கூத்தனூர் ஸ்ரீ  சரஸ்வதி தேவி! (Post No.10,256)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,256

Date uploaded in London – – 25 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 17-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள், இங்கு வாராது இடர்!

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!


ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கென உள்ள ஒரே ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் ஆகும். இந்தத் தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஹரிநாதேஸ்வரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் அரிசிலாற்றில் பாய்வதாக ஐதீகம்.


இங்கு அருள் பாலித்து வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இல்லை. வலது கீழ்க்கையில் சின் முத்திரையும் இடது கீழ் கையில் புஸ்தகமும், வலது மேல் கையில் அக்ஷரமாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி கிழக்கு நோக்கி அமர்ந்து ஞான சரஸ்வதி அருள் பாலிக்கிறார்.


இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இடைக்காலச் சோழர்கள் அரசாண்ட காலத்தில் விக்கிரம சோழனுக்கும் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கும் ஒட்டக்கூத்தர் என்னும் மாபெரும் புலவர் ஆசிரியராக விளங்கினார். இவர் கலைமகளை வழிபட, அவள் தன் தாம்பூலத்தை இவருக்குத் தர பெரும் கவிஞராகிப் பெயர் பெற்றார் இவர். இவர் மூன்று உலாக்கள், இரண்டு பரணிகள், ஒரு பிள்ளைத் தமிழ், இராமாயணத்தில் உத்தரகாண்டம் உள்ளிட்ட ஏராளமான அரும் நூல்களை இயற்றியுள்ளார். இவர் மூன்று தலைமுறைகள் வாழ்ந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என வரலாறு கூறுகிறது. இவர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காலத்தவரும் கூட!

சைவ சமயத்தவரான இவருக்கு நடராஜப் பெருமானாகிய சிதம்பரக் கூத்தரின் பெயரையொட்டி, கூத்தர் என்ற பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இன்னொரு செய்தியின் படி ஒரு சமயம் விக்கிரம சோழனின் விருப்பப்படி நயம் பொருந்திய கண்ணியை ஒட்டி, ஒரு வெண்பா பாட, அதனால் மகிழ்ந்த விக்கிரமன் இவரை ஒட்டக்கூத்தர் என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு செய்தியின் படி இவர் ‘ஈட்டி எழுபது’ என்ற பாடல்களின் மூலம் வெட்டுண்ட தலைகளை முண்டங்களுடன் ஒட்டச் செய்ததால் இவருக்கு அப்பெயர் எற்பட்டது எனத் தெரிய வருகிறது.


இப்படி கவித்வம் பெற்றதற்கான காரணம் இவர் இங்கு வழிபட்ட ஞான சரஸ்வதியின் அருளே ஆகும். தீயவர்களிடம் அகப்பட்ட ஒட்டக்கூத்தரை பரணி பாட வைத்து தன்னைத் தப்பிக்க வைத்த தேவியை ஒட்டக்கூத்தர் ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே’ என்று போற்றிப் புகழ்ந்து துதித்தார். சோழ மன்னன் தானமாக அளித்த இடத்தில், இவரே, தன் வழிபடு தெய்வமாகிய கலைமகளுக்கு இந்தக் கோவிலை அமைத்தார்.இந்த ஊரிலேயே பல ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். ஆகவே இந்த ஊர் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஒட்டக்கூத்தருக்கு ஒரு சிலையும் இருக்கிறது. இந்த சரஸ்வதி தேவியே கம்பனுக்காக கிழங்கு விற்றதாகவும் மோர் விற்றதாகவும் வரலாறு உண்டு. இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதர் என்பவரின் புதல்வரான புருஷோத்தமனுக்குப் பேசும் திறன் வரவில்லை. அவன் இங்கு வந்து சரஸ்வதியை வழிபட தேவியானவள் தாம்பூலத்தைத் தன் வாயில் தரித்து அவனுக்குத் தந்தாள். சரஸ்வதி அருளால் விஜயதசமி முதல் பேசத் தொடங்கிய அவர் புருஷோத்தம பாரதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

முன்புறத்தில் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது இந்தக் கோயில். கோபுரத்தில் ஐந்து கலசங்கள் உண்டு. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. நவராத்திரி நாட்களில் சிறப்பான விழா நடைபெற, இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமுகின்றனர். கல்வி அறிவைப் பெற இதுவே சிறந்த இடம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கும் மற்ற நாட்களிலும் அழைத்து வந்து புத்தகம் பேனா உள்ளிட்டவற்றை கர்பக்ருஹத்தில் வைத்து சரஸ்வதியின் அருளைப் பெறுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் இத்தலத்தில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மங்கள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவரவர் பாபங்களிலிருந்து விடுபட திரிவேணி சங்கம நீராடலுக்கும், கணவன் மனைவி பிரிவிலிருந்து மீள்வதற்குமான பிராத்தனைத் தலமாகவும் இது ஆகிறது. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஞான் சரஸ்வதி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அருள் வாக்கு இது :

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போல் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி?!
நன்றி வணக்கம்!


tags — கூத்தனூர் ,ஸசரஸ்வதி தேவி, ஆலயம் ,அறிவோம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: