WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,446
Date uploaded in London – – 15 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திரு அருட்பிரகாச வள்ளலார் – 2
ச.நாகராஜன்
கூடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் ஒரு சமயம் சுவாமிகள் ஒரு அறையில் இருந்தார். அப்போது ஒரு மனிதர் தங்கு தடையின்றி உள்ளே நுழைந்து சுவாமிகள் இருந்த அறைக்குள் சென்றார். அவரை எங்கேயும் காணாததால் சுவாமிகளை வினவ, “அவர் ஒரு சித்தர். என்னைக் காண வந்தார். இந்நேரம் காசியில் இருப்பார். இதோ அவர் கொடுத்த லட்டு” என்றார் சுவாமிகள்.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வப்பொழுது இரும்பு, ஈயம், செம்பு ஆகிய உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் காண்பிப்பார் சுவாமிகள். பின்னர் யாரும் அதை எடுக்காதபடி கேணிகளிலும் குளங்களிலும் எறிந்து விடுவார். அவருடனேயே இருந்த வேம்பையர் என்பவர் சுவாமிகள் உலோகங்களை மாற்றும் விதத்தையும் அதற்கென அவர் கொண்டிருந்த பொருள்களையும் நன்கு கவனித்து வந்தார். அந்தப் பொருள்களைச் சேகரித்து தானும் மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயன்றார். அவர் கண் பார்வை உடனே மங்கி ஒளியை இழந்தது. என்ன செய்தும் கண் பார்வை வரவில்லை. சுவாமிகளிடம் வந்து தான் செய்த தவறை ஒளிக்காமல் சொல்லி மன்னிப்பு வேண்டினார் அவர். சுவாமிகள் நீரை எடுத்து அவர் கண்ணில் பூசவே கண்ணொளி அவருக்கு மீண்டது.
விருத்தாசலத்தில் வசித்து வந்தவர் வேங்கடேச ஐயர் என்பவர். அவர் ஒரு வக்கீல். ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமிகள் ஆற்றும் பிரசங்கங்களுக்குத் தவறாமல் வருகை புரிந்து அதைக் கேட்டு முடிந்த பின்னர் இரவு நேரத்தில் மூன்று மைல் தூரமுள்ள காட்டுப் பாதையைக் கடந்து அவர் ஊர் திரும்புவது வழக்கம். காட்டுப் பாதையில் செல்லும் போது அவர் முன்னர் (ஆள் யாரும் இல்லாமல்) இரு தீவட்டிகள் மட்டும் போய்க் கொண்டிருக்கும். அதை ஏந்துபவர் யாரும் இருக்க மாட்டார்கள். சுவாமிகளின் அருட்செயலே இது என்பதை உணர்ந்த ஐயர் வடலூருக்கு வந்து அங்கேயே தங்கி சுவாமிகளின் பூரண அருளுக்குப் பாத்திரர் ஆனார்.
சுவாமிகளின் சத்திய தரும சாலையில் ஒரு நாள் இரவு திடீரென்று நூறு பேர் வந்து சேர்ந்தனர். சமையல் எல்லாம் முடிந்து அனைவரும் உண்ணும் தருணம் அது. என்ன செய்வது என்று அனைவரும் தவித்தனர். ‘பிச், இலை போடுங்கள் எல்லோருக்கும்’ என்று கூறிய சுவாமிகள் தானே அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார். இருந்த உணவு நூறு பேருக்கும் போதுமானதாக இருந்தது. அனைவரும் திருப்தியுடன் உண்டனர்.
வடலூரில் ஒரு சமயம் மழை இல்லாமல் போனது. அனைவரும் வருந்துவதைக் கண்ட சுவாமிகள் நன்கு மழை பொழிய அனுக்கிரகித்தார். அதே போல புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சுவாமிகளை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இரண்டு கிணறுகளிலும் நீர் இன்மையைச் சொல்லி அருள் புரிய வேண்டினர். சுவாமிகள் அனுக்கிரகம் செய்தார். உடனே இரு கிணறுகளும் நிரம்பியதோடு அவற்றின் நீரும் இனிமையானது. அந்தக் கிணறுகள் இன்று வரை வற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒரு இரவில் சுவாமிகளும் மஞ்சக்குப்பம் கோர்ட்டு சிரஸ்தார் இராமச்சந்திர முதலியாரும் ஒரு மாட்டு வண்டியில் ஏறி வடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் சென்று கொண்டிருந்தனர். வழியில் சில கள்வர்கள் வண்டியை மறித்தனர். முதலியார் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழட்டுமாறு அவர்கள் அதட்டினர். சுவாமிகள் அக்கள்வரை நோக்கி ‘அவசரமோ’ என்றார். அவரை அடிக்க கள்வர் கையை ஓங்க, ஓங்கிய கைகள் அப்படியே நின்றன. அவர்களின் கண் பார்வையும் போனது. பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் மன்னிக்குமாறு வேண்ட ‘பிச்’ என்னும் மகா மந்திரத்தை சுவாமிகள் கூறினார். இழந்த பார்வையை மீண்டும் பெற்ற கள்வர்கள் அன்று முதல் களவுத் தொழிலை விட்டு விட்டு சன்மார்க்க நெறியில் நின்றனர்.
குறிஞ்சிப்பாடியில் உள்ள வணிகர் ஒருவர் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜலங்கழிக்க மறைவில் ஒதுங்கும் போது புற்றரவு ஒன்று அவரைத் தீண்டி விட்டது. உடனே அவர் “இராமலிங்கத்தின் மீது ஆணை” என்று கூறவே அப்பாம்பு புற்றில் நுழையாமல் அப்படியே நின்று விட்டது. அதை அவர் கவனியாமல் பயந்து அங்கிருந்து விரைவாக அகன்று வீடு போய்ச் சேர்ந்தார். விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அவர் வடலூர் வந்து சுவாமிகளை தரிசனம் செய்த போது, “அட, பிச்! ஒரு உயிரை எத்தனை நாள் தான் பட்டினி போடுகிறது?! மூன்று நாட்கள் ஆயிற்றே. உடனே போய் ஆணையை விடுதலை செய்யும்!” என்றார் சுவாமிகள். வியப்படைந்த அந்த வணிகச் செட்டியார் உடனே பாம்பு இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு புற்றின் வாயிலில் பாம்பு பரிதாபமாக படுத்துக் கிடந்தது. செட்டியார் ஆணையை விடுதலை செய்ய பாம்பு புற்றுக்குள் நுழைந்தது.
சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமான தேவநாயகம் பிள்ளை என்பவரின் ஒரே புதல்வரான ஐயாசாமி என்பவர் நோய்வாய்ப்பட்டார். இருபது வயதே ஆன அவரை வைத்தியர்கள் கை விட்டு விட்டனர். அவர் ‘ஒ’வென்று அரற்றி சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனை செய்தார். அன்று இரவே 11 மணிக்குப் பின்னர் அவர் இல்லம் வந்து சேர்ந்த சுவாமிகள் அவருக்கும் புதல்வருக்கும் திருநீறு கொடுத்து அருளி, “நாளை குணமாகும்” என்றார். மறு நாள் வியாதி குணமானது.
ஆனால் அவர் தேவநாயகம் வீட்டில் இருந்த அதே சமயம் வடலூர் சத்திய தரும சாலையில் சுவாமிகள் உபந்யாசம் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். இது பின்னால் தெரிய வர அனைவரும் இரு இடங்களில் ஒரே சமயத்தில் அவர் இருந்ததை எண்ணி பிரமித்தனர்.
ஒரு நாள், வெளியே சென்ற சுவாமிகள் வரவில்லையே என்று எண்ணிய வேலூர் சண்முகம் பிள்ளை என்பார் சாலையை விட்டு வெளியே போய்ப் பார்த்தார். அங்கே சுவாமிகளுடைய அங்கங்கள் எல்லாம் தனித்தனியே கிடந்தன. ஐயோ என்று அலறி அந்த அன்பர் புலம்பித் தவித்த வேளையில் சுவாமிகள் திடீரென்று அவர் கண் முன்னே தோன்றினார்., “இனி நீர் இது மாதிரி வந்து பார்க்காதீர்” என்று அவரை சுவாமிகள் எச்சரித்தார். அவரும் மகிழ்ச்சியுடன் சுவாமிகளைப் பின் தொடர இருவரும் சத்திய தரும சாலையை அடைந்தனர்.
* தொடரும்
tags- வள்ளலார் – 2,