Post No. 10,272
Date uploaded in London – 29 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காடுகள் பற்றி ரிக் வேத கவிதை — பகுதி 2
உலகில் வேறு எங்கும் காணாத புதுமை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இந்துக்களின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாக முன்னோர்கள் பிரித்தார்கள். அவை
1.பிரம்மச்சர்யம்/மாணவர் வாழ்க்கை;
2.கிருஹஸ்தாஸ்ரமம் / குடும்ப வாழ்க்கை;
3.வானப்ரஸ்தம் / காட்டு வாழ்க்கை ;
4.சன்யாசம் துறவு வாழ்க்கை
இவற்றில் கானக வாழ்க்கையைத் தவிர மற்ற மூன்றும் பல மதங்களில் உண்டு. ஆனால் பிள்ளை, பேரன்கள் பிறந்த பின்னர் அவர்களை சுதந்திரமாக வாழவிட்டு காட்டுக்குப் போ; அதுவும் மனைவியோடு ! ஏனெனில் அவளுக்குத் தான் பாசம் எளிதில் விடாது, என்று சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவனும் மனைவியும் துறவறம் ஏற்பது அவர்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்து நிகழ்ந்தது.
ஐயா, இதெல்லாம் புஸ்தகத்தில் உள்ளது உண்மையில் நடந்ததா? என்று கேட்டால் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
திருதராஷ்டிரனும் காந்தாரியும் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களுடைய சொற்பொழிவைக் கேட்க தலைநகர மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். ஒரே பரபரப்பு; ஏதேனும் பாண்டவர் ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு போடப்போகிறார்களோ என்று உலக மஹா டெலிவிஷன் ஸ்டேஷன்களும் வானொலி நிலையங்களும் நான் முந்தி, நீ முந்தி என்று மைக் MIKES குகளை முன்னே நீட்ட அவர்கள் இருவரும் சொன்னார்கள்:_
“மன்னிப்போம், மறந்து விடுவோம்; குட் பை ! நாங்கள் காட்டுக்குப் போகிறோம்” என்று. ஊரே கண்ணீர் விட்டு அவர்களை வழி அனுப்பிவைத்தது. இது அப்படியே மஹாபாரதத்தில் உள்ளது. (முன்னரே அவர்களுடைய உரையை இங்கே வெளியிட்டுள்ளேன்)
பாண்டவர்களை மன்னித்து சமரச உணர்வோடு அவர்கள் கானகம் சென்றவுடன் ஒரு நாள் காடு தீப்பிடித்து எரிந்தது. அவர்கள் ஓடவில்லை. ஆனந்தமாக கருகி அழிந்தனர். இதே கதைதான் பாண்டு, மாத்ரிக்கும். பாண்டவர்களோவெனில் பேரன் பிள்ளைகளிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு காட்டு வழியே — இமயமலைக்காட்டு வழியே — நடந்தார்கள், நடந்தார்கள்; ஒவ்வொருவராக செத்து விழுந்தார்கள். இறுதியில் தருமனும் நாயும் மட்டும் முன்னே சென்ற கதை எல்லாம் உபன்யாசங்களில் கேட்டிருப்பீர்கள்.
ராமாயணத்தில் ராமனும் சீதையும் கான க வாழ்க்கை வாழ்ந்ததை உலகமே அறியும். சீதைக்கு 14 ஆண்டுக்கு மேலும் வனவாசம்; ராமன் காரணமாக கிடைத்தது; அங்கேதான் லவனும் குசனும் பிறந்தார்கள்
மஹாபாரத வன பருவத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் நிறைய காடுகளின் வருணனை வருகிறது. குறிப்பாக பேயின் கேள்விகள்/ யக்ஷப் ரஸ்னம் , நள உபாக்கியானம் பகுதிகளில் காடுகள் பற்றி உள்ளது ; வால் மீகியோ காட்டிலேயே பிறந்த வேடன்; அவர் வருணனை எளிய, அழகான சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. இதையெல்லாம் கம்பனும் ஆங்காங்கே அள்ளித் தெளித்து இருக்கிறான்.
இதற்கெ ல்லாம் மேலாக உலகமே புகமும் உபநிஷதங்கள்
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே
பார்மீது ஏதொரு நூல் இது போலே –
என்று பாரதியால் பாடப்பட்ட உபநிடதங்கள் காடுகளில் உதயமாயின.
வானளாவிய மரங்களையும், ஆகாயத்தைத் துளைக்கும் அற்புத சிகரங்களையும், இனிய மண், மலர் வாசனையையும் , கொட்டும் நீர்வீழ்ச்சிகளையும் , துள்ளிக் குதிக்கும் மான் குட்டிகளையும் கண்ட முனிவர்கள் உலகின் உயர்ந்த கருத்துக்களை மொழிந்தார்கள் ; பொழிந்தார்கள் .
இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்களுக்கு ‘வானப்ரஸ்தம்’ என்ற மூன்றாவது கட்ட வன/ காட்டு /கானக (Forest/ Jungle) வாழக்கை முறையே.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் என்ற உலகப் புகழ் கவிஞன் எழுதிய ‘குமார சம்பவ’ காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலை வருணனை இருக்கிறது . அதை அப்படியே சங்கத் தமிழ் புலவர்கள் ஆங்காங்கே எடுத்தாண்டனர். (இதை என் ஆராய்ச் சிக்கட்டுரைகளில் விளக்கி, காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தியவர் என்று நிரூபித்துள்ளேன்- 200 உவமைகள் மூலமாக)
xxx
இப்போது கட்டுரையின் முதல் பகுதியில் காட்டிய ரிக்வேத துதியில் உள்ள ஆறு மந்திரங்களுக்கு வருவோம்.
இந்த மந்திரத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள காட்டுக்குள் ஒரு முறையாவது சென்றிருக்க வேண்டும். நான் பல முறை காட்டுக்குள், காலை முதல் மலை வரை, சுற்றியவன். குற்றாலக் காடுகளில் தேன் அருவி வரையும். கர்நாடக ஆகும்பே காடுகளிலும், கொடைக்கானல் காடுகளிலும், ஏற்காடு மலைகளிலும் தாவரங்களைச் (Botanical Plant Collection trips) சேகரிக்க கல்லூரி மாணவர், பேராசிரியர் குழுவுடன் சென்றேன். தனிப்பட்ட முறையில் கொடைக்கானல், கூனூர் , உதகை சென்று வந்தேன். ஆயிரத்துக்கும் மேலான பூக்கள், மலர்கள், தாவரங்கள் தபால் தலைகளை ஆல்பத்தில் பார்த்துக்கொண்டே தூங்குவது வழக்கம்
ரிக்வேதத்தை ‘கன்னா பின்னா மன்னார்கோவில்’ என்று மொழிபெயர்த்த 30 வெள்ளைக்காரப் பயல்களுக்கு காடு என்றால் தெரியுமா, புரியுமா என்பதே
கேள்விக்குறி! Ralph T H Griffith கிரிப்பித் மட்டும் நீலகிரி மலையில் வாழ்ந்ததால் , கொஞ்சம் தெரிந்திருக்கலாம். மற்றவர்கள் Concrete Jungle கான்கிரீட் ஜங்கிள் என்று சொல்லப்படும் கட்டிடங்களைப் புகழ்வோர் ஆவர். இதனால் இந்த அரண்யானி கவிதை, காட்டுத்தீ பற்றிய கவிதைகள், மூலிகை பற்றிய கவிதைகளை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை; மழுப்பிவிட்டனர்.
மேலும் 40 ஆண்டுகளாக சங்க இலக்கிய 18 நூல்கள். அதற்குப்பின்னர் வந்த 18 கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பன்னிரு திருமுறை, திவ்விய பிரபந்தம் அத்தனையையும் ஒரு முறையாவது படித்து இருக்கிறேன். படித்து என்பதை அடிக்கோடு இடவும்; அதாவது கற்கவில்லை; நானும் படித்துவிட்டேன் என்ற வேகத்தில் 40 ஆண்டுகள் போய்விட்டன. கற்கத்துவங்கினால் 10 அல்லது 15 பிறவிகள் தேவை!! இப்படிப் படித்து மார்ஜினில் கிறுக்கி வைத்ததாலும் , கொஞ்சம் பாட்டனி/ Botany தாவர இயல் ஆர்வம் இருந்ததாலும் இதோ என் கருத்துக்கள் :–
அடடா ! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தேவ முனி என்ற புலவன் காடு பாற்றிப் பாடினான்! என்ன அதிசயம் ! அதைவித அதிசயம் ரிக் வேதம் உள்பட 4 வேதங்களையும், மகாபாரதத்தையும் நமக்கு அளித்தானே அந்த வேத வியாசன், அவனுக்கு எப்படி நன்றி சொல்வது!!
ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும்; பாரதி பாடல்கள் போல மிகவும் POSITIVE THOUGHTS பாசிட்டிவ் எண்ணங்கள் ! ஒளிபடைத்த கண்கள்; உறுதி கொண்ட நெஞ்சம் , களி படைத்த மொழி இவற்றை எல்லாம் பாரதி ‘களவாண்டது’ ரிக் வேதத்தில் இருந்துதான்!
XXX
கானகம் பற்றிய கவிதை RV.10-146-6
ஆறாவது மந்திரத்தை முதலில் எடுத்கொள்வோம் (ரிக் 10-146-6)
என்ன அற்புதமான சொல் வீச்சு!
காட்டு ராணியே ! இனிய , சுகந்த மணம் வீசுபவளே! என்று உன்னைப் புகழ்ந்துவிட்டேன் அடடா அற்புதமே, நீ உழுதல் என்னும் தொழில் செய்யாமலேயே இப்படி கொட்டிக் கிடக்கிறதே! ஆரோக்கியம் தரும் வனத்தின் தாயே ! காடுகளில் உறையும் எல்லா உயிரினங்களுக்குத் தாயாக இருக்கிறாயே !
இதைப்படிக்கும்போது பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்தியாவின் இரண்டாவது தேசீய கீதமான வந்தேமாதரம் நினைவுக்கு வரும் . அதன் இரண்டு மொழி பெயர்ப்புகள், பாரதியார் பாடல்களில் உள்ளன.
அதுமட்டுமல்ல. நியாயமான ஆட்சி நடக்கும் நாட்டில், உழவர்கள் பயிரிடாமலே நிலம் விளையும் என்ற வள்ளுவன் குறளும் நினைவுக்கு வரும்
ரிக் 10-146-5
இறங்கு வரிசையில் ஐந்தாவது மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.
காடுகள் எவனையும் துன்புறுத்தாது. ஆனால் அங்கு துன்புறுத்துவோர் உண்டு. அன்பே வடிவான கானகத் தாய் எவரையும் துன்புறுத்தமாட்டாள் ஆயினும் அங்கு புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்களும் வழிப்போக்கரைத் தாக்கும் மறவர்களும் உண்டு. அங்கு வசிப்போருக்கு எல்லாம் இலவசம். இஷ்டம்போல பழங்களைப் பறித்து உண்ணலாம்.
இதை எழுதிய வேத காலத்திலும் நகரங்களில் கடைகள் இருந்திருக்கும். ஆயினும் கானக மக்களோ விலங்குகளோ எதையும் விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை .
அது மட்டுமல்ல; இந்துக்கள் மட்டுமே இன்று வரை பெண்களுக்கு மதிப்பு தருகிறார்கள். அத்தனை , நதி கள், மலைகள், காடுகள், நல்ல குணங்கள் அனைத்தையும் பெண் பாலில் சொல்லிவிட்டனர். பூமியை தாய் என்று அழைத்தவர்களும் இந்துக்களே. பின்னர் இதை உலகமே பின்பற்றியது. இங்கு காட்டுக்கு பெண் பால் கொடுத்து, தாயே, பெண்ணே என்று அ ழைக்கும் அழகையும் காணவேண்டும். இந்துக்களின் பெண்கள் பெயர்களை அந்தந்த மொழியில் மொழிபெயர்த்தால் எல்லாம் பாசிட்டிவ் பொருள் ஆக இருக்கும்!
XXX
நாலாவது மந்திரம் 10-146-4
வனத்தின் தேவியே ! உன் கட்டுக்குள் ஒருவன் பசுவை அழைக்கிறான்; அந்த சப்தமும் கேட்கிறது ; இன்னும் ஒருவன் மரத்தை வெட்டும் ஒலி எழுகிறது மாலையில் (சூரியன் மலை வாயில் விழுந்தபின்னர்) பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஒளியைக் கேட்டவுடன் வயிற்றில் புளி கரைக்கிறது ; எதோ திருடர்கள் வந்துவிட்டார்களோ என்று பயம் வந்துவிட்டது.
மேற்கூறிய ஒவ்வொரு மந்திரத்துக்கும் வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வியாக்கியானம் தருகின்றனர். இந் த மந்திரத்தில் உண்மையில் பசு மேய்ச்சலோ மரம் வெட்டலோ நடக்கவில்லை. அங்கு எழும் ஒலிகள் இப்படி ஒரு பிரமையை உண்டாக்குகிறது என்பது ஒரு விளக்கம்.
இதை எழுதும்போது , தினமணிக்கு கதைகள் கொடுப்பதற்காக எங்கள் வீட்டுக்கு வரும் ஜியாவுதீன் என்ற பாரஸ்ட் ரேஞ்ச்சர் கானகம் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. கழுதைப்புலிகளின் ஒலி , யாரோ கதவு அருகில் வந்து சிரிப்பது போலக் கேட்குமாம்; முன் பின் காடுகளை அறியாதோருக்கு ஏதோ பேய் பிசாசு வந்துவிட்டது என்று நினைப்பார்கள் !
காடுகளில் உள்ள மறவர்கள் கூட்டம் மிகப்பெரிய டமாரங்களை முழக்குவர் . இதைக் கேட்டவுடனேயே காடுகளின் வழியே செல்லும் வணிகக் குழு பயந்து, நடுங்கி, சிதறி ஓடுவர். அவர்கள், கொஞ்சமும் கூசாமல் ஆட்களைக் கொன்று குவித்து பொருள்களை எடுத்துக் கொள்ளுவார்கள்; காட்டு வழியே மன்னருக்கு தூது சென்ற ஒரு பிராமணன் கையில் தங்கம் இருக்கும் என்று கருதி கொன்ற மறவர்கள், ‘அடப்பாவமே ஒன்றுமில்லாத பார்ப்பனனைக் கொன்றுவிட்டோ மே என்று கையை சொடக்குப் போட்டுக்கொள்ளும் காட்சி புறநானூற்றில் உள்ளது. வணிகள் கூட்டத்துடன் சென்ற தமயந்தி என்னும் பேரழகி , நளனைப் பிரிந்து காட்டு வழியே சென்றபோது, நடந்த தாக்குதல் பற்றி மஹாபாரதம் விரிவாக ஸ்லோகங்களில் எழுதியுள்ளது . இங்கே வேதத்தில் ‘திருடர்கள் பயம்’ என்றவுடன் என் நினைவுக்கு வந்த காட்சி இது.
காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!”
“நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!
என்ற பாரதியின் பாட்டு, காட்டுக்குள் நடக்கும் தாக்குதலை விளக்குகிறது.
திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: :டி.எம். சௌந்தரராஜன், டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1959
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே ஏஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏ
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு – என்ற வீர பாண்டிய கட்ட பொம்மன் திரைப்படப் பாடலும் ஒப்பிடத்தக்கது
முதல் மூன்று மந்திரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்
TO BE CONTINUED……………………………………
tags– வானப்ரஸ்தம், காடுகள் , ரிக் வேதம், அரண்யானி கவிதை — 2