கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11,860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,860

Date uploaded in London – –  1 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கும்பகோணத்தில் இறங்கிய 19-2-2023 அன்றே ஆறு கோவில்களைத் தரிசனம் செய்தோம் !!! அப்படி ஆசைப்பட்டதில் கொஞ்சம் இழப்பும் இல்லாமல் இல்லை. கடைசியாக கும்பேஸ்வரர்  தரிசனத்தை வைத்துக்கொண்டதால் இரவு எட்டு மணி ஆகி விட்டது. நல்ல புகைப்படம் எடுக்க முடியவில்லை. மகாமக குளத்தையும் காரில் வலம் வந்தோமேயன்றி இறங்கிப் பார்க்க முடியவில்லை. இருந்த போதிலும் கும்பேஸ்வரர் நல்ல தரிசனம் கொடுத்தார்.

கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம்  அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் .

என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பார்ப்பனர் இடையே ஒரு பழமொழி உண்டு. அவனாஅவன் மாமாங்கத்துக்கு ஒரு முறை வந்தாலே அதிசயம் என்போம். அத்தி பூத்தாற்போல என்பதற்கு இணையான பழமொழி இது. அதாவது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம்! திருவிழா போன்றது , அபூர்வமாக நிகழக்கூடியது என்பது இதன் பொருள்.

கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்து, பின்னர் கும்போணம் (இப்படி உச்சரித்தால் அவன் தஞ்சாவூர்க்காரன் என்று பொருள் ; அல்லது எம்பளத்தைந்து 85, திருப்ளாத்துறை , திருக்ளாவூர் என்பதைவைத்தும் கண்டுபிடிக்கலாம்).சென்று மஹாமக குளத்துக்குச் சென்றதை கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன (என் முந்தைய கட்டுரைகளில் கல்வெட்டு விவரம் காண்க )

தஞ்சாவூர்ப் புராணத்தை இன்னும் ஒன்று சொல்லி முடித்து விடுகிறேன்  . ஒரு முறை நான் என்  நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கத்தரிக்காய் ரசவாங்கி ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் கத்தரிக்காய் பிட்டளை தான் செய்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னேன். நீங்கள் தஞ்சாவூர்க்காரரா?  என்றார்.. சிரித்துக்கொண்டே ஆமாம், அதற்கும் ரசவாங்கிக்கும் என்ன சம்பந்தம் ? திடீரென்று கோகுலகுஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே! என்று வினவினேன். ரசவாங்கி என்பது மராட்டிய ஐட்டம் item ; தஞ்சாவூர், சிவாஜி மன்னரின் பரம்பரையினர் (சரபோஜி)ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அந்த உணவு பிரபலமாகியது என்றார் . புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.

xxx

கும்பேஸ்வரரைத் தரிசிப்போம்.

சென்ற முறை கும்பகோணம் சென்றது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர். தொல்பொருட் துறை பேரறிஞர்  டாக்டர் இரா. நாகசாமி நடத்திய 1000 மைல் இலவச வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் சென்றதுதான். அதற்குப்பின்னர் கார் மட்டும் அவ்வழியே பறக்கும். இறங்கியது இல்லை .

கும்பேஸ்வர் என்னும் பெயரில் இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமான் மங்களாம்பிகை என்னும் தேவி சகிதம் இந்தக் கோவிலில் இருக்கிறார். ஊர்ப்பெயர் முதல் கடவுள் பெயர் வரை எல்லாம் அமிர்தம் சம்பந்தப்பட்டது. அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப பதிகங்களில் பாடிப் பரவியுள்ளதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கும்பேஸ்வரரின் புகழ் பரவி இருந்ததை அறிய முடிகிறது . குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் அமிர்த கலசத்துடன் தொடர்புடையதே. அமுத கலசத்திலிருந்து தோன்றிய இறைவன், அமுதக்  குடம் சிந்திய திருத் தலம் என்ற பொருளில் அமுத கும்பேசர் என்றும் திருநாமம்.

இறைவி மங்களாம்பிகை, மந்திர பீடேஸ்வரி எனப்படுவதால் இந்தத்தலம் சாக்தர்களுக்கும் முக்கியமானது. மந்திர சக்தி நிறைந்த பீடத்தில் இறைவி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

xxx

தீர்த்தவாரி

இந்தக் கோவில் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது. மஹாமகம் குளத் திருவிழா வடக்கேயுள்ள கும்பமேளாவுக்கு நிகரானது. அந்தக்காலத்தில் சுற்றுவட்டாரக் கோவில் மூர்த்திகள் அனைவரும் இங்கே தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். கும்பேஸ்வர சிவன் தான் தலைவர்.

அது மட்டுமல்ல கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 6 கோவில்களின் மூர்த்திகள் சப்தஸ்தான திருவிழாவிலும் பங்கு கொள்கின்றனர். (குடந்தையையும் சேர்த்து 7= சப்த)

xxxx

விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண  தேவராயன்

மஹாமக விழாவுக்கு விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண  தேவராயனே துங்கபத்ரா நதிக்கரையில் இருந்து வந்திருப்பானால் இது தென்னிநிதிய இந்துக்களை ஒற்றுமைப்படுத்தியதையும் அறியலாம் . அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதனும், திருவலம் சுழி வெள்ளைப் பிள்ளையாரும் இக்கோவிலுக்கு மேலும் மஹிமை சேர்க்கின்றனர் .

மகா மக குளத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லும். குள த்தைச் சுற்றியுள்ள மூர்த்திகளின் கதைகளை எழுதப்போனால் அது கும்பகோண  என்சைக்ளோபீடியாவாகி  விடும்.

12 ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாத மக நட்சத்திரத்தன்று காசியிலுருந்து கங்கை நதி , மஹா மக குளத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்    .

12 வருஷத்திற்கு ஒரு முறை, குரு  சிம்மராசியில் பிரவேசிக்கும் காலம் , மஹா மகத் தீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர்.

குடந்தைக் கோவிலின் ஐந்து தேர்கள், சுற்றியுள்ள கோவில்களின் பல்லக்குகள் எல்லாம் சீரழிந்து போயிருந்தன. அண்மைக்காலத்தில் இவை சோழர்கால சீரும் சிறப்பும் புடை சூழ பவனி வருகின்றன .

xxxx

கும்ப முனி, ஏம ரிஷி

நாங்கள் பிரதான சந்நிதிகளை விட்டு வெளியே வருகையில் தொலைலிருந்தே கும்ப முனி சந்நிதிக்கு கும்பிடு போட்டோம்.இந்தக் கோவில் , ஈம ரிஷி ,கும்ப முனி முதலியோரால் பூஜிக்கப்பட்ட தலம் .

கும்ப முனி , குட முனி என்பது கத்தியரைக் குறிக்கும். அகத்தியர் சித்தியான தலங்களில் குடந்தையையும், திருவனந்தபுரத்தையும் சொல்லுவார்கள். இரண்டு அகத்தியர்களை இது குறிப்பதாகக் கொள்ளலாம் . ரிக்வேதம் சொல்லும் லோபாமுத்திரை- அகத்தியர் வேறு ; அவர் பரம்பரையில் வந்த அகத்தியர்கள் வேறு. தென் கிழக்காசியாவுக்குச்  சென்று ஏழு, எட்டு நாடுக்ளில் இந்து சாம்ராஜ்யக் கொடியைப் பறக்கவிட்ட அகத்தியர் வேறு. குள்ளமாக இருக்கும் பேரை இன்றும் அகத்தியர் என்று  அழைப்பதுண்டு (லண்டனில் கூட ஒரு குருக்களுக்கு நாங்கள் அகத்தியர் என்றே சொல்லுவோம் ; குருக்கள் மிகவும் குட்டையானவர்)

கும்பகோணத்தின் ஒரு புறம் காவிரி ஆறும் மற்றோர்  புறம் அரிசிலாறும் ஓடுகின்றன .

Xxx

தருமபுர ஆதீனத் தேவரப்பதிப்பு மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது :

இத்தலம் தேவாரங்களில் குட மூக்கு என வழங்கப்பெறும்.பஞ்சக்ரோச தலங்கள் சூழ்ந்தது .

கங்கை, யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து

வழிபடும் பெருமை உடையது.

பதினான்கு கோயில்களையும் பதினான்கு தீர்த்தங்களையும் உடையது..

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சோழ அரசர்கள் இதைத்   தலைநகராகக் கொண்டனர்.

சோழர்கள் இருந்த இடமாகிய சோழ மாளிகையும் , இடிந்துபோன கோயில்களும் இதன் பழமைக்கு அறிகுறியென்பர் பெர்கூசன் (James Fergusson) என்னும் அறிஞர்.

ஏழாம் நூற்றாண்டில் மூலைக்கூற்றம்  என வழங்கட்டதென்பர் பர்னல் (Burnell) துரை .

இங்கேயுள்ள பாடல்பெற்ற சிவத் தலங்கள் திருக்குடமூக்குகுடந்தைக் கீழ்க்கோட்டம்குடந்தைக் காரோணம் என்பன .

குடமூக்கு கும்பேசுர சுவாமி கோயில் , கீழ்க்கோட்டம் நாகேஸ்வரன்  கோயில், காரோணம் காசி விசுவநாதர் கோயில் . இவையன்றிச் சோமேசம் முதலிய பல கோயில்கள் உள்ளன

இத்தலம் மூர்க்க நாயனார் வாழ்ந்த தலம் .

இறைவன் பெயர் கும்பேசர், அமுத கும்பேசர், ஆதி கும்பேசர்

அம்மையின் பெயர் – மங்களாம்பிகை

பிரமன், அகத்தியர் , கிருத வீரியன், வீர வர்மன், இந்திரன், மாந்தாதா முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்

கல்வெட்டு

இத்தலம் உய்யக்கொண்டான் வளநாட்டு வட கரம்பையூர் நாட்டுத் திருக்குடந்தை என வழங்கும் .

கல்வெட்டுகள் பெரும்பாலும் நாகேச்சரமாகிய கீழ்க்கோட்டத்தைப் பற்றியனவே . குடமூக்கு என்னும் இத்திருத்தலத்தைப் பற்றியன அல்ல.

xxx

My old article

மகாமகம்

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag

28 Aug 2019 — Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com …

-subham—

Tags–  கும்பேசர், கும்பமுனி, மகாமகம், குளம், விழா ஸப்தஸ்தானம், மாமாங்கம், கிருஷ்ணதேவராயர், கத்தரிக்காய் ரசவாங்கி, தஞ்சாவூர் தமிழ்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: