Post No. 10,275
Date uploaded in London – 30 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘பாரதியின் அறிவியல் பார்வை’ 8- வா.செ.குழந்தைசாமி
மஹாகவி பாரதியாரை அறிவியல் பார்வையில் பார்க்கும் நூல் இது. எழுதியவர் டாக்டர் திரு வா.செ.குழந்தைசாமி. (பிறப்பு 14-7-1929 மறைவு: 10-12-2016) அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்.2002ஆம் ஆண்டு நமது மத்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றவர். பல்வேறு நூல்களை எழுதியவர்.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது நான் தினமணி கதிர் இதழுக்காக இவரை நேரில் சென்று பேட்டி கண்டேன். அந்தப் பேட்டிக் கட்டுரை ‘அறிஞர்கள் போற்றும் குழந்தை’ என்ற தலைப்பில் 3-11-1978 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியானது. (அப்போது எனது புனைப் பெயர் ‘கிருஷ்ணபிரகாஷ்.)
சிறந்த அறிஞரான இவர் எழுதியுள்ள இந்த ‘பாரதியின் அறிவியல் பார்வை’ என்ற நூல் மார்ச் 1983இல் வெளியிடப்பட்டது. 124 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1) அறிவியல் பார்வை 2) பாரதியின் அறிவியல் பார்வை 3) புதுமைப் பெண்கள் 4) ஆயிரம் தொழில் செய்குவீர் 5) பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம் 6) மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 7) ஒப்பிலாத சமுதாயம் 8) மனிதர் தம்மை அமரர்களாக்குவோம் ஆகிய எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் (அறிவியல் பார்வை) நமது சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மை இன்னும் பரவலாக உருவாகவில்லை, அறிவியல் அணுகுமுறை இயற்கையான ஒரு கூறுபாடாக இன்னும் இடம் பெறவில்லை என்று குறிப்பிடும் இந்த நூலாசிரியர், முதிர்ந்த தெளிவோடும், முறையான வழியோடும் ஒரு மறுமலர்ச்சியை மாற்றத்தை உருவாக்கும் வழிகாட்டிகளின் வரிசையில் முன் நிற்பவர் பாரதி என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இரண்டாம் அத்தியாயத்தில் (பாரதியின் அறிவியல் பார்வை),
பாரதியார், “காலத்துக் கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்துக் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்று அறுதியிட்டு உறுதியாய்க் கூறியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் ‘பழம் பெரும் நூல்கள் பயன்படக் கூடிய அளவிலே இடம் பெற வேண்டும்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். அவரது பயணத்திலே அறிவியல் பார்வை அணையா விளக்காகப் பயன்பட்டது என்கிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் (புதுமைப் பெண்கள்) மிளகாய்ப் பழச் சாமியார் என்ற கதையில் சாமியார் வாயிலாகப் பாரதியார் கூறும் பின் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார் திரு வா.செ.குழந்தைசாமி.
“ உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை”
“மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும்” என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார். ‘பட்டங்கள் ஆளவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று அவர்களாகவே அறிவித்துக் கொண்டதையும் பாரதியார் மகிழ்ச்சியோடு பதிவிடுகிறார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்பது அவர்கள் சட்டம்.
‘புதுமை எனில் இது புதுமை; புரட்சி எனில் இது புரட்சி’.
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட பெண்களுக்கு அப்படிப்பட்ட புதிய நிலையை உருவாக்குவது கல்வியே என்பது பாரதியாரின் முடிவு. ‘ சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற புதுமைப் பெண்ணின் முழக்கத்தையும் அதற்கான அடிப்படை – ‘அறிவு நிலை’ என்ற உண்மையையும் நூலாசிரியர் இங்கு விளக்குகிறார்.
அடுத்து நான்காம் அத்தியாயமான ஆயிரம் தொழில் செய்குவீர் என்ற அத்தியாயத்தில்
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்
என்று பாரதியின் நெஞ்சம் புழுங்குவதையும் அந்தப் பஞ்சத்தை நீக்க செல்வநிலை உயர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுவதையும் நூலாசிரியர் நிலை நிறுத்துகிறார். பாரதியாரது அறிவியல் அணுகுமுறை தொழில் வளர்ச்சி ஏற்படுவது இயல்பானதே என்பதைக் கொள்வதால், “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் வகுத்திடுவீ ரே “ என்று அவரை வேண்டுகொள் விடுக்கச் செய்கிறது என்றும், ‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே’ என்றும் அவரைப் பாட வைக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
அடுத்த ஐந்தாம் அத்தியாயத்தில் (பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம்)
‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்க’ விழைந்தவர் பாரதி என்று கூறும் நூலாசிரியர் அதற்கு அடிப்படைத் தேவையாக, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ ‘பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்” என்று கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்வி பெற்ற மக்களே தான் இனிச் செல்வம் பெற முடியும் என்பது இன்றைய காலகட்டத்தின் நிலை.
ஆகவே தான் அவர் “அறிவே வலிமை – கல்வியே செல்வத்தின் தாய்” என்று முழங்கினார்.
‘மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’ என்பது அடுத்த அத்தியாயம். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று முழங்கியவர் பாரதியார்.
‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அதே சமயம் தமிழின் இன்றைய குறைபாடுகளைப் பற்றியும் அவர் எண்ணுகிறார். ஆகவே “புதிய செய்தி, புதிய புதிய யோசனை; புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
“புதிய நுட்பங்கள் கூறும் கலைகள் தமிழினில் இல்லை; அவற்றைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை; மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று கூறிய ஒருவனை “என்று அந்தப் பேதை உரைத்தான்” என்று கூறிச் சாடுகிறார்.
“இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்று வானம் அளந்தது அனைத்தும் அளந்த வண் மொழி வாழ வழி கூறுகிறார் அவர்.
இன்றைய உலகில் 100,000 பத்திரிகைகள் பல மொழிகளில் வருகின்றன. இன்று ஆண்டு தோறும் 12,00,000 ஆய்வுக் கட்டுரைகள் உலகில் வெளியாகின்றன. எல்லா வகையான துறைகளையும் சேர்த்துப் பார்த்தால் அமெரிக்காவில் 80,000 தலைப்புகள் உள்ளன. சோவியத் ஒன்றியம் 85000 தலைப்புகளை வெளியிடுகிறது. ஆகவே தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்பதை நூலாசிரியர் மிகச் சரியாக இப்படி ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
ஏழாவது அத்தியாயத்தில் (ஒப்பிலாத சமுதாயம்) – எப்போதுமே புதுமை, புதிய உலகு, புதிய சமுதாயம் ஆகியவை பற்றிய எண்ணங்களை பாரதியார் வெளியிடுகிறார். அவர் சொற்களில் இந்தக் கனவுகளே ஒளி விடுகின்றன என்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் கூறுகிறார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது தான் பாரதியின் நிலைப்பாடு.
இறுதி அத்தியாயத்தில் (மனிதர் தம்மை அமரர்களாக்குவோம்) பாரதியின் பாடல்களில்
1) பாரதிக்கு மனிதனின் ஆற்றலில் அளவு கடந்த நம்பிக்கை
2) மனிதன் உயர்ந்து தானே அமர நிலை அடையக்கூடியவன்
என்ற எண்ணம் ஆகிய இரண்டையும் காணலாம் என்பதை திரு குழந்தைசாமி சுட்டிக் காட்டுகிறார்.
‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து
மனிதர் தம்மை அமரர்களாக்க” என்று இப்படி மகத்தான கனவைக் கண்டவன் பாரதி. அவர் பார்வையின் உயரத்தை அவரது சொற்களிலேயே காணலாம் என பல சான்றுகளைக் காட்டி நிறுவி நூலை முடிக்கிறார் நூலாசிரியர்.
பாரதியாரின் அறிவியல் பார்வையைத் தெள்ளத் தெளிவாக அலசி ஆராயும் இந்த நூல் அறிவியல் நோக்கில் அமைந்துள்ள நல்ல ஒரு நூல்.
இந்த நூலுக்கு பாரதி பக்தர் ம.ப.பெரியசாமித் தூரன் அழகிய முன்னுரை ஒன்றைத் தந்துள்ளார்.
அறிவியலிலும் பாரதி முன் நிற்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டி விளக்கும் இந்த நூல் பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.
tags- பாரதி, அறிவியல் பார்வை, வா.செ.குழந்தைசாமி,