Ramayana ballet is staged in largest Muslim country Indonesia everyday!
Compiled by Santanam Nagarajan
Article no. 1704; dated 10 March 2015
uploaded at 10-50 am london time
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10
ச.நாகராஜன்
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!
ராமாயணம் பாராயணம்
ஆ ஸேது ஹிமாசலம் – அதாவது பாரதத்தின் தென் கோடியான சேதுவிலிருந்து (ராமேஸ்வரத்திலிருந்து), வட கோடியான ஹிமாசல மலை வரை உள்ள பிரதேசத்தில் வாழ்வோர் ராமாயணத்தைப் பாராயணம் செய்வதை வாழ்க்கைத் தவமாகவே செய்து வந்துள்ளனர்; செய்து கொண்டிருக்கின்றனர்; இனியும் செய்து வருவர். இந்தப் பாராயணம் தர்ம அர்த்த காம மோக்ஷம் – அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்களைத் தரும் என்பது மஹரிஷிகளின் வாக்கு. அந்த வாக்கை நம்பிச் செயல்படும் மக்களின் நம்பிக்கையை இந்த நித்ய பாராயணம் காட்டுகிறது.
ராம ராம ராம ராம ராம நாம தாரகம்
ராமசந்த்ர வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் சர்வலோக நாயகம்
சங்கராதி சேவ்யமான புண்ய நாம கீர்த்தனம்
என அனைவரும் தாரக மந்திரமான ராம நாமத்தைப் போற்றித் துதிக்கின்றனர்.
இதில் முக்கியமான விஷயமாக உள்ள, ஜானகியின் மனதைக் கவர்வது ராம நாமம் என்பதையும் அது புண்யநாம கீர்த்தனம் என்பதையும் திரைப்படப் பாடல் ஒன்றில் தர விரும்பினார் கவிஞர் கண்ணதாசன்.
அத்தோடு காலம் காலமாக நாம் செய்து வரும் ராமாயண பாராயணம் மங்களகரமானது என்பதோடு அது காதல் மங்களம் – மனம் ஒன்றிய இருவரைச் சேர்த்து வைக்கும் மந்திரமும் கூட என்பதையும் வலியுறுத்த விரும்பினார்.
அதைத் தன் முத்திரைப் பாடலாக இயற்றினார்.
படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது. தந்தையாக வரும் ரஜினிகாந்த் மோசமானவராக இருக்க மகனாக வரும் ரஜினிகாந்தோ நல்லவர்.
படத்திற்கு மிக அருமையாக இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர்களோ கே.ஜே. ஜேசுதாஸும் எஸ். ஜானகியும் ஆவர்.
ராமனின் மோகனம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகவே உறவு
இடமும் வலமும் இரண்டு
உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
மலர்களினூடே மோகனமும் மந்திரமும்
பூங்காவில் மலர்கள் சூழ ரஜினியும் மேனகாவும் பாடுவதாக அமைகிறது காட்சி. மரங்களினூடே காதலர் பவனியும், சிலையாக நான் நிற்பதே அற்புதம் என சிலை போல மேனகா அபிநயம் பிடிப்பதும் ஒரு புறம் மனதைக் கவர்கிறது எனில் பாடல் வரிகள் சிந்தனையைக் காதல் ரஸத்திலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்த்தி விடுகிறது – காரணம் பாடல் வரிகள்.
ராமனைப் போற்றிப் பாடும் கம்பனும் பாடலில் இடம் பெற்று விடுகிறான்! கதாநாயகியை வர்ணிக்கத் தனக்கு கவித்துவம் இல்லை என்று கூறியபடியே அழகுற கதாநாயகன் வர்ணிப்பதும் ஒரு தனிச் சுவை தான்!
காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!
ராமனின் மோகனமே ஜானகியின் மந்திரமா, அல்லது ஜானகியின் மந்திரமே ராமனின் மோகனமா? மந்திரம் மோகனத்தால் உருவானதா அல்லது மோகனத்தால் மந்திரம் சக்தி பெற்றதா? இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடக்கம்; பிரிக்க முடியாதவை என்பதே பதில். இதை அழகுறச் சித்தரிக்கும் இந்தப் பாடல் காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!
இளையஜாவின் இசையானது பாடலைத் தூக்கித் தர கண்ணதாசனின் கவிதை வரிகளோ இன்னும் உயரத்தில் ஏற்ற ராமரும் ஜானகியும் ஒரு தெய்வீகத்தைச் சேர்த்து விடுகின்றனர்.
காதல் பாடலில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் பாடல் இது என்று சொல்லி முடிக்கலாம்!
*****************
(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)
You must be logged in to post a comment.