கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம் (Post No.4960)

Written by London Swaminathan 

 

Date: 29 APRIL 2018

 

Time uploaded in London – 9-25 am (British Summer Time)

 

Post No. 4960

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எட்டெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களின் புகழை இந்துக்கள் அனைவரும் அறிவார்கள்.

 

ஓம் நமோ நாராயணாய என்று சொல்லி, கோபுரத்தின் உச்சியில் இருந்து எட்டெழுத்து மந்திரத்தின் பெருமைதனை பறை  சாற்றினார் ராமானுஜர்.

ஐந்தெழுத்தின் மந்திர சக்தியை நமசிவாய என்று சொல்லி பல அற்புதங்களைச் செய்து தமிழ் கூறு நல்லுலகத்தை சைவ நெறியில் திருப்பினர் அப்பர், சம்பந்தர், சுந்தர மாணிக்க வாசகர் முதலானோர்.

 

ஓம் சரவண பவ என்று சொல்லி ஆறெழுத்தின் மந்திர சக்தியை உலகிற்கு நிலை நாட்டினர் அருணகிரி நாதர், தேவராய சுவாமிகள் முதலானோர்.

 

கம்பன் பாடிய ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் பிரஹலாதன் வாயிலாக எட்டெழுத்து மந்திரத்தின் மஹிமையை கம்பன் சொல்லும் அழகு தனி அழகு. கம்பன் வழி தனீ,,,,,,,,,,,,,,,,,, தனி வழி!

 

கம்பன் பாடல் ஒவ்வொன்றையும் மென்று, கடித்து, சுவைத்து, ரஸித்துப் படிக்க வேண்டும்.

 


சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

 

என்று பாரதி சொன்னானே அது பாரதி கவிதைக்கும் பொருந்தும்; கம்பன் கவிதைக்கும் பொருந்தும்.

 

இதோ எட்டெழுத்து மந்திரப் பாடல்கள்:

இரணியன், அவனுடைய மகனான பிரஹலாதனை, ஓம் நமோ ஹிரண்யகஸிபே நமஹ என்று சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இதற்காக ஒரு பிராஹ்மண வாத்தியாரையும் அமர்த்தி பாடம் சொல்லிக்  கொடுக்கிறான். அவனோ மீண்டும் மீண்டும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தை உச்சரிக்கிறான். ஆசிரியர் ஐயாவுக்கு குலை நடுக்கம் எடுத்தது. உடனே ஓடிப்போய் ஹிரண்யகஸிபுவிடம் உண்மையை உரைக்கிறார். அவர் நுவல்வதைக் கேட்டு பிரஹ்லாதனைப் பல வகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறான். அவனும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மாமன்னன் மஹேந்திர பல்லவனின் சித்திரவதைகளில் இருந்து ஐந்தெழுத்து மந்திரம்ர சொல்லி தப்பியது போல, எட்டெழுத்து மந்திரம் சொல்லித் தப்பி விடுகிறான்.

 

அப்பொழுது இரணியன் நேரே வந்து தன் மகனை அடக்கப் பார்க்கிறான். அந்தக் கட்டத்தில் பிரஹலாதன் சொல்லுவான்:

 

 

 

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

 

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

 

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

 

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய

 

கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய.

மண்ணின் நின்று மேல் மலர் அயனுலகு உறவாழும்

எண் இல் பூதங்களில் நிற்பனதிரிவன இவற்றின்

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்

எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே பிறிது இல்லை

 

பொருள்

இந்த பூமி முதல் மேலேயுள்ள பிரம்ம லோகம் வரையுள்ள எல்லா உலகங்களிலும் இருக்கும் உயிரினங்களிலும் அறிவும் நினைப்பும் இந்த எட்டெழுத்துதான்.

 

முன்கண் டேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா

மக்கள் காறும் இம்மந்திரம் மறந்தவர் மறந்தார்

புக்குக் காட்டுவதரிது இது பொதுவுறக் கண்டார்

ஒக்க நோக்கினர் அலவர் இதன் நிலை உணரார்

பொருள்:

மூன்று கண் உடைய சிவனும் நான்கு முகம் உடைய பிரம்மாவும் முதலாக சாதாரண மனிதர் வரை யாராவது இந்த எட்டெழுத்துப் பெயரை மறந்தால் அவர்கள் இறந்தவர்களே இதன் மஹிமையை விரித்துச் சொல்ல இயலாது; சமய வேறுபாடின்றி நடு நிலையோடு பார்க்கும் விவேகம் உடையோருக்கு– ஞானிகளுக்கு– இதன் மஹிமை நன்கு விளங்கும்; கல்லாத மற்றவர் இதன் பெருமையை அறியார்.

 

இவ்வாறு பிரஹலாதன் விளக்கிக் கொண்டே போகிறான்.

கம்பன்   இ ந்தப் படலத்தில் ஓம், உபநிஷதம் முதலிய தத்துவங்களையும் விளக்குகிறான்.

 

ஒவ்வொரு பாடலையும் ஊன்றிப் படிப்போருக்கு ஆனந்தம் கிட்டும்.

 

–சுபம்–

Leave a comment

Leave a comment