ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்! ( Post No.11,440)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,440

Date uploaded in London – –   13 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 88

 ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!

 ச. நாகராஜன்

பாண்டிய நாடு செழிப்போடு பாண்டிய மன்னனால் ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

பாண்டி மண்டலத்தில் ஆறகழூர் வாணன் என்பவன் பாண்டியனை மதிக்காமல் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லை.

இந்தச் சமயத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சூரிய காங்கேயன் என்னும் வீரன் அவனைத் தந்திரமாகப் பிடித்தான். அவனைக் கொண்டு வந்து நேராக பாண்டிய மன்னனுக்கு முன்னால் நிறுத்தினான்.

பாண்டியன் அடைந்த  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அவனது வலிமையை அறிந்து அவனுக்கு ஆகவராம பாண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பாண்டியன் தந்தான்.

இந்த விருதுப் பெயரோடு, வேப்ப மாலை, மீனக் கொடி மற்றும் தனக்குள்ள விருதுகளையும் ஏழுகரை நாட்டின் ஆதிக்கமும் கௌரவமாக அளித்து அவனை உபசரித்து அனுப்பினான் பாண்டிய மன்னன்.

அவற்றைப் பெற்ற ஆகவராம பாண்டியன் கம்பீரமாக வாழ்ந்து வரலானான்.

இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 88வது பாடலில் பதிவு செய்து சூரிய காங்கேயனைப் பாராட்டுகிறது.

பாடல் இதோ:

ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்

கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே

வெப்பலர் மாலையு மீனப் பதாகை விருதுமற்றும்

வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே  (பாடல் 88)

பாடலின் பொருள் : ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும், வேப்ப மாலையும், மீனக் கொடியும், இன்னும் தனக்குள்ள விருதுகளையும் மகிழ்ந்து அளிக்க அவற்றை ஏற்றுக் கொண்ட சூரிய காங்கேயனும் கொங்கு  மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

இந்த வரலாற்றை தக்கை ராமாயணப் பாயிரம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:

அவனுஞ் சடையன் காராளனவன்றனூரும் வெண்ணெய் நல்லூர்

இவனு நலதம்பிக் காங்கேயனிவன்ற னூருமோ ரூராம்

அவனுங்கண்ணன் சரராம னாகவராம னிவனுங் கண்ணன்

இவனு மவனைப்போ லுலகுதனில் ராமகதைதனைப் பாடுவித்தான்

இந்த ஆகவராம பாண்டியன் என்னும் பட்டம் பெற்றுள்ளதற்கு ஏற்ப ஆகவராம பட்டம் என்னும் குடிப்பெயரோடு புலவர் குடும்பம் இருக்கிறது.

ஆண்டுக்கான ஆண்டு சன்மானமும், கல்யாணம் முதலில் நாட்களில் உரிமையான வரியையும் இந்தக் காங்கேயர்கள் சந்ததியாரிடமிருந்து பெற்று வருகின்றார்கள்.

ஏழுகரை நாட்டதிகாரம் உடையார் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது:

உரமன் எழுகரை நாடன் கண்ணன் உபயகுல சுத்தவேளாளன்

திரமன் புகழ்மோரூ ரத்தப்பன்சொல் செஞ்சோனலதம்பிக் காங்கேயன்

வரமன் புலியாளத் தென்னவர்க்கு மகுடஞ்சூட்டுகை க்குவமை சொல்லப்

பரமன் றிருமுன்னே பரதன் பின்னோன் பரிதிபுதல்வற்கு மௌலி வைத்தான்  

     (அரசியற் படலம் தக்கை ராமாயணம்)

இந்த வரலாற்றை மோரூர்ப் பள்ளு இப்படிக் குறிப்பிடுகிறது:

மன்னனாகவராமன் வடகொங்கு மன்னியர்தினம் வாழ்ந்திடு நாடு

தென்னவன்றரு மெழுபது தண்டிகை சேரும் பூந்துறை நாடெங்கள் நாடே         (மோரூர்ப் பள்ளு)

கொங்குமண்டலச் சிறப்பைச் சேர்க்கும் ஆகவராம பாண்டியனின் வரலாறு இப்படி சுவை மிக்கதாய் இருக்கிறது! 

***

புத்தக அறிமுகம் – 112

அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள் 

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. நாமங்கள் ஆயிரம்! நலங்கள் பல்லாயிரம்!!    

2. சப்த சக்தி என்ன செய்யும்?  

3. ஒலிக்குச் சக்தி உண்டோ?.   

4. பிரார்த்தனை என்ன தரும்?  

5. எண்ண சக்தி என்ன செய்யும்?

6. காயத்ரி மந்திரம் பெண்களும் கூறலாம்! 

7. உதவத் துடிக்கும் தேவதைகள்

8. அமெரிக்க டாலரின் மர்மங்கள்!

9. ருத்ராக்ஷம் பெண்களும் அணியலாம்!   

10. ஜபமாலை ரகசியம்!   

11. தீபமங்கள ஜோதி நமோ நம!

12. அஷ்டநிதிகளை அள்ளித் தரும் பத்மினி வித்யா!  

13. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்! 

14. யுகாவதாரம் ஸ்ரீகிருஷ்ணன் 

15. அறிவியல் வியக்கும் கங்கை!    

16. அறிவியல் பார்வையில் புராண, இதிஹாஸங்கள் பொய்மூட்டையா

   பொக்கிஷமா?    

17. அறிவியல் வியக்கும் அற்புத ஆலயங்கள்!   

18. ஆயுள் நீடிக்க ரத்தினங்களை அணிக!  

19. வெற்றி தரும் ஆசிர்வாதம்!  

20. மேலை நாட்டு விஞ்ஞானிகள் வியக்கும் தியான பலன்கள்!  

21. தற்செயலா? இறைவன் விளையாட்டா?

22. மனமே எல்லாம்!

23. நமக்கு நாமே நல்ல நேரம் அறியலாம்! 

24. உலகம் வியக்கும் உயர்ந்த வேத சிந்தனைகள்!    

25. அறிவியல் வியக்கும் ஜோதிடம்!  

26. சந்திரனுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டா?  

27. ஆண்டுகள் அறுபது ஏன்?    

*

இந்த நூலுக்கு முன்னாள் தமிழ் நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநரும் தமிழறிஞருமான திரு சு. ஶ்ரீபால் அவர்கள் அளித்துள்ள அணிந்துரை.

அணிந்துரை

அன்பிற்குரிய நண்பர் திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விட சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த நூல் நமக்கு எடுத்து இயம்புகின்ற பாடம் இது தான்:

“மனிதனின் அறிவியலும் ஆராய்ச்சியும் மனிதனே. மனித இனம் ஆராய்வதற்கு மிகுந்த தகுதி வாய்ந்த பொருள் மனிதனே. மண்ணுலகில் தொன்றுதொட்டு பார்க்கும் போது மனிதனை விட சிறந்த பொருள் இல்லை. மனிதனில் மனத்தைத் தவிர சிறந்தது ஒன்றுமில்லை.”

சுவாமி விவேகானந்தர் சொன்னார் – “வேதங்களிலும் உபநிடதங்களிலும், பெண்கள் உண்மைகளைப் போதித்து, ஆண்களைப் போலவே போற்றி வணங்கப்பட்டனர்.”

இந்த வரலாற்று உண்மையைப் பெண்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளில் படிக்கிறோம். காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஜெபம் செய்யலாம், உருத்திராட்சம் பெண்களும் அணியலாம் என்ற கருத்துக்கள் அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

மனிதனின் வரலாறு பல்வேறு கால கட்டங்களில் அவன் புரிந்த சாதனைகளை, உருவாக்கிய படைப்புகளை, வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை, பண்புகளை, நம்பிக்கைகளை எடுத்துச் சொல்கிறது. ஆசிரியர்  மனித வரலாற்றை நன்கு படித்து உள்ளார். மேலை நாடுகளில் செய்த ஆராய்ச்சிகளை அறிந்து உள்ளார். இவற்றையெல்லாம் பல கட்டுரைகளில் எடுத்து உரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

ஒரு இடத்தில் அமெரிக்க வரலாற்றில் எப்படி ‘13’ என்ற எண் நல்ல பிணைப்புகளுடன் இருக்கிறது என்று விளக்குகிறார். இது ஒரு நல்ல தகவல் ஆகும். அமெரிக்க சுதந்திரம் அடைந்த நாள் 4-7-1716.

4 என்ற எண் 1 + 3 = 4 என்று 13இன் கூட்டுத்தொகையே ஆகும். எண் கணிதத்தில் ‘4’ என்ற எண் ராகு கிரகத்துக்கு உரிய எண்.

பண்டைய காலத்தில் முன்னோர் வகுத்த நெறிகளுக்கும், நியதிகளுக்கும் காரணங்கள் உண்டு. சில காரணங்கள் இப்போதும் நமக்கு விளங்குகின்றன. சில நமக்கு விளங்குவது இல்லை. ஆனால் அதற்காக அவற்றை ஒதுக்கி விடுவது நல்லது என்று கூற முடியாது. இந்தக் கருத்தைப் பல இடங்களில் ஆசிரியர் உரைப்பது பொருத்தமாகும்.

குளிர்காலத்தில் சூட்டை உண்டாக்க மரக்கட்டைகளை எரித்து நெருப்பில் குளிர் காய்வோம். சூடு என்ற சூழ்நிலையை நெருப்பு உண்டாக்குகிறது. அதைப் போல ஆன்மீகச் சூழ்நிலையை உண்டாக்குவது எப்படி என்ற வழிமுறையை ‘பிரார்த்தனை’ பற்றி எழுதியுள்ள கட்டுரையில் படித்து மகிழ்ந்தேன்.

நம்முடைய வீட்டில் பூட்டி வைத்து இருக்கும் காசு பணத்தை எண்ண முற்படும் போது வெளிக் கதவுகளை மூடி விடுகிறோம். அது போல ஆன்மாவில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தைக் காண வெளிக்கதவுகளாகிய புலன்களை மூட வேண்டும். ‘தியானம்’, ‘எண்ணங்கள்’ பற்றிய கட்டுரைகளில் வெளிக்கதவுகளாகிய புலன்களை எப்படி மூடுவது என்பது குறித்த வழி முறைகளைப் படிக்கின்றோம்.

மனத்தை ஈர்த்து சிக்க வைத்து சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதே புத்தகங்களின் உண்மையான நோக்கம். அந்த நோக்கத்தை இந்த நூல் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறது.

“சில புத்தகங்கள் சுவைக்க வேண்டியவை; வேறு சில விழுங்க வேண்டியவை; ஒரு சில புத்தகங்களே சுவைத்து உண்டு சீரணிக்க வேண்டியவை:

சுவைத்து உண்டு சீரணிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கும் திரு ச.நாகராஜன் அவர்களுகு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

வளர்க அவர் தம் எழுத்துப் பணி!

                                  சு.ஶ்ரீபால்

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு தத்துவமும் கூட, ஒரு மதமும், தத்துவமும் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று மேலை நாட்டு அறிஞர்களில் ஆரம்பித்து உலகின் பெரும் சிந்தனையாளர்கள் கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றிப் போற்றிப் புகழ்கிறார்கள்.

இந்த வாழ்க்கை முறையில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை, காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை மனிதராய்ப் பிறந்தோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நலம் பயக்கும் இந்த வாழ்க்கை  முறையை முரட்டுத்தனமான பல்வேறு படையெடுப்புகள் தாக்கிப் பார்த்தன; ஆங்கில ஆதிக்கம் துளைத்துப் பார்த்தது. ஆனால் காலத்தை வென்ற ஹிந்து வாழ்க்கை முறை நில குலையவில்லை! என்றாலும் அறிவியல் உரைகல்லில் உரசிப் பார்த்தால் என்ன விடை கிடைக்கும் என்பதைப் பல விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும், இலக்கியவாதிகளும், பக்தர்களும், தொழில்நுட்ப நிபுணர்களும் முயன்று பார்த்துள்ளனர்.

அவற்றை எல்லாம் ஒருங்கே திரட்டி மாபெரும் கலைக் களஞ்சியமாக வெளியிட அதிகம் பொருட்செலவு ஆகும். ஏராளமான அறிஞர் பெருமக்கள் அந்தப் பெரும் பணியில் தம்மை அர்ப்பணித்து ஈடுபட வேண்டியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் சிறு வயது முதலே இந்தத் துறையில் என்னை சுதந்திரப் போராட்ட வீரரும் தினமணி பொறுப்பாசிரியருமான எனது தந்தையார் திரு வெ.சந்தானம் அவர்கள் ஊக்கி விட்ட காரணத்தால், ஏராளமான நூல்களைப் படித்ததோடு அவற்றிலிருந்து குறிப்புகள் எடுத்து வந்தேன். முடிந்த போதெல்லாம் புத்தகங்களை வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். படித்ததைப் பகிர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை முறை அறிவியல் வியக்கும் ஒன்று என்பதை இளைய சமுதாயத்தினரும் ஏனையோரும் அறிந்து மகிழ உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியதால் சிறு சிறு கட்டுரைகளாக மங்கையர் மலர், தின பூமி, கலை மகள், மஞ்சரி, ஞான ஆலயம், வாஸ்து, பெங்சுயி, ஜெம்மாலஜியும் ஜோதிடமும், கோகுலம் கதிர் போன்ற தமிழ் வார, மாத இதழ்களில் எழுதி வந்தேன்.

ஹிந்து வாழ்க்கை முறை மீதான அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் மாபெரும் கலைக்களஞ்சியமாக இன்னும் உருவாகாத சூழ்நிலையில் இந்தக் கட்டுரைகள் சேதுவில் அணை கட்ட அணில் செய்த சேவை போல இருக்கும் என்பது என் நம்பிக்கை.

இந்தக் கட்டுரைகளைத் தொகுப்பு நூலாக வெளியிட வேண்டுமென்று நண்பர்கள் தூண்டினர். எனவே இந்த நூல் உங்கள் கரங்களில் இப்போது மலர்ந்துள்ளது. இதற்கு நல்லதோரு அணிந்துரை நல்கிய  முன்னாள் தமிழ்நாட்டுக் காவ்பல்துறைத் தலைமை இயக்குநரும் பல்துறை வித்தகருமான திரு சு.ஶ்ரீபால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

என் கட்டுரைகளைப் பிரசுரித்து ஊக்கிய பல்வேறு இதழ்களின் ஆசிரியப் பெருமக்களுக்கும், படித்து நேரிலும், தொலைபேசியிலும், கடித மூலமாகவும் பாராட்டிய வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல வழிகளிலும் உதவி செய்த என் மனைவி மற்றும்  மகன்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

அறிவியல் வியக்கும் ஹிந்து வாழ்க்கை முறை பற்றி அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு அதைக் கடைப்பிடிக்க அதிக ஆர்வத்தையும் இந்த நூல் படிப்பவரைத் தூண்டுமானால் அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறில்லை!

நன்றி

சென்னை                                        ச. நாகராஜன்

3-8-2005

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Hinduism is not just a religion; it is a way of living. Today’s science astonishes at the hidden marvels of its principles. This book reveals the secret chambers of Hinduism to the readers. Former Inspector General and Elite Tamil writer Mr. S. Sribal has praised this work that the twentyseven chapter glitter like the twenty even starts. Every chapter seems better than the previous one in this book.

இந்து மதம் வெறும் மதம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை! அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக அறியத் தரும் நூல் இது! இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள தமிழ்நாட்டுக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள், “இதிலுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விடச் சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” எனப் பாராட்டியுள்ளார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: