

Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 16 December 2019
Time in London – 7-25 am
Post No. 7348
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
14-12-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நீலம் செய்யும் ஜாலம்!
ச.நாகராஜன்

சனி பயம் போக்கும் நீலம்
சனி பகவானை நினைத்தாலேயே பலருக்கும் பயம். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி (அர்த்தாஷ்டம சனி) என்றெல்லாம் பயப்பட்டு தங்கள் துன்பத்திற்கெல்லாம் சனியே காரணம் என்று நொந்து கொள்வர்.
ஆனால் உண்மையில் கிள்ளி எடுக்கும் சனி அள்ளிக் கொடுப்பவரும் கூட. கெடுக்கும் சனி என்று சொல்லப்படுபவரே கொடுக்கும் சனி என்பதையும் உணர வேண்டும்.
நளனும் பேரழகி தமயந்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து மணந்த கதையும் பின்னால் பிரிந்த கதையும் நாம் அறிந்ததே.
சனியின் பிடி நீங்கி இருவரும் மீண்டும் இணைந்ததைப் படிக்கும் போது மனம் பெரிதும் ஆறுதல் அடைகிறது. திரு நள்ளாற்றில் நளன் சனியை வணங்கி அவன் அருள் பெற்று இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்ற வரலாறை அறிவதால் நாமும் அங்கு சென்று வழிபட்டு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கப் பெறுகிறோம்.
அந்த நளன் பட்ட பாடை விட நான் படும் பாடு பெரும்பாடு என்று சொல்பவர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் அற்புத மணியாக, ஜாலம் செய்யும் மணியாக அமைகிறது நீலம்.

ஜோதிடம் பரிந்துரைக்கும் நீலம்
ஒரு ஜாதகத்தில் சனி தீய பலன்களைத் தரும் அம்சம் இருப்பின் நீலமே அந்த ஜாதகருக்கும் உதவும் மணியாகும்.
முதலில் ஏழரை நாட்டுச் சனி என்று அழைக்கப்படும், சனி ராசிக்கு 12ஆம் இடம், ஜன்ம ஸ்தானம், இரண்டாமிடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்படும் தீய பலன்களை இந்திர நீலம் மட்டுப்படுத்தும். அடுத்து அஷ்டம சனி (எட்டாம் இடத்தில் சனியின் சஞ்சாரம்) மற்றும் கண்டச் சனியினால் (நான்காம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம்) ஏற்படும் தீய பலன்களும் கூட நீலம் செய்யும் ஜாலத்தால் மட்டுப்படுத்தப்படும்.
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அணிய உகந்த கல் நீலம்.
எண் கணிதத்தில் சனி பகவானுக்குரிய எண் 8. ஆகவே 8 எண்ணில் பிறந்தவர்களும் கூட்டு எண் 8ஆக உடையவர்களும் அணிய வேண்டிய கல் நீலமே.
ப்ளூ சபயர் (Blue Sapphire) என்று கூறப்படும் நீலத்தின் வரலாற்றை ஆராயப் போனால் பழங்காலத்திய அறிஞர்கள் எந்தக் கல்லுக்கு இந்தப் பெயரைத் தந்தார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை. லெபிஸ் லஸூலி, டர்க்காய்ஸ், ஹயாசிந்த் (Lapis Lazuli, Turquoise, Hyacinth ) ஆகிய பல வண்ணக் கற்களையும் ஸபையர் என்றே கருதும் வகையில் பழைய நூல்களின் விளக்கங்கள் உள்ளன.
இந்தியாவிலும் அரேபியாவிலும் ஆரோக்கியம் நிலைப்பதற்கான தாயத்தாகவும் தீய திருஷ்டியைப் போக்கவும் நீலம் அணியப்பட்டு வந்தது. கடும் தொற்று நோய்களான பிளேக் உள்ளிட்ட மரண நோய்களை இது அண்ட விடாது என்பதும் இந்திய, அரேபியர்களின் நம்பிக்கை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இருக்க தீய திருஷ்டி ஒருவரை அண்டாது என அனைவரும் நம்பினர். அத்துடன் மனதை அலை பாய விடாது ஒரு நிலைப்படுத்தும் அரிய கல் இது என அனைவரும் போற்றி வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நீல மணி பற்றிப் பல அரிய குறிப்புகளை பண்டைய நூலின் மேற்கோள்களுடன் தருகிறார். அதன்படி நீலத்தின் வகைகள் 4. குணங்கள் 11. குற்றங்கள் 8.(நீல மணி போன்ற நிறத்தை உடைய மயில்கள் உனது சாயலுக்குத் தோற்று காட்டில் போய் ஒளிகின்றன – ‘மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கள் அடையவும்’ என்பன போன்ற பல மணியான வரிகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.) இவை விரிப்பின் பெருகும்; ஆதலால் தக்க தமிழறிஞரை நாடி அறியலாம்.


ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்
நீலத்தைப் பற்றிப் பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:
நீலம் பழங்காலத்தில் கலிங்கத்திலிருந்து கிடைத்து வந்தது. (இப்போதைய ஒரிஸாவும் வங்காளத்தின் மேற்குப் பகுதியும் இணைந்த பிரதேசம் கலிங்கம் என அழைக்கப்பட்டது). ஸ்ரீ லங்காவிலும் தரமான நீலக் கற்கள் கிடைத்தன.
நீலம் இரு வகைப்படும். 1) ஜல நீலம் 2) இந்திர நீலம்.
இவற்றுள் இந்திர நீலமே சிறந்தது.
இரு வகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று லேசானதாகவும் வெள்ளை ஒளியைக் கக்குவதாகவும் இருப்பது ஜல நீலமாகும்.
இந்திர நீலமோ கனமாக இருக்கும். கறுப்பு ஒளியை உள்ளிருந்து வெளிப்படுத்தும்.
ஜல நீலத்தில் சிவப்பு ஒளி காணப்பட்டால் அது ரக்த-காந்தி அல்லது ரத்ன-முகி எனப்படும். ஜல நீல வகையில் இதுவே சிறந்தது.
இந்திர நீலத்தை எடுத்துக் கொண்டால் சிறந்த இந்திர நீலக் கல் சீரான ஒளியுடன் கூடி இருக்கும். கனமாக இருக்கும். மேல் பரப்பில் எண்ணெய் பூசினாற் போலக் காணப்படும்.அது ஒளி ஊடுருவும் தன்மையுடன், உருண்டையாக மிருதுவாக உள்ளிருந்து ஒளியைப் பிரகாசித்துக் கொண்டவாறே இருக்கும்.
ஜல நீலத்தில் ஏழு வகைகள் உண்டு 1) ஐந்து வண்ணங்களை இணைத்து உள்ளது 2) ஐந்து வண்ணங்களை ஒரு பாதியிலும் இன்னொரு பாதியில் ஒரே ஒரு வண்ணமும் இருப்பது 3) மேற்பரப்பில் எண்ணெய் பூச்சு கொண்டது போலத் தோற்றமளிக்காதது 4) மிக லேசானது 5) உள்ளே சிவப்பு ஒளியுடன் காணப்படுவது 6) தட்டை வடிவுடன் கூடியது (அல்லது இன்னும் சிலரின் கருத்துப்படி வெந்த அரிசியை தட்டினால் வரும் தட்டை வடிவத்துடன் கூடியது) 7) சிறிய அளவுடன் கூடியது (சிறியது)
தாமிர வண்ணத்தில் உள்ள நீலமானது ஒதுக்கப்பட வேண்டாம். இதே போல தாமிர வண்ணத்தில் உள்ள கரபீரம் மற்றும் உத்பலம் (Opal) ஆகிய கறகளையும் ஒதுக்கத் தேவையில்லை.
வானவில் நீலம் : வானவில் போல ஜொலிக்கும் கல்லின் மதிப்பைச் சொல்லவே முடியாது. பூமியில் காணுதற்கு மிகவும் அரிதானது இது.
மஹா நீலம் : நீல வண்ணம் அளப்பரியதாக இருக்கும் நீலக் கல் மஹா நீலம் எனப்படும் அல்லது பெரும் நீலம் என அழைக்கப்படும்.


நீலம் செய்யும் ஜாலம்
சனியினால் ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.
சிந்தனை சீராகும். பணம் செழிக்கும். பல்வேறு விதமான தொல்லைகள் தீரும்.
சனி நலம் பயக்கும் நிலையில் இருந்தால் அந்த நல்ல பலன்கள் கூடுதலாகும்.
இந்தக் கல்லின் இரசாயனச் சமன்பாடு அலுமினியம் ஆக்ஸைடு ஆகும். (Al2O3 )
மோவின் அலகுப் படி இதன் கடினத் தன்மை : 9
இதன் ஒப்படர்த்தி :- 3.98 – 4.06
நீலம், கொரண்டம் எனற கனிம வகையைச் சேர்ந்தது.

சாணக்கியர் கூறும் எட்டு வகை நீலங்கள்
சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்ய நீதியில் நவரத்னக் கற்களைப் பற்றிய ஏராளமான நல்ல குறிப்புகளைத் தருகிறார்.
நீல மணியைப் பற்றி அவர் தரும் வகைகள் 8.
நீலாவளியம் : அலைஅலையாக நீலக் கோடுகளோடு பிரகாசிப்பது.
இந்திரநீலம் : மயிலின் தோகை போல நீல நிறத்துடன் ஒளிர்வது.
கலாயவண்ணம் : கலாயம் என்னும் ஒரு வகை தானிய மலரைப் போன்ற வண்ணம் கொண்டு ஒளிர்வது.
மாநீலம் – பொன்வண்டின் நிறம் கொண்டு பிரகாசிப்பது
நாவல் வண்ணம் – நாவல் பழத்தைப் போன்ற நிறம் கொண்டு ஒளிர்வது.
முகில் வண்ணம் – முகில் என்றால் மேகம் என்று பொருள். மேகம் போன்ற நிறம் கொண்டு பிரகாசிப்பது.
நந்தகம் – தவளை போன்று உள்ளே வெண்மையும் வெளியே நீல நிறமும் கொண்டு ஒளிர்வது
நடுநீர்ப் பெருக்கு – நீர்ப் பெருக்குப் போல நடுவில் நீலத்துடன் பிரகாசிப்பது.
ஆக இந்த எட்டு வகையும் மனித குலத்திற்கு நன்மை பயப்பதே ஆகும்.

செயற்கை நீலம்
செயற்கை முறையில் சிந்தடிக் நீலக் கற்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி 1902ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டு ஒரு வழியாக செயற்கை நீலக் கல் உருவானது. என்றாலும் கூட இயற்கையில் இருக்கும் நீல ஒளி அதே போல அமையவில்லை.
அமெரிக்காவும் ரஷியாவும் இந்த செயற்கைக் கற்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளன. 2003ஆம் ஆண்டில் மட்டும் 250 டன்கள் செயற்கை நீலம் உருவாக்கப்பட்டுள்ளது; அவை தொழிலகப் பயன்பாட்டிற்கும் உதவ ஆரம்பித்தன. பல்வேறு அரிய தன்மைகள் உள்ள செயற்கை நீலக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு ஜன்னல்களில் பதிக்கப்படலாயின.

அரிய நீலக் கற்கள்
உலகில் ஏராளமான அரிய வகை நீலக் கற்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ லங்காவில் ரத்னபுரம் என்னும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட நீல மணியாகும். ரத்னபுரம் நவரத்தினங்களின் நகர் என்ற பெயர் பெற்ற நகராகும். இது 1404.49 கேரட் எடையுடன் கூடியது. அதாவது 280 கிராம் எடை கொண்டது.
இதன் விலை 1000 லட்சம் டாலர் என மதிப்பிடுகின்றனர். (ஒரு டாலர் சுமார் 70 இந்திய ரூபாய்க்குச் சமம்.) ஆனால் இதை 1750 லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு ‘தி ஸ்டார் ஆஃப் ஆடம்’ (The Star of Adam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஈடன் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடம் நேராக ஸ்ரீ லங்கா வந்ததாகவும், ஆடம்ஸ் பீக் என்று இப்போது அழைக்கப்படும் மலையில் ஆடம் வாழ்ந்ததாகவும் ஒரு பெரும் நம்பிக்கை நிலவுகிறது. அதன் அடிப்படையில் இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.
கடந்த 2000 ஆண்டுகளாக ஸ்ரீ லங்காவில் பல அரிய வகை ரத்தினக்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டார் சபையர் என்று பெயரிடப்படும் நீல மணிகள் ஆறு முனை உள்ள நட்சத்திரம் போல ஒளி விடும் கற்களாகும்.
க்வீன்ஸ்லாந்தின் ப்ளாக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நீல மணி 733 கேரட் எடை கொண்டது. இது உலகின் இரண்டாவது பெரிய நீலமணியாகும். ஸ்டார் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் மூன்றாவது பெரிய நீலக் கல் 563.4 கேரட் எடை கொண்டது. இது இப்போது வாஷிங்டன் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஆஃப் பாம்பே என்ற கல் 182 கேரட் எடை கொண்டது.
காஷ்மீர், பர்மா, ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் கிடைக்கும் நீலம் அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. காஷ்மீர் கற்கள் பழைய காலத்தில் கிடைத்தவை. அவை மாறி மாறி விற்கப்பட்டு அணியப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் நீலம் கிடைக்கிறது. இந்தியாவில் திருவனந்தபுரம் பகுதியில் நீலக் கற்கள் அபூர்வமாகக் கிடைக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் கிரஹ தோஷத்தினால் எதையெதை எல்லாம் இழந்தோமா அதையெல்லாம் மீண்டும் திரும்பப் பெற ஒருவர் அணிய வேண்டிய கல் நீலமே. அலங்கோலமாக இருக்கும் வாழ்க்கையை குதூகலமாக மாற்றுவதற்கான ஜாலத்தைச் செய்ய வல்லது நீலம்!

நல்ல வைரம் எப்படி உடனடியாக நற்பலனைக் காண்பிக்கிறதோ, தோஷமுள்ள வைரம் எப்படி உடனடியாகத் தீய பலன்களைக் காண்பிக்கிறதோ, அதே போல நீலமும் உடனேயே நற்பலன்களை அளிக்க வல்லது; தோஷமுள்ள நீலக் கல் உடனேயே தீய பலன்களைக் காண்பித்து விடும். ஆகவே இதைத் தேர்வு செய்பவர்கள் நிபுணரின் உதவியை நாடி நல்ல கல்லை மட்டுமே அணிய வேண்டும்.
வாழ்க வளமுடன்!
