Compiled by London swaminathan
Date: 23 April 2015; Post No: 1822
Uploaded in London 9-35 காலை
ரிக் வேதம் கி.மு 1700 அல்லது அதற்கு முந்தையது என்று மேலை உலகம் மெதுவாக ஒப்புக் கொள்ளத் துவங்கி விட்டது. நாள் ஆக ஆக ஜெர்மானியர் ஜாகோபி, சுதந்திரப் போர் வீரர் பால கங்காதர திலகர் ஆகியோர் வான சாஸ்திர கணக்குப்படி சொன்ன கி.மு. 4000-க்கும் முந்தையது ரிக் வேதம் என்றும் உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன.
1.வேத கால இந்துக்கள் நாகரீகத்தில் மிகவும் முன்னேறியவர்கள். ஏனெனில் தங்கத்தை ஆற்று மணலில் சலித்து எடுப்பதோடு, அபராஜித தங்கத்தை வெட்டி எடுப்பதோடு, தற்காலத்தில் செய்வது போல தங்கத் தாதுக்களை உருக்கியும் தங்கம் எடுத்துள்ளனர்.
2.வேத கால நகைகளின் பெயர்களைப் பார்த்துவிட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் உள்ள நகைகளைப் பார்க்கையில் வேத காலத்தில் நகைகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்கள் பணக்காரர்கள் என்பதும், உல்லாசமான வாழ்க்கை நடத்தினர் என்பதும் தெரிகிறது.
3.நகைகள், தங்கம், வெள்ளி முதலியவற்றுக்காண சம்ஸ்கிருத பெயர்களின் வேர் சொற்கள் முதலியன– வேறு ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால், ஆரியர்கள் வெளியிலிருந்த வந்தனர் என்ற கொள்கையில் பலத்த இடி விழுகிறது. அப்படி வெளியிலிருந்து வந்திருந்தால் இந்த மொழியின் தாக்கம் அங்கே இருந்திருக்கும். இது மட்டுமல்ல ஆயிரக் கணக்கான வேத கால சம்ஸ்கிருத்ச் சொற்கள் அந்த மொழிகளில் இல்லை. வில்லியம் ஜோன்ஸ் சொன்ன மொழிக் கொள்கை தவறு என்பதும் தெரிகிறது.
4.ரிக் வேதத்தில் மயில், நீர், மீன் போன்ற தமிழ் சொற்கள் இருப்பதாகக் கூறி சிலர் வியப்பர். இன்னும் சிலர், சிந்துசமவெளியில் தமிழ் “கதைக்கப்பட்ட”தற்கு இதுவும் ஒரு சான்று என்று கதைப்பர். ஆனால் நீர் போன்ற சொற்கள் பழம் கிரேக்கத்தில் இருப்பதை நான் காட்டியுள்ளேன். இப்பொழுது ரிக் வேதத்தில் காணப்படும் மணி என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களில் 400-க்கும் மேலான இடங்களில் காணப்படுவது எனது ஆராய்ச்சி முடிபுகளை உறுதிபடுத்துகிறது. அதாவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை- கிளைவிட்டுப் பிரிந்து 2000 ஆண்டானதால் இரண்டும் தனி மொழிகள் ஆயின. இதை அறிந்த நம் முன்னோர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கடன் வாங்கவும் தயங்கவில்லை. முன்னர் இருந்த மூல மொழியைச் சேர்ந்த சொற்களே நீர், மீன்,அரிசி (வ்ரீஹி), மணி, இருதயம், மயூர (மயில்) முதலியன. இன்னும் நிறைய பொதுச் சொற்கள் ரிக் வேதத்தில் உள. அவைகளைத் தனிக் கட்டுரையாகத் தருவன்.
மனைவியருக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பதில் மகிழ்ந்தனர் கணவன்மார்கள்
5.வேதங்கள் சமய சம்பந்தமான மந்திரங்களை உடையவை. அவை தங்கம், வெள்ளி பற்றிய உலோகவியல் (மெட்டல்லர்ஜி) புத்தகம் அல்ல. ஆயினும் அதில் நிறைய விஷயங்கள் உள. இவைகளை மொத்தமாக வைத்துப் பார்க்கையில் – குறிப்பாக அவைகளில் வரும் மிகப் பெரிய டெசிமல் சிஸ்டம்/ தசாம்ஸ எண்களை வைத்துப் பார்க்கையில் இது நாகரீகத்தில் சுமேரிய எகிப்தியர்களை விட முன்னேறிய நாகரீகம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதில் வரும் ஆபரணங்களின் பெயர்கள் உடலில் எல்லா உறுப்புகளிலும் நகைகள் அணிந்ததைக் காட்டுகின்றன.
6.வேத காலத்தில் பெண்கள் அணிந்த நகைகளைக் கற்பனை செய்ய, கிமு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கும் கற்சிலைகள் உதவும். கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய பெண்கள் படங்களைப் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டால் இந்தியப் பெண்கள் தான் அதிக நகைகள் அணிந்திருந்தனர் என்பதும் தெரியும். கிரேக்கர் கழுத்தில் நகைகள் இரா. சுமேரியர் கழுத்தில் கொஞ்சம் இருக்கும். எகிப்தியர் மட்டும் கழுத்தளவுக்கு நம்மை ஒட்டி நகை அணிந்திருப்பர். ஆனால் இந்துக்களோ கழுத்துக்குக் கீழேயும் இடுப்பிலும், கைகளிலும், கால்களிலும் நகை அணிந்ததை சிற்பங்களில் காணலாம்.
7.ஆண்களும் நகை அணிந்ததை வேதங்கள் செப்பும். இந்திரன், மருத்துக்கள் நகை அணிந்ததையும் அஸ்வினி தேவர்கள் தங்க ஆசனம் பொருத்திய ரதங்களில் ஏறுவதையும் அவை கூறுகின்றன.
8.தங்க கரன்ஸிக்களும் (பணமாகப் பயன்படுத்தும் தங்கக் காசு), தங்கத்தை நிறுப்பதற்கான எடை அளவுகளும் இருந்தன இதுவும் பாரதம் முழுதும் ஒரே மாதிரி இருந்துள்ளது. 100 குந்துமணி அளவு, 100 தானிய எடை என்பன வேதத்தில் காணக் கிடக்கின்றன. திவோதாச என்ற மன்னன், ஒரு புரோகிதருக்கு தங்கக் கட்டிகளைப் பரிசளித்தான். இன்னொருவர் 4 தங்கத் தாம்பாளங்களைப் பரிசளித்தார்.
9.ஆயிரம் பொற்காசு அளிக்கும் வழக்கம் தருமி (திருவிளையாடல் புராணம், அப்பர் பாட்டு) காலம் வரை இருப்பதை நாம் அறிவோம். இதுவும் வேத கால வழக்கம். மாட்டின் கொம்பில் கட்டப்பட்ட ஆயிரம் பொற்காசுகளை ஜனக மாமன்னன் பரிசளித்ததை உபநிஷத்துகள் கூறும். இவ்வளவு தங்கத்தை கி.மு 1700-ஆம் ஆண்டிலேயே பரிசளித்திருந்தால் இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்திருக்க வேண்டும்?
10.”உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் அலெக்ஸாண்டரும், கஜினிமுகமதுவும், கொலம்பசும், பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸியரும் ஏன் இந்தியாவை நோக்கி வந்தனர் என்று எழுதியுள்ளேன். ஐரோப்பவிலோ பிற நாகரீகங்களிலோ தங்கக் கட்டிகள், தங்கத் தம்பாளங்களை, முறையான சடங்குகளில் பரிசு அளித்ததாகப் படிக்க முடியாது.
11.பெண்களுக்கு தாய் தந்தையரே நகை பூட்டிய செய்திகளும் வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.
12.மணி என்பது வைரமாகவோ முத்து ஆகவோ இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் எண்ணுவர். அவைகளை நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்த குறிப்புகள் வேதத்தில் (மணி க்ரீவ) உண்டு. நூலில் கோர்த மணிகள் போல என்ற உவமை பகவத் கீதையிலும் சங்க இலக்கியத்திலும் உள்ளதை முன்னரே எடுத்டுக் காட்டி இருக்கிறேன்
13.பொற்கொல்லன், நகை விற்பவன் ஆகியோர் பெயர்களும் இருப்பதால், நகைத்தொழில் இருந்தது பற்றியும் அறிகிறோம்.
14.இன்றும் கூட பரிசு கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களில் “சதமானம் பவது” என்று ஒரு மந்திரம் சொல்லப்படும் யார் என்ன ஓதி விட்டாலும் அதை ஓதிக் கொடுக்கும் ஐயர் “லட்சம் கட்டி வராஹன்” என்று சொல்லி பெண், மாப்பிள்ளை கையில் கொடுப்பார். இவ்வளவு பெரிய தொகை ஓதி விடப்படதாலேயே அத்தகைய மந்திரங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. சதமானம் என்பது 100 குந்துமணி (ரத்தி) எடைத் தங்கம் ஆகும்.
ஒரு பிச்சைக்கார சமுதாயம், லட்சம் கட்டி வராஹன் என்று நினைத்துக்கூட பார்க்காது. வேத கால சமுதாயம் தங்கத்தில் புரண்ட சமுதாயம் என்பதால்தான் இத்தகைய மந்திரங்கள் வருகின்றன. அர்ஜுனன் உத்தரகுரு எனப்படும் இமயமலைப் பிரதேச நாட்டுக்குச் சென்று தங்கமும் ரத்தினமும் கொண்டு வந்ததாலேயே அவனுக்கு தனஞ்ஜயன் என்று பெயர்.
15.சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் தங்கம் கிடைத்ததால் அந்த நதிகளுக்கு தங்க (ஹிரண்மய) என்ற சிறப்பு அடைமொழி உள்ளது. காவிரிக்கும் ‘பொன்னி’ என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது
காஞ்சனம் ஹஸ்த லட்சணம் (கைகளுக்கழகு கனக வளையல்கள்!!)
16.நிருக்தத்தில் (சொற்பிறப்பியல்) மணி என்பதற்கு சூரிய காந்தக் கல் என்று ஒரு உரைகாரர் பொருள் சொல்லுகிறார். அந்தக் காலத்திலேயே பஞ்சை எரிக்கும் பூதக் கண்ணாடி பற்றி நம்மவர் அறிந்திருந்தனர். வயதானவர்கள் தங்கத்தை அணிந்து இறந்தால் தங்கமாகவே ஆவர் என்ற நம்பிக்கை இருந்தது ஒரு மந்திரத்தின் மூலம் தெரியவருகிறது.
ஆங்கிலக் கட்டுரையில் நான் தொகுத்துக் கொடுத்து இருப்பதன் சுருக்கத்தை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். வேத கால இலக்கியமான சம்ஹிதை, பிராமணங்களில் எந்த எந்த இடங்களில் இந்த குறிப்புகள் வருகின்றன என்ற புள்ளி விவரங்களுக்கு எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.
–சுபம்–
You must be logged in to post a comment.