ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் – 2 (Post No.9877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9877

Date uploaded in London – 21 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் – 2

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அவர் ஆங்காங்கு நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

கண்பார்வையற்ற ஒருவனுக்கு கண் பார்வையை அருளினார் ராமதாஸர். கிணற்றில் விழுந்த ஒருவனை உயிர் போகாமல் உயிர்ப்பித்தார். ஒரு சுமங்கலிப் பெண் தன் கணவனை இழந்து அழ, உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அருளினார் சமர்த்தர். அவளது கணவனை சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றிருந்தனர். அங்கு அவனை ராம நாமம் சொல்லி உயிர்ப்பித்தார். அவர் அருளியபடியே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்தான். உத்தவன் என்று பெயரிட்டப்பட்ட அந்த மகனே பின்னால் ராமதாஸரின் சீடராக ஆனார்.

ராமதாஸருக்குச் சீடர்கள் பெருகினர். உத்தவ் ஸ்வாமி, கல்யாண் ஸ்வாமி, வெண்ணா ஸ்வாமி, திவாகர் ஸ்வாமி, ஆசார்ய கோபால்தாஸ் உள்ளிட்ட பலரும் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

ராமதாஸர் விட்டலனைப் போற்றும் ஏராளமான அபங்கங்களை இயற்றினார். தஞ்சாவூரில் அவர் இருந்த போது அபங்கங்களை கர்நாடக இசையில் பாட அவர் ஊக்குவித்தார். அதன் பயனாக இன்றும் அபங்கங்கள் ஹிந்துஸ்தானி இசையில் கேட்பதோடு கர்நாடக இசையிலும் நாம் கேட்க முடிகிறது. பல ஆன்மீக நூல்களையும் அவர் இயற்றி அருளியுள்ளார். அவரது தாஸபோதம் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும். தாஸ் என்றால் சீடன்; போதம் என்றால் உபதேசம். சீடருக்கு உபதேசமாக அமையும் இந்த நூல் மராத்தி மொழியில் உரைநடை நூலாக அமைகிறது. 1654ஆம் ஆண்டு அவர் இதை இயற்றினார். இதில் பக்தி மார்க்கத்தைப் பற்றி அவர் விரிவாகக் குறிப்பிடுகிறார். 20 அத்தியாயங்களில் 7751 உரைநடைப் பகுதிகளை இது கொண்டுள்ளது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை, சாஸ்திரங்கள், பிரம்மசூத்ரம் உள்ளிட்ட அனைத்து புண்ய நூல்களின் சாரமாக இது திகழ்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,சிந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டஇந்த நூல் இப்போது ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் படிக்கக் கிடைக்கிறது.

ராமதாஸரின் ஆரத்திகளுள் கணேச ஆரத்தி குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைவதோடு இன்று அனைவராலும் ஆரத்தியின் போது பாடப்பட்டு வருகிறது. சுககர்த்த துகஹர்த்த ஸ்லோகம் என்று இதன் பெருமை கூறப்படுவதால் இது சுகத்தைத் தரும்; துக்கத்தை அகற்றும் என்பது உறுதியாகிறது. மனாசே ஸ்லோகம் என்ற அரிய நூல்  205 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இதை அவர் சீடரான கல்யாண் ஸ்வாமியுடன் சேர்ந்து இயற்றினார். அவரது ஸ்ரீமாருதி ஸ்தோத்ரம் புகழ் பெற்ற ஆஞ்சநேய ஸ்தோத்ரம் ஆகும். அதை ஓதுவதால் ஏற்படும் அபார பலன்களை அந்த ஸ்தோத்ரத்தின் இறுதியில் காணலாம். இன்னும் ஆத்மா ராம், 11 லகு கவிதா, ஷத்ரிபு நிரூபண், மானபஞ்சகம், சதுர்த்தமான், பீம ரூபி ஸ்தோத்ரம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். ராமாயணத்திற்கு அவர் மராத்தியில் டீகா எனப்படும் விளக்கஉரை வேறு அருளியுள்ளார்.

சிறந்த ஆன்மீகப் பெரியாராகவும் அரசியலில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வழி வகுத்ததோடு அந்நிய முகலாரின் ஆக்கிரமிப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவராகவும் இருந்த அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். பக்தி மார்க்கத்தில் ஜாதி பேதம் கிடையாது என்பதை அவர் வலியுறுத்தியதோடு பெண்களுக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். ‘பெண்களின் கர்ப்பத்திலிருந்தே ஒவ்வொருவனும் உருவாகிறான். இந்த முக்கியத்துவத்தை அறியாதவனை மனிதன் என்று எப்படிக் கூற முடியும்’ என்கிறார் அவர்.

அவரது தாக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஹிந்து எழுச்சியிலும் இருந்ததை சமீபத்திய வரலாறு சுட்டிக் காட்டுகிறது. பாலகங்காதர திலகர் அவரிடமிருந்தே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பதைச் சொல்வதற்கான உத்வேகம் பெற்றார்.

ஹிந்துக்கள் அனைவரையும் ஓரிழையில் இணைக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை 1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஸ்தாபித்த பரமபூஜனீய டாக்டர் ஸ்ரீ கேசவபலிராம் ஹெட்கேவார் ராமதாஸரது பல உரைகளையும் பாடல்களையும் தனது டயரியில் எழுதும் பழக்கம் உடையவர். ஹிந்து எழுச்சிக்கு அவர் சமர்த்த ராமதாஸரிடமிருந்தே உத்வேகம் பெற்றார்.

இறுதியாக சமர்த்த ராமதாஸர் தனது இறுதி நாட்களை சதாரா மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் காட்டில்,தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்ரஹத்தில் அருகில் இருந்தவாறே, ஸ்ரீராம் ஜயராம் ஜய் ஜய் ராம் என்று ராமநாமத்தை ஜபித்தவாறே கழித்தார். கடைசி ஐந்து நாட்களில் அவர் நீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். 1681ஆம் ஆண்டு தனது 73ஆம் வயதில் ராமனுடன் ஒன்றினார். உத்தவ் ஸ்வாமி அவருக்கான இறுதி மரியாதைகளைச் செய்தார். பின்னால் மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சாம்பாஜி போன்ஸ்லே அவருக்கு ஒரு சமாதியைக் கட்டினார்.

இறுதியாக அவரது மனாசே ஸ்லோக அருளுரைகளில் ஐந்துடன் இந்த  உரையை முடிப்போம் :

2வது ஸ்லோகம்:

நேர்மையும் பக்தியும் நிறைந்த பாதையைக் கடைப்பிடிப்போம். இந்தப் பாதை நம்மை ஸ்ரீ ஹரிக்கு இட்டுச் செல்லும். விலக்கப்பட்ட அனைத்தையும் தவிர்ப்போம்; போற்றப்படும் அனைத்தையும் முழு மனதுடனும் பக்தியுடனும் செய்வோம்.

ஸ்லோகம் 3
ஒவ்வொரு நாள் காலையும் ஸ்ரீ ராமரைத் துதிப்போம்.. ஸ்ரீ ராம் என்று சொல்லி நமது வேலையைத் தொடங்குவோம். நல் நடத்தையை எப்போதும் கடைப்பிடிப்போம். நற்செயல்களைச் செய்பவனையே இந்த உலகம் போற்றும்.

ஸ்லோகம் 186

ஸ்ரீ ராமர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். நாம் ஸத்தியத்தைக் காண்போமாக.எப்போதும் ஸ்ரீ ராமருடன் நாம் இணைவோமாக. ஸ்ரீ ராமரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அஹங்காரத்தை வெறுத்து ஒதுக்குவோமாக.

ஸ்லோகம் 204

ஸத்ஸங்கம் உலகப் பற்றைத் துறக்க காரணமாக அமையும். ஸத்ஸங்கமே முக்திக்கு வழி வகுக்கும்.

இறுதியான 205வது ஸ்லோகம்

 மனதிற்காக நல்ல கீதங்களைக் கேட்டு மனதிலிருந்து அழுக்கை அகற்றுவோம். நமது மந்தமான பிரக்ஞையை விழிப்புணர்வுள்ள ஒன்றாக மாற்றுவோம்.ஞானத்தைப் பெறுவோம். உலகப் பற்றைத் துறப்போம். மனதிற்காக நல்ல பாடல்களைக் கேட்டு மனதைச் செம்மைப் படுத்துவோம். முக்தியைப் பெற ராஜமார்க்கத்தைக் கடைப்பிடிப்போம்.

சமர்த்த ராமதா கீ ஜெய்!

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!நன்றி வணக்கம்!

வெல்க பாரதம்! ஜெய்ஹிந்த்!!

****

tags சமர்த்த ராமதாஸ்-2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: