தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? (Post No 2872)

aryakumari1

Research Article written by London swaminathan

 

Date: 6 June 2016

 

Post No. 2872

 

Time uploaded in London :–  15-33

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

arya2

கடந்த 100 அல்லது 200 ஆண்டுகளில்  சாதனை புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே காணமுடிவதில்லை. ஏன் இப்படிக் கடந்த கால பெண் எழுத்துச் சிற்பிகளை மறந்தார்கள் அல்லது ஒதுக்கினார்கள் என்பது ஒரு புதிராக இருக்கிறது. இவ்வளவுக்கும் அசலாம்பிகை அம்மையார் போன்றோர் திரு.வி.க. போன்றோரின் நல்லாசிகளைப் பெற்றுள்ளார்கள்!

 

உலகிலேயே அதிக பழைய பெண் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உடையது பாரத நாடுதான். ரிக்வேதத்தில் 20-க்கும் மேலான பெண் கவிஞர்களும், அதற்கு 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களும் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே. ஆனால் அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என்ற பெயர்களைத் தவிர, பாமர மனிதனுக்குப் வேறு பெயர்கள் தெரியுமா என்பது சந்தேகமே. இன்றைய பத்திரிக்கைகளில் எழுதும் பெண்கள் பெயரையும், நடிகைகள், பாடகிகள், நடன மாதர்கள் பெயரை மட்டும் எல்லோரும் சொல்லிவிடுவர்.

 

அசலாம்பிகை, வாலாம்பாள், பண்டிதை விசாலாக்ஷ்மி அம்மாள், அம்புளு, பாலாமணி என்று பெயர்களை அடுக்கினால், யார் இவர்கள்? பழங்காலக் கதைகளில் வரும் கதா பாத்திரங்களா? பெயர்களே பழைய பத்தாம் பசலிப் பெயர்களாக உள்ளனவே என்று வியப்பார்கள். கோலங்கள், சமையல் கலை பற்றிய பல புத்தகங்களைப் பெண்கள் எழுதியதில் வியாப்பொன்றும் இல்லை. ஆனால் இங்கே தரும் பட்டியல் கதை, கவிதை, நாடகம் எழுதிய பெண்களாவர்.

 

நான் லண்டனில் வாரந்தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போய் பழைய புத்தகங்களைப் பார்ப்பதால் இவர்களைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுடைய புத்தகங்களைத் தொட்டு வணங்கும் பாக்கியமும் கிடைத்தது. அத்தனையையும் படிக்க நேரம் போதவில்லை. “பேஸ்புக்” -கில் அவ்வப்பொழுது இந்த நூல்களின் படங்களையும், முகவுரை, விமர்சனம் போன்ற விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறேன்.

 

பழைய நீதி நூல்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் பண்புகளைப் போற்றும் வகையில் பல பெண்களும் நாவல்களை எழுதியுள்ளனர். ஆரிய சிகாமணிகளே! என்று அவர்கள் வாசகர்களை அழைப்பது “ஆரிய = பண்பாடுமிக்க” என்ற உண்மைப் பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்

IMG_3996 (2)

இதோ ஒரு சின்னப் பட்டியல்:–

 

1.அசலாம்பிகை அம்மாள்:

புத்தகங்களில் இவர் பெயர் ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மாள் என்று காணப்படுகிறது. இவர் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையை காந்தி புராணம் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கிறார். (நான் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டது 3 பாகங்கள்) 1921 முதல் 1924 ஆம் ஆண்டு வரை இவை வெளியாகியிருக்கின்றன. தமிழ் அறிஞர் திரு. வி.கலியாண சுந்தர முதலியார் எழுதிய முகவுரையில் இவரைப் பாராட்டி எழுதி இருக்கிறார். தமிழில் காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதிப் பாட்டு எழுதிய பெண்மணி இவர்தான்!! ஆண்களில் பலர் அந்தாதி எழுதினர். ஆனால் பெண்களில் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் ஒரு சாதனை செய்தார். காந்தியின் வரலாற்றைக் கவிதையில் எழுதுவதே கடினம். அதையும் அந்தாதிப் பாட்டுகளாக எழுதுவது அதைவிடக் கடினம்!

 

இவர் திண்டிவனம் தாலுக்கா இரட்டணையில் 1875ல் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்ததால் இவரது தந்தை பெருமாள் ஐயர், இவரை திருப்பாதிரிப்புலியூரூக்கு அழைத்துச் சென்று தமிழும் சம்ஸ்கிருதமும் கற்பித்தார். பின்னர் இவர் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். பெண் விடுதலை, நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். இவரை திரு.வி.க. ‘தற்கால அவ்வையார்’ என்று அழைத்தார். அசலாம்பிகை அம்மையார் எழுதிய பிற நூல்கள்:- திலகர் புராணம், திருவுடையூர் தல புராணம், திருவாமாத்தூர் புராணம், இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல், ஆத்திச் சூடி வெண்பா, குழந்தை சுவாமிகள் பதிகம்

IMG_4175

IMG_4176

 

IMG_4186

 

 

 

 

 

IMG_4189

IMG_4190

2.வி.எஸ்.வாலாம்பாள் அம்மாள்:-

வேதாந்தப் பாட்டுகள் என்ற பெயரில் இவர் தொகுத்து வெளியிட்ட நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. 1907ஆம் ஆண்டு பதிப்பு இது. ஜீவ நாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் என்று 1908ல் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் பலவர்ண இணைப்பு வரைபடமும் உள்ளது. கிடைக்கும் பல பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதாக அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவருக்கு அத்வைதத்தில் உள்ள ஈடுபாடும் ஞானமும் அந்தத் தொகுப்பிலேயே தெரிகிறது.

 

இவர்பின்ன வெளியிட்ட நூல்கள்; வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டமுள்பட) ஞான ராமாயனக் கப்பலும் (இரண்டாம் பதிப்பு), குசல வாக்கியம்,  அனந்தங்காடு ஸ்ரீ பார்வதியம்மன் சோபனம்.

இவர் புத்தகம் கிடைக்கும் இடம் என்று தனது பெயருடன், போஸ்டாபீசுக்கு பக்கத்து வீடு, எழும்பூர் என்று எழுதி இருப்பதால் எழும்பூர்வாசி என்பது தெரிகிறது.

IMG_2527IMG_2534

3.அம்புளு:

இவர் 1910 ஆம் ஆண்டில் “அப்பாசாமி சாஸ்திரி” என்ற தமிழ் நகைச்சுவை நூலை எழுதியுள்ளார்.

4.கே.அலர்மேல் மங்கை:

பண்டிதை ஸ்ரீமதி கா.அலர்மேல் மங்கை என்ற பெயர், ‘திராவிட மதம்’ என்ற நூலின் ஆசிரியராக காணப்படுகிறது. இது 1914ல் வெளியான நூல்.

 

5.வள்ளியம்மன் சோபனம்:

அலமேலு அம்மாள் என்பவர், பாலக்காட்டிலிருந்து 1915-ல் வள்ளியம்மன் சோபனத்தை வெளியிட்டுள்ளார்.

IMG_5910 (2)

6.பண்டிதை விசாலாக்ஷியம்மா:

கடந்தகாலத்தில் அதிக நூல்களை எழுதிக் குவித்தவர் பண்டிதை விசாலாக்ஷியம்மா. இவர் கதைகளையும், நாவல்களையும் எழுதியர். இவர் எழுதிய கதைகள்:-

 

மஹேச ஹேமா என்ற நாவலை 1912ம் வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்திலேயே இவருடைய படைப்புகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது.

லலிதாங்கி, ஜலஜாக்ஷி, தேவி சந்திரபிரபா, ஜோதிஷ்மதி, நிர்மலா,ஆனந்த மஹிளா, ஹேமாம்பரி, ஸரஸ்வதி, கௌரி, ஞானரஞ்சனி, ஸுஜாதா, வனஸுதா, ஜெயத்சேனா, மஹிஸுதா, ஸ்ரீமதி ஸரஸா, இரட்டைச் சகோதரர்கள், விராஜினி, ஆரியகுமாரி, ஸ்ரீகரீ, ஜ்வலிதாங்கி

 

ஒவ்வொன்றும் எட்டு அணா விலை உடையது. 1908க்கும் முன்னரே இவர் 10 நூல்களை எழுதியது 1908 ஆம் ஆண்டு வெளியான ஸுஜாதா முதல் பக்கத்திலிருந்து தெரிகிறது. வித்யா குரு வி.நடராஜ அய்யருக்கு அதை சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்தான் இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

 

லோபகாரி பத்திரிக்கைக்கு ஆதரவு கோரியும் விசாலாட்சி எழுதியுள்ளார்.

பின்னர், இவர் தன்னை “எடிட்டர், ஹிதகாரிணீ, மயிலாப்பூர்” என்றும் எழுதி இருப்பதால் இவர் சென்னையில் வசித்தவர் என்பது தெரிகிறது.

 

IMG_5914 (2)

7.ஸ்ரீமதி பாலம்மாள்

இவர் எழுதிய நூல்:- ‘சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்’

டாக்டர் ஏ.ஆர்.வைத்தியநாத சாஸ்திரியார் அவர்களின் குமாரத்தியாகிய ஸ்ரீமதி பாலம்மாள் இயற்றியது,என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். வெளியான ஆண்டு 1914.

பாலம்மாள் முன்னுரையும் இதிலுள்ளது.

 

8.கிருஷ்ணம்மாள்:

ஸ்ரீ மஹாபக்த விஜயம் (ஞானேசுவர சரித்திர கீர்த்தனைகளும், பக்தி வைராக்கிய கீர்த்தனைகளும்) – என்ற நூலில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ கிருஷ்ணம்மாளவர்களால் இயற்றப்பட்டன என்று அச்சிடப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆண்டு 1915

 

9.ராதாமணி

ஸ்ரீமதி ராதாமணி எழுதிய “பிரசன்னகுமாரி” என்ற நூல் 1937ல் தஞ்சாவூரில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பின்கீழ் பழங்கால தமிழ் நாடகம் என்று எழுதியுள்ளார். விலை 12 அணா.

IMG_5957 (2)

10.சாமுவேல் அம்மாள் மலைமகள்

இல்லற இன்ப இரகசியம் என்ற கிறிஸ்தவ சமய நூலை ஏ.எம்.பி.சாமுவேல் அம்மாள் இயற்றியுள்ளார். விலை 10 அணா. இந்திய கிறிஸ்தவ லிடெரேச்சர் சொசைடி இதை வெளியிட்டது.

11.மலைமகள்

மலைமகள் என்ற பெயரில் அமிருதவல்லி என்ற நாவலை ஒரு  பெண்மணி எழுதியிருக்கிறார். இதை வெளியிட ஊக்குவித்த விசாலாக்ஷ்மி அம்மாளுக்கு அவர் நூல் முகவுரையில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.

 

மேலே கண்ட நூல்களில் பெரும்பலானவை 100 ஆண்டுகளுக்கு முன் வெளியானவை. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாரதி கண்ட கனவு அவர் வாழ்ந்த காலத்திலேயே ஓரளவு நிறைவேறியதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நூற்றாண்டுக்கு முன் பெண்கள் ஆற்றிய எழுத்துத்துறை சேவை, டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்குரியது. பிரிட்டிஷ் லைப்ரரியிலும், அது போன்ற பழைய லைப்ரரிகளிலும் நிறைய நூல்கள், காத்திருக்கின்றன.

–சுபம்–

 

 

Leave a comment

1 Comment

  1. அன்பர் லண்டன் ஸ்வாமிநாதன் அவர்களுக்கு,
    மிகவும் அருமையானதொரு விவரங்களை எடுத்தளித்ததற்கு
    மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி.
    தங்கள் நலங்கோரும் ,
    பிரஹ்மண்யன்,
    பெங்களூரு

Leave a comment