சமண மதக் கதை: பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் (Post.11,107)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,107

Date uploaded in London – –    15 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனிதர்களை நான்கு  வர்ணத்தாராகப் பிரிக்கிறது  பகவத் கீதை. இது தோலின் வர்ணம் அல்ல. குணத்தின் வர்ணம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிரும்’ என்பதை ஏற்கும் இந்துமதம், அவரவர் குணத்தினால் வேறுபட்டவர் என்கிறது ; ஆயினும் அது காலப்போக்கில் பிறப்பினை அடிப்படையாக வைத்துப் பின்பற்றப்பட்டதும் அந்த நால் வர்ணம் 40,000 வர்ணங்களாக உடைந்து ஒவ்வொருவரும் “நான்தான் கீழ் ஜாதி; என்னைப்  பிற்பட்ட வகுப்பில் சேர்த்து வேலை கொடு , கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையோடு இடம் கொடு ; ஆனால் எங்கப்பன் Bank Balance பாங்க் பாலன்ஸ் – ஐப் பார்க்காதே; அது பல கோடி” என்று கூத்தடிப்பதும் உலக அதிசயம். நாலு வர்ணம் 40,000 வர்ணங்களாக- ஜாதிகளாக — உடைந்தது எப்படி என்பது எவருக்குமே தெரியவும் இல்லை; புரியவும் இல்லை.; உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.. நிற்க; சுவையான கதையைக் கேளுங்கள் .

சமண மதம், புத்தருக்கு மிகவும் முந்தியது. அவர்களுடைய கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் புத்தரின் சீனியர். அவருக்கு முன்னர் 23 பேர் இருந்ததால் அந்த மதம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த சமய நூலில் உள்ள ஒரு விஷயம்தான் மனிதர்களில் ‘ஆறு வகை நிறம் உடைய மனிதர்கள்’ இருக்கிறார்கள் என்பதாகும்.

இதை ஒரு கதை மூலம் வருணிப்பார்கள் :

ஒரு சமயம், ஆறு பயணிகள் யாத்திரை செய்தார்கள். வழியில் ஒரு பழ மரத்தைக் கண்டார்கள். ஒரே ஆனந்தம். அவர்களுக்கோ நீண்ட தூரம் வந்த களைப்பு; தாகம்; பசி வேறு.

ஆறு பேரில் ஒருவன் சொன்னான்; உடனே இந்த பழ மரத்தை வெட்டிச் சாய்ப்போம். நாம் பழ ங்களைச் சுவைத்து உண்ணுவோம் — என்றான்

இரண்டாவது பயணி சொன்னான் — வேண்டாம், வேண்டாம் ; ஒரு பெரிய மரக்கிளையை வெட்டிச் சாய்ப்போம்; அது நமக்குப் போதும்.

மூன்றாவது யாத்ரீகன் சொன்னான் – பெரிய மரக்கிளை எதற்கு; ஒரு கொம்பிலுள்ள பழங்கள் போதுமே.

நான்காமவன் சொன்னான் – அட, எதற்கு இவ்வளவு கஷ்டம்! நாம் மரத்தின் மீது ஏறி  பழங்களை எடுத்து உண்டு பசியாறுவோம்.

ஐந்தாவது பயணி சொன்னான் – அடே , பசங்களா ; ஏன் பழங்களை வீணடிக்கிறீர்கள். அது மரத்திலேயே இருக்கட்டும். ஒவ்வொரு பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மரத்தை வாழ விடுவோம் என்றான்.

மிகவும் புத்திசாலியான ஆறாவது யாத்ரீகன் சொன்னான் – வேண்டவே வேண்டாம் . கீழே எவ்வளவு  பழங்கள் விழுந்திருக்கின்றன. அவற்றைத் தின்று மகிழ்வோம். மரத்தைத் தொடவே தேவை இல்லை .- என்றான்.

இந்த ஆறு வகை குணங்களை Colour ‘வர்ணம்’ மூலம் விளக்குகிறது சமண மதம் . இதற்கு அந்த சமய நூல்களில் காணப்படும் சொல் ‘லேஷ்யம்’ LESHYA  என்பதாகும் .

கருப்பு, நீலம் , சாம்பல் , சிவப்பு, மஞ்சள் (தாமரை மொட்டின் நிறம்), வெள்ளை என்ற ஆறு வர்ண மனிதர்கள் உள்ளனர்.

கருப்பு, நீலம் , சாம்பல்  என்ற வர்ணங்கள் கொண்ட முதல் மூன்று வகை மனிதர்களும் மோசமானவர்கள்..

சிவப்பு, மஞ்சள் (தாமரை மொட்டின் நிறம்), வெள்ளை  என்ற வர்ணங்கள் கொண்ட கடைசி மூன்று வகை மனிதர்களும் உயர்ந்தவர்கள்.

முதல் மூன்று வகை மனிதர்களின் ஆன்மா தீய பிறப்புகளை அடையும். கடைசி மூன்று வகை மனிதர்களின் ஆன்மா உயர் பிறப்பு அடையும். ஆன்மீக ஒளி உடைய ஆன்மாக்கள் அவை .

அதாவது கருப்பு நிற குணம் உடையவன் மிகவும் மோசம் ஆனவன். வெள்ளை நிற குணம் உடையவன் உயர்ந்தவன் .

பழ மரத்தை அடியோடு சாய்ப்போம் (கருப்பு), பெரிய கிளையை வெட்டி முறிப்போம் (நீலம்), ஒரு கொம்பை மட்டும் உடைப்போம் (சாம்பல் )- என்று செப்பியோர் நல்ல ஆன்மாக்கள் இல்லை.

பழ மரத்தில் ஏறி வேண்டியதைப் பறித்துண்போம் (சிவப்பு), கைக்கு எட்டியத்தைப் பறிப்போம் (மஞ்சள் ), கீழே உதிர்ந்து கிடைக்கும் பழங்களை உண்போமே (வெள்ளை) — என்று நுவன்றோர் நல்ல ஆன்மாக்கள் .

xxx

எனது கருத்து

முதலில் வர்ணம் என்ற சொல் குணத்தைக் குறிக்குமேயன்றி , பிறப்பைக் குறிக்காது என்பதுதான் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்து மதக் கொள்கை ;

இரண்டாவது இயற்கைப் பாதுகாப்பு, மரங்களின் பாதுகாப்பு, புறச் சூழல் பாதுகாப்பு முதலிய கருத்துக்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. தேவைக்கு அதிகமாக வேண்டுபவன் கருப்பு குணம் உடையவன். இயற்கையை அதன் போக்கில் விட்டு ரசிப்பவன் தூய வெள்ளை நிறம் உடையவன்.

இந்த ஆறு குணங்களை வருணிக்கும் நீண்ட ஸ்லோகங்கள் சமண மத நூல்களில் உள்ளன. அவை அர்த்தமாகதி  என்னும் ஒரு வகை பிராகிருத மொழியில் உள்ள ஸ்லோகங்கள்; ஸம்ஸ்க்ருதம் அறிந்தோர் எளிதில் புரிந்து கொள்ளுவர்..

ஒரே ஒரு எடுத்துக்காட்டு

கின்ஹா நீலா ய காவு ய தேவு பம்ஹா தஹேவ ய

ஸுக்லேசா  ய  சட்டா  ய  நாமாயிம் து  ஜஹக்கமம்

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ண /கருப்பு, நீல/நீலம் , காபோடா / சாம்பல் , தேஜஸ் /சிவப்பு, பத்ம /தாமரை மொட்டின் மஞ்சள் , சுக்ல/ வெள்ளை  என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லேஷ்ய  என்பது ஆன்மாவை ஒட்டிக்கொள்ளும் வர்ணம்- இது சமண மதத்துக்கே உரிய கொள்கை. இந்தச் சொல்லின் பிறப்பியலும் புரிபடவில்லை

எப்படி ஒரு படிகக் கல்லை (Crystal)  மற்றோர் நிறக் கல்லின் அருகே வைக்கையில், அந்தப் படிகம்தான் சேர்ந்த கல்லின் நிறத்தைப் பிரதிபலிக்குமோ அதே  போன்றது லேஷ்யம்

கறுப்பு வர்ண குணம் — கொடூரம், வன்செயல், பஞ்ச மா பாதகம் செய்வோன்; பாவத்துக்கு அஞ்சாதவன் .

நீல வர்ண குணம் – கோபம், பேராசை, புலன் அடக்கம் அற்றவன் ; மோசடி செய்வோன்

சாம்பல் வர்ண குணம் – நேர்மையற்றவன், பிறரை ஏமாற்றிப்  பிழைப்பவன் திருடன், தீங்கிழைப்போன், பொறாமைக்காரன்

சிவப்பு வர்ண குணம் – எளிமை, பணிவு, படிப்பாளி, சுய கட்டுப்பாடு உடையவன் , நல்லது செய்வோன்

தாமரை மொட்டின் மஞ்சள் வர்ண குணம்- காம, க்ரோத, மோகம் இல்லாதவன், மன அமைதி உடையவன் , குறைவாகப் பேசுவோன் , நிறைய கற்பவன்

வெள்ளை வர்ண குணம்- நல்லனவற்றை மட்டும் தியானிப்போன் , மன அமைதி கொண்டவன், தீயனவற்றை விலக்கியவன்

xxx

என் கருத்து

மனிதர்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் (AURA)  உண்டு என்பதும் அதை ஞானிகள் மட்டுமே காண முடியும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. அதைத்தான் மேற்கூறிய  நிறங்கள் குறிப்பிடுகின்றன என்பது என் கருத்து.

நாம் ஒரு சந்நியாசி முன்னர் போய் நின்றவுடன் , நம் உடலைச் சுற்றி பல அடுக்குகளில் (auras in several layers)  ஒளிக்கற்றை  இருக்கும். அதில் பூர்வ ஜன்ம ஒளிக்கற்றை , தற்போதைய பிறப்பு ஒளிக்கற்றை , தற்போது  வந்த காரியத்தின் எண்ண ஒளிக்கற்றை ஆகிய எல்லாவற்றையும் ஞானிகள் பார்க்க முடியும். அதற்கேற்ப அவர்கள் நமக்கு உதவுவர்..

சட்டம் என்ன சொன்னாலும், அதை நீதிபதி பார்க்கும் விதம், வியாக்கியானம் செய்யும் விதம் வேறுபடுகிறது. அதிலும் கூட உயர்ந்த பட்ச தண்டனை, குறைந்த பட்ச  தண்டனை என்று வரையரை செய்யப்பட்டுள்ளது. அப்போது நீதிபதி சொல்லப்போகும் விஷயம் இரு தரப்பு வாதி, பிரதிவாதிகளுக்கும் தெரியாது. இதைப் போலவே நாம் சென்று பார்க்கும் சன்யாசியும் நமக்கு அருள் ஆசி வழங்குவதும்.

நம்முடைய ஒளி (Aura)  எப்படியாகிலும் , நீதிபதி போல, ஞானிகளும் நமக்கு குறைந்தோ கூட்டியோ விடுதலையோ , தண்டனையோ  தருவார்கள். அதை நிர்ணயிக்க அவர்களுக்கு உதவுவது நம்மைச் சுற்றியுள்ள ஒளி (Aura) வட்டமே. அது நமது குணத்தை, சிந்தனையைப் பொறுத்து கருப்பு அடையலாம் (may be blackened) ; ஒளிப்பிழம்பாக (may be brightened) சிவப்பும் அடையலாம்.

பிராமணச் சிறுவர்கள் தினமும் காலையில் சமிதாதானம் செய்கையில் தேஜஸ் மிக்க தேவியே எனக்கு தேஜஸ் (தேஜோ மய ஒளி) கொடு என்று வேண்டுவர். காயத்ரீ ஜபம் செய்வோரும் இந்த தேஜஸ் ஒளியைப் பெறுவார்கள்.

(இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. சில ஜாதகங்களை என் அண்ணனிடம் காட்டியவுடன் தொடவே மறுத்து விடுகிறார். தேர்தலில் தோற்றுப்போகும் ஒரு நபரை என் தந்தை, சுவாமிஜி கிருஷ்ணாவிடம் அறிமுகப்படுத்த முயன்றபோது , அவர் இரண்டுமுறை முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்த நபரை அவமதித்தார். என் தந்தைக்குப் புரிந்துவிட்டது  . அச்சன்கோவில் அய்யப்பன் சந்நிதியில் இருந்து புறப்படும் முன், மூன்றாவது தடவை அறிமுகப்படுத்தியபோது , சரி போ!!  பிரார்த்தி க்கிறேன் என்றார் . பின்னர் அவரே ஒருமுறை  இதுபற்றி விளக்குகையில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார். உன் தந்தை தோற்றுப்போகும் ஒரு ஆளை கூட்டிவந்துவிட்டார். மஹா கணபதியிடம் சந்தானத்துக்காக ( என் தந்தையின் பெயர்) சண்டை போட்டு வெற்றியை வாங்கித் தந்தேன் என்றார் . அந்த உதவாக்கரை நபர் மதுரையில் 65 வோட்டில் வெற்றி பெற்றார். தேர்தலில் தோற்கப்போகும் ராகுல் காந்தியை சிருங்கேரி சங்கராச்சாரியார் பார்க்க மறுத்தது, ஜெயலலிதாவின் பரிதாபச்  சாவு காஞ்சி சங்கராச்சாரியாருக்குத் தெரிந்தது, பிரேமதாசா , மைக்கேல் ஜாக்சனை சத்யா சாயிபாபா பார்க்க மறுத்தது, வாஜ்பாயியை எமர்ஜென்சி காலத்திலேயே வாருங்கள் பிரதம மந்திரியே  என்று பாபா அழைத்தது போன்ற அதிசயங்களை முன் ஒரு கட்டுரையில் கொடுத்து விட்டேன். நம்மைப் பற்றி அவர்கள் நினைத்தாலே நமக்கு நடக்கப் போவதை அறிவர். ஆனால் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அவர்கள் இப்படிச் செய்வார்கள்; அதுதான் நம்மைச் சுற்றயுள்ள ஒளி வட்டம் செய்யும் வேலை )

-subham-

Tags- சமண மதம், கதை, ஆறு வர்ணம், மனிதர்களின் நிறங்கள், ஒளி வட்டம் , பழ மரம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: