
இப்படி இருக்கிறதா உங்கள் வீடு? வாழ்க்கை வளம் பெற பெங்-சுயி வழிகள்! (Post No.7443)
Written by S Nagarajan
Post No.7443
Date uploaded in London – 11 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கோகுலம்கதிர் ஜனவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
இப்படி இருக்கிறதா உங்கள் வீடு? வாழ்க்கை வளம் பெற பெங்-சுயி வழிகள்!
ச.நாகராஜன்
பெங்-சுயி என்றால் என்ன?
பெங்-சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். இது ஹிந்துக்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த – பயன்படுத்தி வரும் காலத்தை வென்ற வாஸ்து சாஸ்திரத்தை ஒட்டியதே.
வாஸ்து என்ற சொல் வசு என்ற சொல்லிலிருந்து பிறந்தது. வசு என்றால் பூமி என்று பொருள்.
பூமியின் மீது அமைக்கப்படும் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஐம்பூதங்களின் இயற்கைக்கு இயைந்து அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது வாஸ்து சாஸ்திரம்.
காலத்தை வென்று வானளாவி இன்றளவு நிற்கும் கோபுரங்கள், அன்றாடம் இன்று நாம் பார்க்கும் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவையே.
இதே பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவற்றின் அடிப்படையிலேயே சீனர்களும் தங்கள் வாஸ்து சாஸ்திரத்தை அமைத்துக் கொண்டனர்.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெங்- சுயி சாத்திர வழிமுறைகள் எளிமையானவை.

பெங் என்றால் காற்று. சுயி என்றால் நீர்.
காற்றையும் நீரையும் முறைப்படுத்தினால் வாழ்க்கை சீரும் சிறப்பும் மிக்க ஒன்றாக ஆகும் என்பதை சீனர்கள் அறிந்து அதற்கான வழிகளைக் கூறினர்.
இது இன்றைய கால கட்டத்திற்கு சரிப்படுமா? சரிப்படும் என்றால் அதற்கான நிரூபணம் என்ன என்ற கேள்விகள் நம் மனதில் எழுதுவது இயல்பு.
வெற்றி பெற்ற ஆரஞ்ச் நிறுவனம்
இதற்கு இடம் கருதி ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம்.
ஆரஞ்ச் என்ற பிரபல நிறுவனத்தின் ஸ்தாபகர் ஹான்ஸ் ஸ்னூக் என்பவர். (Orange founder Hans Snook). இவரது இன்றைய சொத்தின் மதிப்பு சுமார் 5 கோடி பவுண்ட் ( ஒரு பவுண்ட் என்பதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 93 ரூபாய்).
ஹான்ஸின் லட்சிய வாக்கியமான, ‘எதிர்காலம் ஒளி மயமானது; எதிர்காலம் ஆரஞ்சே தான் (The future is bright; The future is Orange) என்ற முத்திரை வாக்கியம் உலகையே கலக்கிய ஒன்று!
அவர் இங்கிலாந்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை அவரால் முடிக்க முடியவில்லை. கனடாவில் சென்று ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். சரிப்பட்டு வரவில்லை. அங்கிருந்து ஹாங்காங் சென்றார். டெலிகாம் துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1994ஆம் ஆண்டு லண்டனுக்குத் திரும்பினார். மொபைல் போன் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
ஹாங்காங்கில் அவர் கற்ற ஒரு கலை தான் பெங்-சுயி. அதில் அவருக்கு முதலில் நம்பிக்கை இல்லை என்றாலும் அதைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்குமா என்று பார்க்க நினைத்தார். ஒரு பெங்-சுயி மாஸ்டரை அணுகினார்.
மாஸ்டர் அவரது அலுவலகக் கட்டிடத்திற்கு வந்தார். சில மாறுதல்களைச் செய்யச் சொன்னார். 12 மாதங்களில் அவரது நிறுவனம் உலகின் தலை சிறந்த நிறுவனம் ஆகி விட்டது.
இதே போல ஏராளமான வெற்றி வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வளம் பெற பெங்- சுயி காட்டும் வழிகள்
சரி, அன்றாட வாழ்க்கையில் சாமானியராக இருப்போருக்கு உடனடி வெற்றிக்கான சில பெங்-சுயி வழிகள் என்ன?
இதோ சுருக்கமாகத் தரப்படுகிறது.
பெங்-சுயி இயற்கை ஆற்றலின் அடிப்படையிலானது. ‘சி’ (Chi Energy) என்பது ஆற்றலைக் குறிக்கும் சொல். இந்த ஆற்றல் எந்த ஒரு வீட்டில் சரியாக இருக்கிறதோ அந்த வீடு பிரச்சினை இல்லாத, செல்வம் கொழிக்கும், நிம்மதி வாய்ந்த வீடாக அமையும். வணிக நிறுவனமாக இருப்பின் பெருத்த லாபத்துடன் இயங்கும்.
செல்வம் கொழிக்க ..
தலை வாயில் கதவில் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் உள்ளே பார்த்துப் பாயும் படியாக நீர்வீழ்ச்சி படத்தை மாட்டி வைத்தால் செல்வம் வீட்டினுள் நுழைந்து பெருகும். நீர்வீழ்ச்சி படம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தலை வாயிலின் மேலாக காலண்டர்களை மாட்டக் கூடாது. கதவின் முன்புறமோ அல்லது பின்புறமோ காலண்டர்கள் மாட்டக் கூடாது. இதனால் ஆயுள் குறையும்.
தலை வாயிலைப் பார்த்தவாறு சிரிக்கும் புத்தர் எனப்படும் லாஃபிங் புத்தா (Laughing Buddha) சிலையை நிறுவலாம்.
வீட்டின் ஹாலில், வடகிழக்கு மூலையில், ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை அன்றாடம் புதிதாக நிரப்பி வைக்க வேண்டும். மறுநாள் காலை அதைக் கொட்டி விட்டு மீண்டும் நீரை நிரப்ப வேண்டும். தேவையற்ற நெகடிவ் எனர்ஜி எனப்படும் தீய ஆற்றலை இது உறிஞ்சி அப்புறப்படுத்தி பண வரவிற்கான ஆற்றலை ஏற்படுத்தும்.
நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும் போது இதில் பூக்கள், பன்னீர் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
பல பெரிய நிறுவனங்கள், மால், ஹோட்டல்களில் நீர் நிரம்பிய ஃபவுண்டன் – நீரூற்று இருப்பதை எந்த நகரில் வேண்டுமானாலும் பார்க்கலாம். இது பெங்-சுயி சாத்திரத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்படுகிறது.
வீட்டில் எந்த ஒரு குப்பை கூளத்தையும் – பேப்பர், பால் கவர், பழைய துணி உள்ளிட்ட பயனற்ற பொருள்களை – வைத்திருக்கக் கூடாது.
பழுதடைந்த கடிகாரங்களையும் ஓடாத கடிகாரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
குறிப்பாக வடகிழக்கு மூலையில் துடைப்பம், செருப்பு உள்ளிட்டவை இருக்கக் கூடாது.

வெற்றிக்கும் நிம்மதிக்கும் வழி
வீட்டின் ஹாலில் நடுவில் ஒரு சிறிய பகுதி வெற்றிடமாகவே இருக்க வேண்டும். இது பிரம்மஸ்தலம் என அழைக்கப்படும். இது சுத்தமாக இருக்க இருக்க வீடு வளம் கொழிக்கும் நிம்மதி ஸ்தலமாக ஆகி விடும்.
பழைய கால கிராமப்புற வீடுகளில் இந்தப் பகுதி திறந்திருக்கும். முற்றம் போல இருக்கும் இப்பகுதியில் வெளிச்சம் வர மேல் புறத்தில் ஜன்னலுடன் கூடிய அமைப்பு இருப்பதை இன்றும் கூடப் பார்க்கலாம் – பல வீடுகளில்.
சாணக்கியர் ஒரு மன்னன் செல்வத்துடன் கூடிய பொக்கிஷத்தை அடைய அர்த்த சாஸ்திரத்தில் ஒரு எளிய வழியைக் கூறுகிறார். மன்னனது கோட்டையின் நடுவில் இறைவனுக்கான ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் அது! அதாவது பிரம்மஸ்தலம் இறைவனுக்குரிய சுத்தமான இடம்!
ஆகவே பெங்- சுயி வழி முறைப்படி நிறுவனங்கள், வீடுகள் தங்கள் ‘பிரம்ம ஸ்தலத்தை’ சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தடைகளை ஏற்படுத்தும் நாற்காலி உள்ளிட்ட எதையும் வைத்தல் கூடாது.
குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க..
நிலைக் கண்ணாடி படுக்கை அறையில் இருந்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. தம்பதிகளின் உறவு சீராக அமையாது.
ஆகவே படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அது முடியாதென்றால் துணியைப் போட்டு மறைத்து விட வேண்டும்.
குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு சிறப்பாக அமையவும் குடும்ப உறுப்பினர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு, நட்புடன் வாழவும் அனைத்து உறுப்பினர்களும் சிரித்தவாறு புன்னகை பூத்த முகத்துடன் உள்ள படத்தை பிரதானமாக தென் மேற்கு மூலையில் மாட்ட வேண்டும். இதனால் நிரந்தர சந்தோஷம் ஏற்படும்.
சாப்பிடும் இடத்தில் – டைனிங் டேபிளின் எதிரில் – கண்ணாடி வைக்கப்பட்டால் உணவு வளம் செழிக்கும்; ஆரோக்கியம் நிரந்தரமாக இருக்கும்.
தென் கிழக்கு மூலையில் சமையலறை இருத்தல் வேண்டும்.
பூஜை அறை வடகிழக்கு திசையில் இருத்தல் வேண்டும்.
வடகிழக்கில் டாய்லட் நிச்சயம் இருக்கக் கூடாது. அது நெகடிவ் எனர்ஜியை உருவாக்கி பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அப்படி இருப்பின் உடனடியாக ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பை (உப்புப் பொடி அல்ல) அங்கு வைத்து தீய பலனைத் தடுக்கலாம். உலர்ந்த உப்பு ஓரிரு நாளில் ஈரம் பட்டு தனது தன்மையை இழக்கும் போது அதை வெளியில் கொட்டி விட்டு மீண்டும் புதிதாக உலர்ந்த கல் உப்பை நிரப்ப வேண்டும்.

வேலையில் வெற்றி!
வேலை பார்ப்பவர்கள் அல்லது வணிகர்கள் தங்களின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் பின்னால் சுவரில் ஒரு பெரிய அழகிய மலையின் படத்தை மாட்டிக் கொள்ள வேண்டும். (இமயமலை, ஆல்ப்ஸ் மலை உள்ளிட்ட படங்கள் எங்கு வேண்டுமானாலும் சொற்ப தொகையில் கிடைக்கும்).
வீட்டில் உள்ள குழந்தைகள் படிப்பில் சிறக்க வடகிழக்கு திசையில் பூகோள உருண்டையை வைத்தால் கல்வி மேம்படும்.
அதிகம் செலவில்லாத பெங்-சுயி வழிகளைக் கடைப்பிடிப்போம்
இப்படி நூற்றுக் கணக்கில் எளிய வழிகளை – உத்திகளை – பெங் சுயி கூறுகிறது. இங்கு கூறியிருப்பவை மிகச் சில தான்!
அதிகம் செலவில்லாத இந்த வழிகளால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.
கட்டிடம் உருவாக்கும் கட்டிடக் கலை நிபுணரான ஆர்க்கிடெக்டுடன் ஒரு பெங்-சுயி நிபுணரும் நியமிக்கப்படுவது தான் இன்றைய காலகட்டத்தின் நடைமுறை! அவரது ஆலோசனையின் பேரில் கட்டிடம் சிறப்பாக உருவாக்கப்படும் . ‘சி’ எனர்ஜி எனப்படும் ஆற்றல் கட்டிடத்தின் உள்ளே முறைப்படப் பாய்ந்து செல்ல அவர் உதவுவார்.
தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி பெங் சுயி வழிகளை நாம் வீட்டில் கடைப்பிடித்தால் வளம் வாய்ந்த, செல்வம் கொழிக்கும், நிம்மதியான, பரஸ்பர நல்லுறவுடன் கூடிய குடும்பத்தை உருவாக்கியவர்கள் ஆவோம்; அதே போல வணிக நிறுவனங்களும் லாபம் கொழிக்கும் நிறுவனமாக அமையும்.

முயற்சி திருவினை ஆக்கும்!
****
You must be logged in to post a comment.