மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி! (Post No.3583)

Picture of Dr Edmund Locard

Written by S NAGARAJAN

 

Date: 28 January 2017

 

Time uploaded in London:-  6-18 am

 

 

Post No.3583

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

20-1-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் 311ஆம் அத்தியாயமாக வெளியாகியுள்ள கட்டுரை

 

 மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி!

 

BY ச.நாகராஜன்

t

“ஒருவருடன் ஒருவருக்கு ஏற்படும்  இருவரிடையேயான தொடர்பில் ஒரு பரிமாற்றம் நிகழ்கிறது”

                   –  லொகார்ட் விதி (Locard’s exchange principle)              

                                               

 

    இன்றைய தமிழ் டிவி சீரியல்களில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் காட்சியோ அல்லது ஒரு மருத்துவ மனை காட்சியோ அநேகமாக இடம் பெறாமல் இருக்காது. கொலை, ஆஸ்பத்திரி, டி என் ஏ சோதனை என மர்மமும் திகிலும் தமிழில் மட்டுமல்ல மேலை நாட்டு தொலைக்காட்சி சீரியல்களிலும் உண்டு.  

 

  

    ஆயிரக்கணக்கான மர்ம நாவல்களில் கொலைகாரனைப் பிடிக்க துப்பறியும் நிபுணர்கள் படும் பாட்டை விவரிக்கும் மர்மக் கதை எழுதும் எழுத்தாளர்கள் வாசகர்களை திக்பிரமை அடையச் செய்கிறார்கள். இந்த எழுத்தாளர்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி ஒருவர் உண்டு.

அவர் தான் டாக்டர் எட்மண்ட் லொகார்ட் (Dr Edmond Locard தோற்றம் 13-12-1877 மறைவு 4-5-1966)

 

 

    பிரான்ஸின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற செல்லப் பெயரைப் பெற்ற அவர் தான் இன்று துப்பறியும் நிபுணர்கள், மர்மக் கதை எழுத்தாளர்கள், டிவி கதாசிரியர்கள் ஆகியோர் தவறாமல் பயன் படுத்தும் ஒரு முக்கிய விதியைக் கண்டு பிடித்துச் சொன்னவர்.

 

அந்த விதி, “ஒவ்வொரு குற்றவாளியும் தவறாமல் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறான்” என்பதே! ஒவ்வொரு தொடர்பிலும் ஒரு தடயம் இருக்கிறது (Every contact leaves a trace) என்ற அவரது பொன்னான விதி எந்தக் காலத்துக்கும் பொருந்தும் உண்மையாகத் திகழ்கிறது.

 

     1887ஆம் ஆண்டில் சர் ஆர்தர் கானன் டாயில் தனது நாவலில் பிரபலமான ஷெர்லாக் ஹோம்ஸ் என்னும் துப்பறியும் நிபுணரை அறிமுகப்படுத்தினார். ஷெர்லாக் ஹோம்ஸ் எந்த ஒரு மர்மத்தையும் அறிவியல் ரீதியில் அணுகி அதை விடுவிப்பார்.

 

 

இந்த நாவல்களில் மனம் லயித்துப் போனார் இளைஞரான எட்மண்ட் லொகார்ட். தடய இயலில் (Forensic Science) மனத்தைப் பறி கொடுத்த லொகார்ட் அதில் ஆழ்ந்து ஈடுபடலானார். குற்றம் புரிந்த இடத்தில் நிச்சயம் ஒரு தடயம் இருக்கும். ஒரு தலைமயிரோ, ஒரு ரத்தக் கறையோ அல்லது ஏதோ ஒரு பொருளோ நிச்சயம் இருக்கும். அதை கண்டுபிடித்து விட்டால் குற்றவாளி பிடிபட்டு விடுவான். ஆகவே ஒரு கொலை நடந்து விட்டால் அந்த இடத்தில் உள்ள அனைத்தையும் முதலில் படம் பிடிக்க வேண்டும். ஒன்றையும் உதாசீனப்படுத்தாமல் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார் அவர்.

 

 

     மருத்துவ ஆய்வாளராகப் பணி புரிய முதல் உலகப் போரில் அவருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்குக் காரணம் என்ன எனப்தை ஆராய வேண்டியது அவரது முக்கியப் பணியாக அமைந்தது. வீரரின் உடலில் உள்ள ரத்தக் கறை, அவரது ஆடை, ஆயுதம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து மரணத்திற்கான காரணத்தை அவர் நிர்ணயிக்கலானார். இந்த அனுபவம் தந்த உத்வேகத்தால் 1910ஆம் ஆண்டு குற்றத்தை ஆய்வு செய்யும் உலகின் முதல் தடயவியல் லாபரட்டரியை லியான்ஸ் நகரில் நிறுவினார். அவருக்குப் பிடித்த் ஷெர்லாக் ஹோம்ஸைப் போலவே தர்க்கம், ஆழ்ந்த நம்பிக்கை, தீர்க்கமான சிந்தனை, அறிவியல் ஆய்வு இவற்றின் மூலமாக ஒவ்வொரு மர்மத்தையும் துலக்க ஆரம்பித்தார்.

 

 

அவர் பிள்ளையார் சுழி போட அவரது வழிமுறை இன்று உலகெங்கும் பின்பற்றப்பட்டு குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது; மர்மங்களை அவிழ்க்கிறது.

 

1912இல் அவர் விடுவித்த ஒரே ஒரு கொலை கேஸை மட்டும் இங்கு காண்போம். 

 

 

பிரான்ஸை சேர்ந்த மேரி லடெல்லி என்ற இளம் அழகி தனது பெற்றோரின் வீட்டில் இறந்து கிடந்தாள். அவளுக்கு எமிலி கோர்பின் என்ற ஒரு பாய் ஃப்ரண்ட் உண்டு. போலீஸார் அவனை விசாரிக்கும் போது கொலை நடந்த நேரத்தில் தன் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னான். தான் நிரபராதி என்றான். போலீஸார் அவன் நண்பர்களை விசாரித்த போது  கொலை நடந்த அந்த நிமிடத்தில் அவன் தங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது உண்மை என்று அவர்கள் சாட்சியம் கூறினர். அவர்கள் பொய் சொல்லவில்லை என்று போலீஸார் நம்பினர்.

 

 

    சவத்தைப் பார்த்த லொகார்டுக்கோ ஏதோ ஒன்று மர்மமாக இருக்கிறது என்று புலப்பட்டது. அவள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவர் உறுதியாக நம்பினார். ஆனால் நிரூபிக்க வேண்டுமே!

 

 

     கோர்பினை வரவழைத்து விசாரிக்கும் போது அவனது நகக் கண்களில் ஆழத் தோண்டி சில செல் மாதிரிகளை எடுத்துக் கொண்டார். அதை மைக்ரோஸ்கோப்பின் கீழே வைத்து ஆராய்ந்தார். அந்த திசுக்களில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் சிறு தூசித் துணுக்கு ஒன்று இருந்தது. அதை மேலும் ஆராய்ந்த லொகார்ட் அது பெண்களின் மேக்கப் சாதனங்களில்  ஒன்று என்று இனம் கண்டார். அந்தக் காலத்தில்  மேக்கப் சாதனங்கள் புழக்கத்திற்கு வந்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆகவே அதைச் சற்று மேலும் ஆராய ஆரம்பித்தார் லொகார்ட்.

 

 

   இளம்சிவப்பு மேக்கப் சாதனங்களை யாரெல்லாம் தயாரிக்கிறார்கள் என்று ஆராய  ஆரம்பித்த அவர் ஒரு கெமிஸ்டிடம் சென்ற போது லடெல்லிக்கு தான் அதை பிரத்யேகமாகத் தயார் செய்து தந்ததாக அவர் சொன்னார். உடனே அவர் தயாரித்த மேக்கப் பவுடரை வாங்கி கோர்பின் கையிலிருந்து எடுத்த சாம்பிளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அது அப்படியே அச்சு அசலாக ஒத்திருந்தது.

 

 

    கோர்பினை வரவழைத்த லொகார்ட் நீ தான் லடெல்லியைக் கொலை செய்தாய் என்று ஆதாரத்துடன் சொல்லவே அவனும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நண்பர்கள் சாட்சியம் என்ன ஆனது? நண்பர்கள் திகைத்தனர். ஆனால் அதையும் கோர்பினே விளக்கி விட்டான். முன்பாகவே கடிகார நேரத்தை மாற்றிப் பின்னோக்கி வைத்து விட்டதால் அவர்கள் கொலை நடந்த நேரத்தில் கோர்பின் இருந்ததாக விவரம் அறியாமல் கூறி விட்டனர்.

 

கேஸ் முடியவே லொகார்டின் புகழ் பரவியது. கூடவே அவர் விதியும் பிரபலமானது!

 

 

 பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான சி எஸ் ஐ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷனின் 16வது தொடரில் அவரது விதி சுட்டிக்காட்டப்பட்டது. இன்னும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் அவரது விதியைப் பயன்படுத்தும் போது அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றன!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

 

கிரேக்க தத்துவஞானியான எம்பிடோக்ளெஸ் (Empedocles) ஒரு விஞ்ஞானியும் கூட. தர்க்கரீதியான அறிவால் எதையும் ஆராய்ந்து பார்த்ததால் அவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. கிரேக்கத்தில் சிசிலியில் இருந்த அக்ரிஜெண்டொ காலனி வாழ் மக்கள் அவருக்கு ம்குடம் கூட சூட்டி மகிழ முன் வந்தனர். ஆனால் அவர் தான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார். பெரும் பகுத்தறிவுவாதியாக இருந்த போதும் கூட நாளடைவில் தனக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்று அவர் நம்ப ஆரம்பித்து விட்டார்.

 

 

   ஒரு கட்டத்தில் தன்னை  க்டவுள் என்று நம்பிய அவர் தனது மறைவும் கூட எந்த ஒரு தடயமும் இல்லாமல் திடீரென்று மாயமாக மறைந்து போவதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

 

 

    ஆகவே ஒரு நாள் இரவு திடீரென்று தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறிய அவர் பெரும் எரிமலையான மவுண்ட் எட்னாவுக்குச் சென்றார்.  அந்த எரிமலை வாயில் இருந்த குழியில் அவர் விழுந்தார். எரிமலை அவரை விழுங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது காலணியில் ஒன்று வெளியே தூக்கி எறியப்பட்டது.

    

 

மறுநாள் நகர மக்களில் சிலர் இந்தக் காலணியை எட்னா மலையில் விளிம்பில் பார்த்து விட்டனர். அதை எடுத்ததில் நடந்தது என்னவென்று அனைவருக்கும் புரிந்து விட்டது.

எம்பிடோக்ளெஸ் கடவுள் போல மாயமாக மறையவில்லை என்றும் தனது கர்வத்தின் உச்சகட்டமாக எரிமலையில் விழுந்து இறந்தார் என்றும் அவர்கள் தெரிந்து கொண்டு சிரித்தனர்.

 

 

விஞ்ஞானி ஒருவரின் தவறான அகம்பாவம் அவரை மரணத்திற்குக் கொண்டு சென்று விட்டது!

 

************

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: