
Post No. 11,649
Date uploaded in London – – 9 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீசுர சதகம் பாடல் 58-ல் அறநெறிப்படி வாழ்வோர் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ புத்தர் சொன்னதுதான். அவர் கடவுள் பற்றி ஒன்றுமே பேசவில்லை; எட்டு அறநெறிக் கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்கிறார் ; வள்ளுவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றான். மேலும் பல குறள்களில் உலகமே கைகூப்பித் தொழும் என்று முடிக்கிறான்; அதாவது கொல்லாமை, வாய்மை, பிறர் பொருள் நயவாமை, சினமின்மை, யான், எனது என்னும் எண்ணம் இல்லாமை முதலியன எல்லோரையும் வணங்கச் செய்யும் என்கிறான். இவை அனைத்தும் இந்து மதக் கருத்துகள் என்றாலும் இந்து மதம் பல படிகளைச் (Steps) சொல்லி அதன் மூலம் மேலே வரச் சொல்கிறது.
இதோ அம்பலவாணர் கூற்று:-
ஒழுக்கம் உடையோருக்கு யாத்திரை தேவை இல்லை ;
கொலை களவு செய்யாதோருக்கு வேறு தர்மம் தேவை இல்லை;
ஆசையையும் கருமித்தனத்தையும் விட்டவர்களுக்கு வேறு அறம் தேவை இல்லை
உள்ளத்தில் தூய்மை இருந்தால் கங்கை நதியில் ஸ்னானம் செய்யப்போகவேண்டாம்
உன் தொண்டரை வணங்குவோர் உன்னை வணங்கத் தேவை இல்லை
நல்ல பிராமணர்களை போற்றுவோர் இறைவனுக்கு அர்ச்சனை செய்யத் தேவை இல்லை.
அறப்பளீசுர சதகம் 58. இவையே போதும்
பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்
பூவலம் செயவேண் டுமோ?
பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்
புகழ்அறம் செயவேண் டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
நல்லறம் செயவேண் டுமோ?
நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு
நதிபடிந் திடவேண் டுமோ?
மெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பிவழி படவேண் டுமோ?
வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச் சனைசெய் வரோ?
ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே –
திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின்
தலைவனே!, அருமை …… தேவனே!, பொய்யாத வாய்மையும் சீலமும்
சார்ந்து உளோர் பூவலம்செய வேண்டுமோ – அழியாத உண்மையும்
ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வரல்வேண்டுமோ?, பொல்லாத
கொலைகளவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ –
தீய கொலையும் களவும் அற்ற நல்லொழுக்கமுடையவர் புகழத்தக்க
அறங்களைச் செய்தல் வேண்டுமோ?, நையாத காமத்தை லோபத்தை
விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ – மெலியாத ஆசையையும்
ஈயாமையையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தை நாடல்வேண்டுமோ?,
நல் மனோ சுத்தி உண்டானபேர் மேலும் ஒரு நதிபடிந் திடவேண்டுமோ –
நல்ல உளத்தூய்மை பெற்றவர்கள் வேறாக ஒரு தூய ஆற்றில் முழுகுதல் வேண்டுமோ?, நின் அடியரை மெய்யா(க) பரவுவோர் உன்பதம் விரும்பி
வழிபட வேண்டுமோ – உன் தொண்டரை உண்மையாக வணங்குவோர் நின் திருவடியைப் போற்றுதலும் வேண்டுமோ?, வேதியர் தமைப்பூசை
பண்ணுவோர் வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ – மறையவரை
வணங்குவோர் வானவரை விரும்பி மலரிட்டு வழிபடல் வேண்டுமோ?
(க-து.) நன்னெறியில் நிற்போர் வேறு அறங்கள் செய்ய
வேண்டியதில்லை.
XxxxXxxxx

ஆயிரத்தில் ஒருவர் யார்?
பாடல் 59.ல் பத்து, நூறு ஆயிரம் என்று டெசிமல் சிஸ்டப்படி அடுக்கி கோடி வரை எண்களைச் சொல்லி. யார் அப்படி கோடியில் ஒருவர் என்று முடிக்கிறார். புதுமையான அணுகு முறை. கிருஷ்ணர் கூட பகவத் கீதையில் ஆயிரத்தில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர், என்று திரும்ப திரும்ப சொல்கிறாரே தவிர 10 முதல் கோடி வரை எண்களை பயன் படுத்தவில்லை.
பத்துக்கு ஒருவன் நல்ல பேச்சாளன் (இது நம்ம ஊர் பட்டிமன்ற கேஸுகள் )
நூற்றுக்கு ஒருவர் நல்ல பாடகர் ( இது நம்ம ஊர் சங்கீத சபா கேஸுகள் )
ஆயிரத்தில் ஒருவர் சங்கீத உபந்யாசம் செய்வோர் (இப்போது விசாகா ஹரி போன்றோர் உணமையிலேயே ஆயிரத்துக்கு ஒன்றாகிவிட்டது!)
பத்தாயிரத்தில் ஒருவர் இதன் சிறப்பை அறிந்தவர் .
லட்சத்தில் ஒருவர்தான் அவர்களுக்கு பொருளுதவி செய்கின்றனர்
கோடியில் ஒருவர்தான் த்ரிகால ஞானி
அது உண்மையே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மஹரிஷி , ராமகிருஷ்ண பரமஹம்சர் , சேஷாத்ரி சுவாமிகள் , மா ஆனந்த மயி போன்ற ஞானிகள் கோடியில் ஒன்றுதான்
பகவத் கீதையில் 7, 8, 11ம் அத்தியாயங்களில் 7 இடங்களில் ஆயிரம் என்ற சொற் பிரயோகம் வருகிறது
அறப்பளீசுர சதகம் 59. அரியர்
பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
பாடுவோர் நூற்றில் ஒருவர்!
பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது
பாடிப்ர சங்க மிடுவோர்!
இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!
இதையறிந் திதயம் மகிழ்வாய்
ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
இலக்கத்தி லேயொ ருவராம்!
துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.
தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை
சூழும்அவி நாசி பேரூர்
அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) தொல் உலகு புகழ் – பழைமையான உலகம் போற்றுகிற,
காசி ஏகாம்பரம் கைலைசூழும் அவிநாசி பேரூர் அதிகம்உள வெண்காடு
செங்காடு காளத்தி அத்தனே – காசியும் காஞ்சியும் கயிலையும் (அடியர்)
சூழும்
அவிநாசியும் திருப்பேரூரும் பெருமையுடைய திருவெண்காடும்
திருச்செங்கோடும் திருக்காளத்தியும் இடமாகக் கொண்ட முதல்வனே!, சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் – அவை புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர், பாடுவோர் நூற்றில் ஒருவர் – (இனிமையாகப்) பாடுவோர் நூற்றுக்கு ஒருவர், விதிதப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார்மீதில்
ஆயிரத்து ஒருவர் – முறை தவறாமற் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர், இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் – இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரவரில்ஒருவர், இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் – இதன் பெருமையை உணர்ந்து மனமகிழ்வுடன் பெருளளிப்போர், புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் – உலகில் அருமையாக இலட்சத்துக்கு ஒருவர் ஆவர், துதிபெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்தூயர் கோடியில் ஒருவர்ஆம் – புகழ் மிக வரும் முக்காலமும்
உணர்ந்த உண்மையான் நல்லோர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.
Xxxx
கற்புக்கரசிகள்
கற்புக்கரசிகள் பட்டியலில் அருந்ததி, நளாயினி, சீதாதேவி, சந்திரமதி, திரௌபதி ஆகியோர் செய்த அரிய செயல்களை அம்பல வாணர் குறிப்பிடுகிறார் . இந்துக்கள் அனைவரும் அறிந்த புராண, இதிஹாஸக் கதைகள் இவை. விளக்கத் தேவை இல்லை.
சம்ஸ்க்ருதத்தில் வேறு ஒரு பட்டியல் கிடைக்கிறது
‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரணம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக, குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.
அஹல்யா, த்ரௌபதீ, சீதா, தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்
–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.
அஹல்யா, த்ரௌபதீ,சீதா, தாரா மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களை நினைத்தால் எல்லா பாவங்களும் போய்விடும்
அறப்பளீசுர சதகம் 60. கற்பு மேம்பாடு
தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்
தனக்கிணங் காத நிறையாள்,
தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்
சாபம் கொடுத்த செயலாள்,
மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது
மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி
வாள்மாலை யான கனிவாள்,
நன்னதி படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி
நாயகனை மேவு தயவாள்,
நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,
நளினமலர் மேல்வை தேகி
அன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆதியே – முதல்வனே!, அருமை…….தேவனே!, தன்கணவன்
உருவமாய்த் தற்புணர வந்தோன் தனக்கு இணங்காத நிறையாள் நானிலம்
புகழ்சாலி – தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட
வந்தவனுக்குச் சம்மதியாத கற்புடையாள் உலகம் புகழும் அருந்ததி,
தழல்கதிர் எழாமலும் பொழுது விடியாமலும் சாபம் கொடுத்த செயலாள்
பேர்பெறு நளாயினி – கதிரவன் தோன்றாமலும் இரவு கழியாமலும் சாபம்
கொடுத்த செய்கையினாள் புகழ்பெற்ற நளாயினி, மன்னிவளர் அனல்மூழ்கி
உலகு அறியவே தனது மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள் நளினமலர்மேல்
வைதேகி – பொருந்தி வளர்ந்த தீயிற்புகுந்து உலகம் அறியுமாறு தன்
கணவனை அடைந்த அன்பினாள் தாமரை மலர்மேல் இருக்கும்
இலக்குமியின் அமிசமான சீதை, மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்த
வடிவாள் மாலையான கனிவாள் அன்னம் எனவரு சந்திரமதி – மகனைத்
தீயிலிட வந்த(போது) தன் கணவன் வெட்டிய கூரிய வாள் (மலர்)
மாலையான கனிவுடையவள் அன்னம் போன்ற நடையையுடைய சந்திரமதி,
நல்நதி படிந்திடுவது என்னஆர் அழல்மூழ்கி நாயகனை மேவுதயவாள்
துரோபதை – நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித்
தன் கணவனைக் கூடும் அன்புடையாள் திரௌபதி, என்பர் – என்று
(அறிஞர்) கூறுவர்..
Xxxx subham xxxx
Tags- கற்புக்கரசி, ஆயிரத்தில் கோடியில் , ஒருவர்