனாக முடிசூட்டப் போகும் தேவானாம்ப்ரிய திஸ்ஸனுக்குப் பட்டாபிஷேகத்துக்குத் தேவையான பொருட் பட்டியலை அறிஞர் பெருமக்கள் ஆலோசனையுடன் தயாரிக்கிறான். அதில் முக்கியமான இரண்டு பொருட்கள்: கங்கை நீர், வலம்புரிச் சங்கு!! புத்த மதத்தினர் இந்துக்காளாகவே வாழ்ந்தனர்.
(வலம்புரிச் சங்கு பற்றி முன்னரே நான் ஒரு ஆய்வுகட்டுரை எழுதியுள்ளேன். அதில் சங்கின் மகிமையைக் கண்டுகொள்க)
இதோ அசோகன் அனுப்பிய பொருட்களின் பட்டியல்:
Gift list from Asoka
வெண் சாமரம், மகுடம், வாள் வெண்கொற்றக் குடை, பாதுகைகள், தலைப்பாகை, காதணிகள், கமண்டலம், ஆரங்கள், மஞ்சள் சந்தனக்கட்டைகள், சுத்தமே செய்யத் தேவை இல்லாத ஆடைகள், விலை உயர்ந்த அங்கி, நாகர் கொணர்ந்த தைலம், செம்மண், அனோதத் தடாக நீர், கங்கை நீர், வலம்புரிச் சங்கு, பொற்கலசங்கள், விலை உயர்ந்த மெத்தை.
இவை அனைத்தும் பட்டாபிஷேகத்துக்குத் தேவையானவை
பருவம் கொழிக்கும் எழில் மங்கை
உயர்ந்த மூலிகைகள்
6000 வண்டி நிறைய பறவைகள் கொணர்ந்த மலை அரிசி
இலங்கையில் கங்கை நதி
இந்தியர்கள் உலகம் முழுவதும் நாகரீகத்தை எடுத்துச் சென்றனர். இதனால் உலகம் முழுதும் எல்லா நதிகளின் பெயரும் தண் (ணீர்) என்ற தமிழ் சொல்லிலோ அல்லது கங்கை என்ற பெயரிலோ இருக்கும். தண்ணீருக்கு மட்டுமே சம்ஸ்கிருதத்தில் 280 சொற்கள் உண்டு. அதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.
இலங்கையில் எல்லா நதிகளையும் கங்கை என்றே அழைப்பர். “நதி” என்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல்லே “கங்கை”!! உலகம் முழுதும் கங்கை உண்டு என்பதை முந்தைய ஆய்வுக்கட்டுரையில் தந்துள்ளேன். மீகாங் என்ற தென் கிழக்கு ஆசிய நாட்டு நதி “மா கங்கா” என்றும் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் ஓடும் “காங்கோ” என்பது கங்கையின் மரூஉ என்றும் எகிப்தின் நைல் நதி நீல நிறத்தில் இருப்பதால் நைல் என்றும் லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி, வால்மீகி வாழ்ந்த தமஸா நதி போல மந்தமாகப் (தாமஸமாக) பாய்வதால் தேம்ஸ் என்று அழைக்கப்டுவதாக கின்னஸ் நூல் கூறி இருப்பதையும் விளக்கி இருக்கிறேன். ஐரோப்பாவில் டான்யூப் முதலிய நதிகள் “தண்”ணீர் என்ற வேச் சொல்லில் இருந்து பிறந்தவை என்பது அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளில் அடக்கிவிடலாம் இரண்டும் பாரத மண்ணில் பிறந்தவை. இவ்விரு மொழிகளையும் சிவபெருமான் அளித்ததாக திருவிளையாடல் புராணம் பகரும். தென்கிழக்காசியா முழுதும் எல்லா மொழி எழுத்துக்களும் அசோகன் பயன் படுத்திய பிராமி லிபியில் இருந்து வந்தவையே. ஆனால் இவை எல்லாம் தமிழ்நாடு வழியாக பல்லவ கிரந்தம் என்னும் எழுத்தில் இருந்து சென்றவை. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் எழுத்துக்களும் பிராமி லிபியில் இருந்து வந்தவையே. பிராமி என்பது சரஸ்வதி தேவியின் பெயர். சிங்களம் முதல் பாஷா இந்தோநேஷியன் வரை எல்லாம் நாம் உலகிற்கு வழங்கிய கொடையே!
Jaipur Maharaja took Ganges water in six huge silver pots to England by ship
இங்கிலாந்துக்கு கப்பலில் கங்கை நீர்
கங்கை நீர் — நாகரீகம் தோன்றிய நாள் முதல் பிரசித்தமானது. இன்றும் லண்டனில் நாங்கள் பூஜையில் உபயோகிக்கிறோம். மதுரை மீனாட்சி கோவிலுக்கு ‘டன்’ கணக்கில் லாரிகளில் வருவதாக ம.க.சுந்தரேச பட்டர் என்னிடம் சொல்லுவார். ஜெய்ப்பூர் மகாராஜா கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்றபோது ஆறு பிரமாண்டமான வெள்ளிப் பானைகளில் கங்கை ஜலம் கொண்டு சென்றார். இன்றும் பூஜைகளில் எந்த நீரை வைத்தாலும் அதில் கங்கையை ஆவாஹனம் செய்யும் வழக்கம் உண்டு. தீபாவளிக்கு எங்கு குளித்தாலும் கங்கையில் குளித்த புனிதம் உண்டு என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்பர். “அல்வா சாப்பிட்டாயா? லட்டு சாப்பிட்டாயா? பட்டாசு வெடித்தாயா?” என்பதெல்லாம் பின்னர் வரும் கேள்விகளே!
Ganges water seller in Rishikesh
கங்கா மதா கீ ஜெய்!!
கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.
You must be logged in to post a comment.