வேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (Post No.3188)

imgres

written by London swaminathan

Date: 25 September 2016

Time uploaded in London:12-35

Post No.3188

Pictures are taken from various sources; thanks.

 

 

ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களின் காலம் பற்றி பல்வேறு கருத்துகள் உண்டு. ஆயினும் இதை முதல் முதலில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டோர் வெளிநாட்டினர்தான். அவர்களில் எந்த இரண்டு ஆட்களும் ஒரே கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் எல்லோரும் மாக்ஸ்முல்லர் (Friedrich Max Muller 1823-1900)  சொன்ன ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டனர். யாரும் இதை கி.மு.1200–க்குக் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். பலர் இதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது இதற்கும் கீழே கொண்டுவர முடியாது என்றுதான் நான் சொன்னேன். அதற்கு முன்னாலும் இருக்கக் கூடும் என்றார்.

 

இந்துக்களைப் பொறுத்தமட்டில் வேதத்துக்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் அது எப்போதுமே வானத்தில் உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ரிஷி முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் — நாம் ரேடியோ கேட்பது போல — கேட்டு அறிகிறரர்கள். அதனால் அதற்கு சுருதி (கேள்வி) என்று பெயர். மனிதனால் இயற்றப்படாததால் அதை ‘அபௌருஷேயம்’ என்றும் சொல்லுவார்கள்.

rigveda_0

ரிக் வேதத்திலேயே (10-90-9), யாகத்திலிருந்து வேதங்கள் தோன்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஞான வேள்வி இயற்றுகையில் இந்த உண்மை அறிவு அவர்களுக்குப் புலப்பட்டது. வேதம் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் “அறிவு” என்றே சொல்ல வேண்டும்.

தஸ்மாத் யக்ஞாத் சர்வ ஹுத: ருச: சாமானி யக்ஞிரே

சந்தாம்ஸி ஜக்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத் அஜாயத

– ரிக் வேதம், புருஷசூக்தம், 10-90-9

 

ரிக்வேதத்துக்குள்ளேயே (1-1-2) முற்கால ரிஷிகள் பற்றிய குறிப்புகள் உளதால் அவைகளுக்கு 300 ஆண்டுக்கால வீச்சு கொடுத்து மிகப் பழைய மந்திரம் கி.மு.1500 வாக்கில் வந்திருக்கலாம் என்றும் ஊகிப்பர்.

தமிழில் சங்க இலக்கியத்திலும்  ரிக் வேதம் போலவே 400 புலவர்களுக்கு மேல் உள்ளனர். அவை அனைத்தும் உருவாக 300 ஆல்லது 400 ஆண்டுகள் வீச்சு கொடுக்கப்படுகிறது.

 

atharva-veda

மாக்ஸ்முல்லரது ஊகம் (hypotheses):

 

ஒரு மொழி 200 ஆண்டுக் காலத்துக்கு ஒரு முறை வேறு ‘நடை’ அல்லது

‘பாணி’யில் (literary Style) எழுதப்படும் என்பது மாக்ஸ்முல்லரது “கண்டுபிடிப்பு”.

 

வேதத்தின் “அந்த”ப் பகுதி (முடிவுப் பகுதி) உபநிஷத். இதை வேதாந்தம் (வேத+ அந்தம்) என்பர். இதில் புத்தமத தாக்கம் எதுவும் இல்லை. ஆகையால இது புத்தருக்கு முந்தியது என்று சொல்லி அவருக்கும் வேதாந்தத்துக்கும் இடையே 200 ஆண்டு இடைவெளி கொடுத்து, மாக்ஸ்முல்லரே தன்னிச்சையாக கி.மு.800 என்று முத்திரை குத்தினார். இந்திய வரலாற்றில் எல்லாவற்றையும் புத்தரின் காலத்தை (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) வைத்துதான் நிர்ணயித்துள்ளார்கள். உபநிஷத்துக்கு  முந்தைய ‘பிராமண’ங்களுக்கு கி.மு 1000 என்றும்  அவைகளுக்கும் முந்தைய சம்ஹிதை எனப்படும் மந்திரப் பகுதிகளுக்கு குறைந்தது கி.மு 1200 என்றும் மாக்ஸ்முல்லர் சொல்லிவிட்டார்.

 

உபநிஷத் காலம் – 600 முதல் 800 வரை

பிராமணங்களின் – 800 முதல் 1000 வரை

சம்ஹிதைகளின் காலம் – 1000 முதல் 1200 வரை

 

மாக்ஸ்முல்லர் கையாண்ட முறையை வேறு எந்த நாட்டு இலக்கியத்துக்கும் யாரும் பின்பற்றவில்லை. அது தவறு என்பதை நான் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு நிரூபிக்கிறேன்.

 

 

தமிழில் திருக்குறளுக்கு ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் சில அறிஞர்கள் சண்டை போட்டு கி.மு. 31 என்று தன்னிச்சையாக முடிவு செய்தனர். சிலப்பதிகாரத்தில் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனை”  (C.E.132) செங்குட்டுவனின் சம காலத்தை சேர்ந்தவனாகக் காட்டுவதால் செங்குட்டுவன் இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளப்பட்டது. சங்க இலக்கியம் அனைத்தும் முதல் மூன்று நூற்றாண்டுகளை சேர்ந்தவை என்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில் அதில் ரோமானிய சாம்ராஜ்யத் தொடர்பு பேசப்படுவதாலும் அக்காலக் காசுகள் தமிழ் நாடு முழுதும் கிடைப்பதாலும் அது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் சங்க இலக்கிய நடை வேறு; சிலப்பதிகார நடை வேறு; திருக்குறள் நடை வேறு. நாமோ இவை அனைத்தையும் 200 ஆண்டுக்குள் வைக்கிறோம்! மாக்ஸ்முல்லர் விதிப்படி இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 200 ஆண்டுக் கால இடைவெளி இருக்க வேண்டும்.

 

yajur

வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் திருக்குறளின் காலத்தை மிகவும் பின்னுக்குத் தள்ளியதற்கு அதிலுள்ள வடமொழிச் சொற்களும், அதிலுள்ள புதிய இலக்கணப் பிரயோகங்களும் காரணம். சிலப்பதிகாரத்திலோ வடமொழி புராணங்களைப் போல அத்தியா யத்துக்கு அத்தியாயம் (காதைக்கு காதை) மாயாஜாலம், மந்திரம் கடவுள் வழிபாடு, கோவில்கள், பார்ப்பனர் புகழ்ச்சி முதைலியன உள்ளன. இதை ஏழாம் நூற்றாண்டுக் காவியம் என்பார் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் Dr S R K of Madurai). நானோ மொழி நடை முதலியனவற்றைக் கொண்டு தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று காட்டியுள்ளேன். சுருக்கமாகச் சொல்லப்போனால்  மாக்ஸ்முல்லரின் விதி உலகில் எந்த மொழிக்கும் பொருந்தியதாக இதுவரை நான் படித்ததில்லை.

 

 

காலப்போக்கில் “நடை” (Style and language) மாறும் என்பது உண்மையே. சொல்லப்போனால் மாறுதலுக்கு உள்ளாகாத விஷயம் (Change is inevitable) எதுவுமே இல்லை.

 

 

மேலும் நாங்கு வேதங்களும்  உலகில்  வேறு எந்த இடத்திலும் இல்லாத புதுமை உடைத்து. அதாவது மற்ற மொழிகள் எல்லாம் பேசப் பேச மாறும் ஆனால் வேதம் மட்டும் மாறாது. ஏனெனில் அதை கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதால் மாற முடியாது. மற்ற மொழியினரைப் போல பரப்பி இருந்தால் அதில் மாறுதலைத் தவிர்க்க முடியாது.

 

யாஸ்கர் என்பவர் ‘நிருக்தம்’ எழுதினார். அவருடைய காலம் கி.மு.800 என்று வெளிநாட்டினர் கணிக்கிறார்கள். அவரே வேதத்தின் பல சொற்களுக்கு பொருள் தெரியாமல் போய்விட்டது என்று சொல்லுகிறார். அப்படியானால் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னராவது இந்த மந்திரங்கள் (சம்ஹிதை) சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவருக்குப் பின்னர் வந்த பாணினியோ புதிய சம்ஸ்கிருத அமைப்புக்கு இலக்கணம் எழுதியுள்ளார். அவர் எழுதிய சம்ஸ்கிருத மொழி இலக்கணம் வேத கால சம்ஸ்கிருத இலக்கணத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. ஆகையால் ஒரு ஆயிரம் ஆண்டு இடைவெளியாவது கொடுக்கவேண்டும்.

 

இவை அனைத்தும் உலகிலுள்ள சாதாரண மொழிகளுக்கு கொடுக்கப்படும் விதிகள். வேதமோ இன்று வரை மாறாத- மாற்ற முடியாத — அமைப்பு கொண்டது. அதாவது ஒரு சொல்லைக் கூட எழுத்தைக்கூட மாற்ற முடியாமல் மனப்பாடம் மூலம் — வாய்மொழி (அத்யயனம்) மூலம் பரப்பப்பட்டது. சங்கப் புலவர்கள் இதை “எழுதாக்கிளவி” என்று போற்றுகின்றனர். உலகில் எழுதாமல் காக்கப்பட்ட புத்தகம் இது ஒன்றே. ஆகையால மற்ற மொழிகளுக்குப் பொருந்தும் விதிகள் இதற்குப் பொருந்தா. அப்படியே பொருந்தும் என்று வாதாடினாலும் ஆயிரம் ஆண்டு இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதே மேலே கூறப்பட்டுள்ளது.

 

வானவியல் முறை பற்றி அடுத்த கட்டுரை யில் காண்போம்

தொடரும்…………………………………….

 

Leave a comment

Leave a comment