வாரியார் சொன்ன 2 குட்டிக் கதைகள் (Post No.11,785)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,785

Date uploaded in London – –  9 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பெரிய விருந்து படைத்த ராஜா கதை

தமிழ் கூறு நல்லுலகத்தில் திருமுருக கிருபானந்தவாரியாரை அறியாதோர் எவருமிலர். நகைச்சுவை ததும்ப ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர். அவருடைய மதுரை நகர சொற்பொழிவுகளை பல முறை நேரில் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. அவைகளை மீண்டும் நினைவுகூறுவதற்காக  யூ ட்யூப் You Tube உதவியை நாடினேன். இதோ அவர் சொன்ன இரண்டு குட்டிக்கதைகள்

xxxx.

வியாச முனிவருக்கு தீர்க்க தரிசனம் உண்டு. கலியுகம் துவங்குவதற்கு சற்று முன்னர் வாழ்ந்தவர் அவர். கலியுகத்தில் மக்களை திசை திருப்பும் ஏராளமான விஷயங்கள் வரும் என்பதை உணர்ந்து, தன்  காலத்தில் நிலவிய அத்தனை விஷயங்களையும்  சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தார். அதாவது அவர் எழுதிய விஷயங்களோடு ஏனைய விஷயங்களையும் தொகுத்து நமக்கு அளித்தார். உலகிலேயே நீண்ட இதிகாசமான மஹா பாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களாகத் தொகுத்தார். அதன் பிறகு 18 புராணங்களையும் தொகுத்தார். இவ்வளவையும் படிப்பதற்கு ஒரு  வாழ்நாள் போதாது..

அடடா, எனக்கு இவ்வளவற்றையும் ஸம்ஸ்க்ருதத்திலோ அதன் தமிழ் மொழிபெயர்ப்புகளையோ படிக்க வாய்ப்பில்லையே என்று வருத்தம் உருவோருக்கு அவரே 18 புராணங்களின் சாரத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் . இதோ அந்தப் பாடல்

अष्टादशपुराणानां सारं व्यासेन कीर्तितम् |

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ||

அஷ்டாதச புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்

பரோபகாராய: புண்யாய பாபாய பரபீடனம்

பதினெட்டு புராணங்களின் ஒட்டுமொத்த கருத்தை வியாச முனிவரே விளம்பிவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம்  தரும் செயல்;

பிறருக்கு தீங்கு செய்வதே பாபம்  தரும் செயல்.

இதை எல்லோரும் கடைப்பிடித்தால் உலகமே சொர்க்க லோகம் ஆகிவிடும் .

xxxx

இதை விளக்க வாரியார் சுவாமிகள், கிழ்கண்ட கதையைக் கூறினார் . அதைச் சுருக்கமாக என் சொற்களில் வடிக்கிறேன் .

ஒரு நாட்டில் ஒரு ராஜா  இருந்தான்; அவனுக்கு 12 மந்திரிகள். அவன் ஒரு பெரிய விருந்துக்கான தேதியை அறிவித்தான். ராஜா  விருந்து கொடுக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? முதல் நாள் முதல் யாரும் சாப்பிடாமல் வயிற்றைக் காயப்போட்டனர். சிலர் முன்னதாகவே இஞ்சி கஷாயம் முதலியன சாப்பிட்டு உடலைத் தயார் செய்தனர். எல்லோர் கற்பனையும் சிறகடித்துப் பறந்தது . நாட்டிலுள்ள சுவையான பண்டங்களை நினைக்க நினைக்க அமைச்சர்கள் நாவில் உமிழ்நீர் சுரந்தது.

மறு  நாளும் வந்தது . அமைச்சர்கள் அனைவரும் மற்ற ஊழியர்களுடன் சாப்பிடும் அறையான  Dining Hall டைனிங் ஹாலுக்கு வந்தனர். நாட்டின் புகழ் மிக்க சுவையா பண்டங்கள் அங்கே இருந்தன. கல்கத்தா ரசகுல்லா, பாம்பே ஹல்வா, திருப்பதி லட்டு, பல வகையான பாயசங்கள் , மெதுவடை, மசால் வடை, அப்பளம், பல வகையான கூட்டுகள்,கறிகள் , பாசுமதி அரிசியில் சோறு, தயிர் வடை, சாம்பார், ரசம் , கெட்டித் தயிர் எல்லாம் காணப்பட்டன. சமையல் வாசனை அனைவரையும் தூக்கிச் சென்றுவிடும்போல இருந்தது. தலை வாழை இலையில், அடி முதல் நுனி வரை, அனைத்தும் பரிமாறப்பட்டன .

ராஜா உரத்த குரலில் ஒரு உத்தரவு போட்டான்

சாப்பிடும்போது யாரும் கைகளை மடக்கக் கூடாது. அப்படி மடக்கிச் சாப்பிட்டால் கைகளை வெட்ட இதோ சேவகர்கள் நிற்கிறார்கள்.

அனைவரும் உண்டு மகிழ்க !!!

என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .

அனைவரும் திரு, திரு என்று முழித்தனர் . அந்த 12 அமைச்சர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். கையை மடக்காமல் சாப்பிட வழி ஒன்றுண்டு. ஒவ்வொருவரும் கையை நீட்டி சாதத்தைப் பிசைந்து மற்றவருக்கு ஊட்டுங்கள் என்றார் . உடனே அனைவரும் தன இலையில் இருப்பதை  எடுத்து மற்றவர்களுக்கு ஊட்டினர் . ராஜாவும் உள்ளே வந்து பார்த்து மகிழ்ந்தான்.

இதுதான் நான் சொல்ல வந்த செய்தி.

நாட்டு மக்கள் அனைவரும் மற்றவர்களுக்கு இது போல உதவி செய்ய வேண்டும்– என்றான்.

மந்திரிகள் அனைவரும் ராஜாவின் புத்திசாலித்தனத்தை மெச்சினார்கள்.

வியாசரும் இதையே சொல்கிறார். 18 புராணங்களும் இதைத்தான் காட்டுகின்றன; போதிக்கின்றன; பிறருக்கு உதவி செய்யுங்கள்; அதுவே மஹா புண்யம்.

XXX

இதைச் சொல்லிவிட்டு வாரியார் சுவாமிகள் வேறு ஒரு விளக்கமும் கொடுத்தார். பிறருக்கு தீங்கும் செய்யக்கூடாது; குறையும் சொல்லக்கூடாது. நீங்ககள் உங்கள் ஆள்காட்டி விரலால் மற்றொருவனை

நீ ஒரு முட்டாள் என்று திட்டினால் , அப்போது மூன்று விரல்கள் மடங்கிய நிலையில் உங்களை நோக்கி இருப்பதைக் காண்பீர் கள் ; அதன் பொருள் வேறு மூன்று பெயர்கள் உங்களை முட்டாள் என்று திட்டுகிறார்கள் என்பதாகும். அதையே இப்படி மாற்றி யோஜியுங்கள்

நீ ஒரு புத்திசாலி என்று ஒருவனை நோக்கிச் சொன்னால், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் உங்களை ,

நீ ஒரு புத்திசாலி, மேதாவி, அறிவாளி என்று சொல்லுகின்றன.

ஆகவே நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் ஒன்பது பேர் உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ உதவி செய்வார்கள் என்று சொல்லி , வாரியார் சுவாமிகள் பிரசங்கத்தை முடித்தார்.

XXXX

சொறி நாய் சிங்கமான கதை

கீழ்மக்களை உயர்த்தி ஆட்சியில் அமர்த்தினால் என்ன  நிகழும் என்பதை விளக்கும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது

தொடரும்………………………………….Tags- வாரியார்,குட்டிக் கதைகள், பெரிய விருந்து, ராஜா ,கதை, பரோபகாராய: புண்யாய, 18 புராணங்கள், சாரம், வியாசர் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: