மத்வாசாரியர்! – 2 (Post No.10,044)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,044

Date uploaded in London – 2 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மத்வாசாரியர்! – 2

தனது குருநாதர் போதித்த சில கருத்துக்களை மறுத்து தனது கருத்துக்களை அவர் கூறியதோடு அவரது அருளாசி பெற்று ப்ரஹ்ம சூத்ரம், பகவத் கீதை, உபநிஷதங்கள் ஆகியவற்றிற்கு அற்புதமாக விரிவுரை கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஆனந்த தீர்த்தர்.

தான் நிர்ணயித்த வேதாந்தக் கொள்கைகளை நாடெங்கும் அவர் பரப்பலானார். அவருடன் அவரது குருநாதரும்  மற்றும் பல சீடர்களும் அவருடன் சென்றனர்.

முதன் முதலில் மங்களூருக்குத் தெற்கே 27 மைல் தொலைவில் உள்ள விஜயமங்கலம் என்ற நகருக்கு அவர் விஜயம் செய்தார். அங்கு ஒரு பெரும் அன்னக்குவியலை வியஞ்சனங்களுடன் தான் ஒருவராககே புசித்து விட்டார். இதனால் அவர் சாக்ஷாத் பீமனே என்று அனைவரும் முடிவு செய்தனர்.

காட்டு வழியே ஒரு சமயம் சீடர்களுடன் சென்ற போது அவர்கள் பசியால் வருந்த தம்மிடம் இருந்த சிறிது அன்னத்தை அக்ஷயமாக வளரச் செய்து அனைவரையும் அவர் திருப்திப்படுத்தினார்.

திருவனந்தபுரம் சென்ற அவர் அங்கிருந்த சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ  வித்யா சங்கரருடன் வாதம் செய்தார். வெற்றி தோல்வியின்றி வாதம் முடிந்தது. இருவரும் பிரிந்தனர்.

பின்னர் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்த அத்வைதிகளுடன் வாதம் செய்தார். அவர் வாதத்தைக் கண்டு வியந்த அவர்களுள் ஒருவர் அவருக்கு ‘அநுமானதீர்த்தர் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினார்.

வாது செய்வதில் வல்லவர்களான வாதசிம்ஹன், புத்திசாகரன் ஆகிய இரு பௌத்தர்கள் அவரை வாதுக்கு அழைக்கவே அவர்களுடன் வாது செய்து அவர்களை வென்றார். பின்னர் கேரளம் சென்றார். திவ்ய க்ஷேத்திரங்களிம் தரிசனம் செய்த பின்னர் அவர் பள்ளி கொண்டான் என்ற கிராமத்தை அடைந்து அங்கு வாதப் போரில் வெற்றி பெற்றார்.

அடுத்து கல்வியில் சிறந்த காஞ்சி மாநகரை அடைந்த அவர் அங்கே  மகத்தான ஒரு உண்மையை அனைவரின் முன்னேயும் எடுத்து வைத்தார். வேத வாக்கியங்களுக்கு மூன்று விதமாகவும் மஹாபாரத ஸ்லோகங்களுக்கு பத்து விதமாகவும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள நாமங்கள் ஒவ்வொன்றுக்கும்  நூறு விதமாகவும் அர்த்தங்கள் உண்டு என்று அவர் கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. ‘எங்கே, விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் முதல் நாமமான விஸ்வம் என்ற நாமத்திற்குப் பொருள் கூறுங்கள் என்று ஒருவர் கேட்க, அவர் வரிசையாக அர்த்தம் கூற ஆரம்பித்தார். அனைவரும் வியந்து போதும் போதும் என்று கூவி மகிழ்ந்தனர்.

மீண்டும் உடுப்பி வந்து சேர்ந்த அவர் மத்வாசாரியர் என்ற நாமத்துடன் பிரசித்தி பெற்றார். ஏராளமான அற்புதங்களை அவர் தொடர்ந்து ஆற்றி வந்தார்.

மைசூருக்குத் தெற்கே பலிஹொன்னூர் என்னும் தாலுக்காவில் கலாசம் என்னும் ஒரு கிராமத்தில் பிரம்மாண்டமான பாறை ஒன்று உண்டு. அதை யாராலும் தூக்க முடியாது. அதை தான் ஒருவராகவே எளிதாக மத்வர் தூக்கிக் காட்டியதோடு அதை பத்திரை என்னும் ஆற்றின் வலக்கரைக்கு கொண்டு சென்றார். அங்கு அம்புதீர்த்தம் என்னும் புனித தீர்த்தத்திற்கு எளிதாகச் செல்லும் வகையில் அதை வாராவதியாக வைத்தார். இந்த நிகழ்ச்சியைச் சொல்லும் வடமொழி சிலாசாஸனத்துடன் அந்தப் பாறை இன்றும் அங்கே இருப்பதை அனைவரும் காணலாம்.

    ஒரு சமயம் மஹராஷ்டிரத்தில் அவர் யாத்திரை சென்ற போது ஈஸ்வர தேவன் என்னும் ஒரு அரசனை அவர் சந்திக்க நேர்ந்தது. வழிப்போக்கர்கள் அனைவரையும் கட்டாயமாக குளம் வெட்டச் சொல்வது அவன் பழக்கம். மத்வரையும் அவன் குளம் வெட்டச் சொன்னான். எங்கே சற்று வெட்டிக் காட்டுங்கள் அதன் படியே நானும் வெட்டுகிறேன் என்றா மத்வர். அரசன் வெட்டிக் காண்பிப்பதற்காக மண்வெட்டியை எடுத்து வெட்டினான். அவ்வளவு தான், மாலை வரை வெட்டிக் கொண்டே இருந்தான். அவரது பெருமையை உணர்ந்த அவன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி அவரது சீடரானான்.

கொள்ளைக்கூட்டம் ஒன்று மத்வரின் குழுவை வழி மறிக்க, அவர்களே தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு அழியுமாறு மத்வர் செய்தார். அடுத்து ஓரிடத்தில் நூறு கள்வர்களைத் தான் ஒருவராகவே எதிர் கொண்டு அவர்களை அடித்து விரட்டினார்.

ஹரித்வாரத்தில் சில நாட்கள் தங்கி இமயமலைக் காட்டின் உள்ளே சென்ற மத்வருக்கு வேத வியாஸர் தரிசனம் தந்தார். மீண்டும் உடுப்பி நோக்கித் திரும்பும் போது அவர் சாளுக்கிய நாட்டிற்கு வந்தார். சாளுக்கிய மன்னனின் அரசவையில் சோபன பட்டர் என்ற ஒரு பெரும் அறிஞர் இருந்தார். அவருடன் வாது புரிந்து தனது துவைதக் கொள்கையை ஸ்தாபித்தார் மத்வர். சோபன பட்டர் அவரது சீடராக ஆகவே அவருக்கு பத்மநாப தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார். அவரே மத்வருக்குப் பின்னர் ஆசாரிய பரம்பரையை ஏற்படுத்தினார்.

    மத்வருக்கு இஷ்ட தெய்வம் உடுப்பி கிருஷ்ணரே. அவருக்கு ஒரு கோயில் கட்ட அவர் விரும்பினார். ஒரு நாள் தனது ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த போது கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கப்பலின் தலைவன் அவரை அணுகி நமஸ்கரித்து கப்பலைக் காப்பாற்றுமாறு வேண்டினான். மத்வர் காற்று அடிக்கும் திசையை மாற்றி கப்பலை மூழ்காமல் கரைக்கு வாச் செய்தார். கப்பலுக்குரியவன் கப்பலிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற மத்வர் கப்பலில் இருந்த கோபீ சந்தனக் கட்டைகளை மட்டும் எடுத்துக் கொண்டார்.  அந்தக் கட்டைகளுக்கு இடையே ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதனால் மத்வர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அந்த விக்ரஹம் ருக்மிணி தேவியால் த்வாரகையில் பூஜிக்கப்பட்டு வந்த விக்ரஹம். த்வாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி இருந்த அதுவே மத்வரின் கைக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தது. அதைத் தான் வாழ்நாள் முழுவதும் தன் கையினாலேயே அர்ச்சித்து வந்தார் மத்வர். தனக்குப் பின்னர் கிருஷ்ணருக்குப் பூஜை செய்பவர் யார் என ஆலோசித்த மத்வாசாரியர்  தனது சீடர்களில் விஷ்ணுதீர்த்தர் உள்ளிட்ட எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவரும் இரண்டிரண்டு ஆண்டுகள் அர்ச்சனை செய்யுமாறும் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அருளாணை பிறப்பித்தார். அதன் படியே இன்றளவும் அங்குள்ள எட்டு மடங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி இரண்டிரண்டு ஆண்டுகள் உடுப்பி கிருஷ்ணருக்கு அர்ச்சனை புரிந்து வருகின்றன.

மத்வர் ஸ்தாபித்த த்வைத சித்தாந்தம் அற்புதமான கொள்கைகளை முன் வைக்கிறது.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவே பர தெய்வம். அவரது புத்திரரான வாயுதேவனை அன்றி வேறொரு வகையால் மனிதருக்கு உய்வில்லை. மாத்வ மதத்தை அனுசரிக்கும் ஒவ்வொரு மாத்வரும் விஷ்ணுவின் பஞ்சாயுத முத்திரையைத் தங்கள் தேகங்களில் தரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விஷ்ணுவின் ஏதேனுமொரு திரு நாமத்தைக் கொண்டிருக்க வேண்டும். விஷ்ணுவுடன் தொடர்புடைய பண்டிகைகளை அனுசரித்தல், பஜனைகளைச் செய்தல், உபந்யாசங்களைச் செய்தல் அல்லது கேட்டல் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். பஜனையை விசேஷமாகச் செய்வோர் தாஸக் கூட்டத்தவர் ஆவர். சித்தாந்த பிரசாரத்தைச் செய்வோர் வியாஸ கூட்டத்தவரைச் சேர்ந்தவர் ஆவர்.

இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த மத்வாசாரியர் பத்மநாபதீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷோப்ய தீர்த்தர் ஆகிய நால்வரைத் தேர்ந்தெடுத்தார். பத்மநாபதீர்த்தருக்கு அபிஷேகம் செய்வித்துத் தன் ஸ்தானத்தில் அவரை அமர்த்தினார். ஜயதீர்த்தர் என்பவரை தனது நூல்களுக்கு உரை செய்யும்படி பணித்தார். உரை என்னும் டீகாவை செய்ததால் ஜெயதீர்த்தர் டீகாசாரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.  தனது அவதார நோக்கம் நிறைவேறியதால் திருப்தியுற்ற மத்வாசாரியார் பிங்கள நாம வருடத்தில் மாக சுத்த நவமியன்று சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தர்தானமாகி மறைந்தார். அவர் புவியில் வாழ்ந்த காலம் எழுபத்தொன்பது வருடம், ஆறு மாதம் 20 நாட்களாகும்.

ஸ்ரீ மத்வாசாரியார் 37 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார். இவை அனைத்தும் நமக்கு இன்று கிடைத்துள்ள செல்வமாகும்.

ஸ்ரீ மத்வாசாரியரின் பொன்னடி போற்றி!

நமஸ்தே ப்ரானேஸ ப்ரணத விபவாயாவநிமகா

நம: ஸ்வாமிந் ராம ப்ரியதம ஹனூமன் குருகுண |

நமஸ்துப்யம் பீம ப்ரபலதம க்ருஷ்ணேஷ்ட பகவந்

நம: ஸ்ரீமந் மத்வ ப்ரதிஸ ஸுத்ருஸ நோ ஜய ஜய ||  

நன்றி வணக்கம்!

*** முற்றும்

INDEX

மத்வர் அவதாரம், உடுப்பி கிருஷ்ணரை ஸ்தாபித்தது, எட்டு சீடர்கள்,

திவ்ய லீலைகள், குருநாதர், பாரத திக்விஜயம், த்வைத சித்தாந்தம், 37 நூல்கள் இயற்றி அருளல், அந்தர்தானமாகுதல்

tags –  மத்வர், உடுப்பி ,  சீடர்கள், த்வைதம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: