ஹைகூ கவிதைகள்! (Post No.5803)

Written by S Nagarajan

Date: 20 DECEMBER 2018


GMT Time uploaded in London –6 -56 am


Post No. 5803

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஜப்பானிய இலக்கியம்

ஹைகூ கவிதைகள்!

ச.நாகராஜன்

ஜப்பானியக் குட்டிக் கவிதை தான் ஹைகூ. 6 விநாடிகளில் இதைச் சொல்லி முடித்து விடலாம்.

3 வரிகளில் அமையும். 17 அசைகளைக் கொண்டிருக்கும். முதல் வரியில் 5 அசைகள், அடுத்த வரியில் 7 அசைகள், இறுதி அடியில் 5 அசைகள்!

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைகள் இவை.

நிகழ்காலத்தைக் குறிக்கும்.

ஹொக்கு என்பதிலிருந்து உரு மாறி 17ஆம் நூற்றாண்டில் பிரபலமானது ஹைகூ.

பாஷோ (Basho-1644-1694) என்ற கவிஞர் தான் ஜப்பானில் ஹைகூவிற்கு முன்னோடியாக இருந்தார். ஆயிரத்தி எண்ணூற்றி ஐம்பதுகளில் ஹைகூ மேலை நாடுகளுக்குப் பரவியது.

இதன் வடிவமோ சிறிது. கருத்தோ பெரிது. ஆகவே பல அறிஞர்களும் கவிஞர்களும் இதைப் போற்றிப் பாராட்டினர்.

ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், அமி லொவெல் (Amy Lowell)என இதை விரும்பும் மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் பட்டியல் நீ விரிகிறது.

ஆனால் 17 அசை என்பது ஆங்கிலத்தில் முடியாது என்பதால் சுருக்கமான மூன்று வரிக் கவிதை என்று வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் ஹைகூ உருவாக ஆரம்பித்தது.

பாஷோ ஜப்பான் முழுவதும் சுற்றி வந்தவர். தனது அனுபவங்களை ஹைகூவில் குழைத்துக் கொடுத்தார். அதை ஜப்பானியர் பெரிதும் விரும்பினர்.

உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு உன்னதக் கவிதைக் கலையாக ஹைகூ வளர ஆரம்பித்தது. மசாவொ ஷிகி(Masaoka Shiki),டகஹாமா க்யோஷி(Takahama Kyoshi), கவாஹிகஷி ஹெகிகோடோ (Kawahigashi Kekigoto) ஆகியோர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இதை வளர்த்தனர்.

21ஆம் நூற்றாண்டிலோ ஹைகூ இயற்றுவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டு விட்டது.

மூன்று வரிகள், சிறிய சொற்கள் என்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் உள்ளிட்ட உலக மொழிகளில் ஹைகூ பாடுவது வளர்ந்து விட்டது.

பாஷோவின் கவிதை இது:

Summer grasses-

All that remains

Of warriors’ dreams

பாஷோ தனது பயணத்தில் இயற்றிய யுத்தம் பற்றிய கவிதை இது. ஃப்யூஜிவாரா வமிசத்தில் நடந்த ஒரு போரை அவர் பார்த்தார்.யுத்த களம் முற்றிலும் ரத்தம் ஆறாக ஓட, சதைத் துண்டங்கள் சிதறிக் கிடந்தன. அவர் அழுதார்.அனைத்தும் அழியும் உலகில் அழியாத உண்மை பற்றிய சிந்தனை அவர் உள்ளத்தில் எழுந்தது.

யுத்தகளத்தில் மாண்டு கிடந்த போர்வீரர்களின் சடலங்கள் அவருக்கு நிலையாமையை உணர்த்த என்றும் நிலைத்திருக்கும் பேருண்மையை அவர் ஒரு கணத்தில் உணர்ந்தார்.

பெரும்பாலும் இப்படி பேரனுபவ ஞானம் ஒரு கணத்தில் உள்ளத்தில் ஒளிரும் போது எழுவது தான் ஹைகூ.

இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.

சோடோ யமகுச்சி எழுதிய ஹைகூ இது.

This spring in my hut

there is nothing

there is everything  (Sodo Yamakuchi)

எளிமையில் தான் எல்லா அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்திஜி உலகில் விட்டுச் சென்ற பொருள்களின் எண்ணிக்கை இரு கை விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டாது. ஹென்றி தோரோ எளிமையைப் போற்றினார்.

எளிமையாக வாழும் போது வளமையின் உச்சத்தை அவர்கள் பெற்றனர்.

சொத்தைச் சேர்க்கச் சேர்க்க மனம் கனமாகிறது. வெளியில் செல்வம்; ஆனால் அகத்தினுள் தரித்திரம்!

வசந்த காலத்தில் என் குடிலில்

ஒன்றுமே இல்லை

எல்லாம் இருந்தது.

என்ன அழகிய ஹைகூ.

கை (Kai) என்ற இடத்தில் பிறந்த சோடோ (1643-1716) பின்னர் டோக்கியோ சென்றார். அங்கு பாஷோவுடன் நெருங்கிப் பழகி அவரது நண்பரானார். சீன இலக்கியத்தில் பாண்டித்யம் கொண்ட இவரது அறிவைப் பார்த்து பாஷோ  பிரமித்தார்.

இன்னொரு அருமையான கவிதை இது.

இதை எழுதியவர் கிறிஸ்டோபர் ஹெரால்ட்.

First light

Everything in this room

Was already here    (Christopher Herold)

ஒளி அனைவருக்கும் பொதுவானது. அது புகாத இடமில்லை. அது உள்ளே புகுந்தவுடன் நமது பார்வை திறக்கிறது.

இதுவரை இருளில் தெரியாத அனைத்தும் தெரிகிறது.

ஆனால் அவை அங்கு தான் இருந்தன. நமக்குத் தான் தெரியவில்லை.

பார்வையை மாற்றுங்கள். அனைத்தும் பிரகாசமாகும்.

சிறையில் தூக்கிப் போடப்பட்டவன் வெளியில் வந்தவுடன் சுதந்திரமான உலகத்தைப் பார்க்கிறான்; பிரமிக்கிறான். அட, என்ன ஒரு அற்புதமான உலகம் இது!

மருத்துவமனையில் மாதக் கணக்கில் அடைந்து கிடந்தவன் உடல் நலம் தேறி வெளியே வருகிறான்.

அடடா, அனைத்தும் அற்புதம் தான் அவனுக்கு.

ஆனால் உலகம் மாறவில்லை. அவன் பார்வை தான் மாறி இருக்கிறது.

இந்த ஹைகூ அனைத்தையும் ஒளியுடன் பார்க்க உத்வேகம் ஊட்டுகிறது. அந்த ஒளியில் புதிய பார்வை இருக்க வேண்டும். அப்போது அனைத்துமே நமக்குச் சரியாகப் புலப்படும்.

இதை எழுதிய அமெரிக்கரான கிறிஸ்டோபர் ஹெரால்ட் 1948இல் பிறந்தவர். ஜென் பிரிவில் அடங்காத ஆர்வம் கொண்டவர். அதை அனைவருக்கும் போதிக்கும் ஆசிரியரும் கூட.The Heron’s nest என்ற பன்னாட்டு ஹைகூ பத்திரிகையின் ஆசிரியரும் கூட.

ஆயிரக் கணக்கில் ஹைகூ கவிதைகள் இன்று உருவாகின்றன.

ஆனால் மூன்று வரிகளில் இருப்பதெல்லாம் ஹைகூ அல்ல. நூற்றுக் கணக்கில் ஈசல் போலப் பிறக்கும் கவிதைகள் வெறும் சொற் கதம்பம் தான்.

நிஜமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் தான் ஹைகூவின் அருமை தெரிய வரும்.

108 ஹைகூ கவிதைகளைத் தொகுத்து பாட்ரியா டொனெகன் (Patricia Donegan) எழுதிய ஹைகூ மைண்ட் (Haiku Mind) குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.

இது போல நூற்றுக் கணக்கில் உள்ள சிறந்த ஹைகூ தொகுப்பு நூல்களைப் படித்தால் மனம் சிறக்கும்; சிறகடித்துப் பறக்கும். இருளகன்று உளத்தில் ஒளி பிறக்கும்!

tags-  ஹைகூ,  கவிதைகள்

***

Leave a comment

Leave a comment