உடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்!

Post No. 2922
Date 27th June 2016
Written by london swaminathan
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்மணி போரில் காயமடைந்தோருக்கு உதவி செய்து
புகழ் பெற்றதை அறிவோம். மேலை நாடுகளில் இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஹாஸ்பிஸ்’Hospice
என்ற அமைதியான தங்கும் இடங்கள் இருப்பதை அறிவோம். முதியோர் காப்பகங்கள் இப்போது பல்கிப் பெருகி வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தும் அறக்கொடை நிறுவனங்களும்
பெருகி வருகின்றன. ஆனால் இவையனைத்தையும் பாரத நாடுதான் முதல், முதலில் உலகிற்குக் கற்பித்தது என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகளும், மணிமேகலை முதலிய காப்பியங்களும்,
புராணக் கதைகளும் சான்றாகத் திகழ்கின்றன.
உடலூனம் அடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்காக
இன்று நிறைய அறக்கொடை நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன. அதே போல அரசாங்கமும் பல சலுகைகலை அறிவிக்கின்றன. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இது பற்றி சிந்தித்து எழுதிவைத்திருப்பது வியப்பானது; மற்றும் தமிழர்களின் மனிதாபிமானத்துக்கும் இது ஒரு
எடுத்துக்காட்டு.

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்போர் பின்ன்வரும் பாடல்களைப் படித்தாலே போதும்:–

காணார் கேளார் கால்முடமானார்
பேணுதலில்லார் பிணிநடுக்குற்றார்
யாவரும் வருக —
என்று அழைத்து மணிமேகலை உணவளித்ததை மணிமேகலை காப்பியம் மூலம் அறிகிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்பது பாரத நாடு முழுதும் போற்றப்படும் கொள்கை.

இதோ இன்னும் ஒரு சான்று:–

புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டு இல்லாதார் – கண்பட்டாங்

காழ்ந்து நெகிழ்ந்தவர்க்கீந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (சிறுபஞ்சமூலம்)

பொருள்:- போரில் காயம் அடைந்தவர்களுக்கும், காப்பாற்றுவார் இல்லாத அனாதைகளுக்கும், உயிர்போகும் தருவாயில் இருப்பவர்க்கும், கண் தெரியாதவர்களுக்கும், இரண்டு காலும்
இல்லாமல் முடமானோருக்கும், மனம் உருகி, நெகிழ்ந்து உதவி செய்தவர்கள்,  சாகும் வரைக்கும் கஷ்டம் இல்லாமல் இன்புற்று இருப்பார்கள் என்று சிறுபஞ்சமூலம்
சொல்லும்.

ஏலாதி என்னும் நூலிலும் ஒரு பாடல் வருகிறது:-

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் – குடம்பட்

டுடையராயில்லுளு ணீத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று (ஏலாதி)

பொருள்:– பெரும் கடனில் சிக்கித் தவிப்போருக்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர்  முதலியோர்க்கும், எளியவர்களுக்கும், முடவர்க்கும் வாழ வழியற்ற முதியவவர்களுக்கும் அனாதைச் சிறுவர்களுக்கும் உதவுவோர் இந்த மண்ணுலகில் நால் வகைப் படைகளையுடைய
அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஏலாதி கூறும்.

இறுதியாக அதே நூலில் இருந்த இன்னொறு பாடலையும் காண்போம்:–

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் — போயிழந்தார்

கைத்தூண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கீந்தார்

வைத்து வழங்கி வாழ்வார்

.

பொருள்:–
அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவையர்க்கும், ஊமைகளுக்கும், வியாபாரத்தில் முதல் முழுதையும் இழந்தோருக்குமுணவுப் பொருளை இழந்தவர்க்கும், குருடர்களுக்கும் உதவியவர்கள் பிற்காலத்துக்கு புண்ணியம் சேர்த்து
வைப்பவராவர். போகும் வழிக்குப் புண்ணியம் தேடியவர் ஆவர்

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: