WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,927
Date uploaded in London – – 3 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 21
ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல் போட்டி!
ச.நாகராஜன்
குலோத்துங்க சோழன் அவையில் இரு பெரும் புலவர்களான ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் அரசவையை அலங்கரித்தனர்.
ஒட்டக்கூத்தர், புகழேந்தியார் ஆகிய இருவருக்கும் அடிக்கடி பாடல் போட்டி நடைபெறுவதுண்டு.
அதனால் மன்னரும் மற்றையோரும் தாம் பெற்ற தமிழ்ப் பாடல்களால் பெரிதும் மகிழ்ச்சி அடைவது வழக்கம்.
ஒரு முறை நெய்த்தானம் என்னும் ஊருக்குச் சென்ற குலோத்துங்கன் தம்முடன் இரு பெரும் புலவரையும் அழைத்துச் சென்றான்.
அங்கு ஈசனை தரிசனம் செய்யும் போது ஒட்டக்கூத்தரை கவி பாடுமாறு வேண்டினான் குலோத்துங்கன்.
அவர் அற்புதமான ஒரு பாடலைப் பாடினார். அடுத்து புகழேந்தியாரை வேண்ட அவரோ ஒட்டக்கூத்தரை விஞ்சுமாறு ஒரு பாடலைப் புனைந்து பாடினார்.
இது ஊரெங்கும் பரவ அனைவரும் மகிழ்ந்தனர்.
இந்த அரும் சம்பவத்தைத் தொண்டை மண்டல சதகம் தனது 21 பாடலில் கூறிப் போற்றுகிறது.
நூலார்கலை வல்ல செம்பியன்கேட்ப நொடித்து மிக்க
கோலாகலனொட்டக் கூத்தனையன்றுதற் கோலியென்று
மேலார்கவிசொல்லி நெய்த்தானத்தேசென்று வென்றுகொண்ட
மாலார்களந்தைப் புகழேந்தியுந் தொண்டை மண்டலமே
பாடலின் பொருள் :
இலக்கண நூல்களும் ஏனைய சாத்திரங்களும் கற்று வல்ல குலோத்துங்க சோழ மஹாராஜன் ஒட்டக்கூத்தப் புலவர் சகிதமாய், தன்னை அழைக்க நெய்த்தானம் என்னும் தலத்திற்குச் சென்று நெய்த்தானீசரைத் தரிசிக்கும் போது ஒட்டக்கூத்தரைக் கவி பாடச் செய்து தன்னையும் பாடச் சொல்ல “தற்கோலி” என்னும் சிறந்த பாடலைப் பாடி, மிகுந்த மேன்மை உடைய ஒட்டக்கூத்தரை வென்றவராகிய புகழேந்திப் புலவர் வாழ்ந்த மேகம் தவழும் சோலை சூழ்ந்த களத்தூரும் தொண்டை மண்டலத்தில் உள்ள ஊராகும்.
இதில் கூறப்படும் பாடல்களைப் பார்ப்போம்.
ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது:
விக்கா வுக்கா வித்தா விப் போய் விட்டா நட்டார் சுட்டூர் புக்கார்
இக்கா யத்தா சைப்பா டுற்றே யிற்றே டிப் போய் வைப்பீர் நிற்பீர்
அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நெக்கா டக்கா னத்தோ டொப்பேர் நெய்த்தா னத்தானைச் சேவித்தே
கடினமான இந்தப் பாடலின் பொருள் வருமாறு:
விக்கா – விக்கல் கண்டு
உக்கு – அஞ்சி நடுநடுங்கி
ஆவி தாவி போய் விட்டால் – உடலிலிருந்து ஆவி அப்புறப்பட்டு உடலை விட்டுப் போய் விட்டால்
நட்டார் – (முன்னர் பிரியாமல் இருந்த) தாய் தந்தை முதலிய சுற்றத்தார்
சுட்டு ஊர் புக்கார் – உடலைச் சுட்டு விட்டு தம் ஊருக்குத் திரும்பி வாழ்வர்
இக் காயத்து ஆசைப்பாடு உற்று – இந்தத் தன்மையை உடைய உடலின் மீது ஆசைப்பட்டு
இல் தேடிப் போய் வைப்பீர் நிற்பீர் – அதனை போஷிக்க நித்தம் பொருளைத் தேடி அறம் செய்யாமல் அதனை வீட்டில் புதைத்து வைக்கின்றவர்களே
அக்கு ஆட – அக்குமாலை அசைந்தாடவும்
பேய் தொக்கு ஆட – பேய்கள் கூடி ஆடவும்
சூழ் அப்பு ஆட – ஜடா மகுடத்தில் இருக்கும் கங்கை ஆடவும்
பூண் நெக்கு ஆட – காதில் அணிந்த சர்ப்பக் குழைகள் நெகிழ்ந்து ஆடவும்
கானத்து ஆட போம் – மயானத்திலே அடுகின்ற
அ பேர் நெய்த்தானத்தானை – அந்தப் பெரிய நெய்த்தானம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள பரமசிவனை
சேவித்தே– வணங்கி நிற்பீர்
இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். உடனே புகழேந்தியார் தன் பங்கிற்கு இந்தப் பாடலைப் பாடினார்:
தற்கோ லிப்பூ சற்பா சத்தே தப்பா மற்சா கைக்கே நிற்பீர்
முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்
வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா ளுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தி யானித்தே
ஒட்டக்கூத்தர் எந்தப் பொருளை மையமாகக் கொண்டு நெய்த்தானத்தானைப் பாடிப் பரவினாரோ அதே பொருளை மையமாகக் கொண்டு அதை விட கடினமான நடையில் பாடி நெய்த்தானத்தைப் பாடி பரவிய புகழேந்தியாரின் திறத்தையும் மேன்மையையும் கண்ட சோழன் வியந்து பாராட்டினான்.
பாடலின் பொருள் வருமாறு:
தன் கோலி – இருவினைகள் தன்னை வளைத்துக் கொள்ள
பூசல் பாசத்தே – * பாசத்திரயமாகிய போராட்டத்தில் அகப்பட்டு
தப்பாமல் சாகைக்கே நிற்பீர் – தப்பாமல் சாகும் படி நிற்பவர்களே
முன் கோலி கோலி -முந்தி விரைந்து
முட்டாமல் பூசித்து – மந்திர தந்திர வழுவு வராமல் பூஜை செய்து
சேவித்து – வணங்கி
வற்றா நெடு ஓடை – வற்றாத நெடிய நீரோடைகளில் உள்ள
பாரைச் சேல் – பாரை மீன்கள்
மைபூகத்து – மேக மண்டலத்தை அளாவி இருக்கின்ற கமுக மரத்தில்
தாவி ஏறிப் போய் – தாவி ஏறிச் சென்று
(பாக்குகளை உதிர்த்து அங்கிருந்து திரும்பி)
நெல் தாள் உற்று – நெல்லின் அடியில் விழுந்து (இந்த நெற்கதிர்களைச் சிதறி)
ஆலை பாகில் சேர் – ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் பாகில் பாய்கின்ற வளப்பம் மிகுந்த
நெய்த்தானத்தானைத் தியானித்தே – நெய்த்தானத்தில் எழுந்தருளி இருக்கும் பரம்சிவனைத் தியானித்து நிற்பீர்களாக!
* பாசத் திரயம் என்பது மண், பெண், பொன் என்ற மூன்றில் ஆசை
அருமையான இந்தப் பாடல்களின் சரிதத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது தொண்டைமண்டல சதகம்!
***
TAGS– ஒட்டக்கூத்தர், புகழேந்தி, குலோத்துங்க சோழன், பாடல் போட்டி