
Post No. 11,829
Date uploaded in London – 23 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்!
இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?
ச.நாகராஜன்
இறைவன் மனிதனைப் படைத்து பல அங்கங்களைக் கொடுத்திருக்கிறான். அதைக் காக்கும் விதத்தையும் பெரியோர் மூலமாக நம்மை அறிய வைக்கிறான்.
மஹாபாரதத்தில் விளக்கப்படாத ரகசியம் எதுவுமில்லை.
இந்த அங்க ரகசியங்களையும் சாந்தி பர்வம் 275வது அத்தியாயத்தில் விளக்கமாகக் காணலாம்.
கைகள் முதலானவற்றைக் கொண்டு நான்கு துவாரங்களைக் கொண்டது மனித சரீரம்.
சரீரம், இந்திரியம், மனம், புத்தி என்ற நான்கு முகங்களைக் கொண்டவன் புருஷன்.
வேதவாக்கியத்தால் விராட், ஹிரண்டகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தம் என்கின்ற நான்கு விதமாக ஜீவன் அடைகிறான்.
கைகளும் வாக்கும் உதரமும் ஜனன ஸ்தானம் என்கின்ற குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள்.
அந்த வாயில்களை ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.
எப்படிக் காப்பது?

கை, கால்களைப் பாதுகாப்பது எப்படி?
புத்திசாலியாக இருக்கும் ஒருவன் சொக்கட்டான் காய்களால் சூதாட்டம் ஆடக் கூடாது.
பிறருடைய பொருளைக் கவரக் கூடாது.
உறவினரல்லாதவருடைய ஹவிஸைக் கிரகிக்கக் கூடாது. அதாவது அவருக்கு யாகம் செய்விக்கக் கூடாது.
கோபமடைந்து ஒருவரை அடிக்கக் கூடாது.
இப்படி இருந்தால் அவனுடைய கால்களும் கைகளும் நன்கு பாதுகாக்கப்பட்டவையாக ஆகும்.
வாக்கைப் பாதுகாப்பது எப்படி?
கடும் சொல்லைச் சொல்லக் கூடாது.
வீண் வார்த்தை சொல்லக் கூடாது.
கோள் சொல்லக் கூடாது.
மற்றவரைக் குறித்து அபவாதம் சொல்லக் கூடாது.
சத்தியத்தையே விரதமாகக் கொள்ள வேண்டும்.
அஜாக்கிரதையின்றி மிதமாகப் பேச வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவனுடைய வாக்கு நன்கு காக்கப்பட்டதாகும்.
உதரவாயிலைக் காப்பது எப்படி?
உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.
அதிக உணவையும் உட்கொள்ளக் கூடாது.
நாக்கு சபலமின்றி இருத்தல் வேண்டும்.
உணவைத் தேடி பெரியோர் வரத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.
சரீர யாத்திரைக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.
இப்படி இருப்பவனது உதரவாயில் (வயிறு) நன்கு காக்கப்பட்டதாகும்.
ஜனன ஸ்தானம் எனப்படும் குறியைக் காப்பது எப்படி?
பிறன் மனைவியை விரும்பக் கூடாது.
ருதுவில்லாத காலத்தில் தனது மனைவியை உறவுக்கு அழைக்கக்கூடாது.
பத்நி விரதனாக இருக்க வேண்டும். அதாவது விவாம் செய்து கொள்ளாத பெண்களை விலக்க வேண்டும்.
இப்படிப்பட்டவனுடைய ஜனன ஸ்தானம் எனப்படும் குறி நன்கு காக்கப்பட்டதாகும்.
இப்படி எந்த புத்திசாலியினுடைய குறி, உதரம், கைகள், நான்காவதான வாக்கு ஆகிய நான்கு வாயில்களும் நன்கு காப்பாற்றப்படுகின்றனவோ அவன் தான் இரு பிறப்பை உடையவன்.
இந்த துவாரங்களைக் காப்பாற்றாதவனுக்கு அனைத்துமே பயனற்றவை ஆகி விடும்.
இது கபிலருக்கும் ஸ்யூரமரஸ்மிக்கும் நடந்த உரையாடலில் இடம் பெறுகிறது.
இந்த உரையாடலில் ஏராளமான ரகசிய விஷயங்களைப் பற்றி முற்றிலுமாக அறிய முடிகிறது.
***