
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8981
Date uploaded in London – –29 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!
கிரி உருவாகிய கிருபைக் கடலே!
க்ருபை கூர்ந்து அருள்வாய் அருணாசலா!
என்ற பகவான் ரமண மஹரிஷியின் துதியை இந்த கார்த்திகை தீபப் பெருநாளில் துதிப்போம்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் நினைக்கவே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை ஆகும். இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 187 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தலமாகும்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள இந்தத் தலம் திரு அருணை, முக்தி புரி, அருணாசலம், சிவ லோகம், அண்ணா நாடு என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு சிறப்பு மிக்க ஒன்றாகும்.
ஒரு முறை ஹரியும் அயனும் தங்களில் யார் பெரியவர் என விவாதித்துக் கொண்டிருந்த போது சிவபிரான் தனது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் கண்டார்களோ அவரே பெரியவர் என்று கூற அதற்கு இணங்கிய பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவனின் உச்சியைக் காண மேலே பறக்கலானார். திருமாலோ வராஹமாக – பன்றியாக – மாறி அடியைக் காணப் புறப்பட்டார். யுகங்கள் கழிந்தன. அடியையும் முடியையும் இருவராலும் காண முடியவில்லை. தாழம்பூ ஒன்று ஆகாயத்திலிருந்து கீழே விழுவதைக் கண்ட பிரம்மா நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க தாழம்பூ சிவனின் தலையிலிருந்து என பதில் கூறியது. பல யுகங்களாகப் பறந்து கீழே வருவதாக அது கூறவே திடுக்கிட்ட பிரம்மா சிவபிரானின் முடியைக் காணவே இயலாது என்று உணர்ந்தார். தாழம்பூவைத் தன் கையிலே பிடித்து சிவனின் முன் தோன்றி தான் முடியைக் கண்டதாகக் கூறினார். அவரது பொய்யை அறிந்து சினந்த சிவபிரான் “உனக்கு பூமியில் கோவிலே இல்லாமல் போகக் கடவது” என்று சாபமிட்டார். பொய்க்கு உடந்தையாக இருந்த தாழம்பூவை, “இனி யாம் உன்னைச் சூடுவது இல்லை” என்றார். தாழம்பூ இறைவனுக்கு உரிய மலராக இல்லாமல் போனது. அடியைக் காண முடியாத விஷ்ணு இந்தச் சம்பவத்தால் ஆனந்தமுற்றார். மாலும் அயனும் சிவனின் உண்மை சொரூபத்தைக் காண வேண்டி நிற்க, சிவபிரான் பிரம்மாண்டமான ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றினார். அடியும் முடியும் அறிய இயலாத அந்த ஜோதி தோன்றிய நாள் கார்த்திகை மாதம், பரணி நட்சத்திர நாள் அன்று.

அன்று முதல் கார்த்திகை மாதம் பரணி தீபம் ஏற்றுவது வழக்கமாயிற்று; சிவபிரானை ஜோதி ஸ்வரூபமாகக் கண்டு களித்துப் போற்றி வணங்குவது வழக்கமாயிற்று.
இதே தலத்தில் தான் தேவி மஹிஷாசுரனை வதம் செய்தாள்.
இங்கு ஏராளமான ரிஷிகளும் மகான்களும் அருளாளர்களும் சித்தர்களும் அன்று முதல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
பகவான் ரமணர் அருளாட்சி புரியும் தலம் இது. மேலை நாட்டு எழுத்தாளரான பால் ப்ரண்டன் பகவான் ரமணரிடம், ஒரு முறை, திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் குடைந்தார். மலையிலே குகைகள் உள்ளனவா என்ற அவரது கேள்விக்கு ‘எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்’ என்றார் பகவான். சித்தர்கள் உள்ளனரா என்ற அவரது கேள்விக்குப் பெரிய சித்தர்கள் உள்ளனர் என்று பதில் கூறினார். பின்னர் “சிவபிரான் உறைந்திருக்கும் தலம் கைலை. ஆனால் சிவனே தான் இந்த மலை” என்று இந்த மலை பற்றிய உண்மை ரகசியத்தைக் கூறி அருளினார்.
அருணகிரிநாதர் தோன்றி முருகனின் அருள் பெற்ற தலம் இதுவே. தித்திக்கும் திருப்புகழில் இந்தத் தலம் பற்றி அவர் பாடியுள்ள பாடல்கள் 79.
சேஷாத்ரி ஸ்வாமிகள், குரு நமசிவாயர், குகை நமசிவாயர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் இங்கு வாழ்ந்து வந்து இறைவனின் அருள் மஹிமையை பக்தர்களுக்கு உணர்த்தியுள்ளனர்.
இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். இறைவி உண்ணாமுலை நாயகி. ஆலயம் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. ஸ்தல விருக்ஷம் மகிழ மரம். இது மூன்றாவது பிரகாரத்தில் உள்ளது.
சிவனே உருவான இந்த கிரியை வலம் செய்தால் சகல பாவங்களும் அகன்று முக்திப் பேறு கிடைக்கும் என்பது உறுதி. அங்கவர் என்னும் மஹரிஷி பல யுகங்களாக இந்த கிரிவலத்தை நட்சத்திர ரூபமாக மேற்கொண்டு வ்ருகிறார். இரவில் ஏழு மணி அளவில் தோன்றும் இந்த நட்சத்திரம் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை பக்தர்கள் இன்றும் கண்டு களிக்கின்றனர். பௌர்ணமி அன்று அருணகிரியை லக்ஷக்கணக்கான பக்தர்கள் வலம் வருவதை இன்றும் நாம் காணலாம்.

இங்கு கார்த்திகை திருவிழா 14 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் அன்று கொடி ஏற்றப்படும். பத்தாம் நாள் விழா தான் கார்த்திகை தீபப் பெருவிழா. பிரம்மாண்டமான குண்டத்தில் ஏற்றப்படும் ஜோதி பல நாட்களுக்கு எரியும்.
இந்த ஸ்தலத்தைப் பற்றிய ஏராளமான மஹிமைகளை அருணாசல மாஹாத்மியம் நூலில் காணலாம்.
தேவார மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் திருப்பதிகங்களைப் பாடி அருளியுள்ள தலம் இது. மாணிக்கவாசகர் போற்றித் துதித்த தலம் இது.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் அருணாசலேஸ்வரர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நன்றி. வணக்கம்



tags –திருவண்ணாமலை
–subham–
Bala Subramaniam
/ December 22, 2020Om Namasivaya
Arunanchalam, Arunanchalam
Arunanchalam