
Post No. 11,307
Date uploaded in London – 29 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இது மூன்றாம் பகுதி
மதுரை வைகை நதி ஒரு காலத்தில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அ தன் அழகை சங்க காலத்துக்குப் பின்ன எழுந்த சிலப்பதிகார காவியத்திலும் காணலாம். சங்க கால நூல்களில் எட்டுத் தொகையில் ஒன்று கலித்தொகை என்னும் நூல்;. வைகை நதியின் கரைகளில் உள்ள ஐந்து வினோத உருவம் கொண்ட மரங்கள் இருந்தன.அவைகளின் பூக்களும் வெவ்வேறு நிறத்தில் பூத்துக் குலுங்கின இதைக்க கண்டவுடன் கலித்தொகை புலவருக்கு புராணம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார் :-
5 மரம் 5 கடவுள்
கலித்தொகை 26, பாலை பாடிய பெருங்கடுங்கோ
ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,
நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;
(FROM PROJECT MADURAI WEBSITE)
பொருள்
ஒப்பற்ற குழைகளை அணிந்த பலதேவனைப் போல வெண்ணிற பூங்கொத்துக்களைக் கொண்ட மராமரம் , பருதியஞ் செல்வனான கதிரவனைப் போல , விரிந்த இதழ்களைக் கொண்ட செருந்தி, சுறாமீனைக் கொடியாக உடைய மன்மதனைப் போலக் கரிய வண்டுகள் ஆர்க்கும் காஞ்சி, காமனின் தம்பியான சாமனைப்போல நிறம் மாறுபட்டு, பசலை பாய்ந்து, தோன்றும் ஞாலல் , இடபக் கொடியை உடைய சிவனைப் போல சிவந்து தோன்றும் இலவம் — இவ்வாறு கரை அழகுடன் விளங்கியது .
என்ன ஆச்சரியம் பாருங்கள் ; மரங்களைக் கண்டாலும் கடவுள் நினைப்பேதான் ! அதுவும் காதல் கவிதை நிறைந்த நூலில். இந்தக் கடவுளரும், அவர்களுடைய கொடிகளும் தமிழர்களுக்குப் புதிதும் அல்ல.. ஏற்கனவே நக்கீரர் பாடிய புற நானூற்றுப் (56) பாடலிலும் இவைகளைக் காண்கிறோம். தமிழர்களுக்குத் தெரியாத வாகனங்களோ, புராணக் கதைகளோ கிடையாது!
Xxxx
திரிபுராந்தகன் (சிவன்)
கலித்தொகை நூலில் ஒரு விசித்திரமான ஒற்றுமையையும் காணலாம். உலகைத் தோற்றுவித்தவர் பிரம்மா. பாலைக் கலியைத் துவங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அவர் பெயரைச் சொல்லி தொடங்குகிறார் அதுதான் நூலின் முதல் பாடல் !
முப்புரங்களை சிவன் எரித்த காட்சியை பல சங்கப் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துவர். பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அதை வருணிக்கிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழிலேயே நாம் ‘முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா’- என்பதைக் காண்கிறோம்
கலித்தொகை 2
தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் அரிடை –
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், 2-9
பொருள்:
உலகம் தோன்றிய காலத்தே தோன்றிய முதியவனான நான்முகன் முதலாக, அடங்காதவர்களின் (அரக்கர்) வலிமை
தேவர் பலரும் வந்து முறையிட,சிங்கம் போல் சினத்துடன் சென்று ,மாய வேலை செய்யும் அரக்கர்களை வென்று எரிக்கும் வலிமையொடு,முக்கண்ணனான சிவன் முப்புரங்களையும் எரிக்க சினந்து நோக்கிய போது தோன்றிய அவன் முகம்போல,ஒளிரும் கதிரவன் (தீப்பிழம்பாக) சுடுகின்றான்.
சீறுகின்ற கணிச்சி படையை உடைய அந்த சிவன் சினந்து நோக்கியதால் அந்த மதில் சுவர்கள் படைகளால் தாக்கு பெற்று உதிர்வனபோல் (அக் கதிரவனின் வெம்மையால்) மலை வெடித்துச் சிதறி வழியை அடைத்து கிடக்கும். அரிய அவ்வழியாக -நீயும் கடந்து செல்ல நினைக்கிறாய்.
XXX
மஹாபாரதக் கதை

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,
கல் உயர் நனம் சாரல், கலந்து இயலும் நாட! கேள்;
பொருள்
அறம் மறந்து , அதர்மத்தையே கொண்டவனாயிருந்தான் நூற்றுவர் தலைவனான துரியோதனன் அவனது தொடையை முறித்து பீம சேனன் அவனைக் கொன்றான். அது போல முறம் போன்ற காதுகளைக்கொண்ட யானை, தன் தந்தங்களால் புலியைக் குத்திக் கொன்றது . அதன்பிறகு அந்த யானை, மல்லரை வீழ்த்திய திருமாலைப்போல கம்பீரமாய் யானைக் கூட்டத்தில் உலவியது
திரு முருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய மூன்று சங்கத்தமிழ் நூல்களிலும் நூற்றுக் கணக்கான புராண இதிஹாஸக் கதைகள் உள்ளன.
—தொடரும்tags- மஹாபாரதக் கதை, கலித்தொகை , 5 மரம் 5 கடவுள், பாலை பாடிய பெருங்கடுங்கோ