
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9920
Date uploaded in London – 1 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 1 – — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX

வழிபாட்டு தலங்களுக்கு பொது சட்டம் கோரி வழக்கு
‘ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோரின் வழிபாட்டு தலங்களை மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் உருவாக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் பார்சி இன மக்களுக்கு தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்கும், நிர்வகிக்கும், புதிய சொத்து வாங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினருக்கு இதுபோன்ற உரிமை வழங்கப்படவில்லை. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இந்த மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ளன.
மத விவகார நிர்வாகத்தில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என அரசியல் சாசனம் கூறிஉள்ளது.குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே அந்த மதத்துக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை சிறப்பாக பராமரிக்க முடியும். மாநில அரசுகளால் செய்ய முடியவில்லை.முஸ்லிம், பார்சி, கிறிஸ்துவ மதங்களுக்கு வழங்கியுள்ளதுபோல் ஹிந்து, ஜெயின், புத்த, சீக்கிய மதத்தினருக்கும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை பராமரிக்கும், நிர்வகிக்கும் அதிகாரம், உரிமை வழங்கப்பட வேண்டும்.இல்லையெனில் நாடு முழுதும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான விதிகளை உருவாக்கும்படி, மத்திய அரசு மற்றும் சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயும் இதுபோன்ற மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.
xxxxx
அயோத்தி – ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்

ராமேஸ்வரம் : ”மத்திய அரசிடம் ஆலோசித்து, அயோத்தி – ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும்,” என, உ.பி., போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வந்த அவர், சுவாமி தரிசனத்துக்கு பின் கூறியதாவது:உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும், ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இம்மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதால், மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய அயோத்தி – ராமேஸ்வரம் இடையே, விமான போக்குவரத்து துவக்கப்படும்.
XXXXX
திருப்பதி பாலாஜி வேங்கடாசலபதியை தரிசிக்க கூடுதலாக வெளியிட்ட 3,000 டிக்கெட்டுகள்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் கொரோனா தொற்று 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், திருப்பதி BALAJI கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
பாலாஜி வேங்கடாசலபதியை தரிசனம் செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் தினமும் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக விற்பனை செய்ய தேவஸ்தானம் நேற்று முடிவு செய்துள்ளது. சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. மேலும், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. இதனால், இந்த 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
XXXXX



தெலுங்கானாவின் ராமப்பா கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ருத்ரேஸ்வரா கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது இந்த கோவில் ராமப்பா கோவில் என்றும் அழைக்கப்படும் .
இந்த கோவில். 12 மற்றும் 13வது நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டு காலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது.
இது, வாரங்கல்லிலிருந்து 77 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கி.பி 1213 ம் ஆண்டு காகதீய அரசர் கணபதி தேவர் காலத்தில், அவரது படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் எழுப்பப்பட்ட கோயில் இதுவாகும்.
செம்மணற் கல்லால் எழுப்பப்பட்ட அழகிய கலைப் பெட்டகம் இந்தக் கோயில். அழகிய தூண்கள், குறுஞ்சிற்பங்கள், நளினமான சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலை இந்தியத் தொல்லியல் துறையினர் தற்போது பராமரித்து வருகிறார்கள்.
ஹரப்பா நாகரீக ‘தோலவிரா’வுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரமான தோலவிராவுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது தெலங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகியவை சேர்க்கப்பட்டதால், இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
தோலவிரா குறித்து கருத்து தெரிவித்த யுனெஸ்கோ, ‘பழங்கால நகரமான தோலவிரா தெற்காசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நகர நாகரீகங்களில் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் ஐந்து பெரிய நாகரீக தளங்களில் தோலவிரா ஒன்றாகும். இந்தியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1968ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தளத்தில் நீர் மேலாண்மை அமைப்பு, பல அடுக்கு தற்காப்பு வழிமுறை கட்டுமானங்கள், கட்டுமானத்தில் கல்லின் விரிவான பயன்பாடு, சிறப்பு கட்டமைப்புகள் போன்றவற்றால் கவனம் ஈர்க்கிறது.
செம்பு, கிளிஞ்சல்கள், கல், விலைமதிப்பற்ற கற்களின் நகைகள், தங்கம், தந்தங்கள் போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்களும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
XXXX
40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது.
XXX
ஆன்மிகத்தை மக்களிடம் சேர்ப்பதே ஆசை: சத்குரு பேச்சு

கோவை : ”தமிழகத்தில், ஒவ்வொருவரிடமும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும்,” என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
பேசினார்.
ஈஷா சார்பில், ‘உயிர் நோக்கம்’ என்ற ‘ஆன்-லைன்’ வழி இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது; மாநிலம் முழுவதும், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிறைவாக, ‘ஆனந்த சங்கமம்’ நிகழ்ச்சி நடந்தது; மக்களின் கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் (JAGGI VASUDEV) பதிலளித்தார்.
நம் நாடு, பொருளாதார வளர்ச்சி அடையும் நோக்கத்தில், பெரிதும் சுற்றுச்சூழல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.. மண் வளம் இருந்தால் மட்டுமே சத்தான உணவு கிடைக்கும். ஊட்டச்சத்து மிக்க உணவின்றி தவிக்கும் மக்களிடம், ஆன்மிகம் பேசுவது அசிங்கம். அதை ஒருபோதும் செய்யமாட்டேன். அதனால், சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசுகிறேன்.
தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக, உயிர் நோக்கம், சூரிய சக்தி போன்ற யோகா பயிற்சிகளை, இலவசமாக சேர்ப்பிக்கும் பணியை தீவிரப் படுத்தியுள்ளோம்.இவ்வாறு, சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிலளித்தார்.
XXXX

கடவுளை அவமதித்ததாக விஜய் ஆண்டனி மீது புகார்
சென்னை : நடிகரும், இயக்குனருமான் விஜய் ஆண்டனி, ஹிந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.
திரைப்படம் என்ற போர்வையில், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக, மதநல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில், போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்து கடவுள்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, ‘பிச்சைக்காரன் 2’ என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா. இவ்வாறு சோலை கண்ணன் கூறியுள்ளார்.
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
நன்றி, வணக்கம்

tags- இந்து சமய, செய்தி மடல், 182021